Lead ingots எனப்படும் காரீயத்தை கழிவுப்பொருளில் இருந்து பிரித்தெடுக்கும் ஆலையை ஜெயின் மெட்டல் குரூப் நிறுவனமானது கும்மிடிப்பூண்டியில் இயக்கி வந்துள்ளது. இதில் தான் 14.7.2026 அன்று பாய்லர் வெடித்துச் சிதறி வடமாநிலத்தவர்களின் உயிர்களை பறித்துள்ளது. நிர்வாகம் ஒருவர் பலி நான்கு பேர் படுகாயம் என்ற தகவலை மட்டுமே இதுவரை தந்துள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கு 200 பேர் வீதம் 600க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியும் ஆலையாக இது இயங்கி வந்துள்ளது. கட்டிடத்தின் கூரைகள் பிய்த்தெரியப்பட்டுள்ளதை பார்க்கும்போது உயிர் பலியின் எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது.
இது யாருக்கான தொழில் வளர்ச்சி?
இந்த ஜெயின் மெட்டல் குரூப் நிறுவனமானது 75 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டதாக பெருமை அடித்துக்கொள்கிறது. கும்மிடிப்பூண்டியில் உள்ள ஜெயின் ரிசோர்சஸ் ரீசைக்ளிங் ஆலையானது ஆண்டிற்கு ஒரு லட்சம் டன்களாக Lead – காரீயம் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இயங்கி வந்துள்ளது.
சென்னையில் மறுசுழற்சியில் உற்பத்தியாகும் ஈயக் கட்டிகளின் விலை, விநியோகஸ்தர், சந்தைத் தேவை மற்றும் ஆர்டர் அளவு ஆகியவற்றைப் பொறுத்து ஒரு கிலோவிற்கு ₹180 முதல் ₹250 வரைமாறுபடுகிறது. தரமான கட்டிகள் பொதுவாக 10 கிலோ முதல் 25 கிலோ வரை எடை கொண்டவை. இவை ஈய-அமில மின்கல உற்பத்தி, கதிர்வீச்சுத் தடுப்பு மற்றும் கேபிள் உறையிடுதல் போன்றவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்துறையில் முன்னேறி வரும் தமிழகத்தில் வட மாநில கார்ப்பரேட் நிறுவனங்களும் முதலீடு செய்து தொழில்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த ஜெயின் மெட்டல் குரூப் நிறுவனமும் தமிழகத்தில் தொழிலை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிவதற்கு தேவையான தொழிலாளர்களை வட மாநிலங்களில் இருந்து அழைத்து வந்து உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது.
வஞ்சிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள்!
சில கார்ப்பரேட்டுகள் ஆலை அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களை வேலைக்கு எடுக்காமல் தொலைதூர மாவட்டங்களில் இருந்து எடுப்பார்கள். ஆனால் ஜெயின் நிறுவனமோ தமிழகத்திலிருந்து ஒருவரும் வேண்டாம் என்று மொத்தமாக புறக்கணித்துவிட்டு வட மாநிலத்தவரை மட்டுமே வேலை ஈடுபடுத்தி வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் அமோனியா வாயு கசிந்து 18 பேர் பலியான செயின் பீட்டர் பால் ஆலையும் இப்படித்தான் பகுதி மக்களை புறக்கணித்துவிட்டு இயங்கி வந்தது.
75 வருட பாரம்பரியம் – அனுபவத்தை கொண்ட ஜெய்ன் மெட்டல் குரூப், இந்தியாவில் தாமிரம் மற்றும் தாமிரக் கலப்புலோகங்கள், ஈயம் மற்றும் ஈயக் கலப்பு உலோகங்கள், அலுமினியம் மற்றும் அலுமினியக் கலப்பு உலோகங்கள் உள்ளிட்ட இரும்பு அல்லாத உலோகங்களை மறுசுழற்சி செய்வதிலும் உற்பத்தி செய்வதிலும் ஈடுபட்டுள்ளது. ஒரே இடத்தில் பல பொருட்களை மறுசுழற்சி செய்யும் திறனைக் கொண்டுள்ளதோடு, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் பெறுவதற்காக ஒரு விரிவான உலகளாவிய வலையமைப்பையும் இது கொண்டுள்ளது. மேலும், இக்குழுமம் நிக்கல் கேத்தோடு, சிலிக்கான் உலோகம், தகரக் கட்டிகள், துத்தநாகக் கட்டிகள் போன்ற பொருட்களின் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது.
