“… ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எங்களின் இந்தப் போர் எங்களால் தொடங்கப்படவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை…”
– மாவீரன் பகத்சிங்

28-09-2026 மாவீரன் பகத்சிங்கின் 119 – வது பிறந்தநாள்! அந்த இளம் மாவீரனின் பிறந்த நாளை நினைவு கூர்வதன் மூலம் இன்று இந்திய நாட்டு, குறிப்பாக தமிழ்நாட்டு பெரும்பகுதி இளைஞர்கள் – மாணவர்கள் ரீல்ஸ் மோகத்தாலும், இன்னபிற சீரழிவுக் கலாச்சாரத்தாலும் ‘மக்கிப் போய்’ கிடக்கின்ற சூழலிலிருந்து எப்படி மீண்டு வரவேண்டும்; 23 வயதினிலேயே நாட்டின் விடுதலைக்காக தூக்குக் கயிற்றை துணிந்து முத்தமிட்ட தியாக உணர்ச்சி எப்படி ஏற்பட்டது போன்ற முழுமையான வரலாற்றை கற்றுணர்ந்து சமூகத்தில் இளைஞர்களின் – மாணவர்களின் பங்கு எத்தகையதாக அமைய வேண்டும்
என்ற படிப்பினைகளை அவசியம் கற்றேயாக வேண்டும்; அதன் மூலம் பாரிய வினையாற்ற முன்வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்!
1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை ஜென்ரல் டயர் தலைமையேற்று நடத்திய போது பகத்சிங்கின் வயது 12 மட்டுமே! அந்தப் பாலகப் பருவ வயதில் எப்படி அந்தத் துயரம் அவனுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியது?
கொடுந்துயரம் நடந்த நிகழ்விடத்திற்கே சென்று பெரும் துயரில் ஆழ்ந்தது மட்டுமன்றி சிறிய குடுவை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான இந்திய தியாகிகளின் ரத்தம் கலந்த மண்ணை சேகரித்து வந்து தனது அறையில் வைத்து ‘பூஜித்து’ வந்தான் என்பது மட்டுமல்ல; பல நாட்கள் கடும் பட்டினியால் துவண்டு கிடந்திருக்கிறான்! அவனது சகோதரி அவன் விரும்பி உண்ணும் மாங்கனிகளை இதமாக நறுக்கி தட்டில் வைத்து நிர்ப்பந்தித்து சாப்பிடச் சொன்ன போதும் விடாப்பிடியாக மறுத்திருக்கிறான்.
பகத்சிங்கை வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்ட வீரன் என்பதாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது; இந்திய நாட்டில் நிலவிய சாதி, தீண்டாமை, மதவெறி கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுவும், கோடிக்கணக்கான உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு விடியல் ஏற்படுத்த ஒரே தத்துவம் கம்யூனிசமே என்பதை உணர்ந்து முதலில் HRA என்ற அமைப்பிலும் தொடர்ந்து HSRA என்ற புரட்சிகர அமைப்பிலும் தனது சகாக்களுடன் தன்னை முன் வரிசையில் நிலை நிறுத்திக் கொண்டான். 1925-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாகுவதற்கு முன்பே, தமது புரட்சிகர கட்சி அறிக்கையில், ‘வன்முறை எங்கள் நோக்கம் அல்ல; அது வழிமுறை மட்டுமே’ என்று பிரகடனப் படுத்தினான்.
தந்தை – மகனுக்கும் இடையிலான போராட்டம்!
மிக இளம் பிராயத்திலேயே தமது மகன் பகத்சிங் இவ்வாறு பொது நல வேட்கையில் ‘வெறி பிடித்திருப்பதாக’ எண்ணி தமது மகனுக்கு கால் கட்டு என்ற திருமணப் பந்தத்திற்குள் கட்டிப் போட முயன்றார் தந்தை கிஷான் சிங்.
