இந்த வாரம் GEM Granites நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் ஊழியர் கணேசன் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் வீரமணியும் ஒரு சிறுமியும் இடம்பெற்றதாகக் கூறப்படும் மற்றொரு வீடியோ கிடைத்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

ஒரு தொழிலதிபருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு. ஒரு அடையாளம் தெரியாத நபர் கொடுத்த பென்டிரைவ். ஆறு ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கூறப்படும் வீடியோ. முதலில் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை; அசல் பதிவையும் மீட்க முடியவில்லை. இதனால் போலீஸ் வழக்கை முடிக்க முயன்றது. ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. அதன்பிறகு சிறுமி அடையாளம் காணப்பட்டதாகவும், மேலும் பல குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வந்ததாகவும் போலீஸ் தெரிவித்தது. இப்போது வழக்கு, குற்றச்சாட்டைத் தாண்டி ஆரம்ப விசாரணை எப்படி நடத்தப்பட்டது? யாரெல்லாம் ஆதாரங்களை கையாண்டனர்? காவல்துறையினரின் பங்கு என்ன? என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்தியாவில் பெண்கள் மீது குறிப்பாக சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் ஏராளம். சில சம்பவங்கள் தைரியமாக புகார் அளிப்பதால் பொதுவெளிக்கு வருகிறது. பல பாலியல் குற்ற சம்பவங்கள்  ஆணாதிக்க சமூகத்தின் மிரட்டலாலும், ‘பெண்ணின் மானம் போய்விடும்’ என்ற தவறாக கட்டமைக்கப்பட்டுள்ள சமூக நோயாலும் வெளியில் தெரியாமல் அமுங்கிப் போய்விடுகின்றன.

அதிகார வர்க்கத்தால் நடத்தப்பட்ட மிகப்பெரிய பாலியல் குற்ற சம்பவமான வாச்சாத்தி தொடங்கி அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள், 1900க்கும் மேற்பட்ட  புகைப்படங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட வீடியோக்களை வைத்து மிரட்டிய நாகர்கோவில் காசி உட்பட பலரும் அதிகாரத்தின் துணையுடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான்.

அதில் தற்போது இணைந்திருப்பவர் தான் ஜெம் வீரமணி. இந்த சமூகம் ஜெம் வீரமணிகளால் நிறைந்தது தான். அதில் சில ஜெம் வீரமணிகள் மட்டுமே சிக்கிக் கொள்கிறார்கள். ஜெம் வீரமணி பல காலம் விவிஐபியாக தமிழ்நாடு முழுவதும் வலம் வந்தவர் தான்.

யார் இந்த ஜெம் வீரமணி?

ஆர். வீரமணி. தமிழ்நாட்டின் கிரானைட் மற்றும் நேச்சுரல் ஸ்டோன் தொழில்துறையுடன் நீண்டகாலமாக தொடர்புடைய தொழிலதிபர். அவர் GEM Granites நிறுவனத்தின் நிறுவனர்/தலைவராகவும், GEM Group of Companies உடன் தொடர்புடைய தொழிலதிபராகவும் உள்ளார். Granite quarrying, processing மற்றும் export ஆகியவை GEM குழுமத்தின் முக்கிய தொழில்களாக இருந்துள்ளன. காலப்போக்கில் குழுமம் பல்வேறு தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக தொழில்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன.

இதனால், தற்போது அவரைச் சுற்றி எழுந்துள்ள வழக்கு ஒரு சாதாரண தனிநபர் மீதான குற்றச்சாட்டாக மட்டும் இல்லாமல், செல்வாக்கும் வணிகப் பின்னணியும் கொண்ட ஒருவரைச் சுற்றியுள்ள வழக்கு என்ற கோணத்திலும் கவனம் பெற்றுள்ளது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் இன்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று முட்டுக் கொடுக்கிறார்கள். அதாவது அவரது வீடியோவே சிக்கினாலும் அது அவர்தான் என கோர்ட்டில் நிரூபிக்கப்பட வேண்டும். அதுதான் விவிஐபிக்களுக்கான அறிவிக்கப்படாத சிறப்புச் சலுகை.

