சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் மின் உற்பத்தி நிலையத்தில் நடந்த விபத்து (படுகொலை) தொடர்பாக வேதாந்தா குழுமத் தலைவரின் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14 அன்று சிங்கிதரை கிராமத்தில் உள்ள வேதாந்தாவின் மின்னுற்பத்தி நிலையத்தில் கொதிகலனிலிருந்து நீராவியை டர்பைனுக்கு கொண்டு சென்ற குழாய் வெடித்தது. இதில் 20 பேர் உயிரிழந்தனர்; மற்றும் 16 பேர் காயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.
இந்த விபத்து தொடர்பாக அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் பிரிவு 106, இயந்திரங்கள் தொடர்பான அலட்சிய நடத்தை பிரிவு 289 ஆகியவற்றின் கீழ் தப்பா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டாலேயே சரியாக விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைத்தால் அது நமது அசட்டுத்தனமே ஆகும்.
1984 இல் போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலையில் விஷவாயு கசிந்து மக்கள் கொத்துக்கொத்தாக செத்தனர். சுமார் 8 ஆயிரம் பேரை கொன்ற அமெரிக்க முதலாளியான (CEO) வாரன் ஆண்டர்சன் நேரில் வந்து பார்வையிட்டு, தனி விமானத்தில் ஏறி பாதுகாப்பாக நாடு திரும்பினான். வழக்கையே சந்திக்காமல் வயது மூப்படைந்து செத்தும் போனான்.
அதுபோலத்தான் விஜய் மல்லையா, முகுல் சோக்சி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள் நமது நாட்டில் வழக்குகளுக்கு ஆஜராகாமல் வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அனில் அகர்வாலும் சேர்ந்துள்ளார்.
விதிகள் சாமானியனுக்கு மட்டுமே!
நாம் ஒரு பைக் வாங்கி ஓட்டினால் கூட அதற்கு எமிசன் சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். அதாவது இன்ஜினில் இருந்து வெளியேறும் – சைலன்ஸரில் இருந்து வெளியேறும் புகையின் அளவை பரிசோதித்து வாங்கும் அந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் சாலையில் வாகனத்தை ஓட்ட முடியும். மீறினால் ஆங்காங்கே வெள்ளைச்சட்டை போட்டவர்கள் வண்டியை மறித்து “ஸ்பாட் பைன்” வசூலிப்பார்கள்.
ஆட்டோ, கார், லாரி, பஸ் என ஓட்டுபவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் வண்டியை எப்சிக்கு காட்ட வேண்டும். அவர்கள் பிரேக், கிளட்ச், ஸ்டேரிங் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று சோதித்துப் பார்த்து பின்னரே சாலையில் வாகனத்தை ஓட்டுவதற்கான அனுமதியை RTO-க்கள் தருவர்
இதுபோல் மின் உற்பத்தி நிலையத்தில் கொதிகலன்களை கையாள்வது, அதிக அழுத்தத்தில் செல்லும் நீராவியை கையாளுவது போன்றவை தொடர்பாக விதிகள் உள்ளன. அதை சோதிப்பதற்கும், அதற்கு அனுமதி தருவதற்கும் ஏதேனும் அதிகாரிகள் இருப்பார்களா? சந்தேகமே வேண்டாம்; நிச்சயம் இருக்கிறார்கள்தான்.
கொதிகலன் ஆய்வாளர் ( Boiler inspector ) எனப்படுபவர் கொதிகலன்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து சான்றிதழ் வழங்குவார். கொதிகலன் சட்டம் மற்றும் விதிகளின்படி பாய்லர்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்த பின்னர் தான் எந்த ஒரு நிறுவனமும் தமது தொழிற்சாலைகளில் கொதிகலன்களை இயக்க முடியும். ஆனால் சட்டம் சாமானியர்களுக்கு மட்டுமே; கார்ப்பரேட்டுகளுக்கு அல்ல என்பதுதான் நடைமுறையாக உள்ளது.
மற்றுமொரு ஸ்டெர்லைட்!
தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஆனது புதிய இயந்திரங்களைக் கொண்டு நிறுவப்பட்ட ஒன்றல்ல. ஏற்கனவே வெளிநாட்டில் பல ஆண்டுகள் இயங்கிய ஆலையின் எந்திரங்களை பிரித்து எடுத்துக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் பொருத்தி இயக்கினார்கள். அதரப்பழசான அந்த ஆலைகளில் அவ்வப்போது விபத்துகளும், உயிர்ப்பலிகளும் தொடர்ந்து வந்தன. அதுபோல்தான் இந்த பவர் பிளான்டிலும் விபத்து நடந்துள்ளது.