தமது தந்தைக்கு பகத்சிங் எண்ணற்ற கடிதங்களை சுருக்கமாகவும் விரிவாகவும் எழுதி இருக்கிறார். திருமணம் தொடர்பாக, பகத்சிங் 1923-களில் ,தமது தந்தைக்கு எழுதிய கடிதங்கள் பிரபல்யமானவை. அவற்றில் இக்கால இளைஞர்கள் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒன்றிரண்டு கடிதங்களைப் பார்ப்போம்:
“மதிப்பிற்குரிய தந்தைக்கு,
உங்களுடைய கடிதத்தின் உள்ளடக்கத்தை படித்துப் பார்த்து நான் வியப்படைந்தேன். மாபெரும் தேசபக்தரும் மன உறுதி மிக்க வருமான நீங்களே இத்தகைய அற்பமான விஷயங்களின் செல்வாக்கிற்கு ஆளாக முடியும் என்றால் சாதாரண மனிதர்களின் நிலை என்னவாகும்?
நீங்கள் தாதிக்காக (பாட்டிக்காக) கவலைப் படுகிறீர்கள். ஆனால் 33 கோடி மக்களின் தாயான நமது பாரத மாதா எத்தனை துன்பத்தில் இருக்கிறாள்? அவளுடைய நலனுக்காக நாம் எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும்.
உங்கள் கீழ்ப்படிதலுள்ள,
பகத்சிங்”
மதிப்பிற்குரிய தந்தைக்கு,
வணக்கம்.
என்னுடைய வாழ்க்கை இந்தியாவில் சுதந்திரம் எனும் உன்னத நோக்கத்திற்காக ஏற்கனவே அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது.
எனவே சுகபோகங்களுக்கும், உலக ஆசைகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை.
நான் சிறுவனாயிருக்கும் போது எனக்கு புனித நூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் பாபுஜி (தாத்தா) அவர்கள் நான் தேசத்தின் சேவைக்காக அர்ப்பணிக்கப்படுவதாக அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கும்.
ஆகவே, அந்த அர்ப்பணிப்பை நான் நிறைவேற்றுகிறேன். என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
தங்கள் கீழ்படிதலுள்ள,
பகத்சிங்.”
“மதிப்பிற்குரிய தந்தைக்கு,
வணக்கம்.
இது திருமணத்திற்குரிய நேரம் அல்ல. நாடு என்னை அழைக்கிறது. நான் உடலாலும், மனதாலும், பொருளாலும் நாட்டிற்கு சேவை செய்வேன் என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளேன். சொல்லப் போனால் இது நமக்கு ஒன்றும் புதிய விஷயமல்ல; நமது குடும்பம் முழுவதுமே தேசபக்தி நிரம்பியது.
நான் பிறந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து 1910ல் சித்தப்பா ஈஸ்வரன் சிங் சிறையில் இறந்தார். சித்தப்பா அஜித் சிங் அயல்நாடுகளில் நாடு கடத்தப்பட்டோரின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். நீங்களும் சிறைகளில் ஏராளமான துன்பத்தை அனுபவித்து உள்ளீர்கள். உங்களின் அடிச்சுவட்டையே நானும் பின்பற்றுகிறேன். அதனாலயே இதை செய்வதற்கு நான் துணிந்தேன்.
அன்பு கூர்ந்து என்னைத் திருமணப் பந்தத்திற்குள் கட்டிப் போடாதீர்கள். அதற்கு மாறாக, என்னுடைய அரசியல் குறிக்கோளில் நான் வெற்றி பெற என்னை நீங்கள் ஆசீர்வதியுங்கள்.
உங்கள் கீழ்ப்படிதலுள்ள,
பகத்சிங்.”
….பகத்சிங்கின் இத்தகைய கடிதங்களை வெளியிட்டு இளைஞர்களுக்கு முகமன் கூறுவதன் மூலம், ‘அனைத்து இளைஞர் களுமே திருமணப் பந்தத்தை தூக்கி எறிந்து விட்டு பொது வாழ்க்கைக்கு வாருங்கள்’ என அறைகூவல் விடுப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மார்க்சிய ஆசான்கள் மட்டுமல்ல; சர்வதேசிய அளவில் எண்ணற்ற கம்யூனிஸ்டுகள் – நமது நாட்டில் – நமது இயக்கத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு கொள்கை வழிபட்டு, உழைக்கும் மக்களின் விடுதலைக்காக – கார்ப்பரேட் காவிப் பாசிசத்தால் நாட்டைக் கௌவி இருள் பரப்பும் ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ மத வெறி கும்பலையும், அதன் கள்ளக் குழந்தையான தமிழ்நாட்டைச் சீரழிக்கும் நடிகன் விஜய்யின் தவெக-வையும் பூண்டோடு அழித்தொழிக்கும் பணியில் அர்ப்பணித்து வேலை செய்யும் ஆயிரம் ஆயிரம் கம்யூனிஸ்டுகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் மாணவர்கள் இளைஞர்கள் பங்கும் அடங்கி இருக்கின்றன.