படிக்க:

♦ அசோக் காரத் கைது: அம்பலமான ஆன்மீக வியாபாரியின் கிரிமினல் தனங்கள்!

♦ பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷனை வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்றம்!

இந்த வழக்கு அக்டோபர் 6, 2025-ல் தான் தொடங்கியது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் கூற்றுப்படி அடையாளம் தெரியாத ஒருவரின் கடிதத்தில் பென்டிரைவும் இருந்துள்ளது. கடிதத்தில் வீரமணியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், ஒரு பெண் நண்பரின் வீட்டில் சிறுமி ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாகவும், அதற்கான பதிவு pen drive-ல் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.  அந்த pen drive-ஐ பார்த்தபோது சிறுமி போல் தெரிந்த ஒருவருடன் ஒரு ஆண் பாலியல் ரீதியாக நடந்து கொள்வது போன்ற காட்சிகள் இருந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அக்டோபர் 7, 2025 அன்று POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் முதலில் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட வீட்டை ஆய்வு செய்தது. அந்த வீடு சாந்தி என்பவருடன் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்தது. வீரமணிக்கும் சாந்திக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் பதிவு செய்தது. ஆனால் விசாரணையில் பல முக்கியமான தடைகள் ஏற்பட்டதாக பின்னர் தாக்கல் செய்யப்பட்ட closure report கூறுகிறது.

வீடியோவில் இருந்த சிறுமியை அடையாளம் காண முடியவில்லை.

சிறுமியின் வயதையும் உறுதி செய்ய முடியவில்லை.

பென்டிரைவைக் கொண்டு வந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சம்பவம் 2019-ல் நடந்ததாக வீடியோவில் இருந்த தகவலிலிருந்து தெரிந்ததாக கூறப்பட்டாலும், அசல் DVR பதிவை மீட்க முடியவில்லை.

வீரமணி வீடியோவில் இருப்பவர் தானல்ல என்று மறுத்தார்.

சாந்தியும் பல முக்கிய அம்சங்களை மறுத்ததாக போலீஸ் பதிவு செய்தது.

வீட்டில் பணியாற்றியதாகக் கூறப்பட்ட சில முன்னாள் ஊழியர்களையும் போலீசால் விசாரிக்க முடியவில்லை.

இந்த தகவல்களை ஒன்றாக வைத்து, “தற்போது விசாரணையைத் தொடருவதற்கு அடிப்படை இல்லை” என்ற நிலைப்பாட்டுக்கு போலீஸ் வந்தது. 2026 பிப்ரவரி 18 அன்று வழக்கை “Further Action Dropped” எனக் குறிப்பிட்டு closure report தாக்கல் செய்யப்பட்டது.

போலீஸ் அந்த நேரத்தில், “குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிட்டது” என்றும் சொல்லவில்லை; அதே நேரத்தில் “வீடியோ போலியானது” என்றும் இறுதியாக நிரூபிக்கவில்லை. முக்கிய சாட்சியான சிறுமி அடையாளம் காணப்படாததும், அசல் ஆதாரம் மீட்கப்படாததும், குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்கள் கிடைக்காததுமே விசாரணையைத் தொடர முடியாததற்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டன. அதாவது, ஜெம் வீரமணி என்ற பெரும் பணக்காரனுக்காக அதிகாரங்கள் வளைந்துக் கொடுத்தன. அதே இடத்தில் ஒரு சாமானியன் இருந்தால் இந்த வழக்கு என்னவாகியிருக்கும் என்பது நாம் அறிந்ததே.