கார்ப்பரேட்டுகளை பொருத்தவரை காய்லான் கடை சரக்குகளை கூட குப்பையில் போடாமல் இயக்கி லாபம் பார்ப்பார்கள்தான். அந்த வகையில் ஏற்கனவே பதினோரு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த பாழடைந்த பவர்பிளான்ட்டை தூசி தட்டி இயக்கியுள்ளார்கள். அதுதான் தற்போது வெடித்து 20 பேரின் உயிரை பலி வாங்கியுள்ளது. அதாவது விதிகள் எல்லாம் குப்பனுக்கும் சுப்பனுக்கும் சாமானிய மக்களுக்கு மட்டும்தான்; கார்ப்பரேட்டுகளுக்கு அல்ல என்பதுதான் நடைமுறையில் உள்ள நியதி.
மேற்கண்ட குற்றச்சாட்டை நாம் கற்பனையாக முன் வைக்கவில்லை. வேதாந்தா பவர் ஆலையில் நிகழ்விடத்தை நேரில் ஆய்வு செய்த பின் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தீபக் பைஜ்தான் இக்குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சரியான பிரிவுகளின் கீழ் வழக்கை பதிவு செய்யப்படுமா? 20 பேரின் உயிரை பலி வாங்கிய அனில் அகர்வால் குறைந்தபட்சம் ஒரு நாளாவது சிறைக்குள் அடைக்கப்படுவாரா?
அனில் அகர்வாலை சிறையில் தள்ள முடியுமா?
அதற்கு நெஞ்சரம் கொண்ட அரசு தேவை. கார்ப்பரேட்டுகள் வீசி எரியும் காசை வாலை ஆட்டிக் கொண்டு கவ்வாத கட்சி தேவை. தேர்தல் பத்திரங்களின் பக்கம் திரும்பி பார்க்காத கை சுத்தமும் தேவை. அதைவிட முக்கியமாக இந்நாட்டின் குடிமக்களின் மீது, உழைக்கும் மக்களின் மீது அக்கறை தேவை. காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கம் மக்களுக்காக சிந்திப்பதும் தேவை.
இதில் ஒன்று கூட இல்லாத பாசிச பாஜக அரசு நிச்சயமாக கைது நடவடிக்கையை எடுக்காது. அனில் அகர்வால் 2025 ஜூலை கணக்குப்படி பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 97 கோடியை நன்கொடையாக நன்கொடையாக தந்துள்ளார். 2017 முதல் 2024 வரையில் சுமார் 457 கோடியை பல்வேறு கட்சிகளுக்கு வாரி வழங்கியுள்ளார். நாட்டிலேயே தேர்தல் பத்திரங்களின் மூலம் அதிக கோடிகளை குவித்துள்ள கட்சி பாஜக தான். இவையெல்லாம் கணக்கில் வந்தவை. அந்த வகையில் அனில் அகர்வாலின் பணத்திலும் கணிசமான அளவு பாஜகவுக்கு தான் போய் சேர்ந்திருக்கும்.
படிக்க:
♦ வெள்ளி வேட்டையில் அனில் அகர்வால் குழுமம்! கார்ப்பரேட்டுகள் சூறையாடலின் அடுத்த பரிமாணம்!
♦ அனில் அகர்வால் கைக்குள் சிபிஐயும் அடக்கம்!
கார்ப்பரேட்டின் எலும்பை கவியவர்கள் வாலையாட்டி விசுவாசத்தை காட்டத்தான் செய்வர். எனவே பாஜக அனில் அகர்வால் மீது பாயாது. ஒருவேளை நீதி கேட்டு போராடும் மக்களின் மீது வேண்டுமென்றால் தமது அரசு படைடைகளை ஏவி தாக்குதலை நடத்தும். தற்போது உயிர் பலியாகி இருப்பவர்கள் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்களல்ல. உபி, பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் என பல மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். எனவே குடும்பங்களின் கூட்டுப் போராட்டத்திற்கும் வாய்ப்பில்லை.