படிக்க:
♦ பகத்சிங்: இன்றைய இளைஞர்களுக்கு புரட்சிகர வழிகாட்டி
ஒதுங்காதே! ஒன்று சேர்! புரட்சி செய்!
“புரட்சி என்பது இரத்த வெறிகொண்ட மோதலாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. ‘புரட்சி’ என்பதன் மூலம் வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.”
“விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணி களால் இந்திய உழைக்கும் மக்களும், அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப் பட்டுக் கொண்டிருக்கும் வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாக கூட இருக்கலாம். அவர்கள் தங்களது நயவஞ்சகமான சுரண்டலை பிரிட்டிஷ் மற்றும் இந்திய கலப்பு அரசியல் தரத்தைக் கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்…இந்தப் போர் தொடர்ந்தே தீரும்…அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோசலிக் குடியரசு நிறுவப்படும் வரையிலும் ஓயாது தொடுக்கப்பட்டு கொண்டே இருக்கும்… இந்தப் போர் எங்களால்தொடங்கப்படவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை; வரலாற்று நிகழ்வு போக்கினையொட்டியதும், இன்று நிலவும் சூழ்நிலை களின்காரணமாக தவிர்க்க முடியாததன் விளைவே இப்போர்…”
20 வயதுகளில் நாட்டு நலனில் – மக்கள் நலனில் எவ்வளவு அக்கறை இருந்திருக்குமேயானால் இவ்வளவு தீர்க்கதரிசனமாக மேற்கண்டவாறு மாவீரன் பகத்சிங் பதிவிட்டிருக்க முடியும் பாருங்கள்.
இந்திய மக்களை – தலைவர்களை அவமானப்படுத்தும் வகையில், 1919 இல் லாகூருக்கு வருகை தந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதி ராய் தலைமையில் ‘சைமனே திரும்பி போ’ என்ற முழக்கத்துடன் பேரணி நடைபெற்றதும், பிரிட்டிஷ் இந்திய போலீஸ் தாக்குதலில் லஜபதி ராய் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிர் துறந்ததும் நாடறிந்தது. இதற்குக் காரணமான டிஎஸ்பி ஸ்காட்-டை அழித்திட காங்கிரஸ்காரர்கள் எவரும் போராட முன் வரவில்லை.
மாறாக பகத்சிங் அணியில் இருந்த சந்திரசேகர் ஆசாத், பகவதி சரண், ராஜகுரு, சுகதேவ், துர்கா தேவி போன்ற HSRA புரட்சிகர இயக்க முன்னோடிகள் தான் வீறு கொண்டு எழுந்தனர். மாண்டவர் காங்கிரஸ்காரரே ஆனாலும் அவர் ஒரு இந்தியர் என்ற அடிப்படையிலேயே வெள்ளையனுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டனர். ஆனால் ஸ்காட் தப்பித்து விட்டான். தவறான சமிக்ஞை காண்பித்த ஜெய கோபாலால் சப் – இன்ஸ்பெக்டர் சாண்டர்ஸ் என்பவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். அவனும் சுட்டு வீழ்த்தப் படுவதற்குத் தகுதி பெற்றவனே! அந்த வழக்கில் தான் மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் முதலானோர் தூக்கிலிடப் பட்டனர்.
படிக்க:
♦ பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார் ஓங்கில்கூட்டம் புதியநூல்
♦ ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் நினைவு நாளில்…
‘தியாக புருஷன்’ பகத்சிங்கை காப்பாற்றுவதற்கு வெள்ளையனோடு இணக்க உறவு கொண்டிருந்த காங்கிரசின் பெரும் பெருச்சாளி காந்தி முன்வரவில்லை என்பதுவும், அவன் விடுதலை பெறுவதை விட மிக விரைவிலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்ற போலித் தலைமைக்கான சுயநலவாத கண்ணோட்டத்தில் துரோகம் செய்தார் காந்தி என்பதுவும் சோகத்தின் பெரும் துரோக வரலாறு.