மறுவிசாரணையில், போலீஸ் வீடியோவில் இருப்பதாகக் கூறப்பட்ட சிறுமியை பின்னர் கண்டுபிடித்ததாக தெரிவித்தது. அந்த சிறுமியின் வாக்குமூலம் Judicial Magistrate முன்னிலையில் பதிவு செய்யப்பட்டதாகவும், அவர் தன்னையும் வீரமணியையும் வீடியோவில் அடையாளம் காட்டியதாகவும் போலீஸ் கூறியுள்ளது. 2026 ஆகஸ்ட் 29 அன்று வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் (சாந்தியின் கணவர்) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வாரம் GEM Granites நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் ஊழியர் கணேசன் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் வீரமணியும் ஒரு சிறுமியும் இடம்பெற்றதாகக் கூறப்படும் மற்றொரு வீடியோ கிடைத்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பாலியல் குற்ற சம்பவங்களின் பின்னணியிலும் முதல் குற்றவாளி மட்டுமல்லாமல் அதற்க்கு துணை புரிந்தவர்கள் என ஒரு கூட்டம் இருக்கும் . அப்படியான ஒட்டுண்ணி கூட்டம் தான் சிக்கியுள்ளது. ஆனால் இவர்கள் எல்லோரும் தண்டிக்கப்படுவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. சட்டம் சில இடங்களில் நெளிவு சுழிவாகவே இந்த வழக்கில் செயல்படும்.  குறிப்பாக தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் என்ற கழிசடையும் அவனுக்கு உதவிபுரிந்த நிர்மலா தேவியும் என இந்த வழக்கில் நிர்மலா தேவி மட்டுமே சிக்கியதும் அதில் புரோகித்  சட்டத்தின் நெளிவு சுழிவுகளாலும் அதிகார வர்க்கத்தின் துணையோடும் தப்பினார்.

இந்த வழக்கு எப்படி திடீரென்று இவ்வளவு சூடுபிடித்தது? இதில் தூய சக்தியின் அரசியல் லாபம் இருக்கிறது. ஜெம் வீரமணி வழக்கில் திமுகவை சிக்க வைக்க முயற்சி நடந்துக் கொண்டிருக்கிறது. தவெக சமூக வலைதள குண்டர்கள் ஆர்.எஸ்.பாரதி கூறியதாக பொய்யான நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் பரவ விட்டு வருகிறார்கள். அதேபோல் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் “ஸ்டாலின் அங்கிள் பதில் சொல்லுங்க” என்று அதனை தனது அரசியல் நோக்கத்திற்காக கேவலமாக பயன்படுத்தி வருகிறார் ஜோசப் விஜய்.

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலையும், பெண்கள் பாதுகாப்பின்மையையும் பேசி ஓட்டு வாங்கிய தூயசக்தி ஜோசப் விஜய் தனது சொந்த கட்சி மாவட்ட செயலாளர் மீது அதே கட்சியை சேர்ந்த பெண் சொன்ன குற்றச்சாட்டை விசாரிக்க துப்பில்லாமல் அந்த பெண்ணை மிரட்டி வழக்கை வாபஸ் பெற வைத்தனர். இவ்வளவு தான் இவர்களுக்கு பெண்கள் மீதுள்ள அக்கறை.

பணம், அதிகாரம், அரசியல் தொடர்பு ஆகியவற்றைத் தாண்டி ஒரு சாதாரண குடிமகனுக்கு உண்மையான நீதியை வழங்கும் அளவுக்கு நாம் சார்ந்திருக்கும் அரசு நிறுவனங்கள் நேர்மையானவை அல்ல.  இவைகள் புதிதுபுதிதாக ஜெம் வீரமணி போன்றோர் அம்பலமாகும் போதெல்லாம் பாதுகாத்துக் கொண்டே வருகின்றன.

இந்த ஆணாதிக்க சமூகம் உருவாக்கும் ஜெம் வீரமணி போன்ற கிரிமினல்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாக்க, நீதி கிடைக்க இந்த சீரழிந்து போன அரசு கட்டமைப்பில் சாத்தியம் இல்லை.

நலன்

1 COMMENT

  1. நீதி நிலைநாட்டப்பட இந்த அரசு கட்டமைப்பில் துளியும் வாய்ப்பில்லை தான்! அப்படிப்பட்ட கேடுகெட்ட கட்டமைப்பை தரைமட்டமாக்கவும், உழைக்கும் மக்களுக்கான புரட்சிகர கட்டமைப்பை உருவாக்கவும் அணி திரள வேண்டிய தருணம் இது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here