இதுவே ஆலையின் முதலாளி ஒரு இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ இருந்திருந்தால் இந்நேரம் சங்கிகள் பொங்கி எழுந்திருப்பார்கள். இது திட்டமிட்ட இந்து மதத்தின் மீது, இந்து மக்களின் மீதான தாக்குதல் என்று போராட்டங்களை முன்னெடுத்தும் இருப்பார்கள்
குடும்பத்திற்குக் கால் வயிறு கஞ்சி ஊற்றுவதற்காக புலம் பெயர்ந்து வந்து உழைத்தவர்கள் தான் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்களும், சத்தீஸ்கரை சேர்ந்த 5 தொழிலாளர்களும் ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தலா 3 பேரும், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். செத்தவர்களில் பெரும்பான்மை இந்து, கொன்றவனும் இந்துதான். எனவேதான் காவிப் பாசிஸ்டுகள் வாயை மூடிக்கொண்டு உள்ளார்கள்.
உடுக்கை இழந்தவன் கையாக ஜிண்டால்!
கார்ப்பரேட்டுகளில் ஒருவருக்கு பிரச்சனை என்றால் உதவிக்கு மற்றவர்கள் ஓடி வருவர். அந்த வகையில் வேதாந்தாவின் அனில் அகர்வாலுக்கு முட்டுக் கொடுக்க நவீன் ஜிண்டால் முந்திக் கொண்டு வருகிறார். 20 பேர் பலியான நிலையில் முதலில் புலனாய்வு செய்ய வேண்டுமாம். அதன் பின்னர்தான் நடவடிக்கையில் இறங்க வேண்டுமாம். ஒரு முதலாளிக்கு இன்னொரு முதலாளி எவ்வளவு பரிந்து பேசுகிறார்.
படிக்க:
♦ ஆர்எஸ்எஸ் புரவலர் அனில் அம்பானி வங்கிகளை சூறையாடும் மோசடிப் பேர்வழி!
♦ தூத்துக்குடியை விழுங்கப் பார்க்கும் ‘மலைப்பாம்பு’!
தூத்துக்குடியில் இதே அனில் அகர்வாலுக்காக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு துப்பாக்கி சூடு நடத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை படுகொலை செய்தது. அத்தகைய கொந்தளிப்பான சூழலில் தூத்துக்குடிக்கு வந்து விட்டு திரும்பிய ரஜினி “எதுக்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று போய்க்கொண்டு இருந்தால் நாடே சுடுகாடாயிடும்” என்று திருவாய் மலர்ந்ததை இங்கு நினைவு கூறலாம்.
எதிரிகளிடம் கார்ப்பரேட் வர்க்க ஒற்றுமை உள்ளது. உழைக்கும் மக்களிடமும் இத்தகைய ஒற்றுமையை கட்டி எழுப்ப வேண்டும்.
காவிகளின் வழக்கம்!
ஒரு இஸ்லாமியரோ அல்லது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் கையில் இறைச்சியை வைத்திருந்தால், அது மாட்டுக் கறி தான் என்று தீர்மானித்து முதலில் அடித்தே கொன்று விடுவது தான் சங்கிகளின் வழக்கம். கண்துடைப்புக்காக வழக்கு போட்டு, பின்னர் கைப்பற்றிய இறைச்சியைப் பரிசோதனைக்கு அனுப்பி அதை ஆய்வு செய்வது தானே காவி பாசிஸ்ட்டுகளின் நடைமுறை.
அதுபோல் ஜிண்டால் சொல்வதை தூக்கி எறிந்து விட்டு, முதலில் லண்டனுக்குச் சென்று ‘இந்துக்களை கொன்ற ‘அனில் அகர்வாலின் கைகாலை உடைக்க வானரப் படைக்கு துணிவு உள்ளதா?
வளர்ப்பு பிராணிகள் எஜமானனிடம் வாலை மட்டும் தான் ஆட்ட வேண்டும். குரைக்க எல்லாம் முடியாது. பின்னர் கடிப்பது எங்கே? இப்போது மோடி அரசு வளர்ப்பு பிராணியா? – 56 இன்ச் துணிச்சல்காரரா? நாட்டுப்பற்றாளரா? – கார்ப்பரேட் விசுவாசியா ? இந்துக்களின் பாதுகாவலனா? – சட்டத்தை வளைத்து எஜமானனை காப்பாற்றுபவரா? விஸ்வ குருவின் லட்சணத்தை உலகே அறியும். படுகொலைகளுக்கு நீதியை பெற வேண்டும் என்றால் கார்ப்பரேட்டுகளிடம் உள்ள நாட்டின் அதிகாரம் நம் கைக்கு வர வேண்டும்.
இளமாறன்