அதே நேரத்தில், தான் விடுதலை பெறுவதை விட தூக்கில் ஏற்றப்படுவதன் மூலம் தம்மை முன் உதாரணமாகக் கொண்டு இந்தியா முழுமையும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வேள்வியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முன்வருவர் என்றே பெரிதும் நம்பிக்கை கொண்டான் மாவீரன் பகத்சிங். வெள்ளையனிடம் மன்னிப்பு கோர தனது தந்தை முற்பட்டபோது கூட மிகவும் கடுமையாக தனது கோபத்தை தமது தந்தையிடம் வெளிப் படுத்தினான் பகத்சிங்.
இன்றைய காலச் சூழல் மிகவும் அபாயகரமானது. மாணவர்கள் ,இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவருக்குமே சவால் நிறைந்த சமூக சூழல் நிலவுகிறது. ஆனால் போர்க் குணத்துடன் எதிர்வினையாற்ற வேண்டிய மேற்கண்ட பிரிவினர் மந்த கதியில் ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்ற நிலையிலும், கலாச்சாரச் சீரழிவிலும் உழல்வது பகத்சிங்கிற்கு செய்யும் துரோகம் என்றே கொள்ள வேண்டும்.
நேற்றைய தினம் (27-09-2026) ராமேஸ்வரம் கச்சத்தீவு அருகில் உள்ள அரிச்சல் முனை பகுதியில் ஒரு கலாச்சார விழா. அதில் இளம் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என முழுமையும் அறிவுக்குத் துளியும் சம்பந்தமில்லாத கற்பனைப் பாத்திரங்களான ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் போன்ற வேடங்கள் அணிந்து ஆட்டம்,பாட்டம் எனகொண்டாட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். இதற்குப் பின்னணியில் ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ காவிக் கும்பல் இருந்துள்ளது.
மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அறிவுபூர்வமாக – விஞ்ஞான ரீதியாக வளர்ந்து விடக்கூடாது சிந்தனைகளை செலுத்தி விடக்கூடாது என்பதில் இந்த நாசகார சக்திகள் கவனமாக இருப்பதன் வெளிப்பாடே இந்த சீரழிந்த கலாச்சார ‘விழாக்கள்’!
மறுபுறம் சினிமா நடிகன் தற்குறி விஜய்யை அரசியல் தலைவனாக பாவித்துக் கொண்டு முழுமையும் சமூகப் பிரக்ஞை இன்றி ரீல்ஸ் அரசியல், அலைபேசிகளில் தென்படும் எண்ணற்ற கேடான ஊடகப்பதிவுகளைக் காண்பது; பதிவிடுவது என சீரழிந்த கலாச்சாரத்தில் மாணவர்கள் இளைஞர்கள் மூழ்கிக் கிடப்பது நாட்டின் மாபெரும் ‘சாபக்கேடு’!
இன்றைய பகத்சிங்கின் 119 ஆவது பிறந்த நாளில் – கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்தவும், ஜனநாயக கூட்டரசை நிறுவவும் பொது வாழ்வில் ஐக்கிய படுத்திக் கொள்ளத் தயங்காதே! ஒதுங்காதே! ஒன்று சேர்! புரட்சிகர இயக்கங்களில் ஐக்கியப்படு! புரட்சி செய்! – என்பதுவே நாம் விடுக்கும் பிரதான வேண்டுகோளாகும்!
படிக்க:
♦ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் நினைவு கருத்தரங்கம் | மார்ச்-29
“புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக விதைக்கப்படுகிறார்கள்” – என்பதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்வதால் மட்டுமே மாவீரன் பகத்சிங்கின் தியாகத்தினைப் பற்றி நிற்க – போற்றி நிற்கத் தகுதி படைத்தவர்களாவோம்!
ஆம், அத்தகுதியினை அனைவரும் பெறுவோம்!
– எழில்மாறன்.







சிறப்பு