படிக்க:
♦ திருவள்ளூர் விஷவாயு படுகொலை இதுவரை 07 பேர் பலி
♦ மின் உற்பத்தி நிலையத்தில் 20 தொழிலாளர்கள் பலி: அனில் அகர்வாலைத் தொட மோடி அரசால் முடியுமா?
அந்நிறுவனத்தின் தலைவர் கம்லேஷ் ஜெயின் தலைமையிலான இந்த ஜெய்ன் மெட்டல் குரூப் குழுமம், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி இரும்பு அல்லாத உலோக மறுசுழற்சி மற்றும் உற்பத்தி நிறுவனமாகும் . 1950-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், கும்மிடிப்பூண்டி மற்றும் கீழ்ப்பாக்கம் போன்ற தனது ஆலைகளில் ஆண்டுதோறும் 3 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் உலோகக் கழிவுகளைப் பதப்படுத்தி, LME தரத்திலான செம்பு, ஈயக் கட்டிகளை உற்பத்தி செய்கிறது. உலகளாவிய தொடர்புகளுடன் தொழில் செய்து வரும் கார்ப்பரேட்டுகளுக்கு உலக தரத்தில் உற்பத்தியை – ஆலையை நடத்துவது மட்டும் தெரியாமல் போய்விட்டதா?
பாய்லர்கள் இயக்கப்படும் பொழுது அதற்கான விதிமுறைகளை கறாராக அமல்படுத்தினால் வெடிப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் உரிய தகுதியோ பயிற்சியோ அனுபவமோ இல்லாதவர்களை கொண்டு பாயிலர்களை இயக்கும் போது அவை வெடித்து சிதறி உயிர் பலி வாங்குவது தவிர்க்க இயலாத ஒன்று. இது தமிழகத்தில் இயங்கி வரும் கார்ப்பரேட் முதலாளிகளின் மண்டையில் ஏறாத ஒன்றும் கூட. ஒவ்வொரு படுகொலைகளின் போதும் கார்ப்பரேட்டுகளின் மீது கை வைப்பதற்கு இதுவரை எந்த அரசாங்கமும் துணிந்ததில்லை. TVK – வின் விஜய் மட்டும் விதிவிலக்காக இருக்கப் போகிறாரா என்ன?
விதிப்பிடியான பராபரிப்புக்கு ஆகும் செலவைவிட விபத்துகளுக்கு தரும் இழப்பீடு தொகை குறைவாக இருக்கிறது போலும். அதனால்தான் கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படி பாய்லர்கள் வெடிப்பது என்பது இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்டீல் ரோல் மில் அல்லது பவுண்டரிகள் என்றாலே அங்கு வட மாநிலத்தவர்கள் தான் பணிக்கு செல்வார்கள் என்ற நடைமுறையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஒப்பீட்டளவில் மிக மிகக் கடுமையான உழைப்புக்கு தயங்காதவர்களாகவும், வறுமையின் காரணமாக எத்தனை மணி நேரம் வேண்டும் என்றாலும் தொடர் உழைப்பில் ஈடுபட வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்களாகவும் புலம்பெயர்ந்து வந்துள்ள வட மாநிலத்தவர்கள் உள்ளனர். அம்மக்களின் சுடுகாடாக தமிழகம் படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்த அவலத்திற்கு முடிவு கட்ட உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து நிரந்தர தொழிலாளிகள், ஒப்பந்த தொழிலாளிகள், பயிற்சி தொழிலாளிகள் என்ற பிரிவினையை அடித்து நொறுக்கி விட்டு ஐக்கியப்பட்டு போராட வேண்டியுள்ளது. இப்படி ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் தான் ஜெயின் மெட்டல் குரூப் முதலாளிகளையும், கார்ப்பரேட்டுகளுக்கு துணைப் போய் உள்ள அரசு அதிகாரிகளையும் கொலைக் குற்றத்தில் வழக்குப்பதியவும், தண்டிக்கவும் முடியும்.
- இளமாறன்






