பாசிசக் கோமாளி விஜய் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி கொடிகட்டி பறப்பதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஒற்றைக்காலில் தவமிருந்து வருவதாகவும் பார்ப்பன ஊடகங்களும், விஜய் உருவாக்கியுள்ள ரூட் மாஃபியா கும்பலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்டதாக மாற்ற திட்டமிட்டு முன்னேறி செல்வதாக திருவாளர் விஜய் அறிவித்துள்ளார். முன்னாள் தமிழகத்தை ஆண்ட திமுக ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கு தீர்மானித்திருந்த சூழலில் தற்போது தமிழகத்தை ஆளுகின்ற தமிழக வெற்றிக் கழகம் 1.5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் தரகு முதலாளிகள், தேசங்கடந்த தரகு முதலாளிகள் தமிழகத்தை சூறையாடுவதற்கான வேட்டைக்களமாக மாற்றியுள்ளதை தான் திருவாளர் விஜய் “வரான் பாரு வேட்டைக்காரன்” என்று பாடி மகிழ்ந்தார் போல் இருக்கிறது.
விஜய் ஆட்சிக்கு வந்ததற்கு பின்னணியாக சுமார் 40,000 கோடி சொத்து மதிப்புக் கொண்ட தேசங்கடந்த தரகு முதலாளியான வேதாந்தா அகர்வால் மற்றும் திடீரென்று தமிழகத்தில் முளைத்துள்ள சுமார் 1, 28,000 ஆயிரம் கோடி சொத்து மதிப்புக் கொண்ட தேசங்கடந்த தரகு முதலாளியான ஜோகோ ஸ்ரீதர் வேம்பு ஆகியவர்கள் செயல்பட்டனர். அதன் பிறகு பல்வேறு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வரிசை கட்டி நிற்பதும், கோவையில் உள்ள ஜவுளி முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, தென்னிந்திய முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று தொடர்ந்து கார்ப்பரேட்டுகளின் முதலீடுகளை வாரிக் குவிப்பதை தான் தமிழகத்தின் வளர்ச்சி என்று மார்த்தட்டுகிறது விஜய் ஆட்சி.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடுவதற்கு பொருத்தமாக தொழிலாளர் நலச் சட்டங்களை காவு கொடுப்பது; அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு தடையாக உள்ள சுற்றுச்சூழல் உள்ளிட்ட சட்டங்களை ஒற்றைச் சாளர முறையில் சுலபமாக்கி அமுல்படுத்துவது; கார்ப்பரேட் முதலாளிகள் மனம் கோணாத வகையில், தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் அமைவதை தடுக்கின்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்வது என்ற வகையில் கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமை கூடாரமாகவே தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு கொண்டுள்ளது.
கடந்த 50 நாட்களில் மட்டும் தமிழகத்தை சூறையாடுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டுள்ள நிறுவனங்களின் பட்டியல்களை பார்த்தாலே கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான வழியை அகல திறந்து விடுவது தான் பாசிசக் கோமாளி விஜய்யின் முக்கியமான நோக்கம் என்று தெரிகிறது.
படிக்க:
♦ விஜய் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழி
♦ தமிழக வெற்றிக் கழகத்தின் திடீர் வெற்றிக்குப் பின்னால்
பாசிச பாஜகவின் பினாமி ஆட்சி என்பது அரசியல் ரீதியான விமர்சனம் என்றால் பொருளாதார ரீதியாக தேசங்கடந்த தரகு முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகள் ஆகியோர்களை இரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்பதில் பாசிச பாஜகவிற்கு சற்றும் சளைத்தது அல்ல த.வெ.க.
திமுக ஆட்சியில் அந்நிய முதலீடு குவிக்கப்படுவதை எதிர்த்துக் கூச்சலிட்ட போலி முற்போக்குகள் மற்றும் கம்யூனிச பிழைப்புவாதிகள் கும்பல் தற்போது தமிழக ஆட்சியில் சுயசார்புப் பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது போலவும், ஊழல்-லஞ்சம் ஆகியவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது போலவும் விஜய் மீது ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றனர்.
தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் என்று அழைக்கப்படும் கீர்த்தனா தனது முகநூல் பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்
“இன்று சிஐஐ தெற்கு பிராந்திய கவுன்சிலில் உரையாற்றுவது மற்றும் தென் இந்தியா முழுவதிலும் இருந்து வணிகத் தலைவர்களுடன் உரையாடுவது ஒரு பாக்கியம். நிலையான பொருளாதார வளர்ச்சி நம்பிக்கை, கண்டுபிடிப்பு மற்றும் அரசாங்கத்திற்கும் தொழில்துறைக்கும் இடையேயான கூட்டாண்மை ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
தொழில்கள் புதுமைப்படுத்தி, முதலீடு செய்து, வளரக்கூடிய கணிக்கத்தக்க, வெளிப்படையான, தொழில்துறைக்கு உகந்த சூழலை வழங்க தமிழக அரசு கடமைப்பட்டுள்ளதாக இந்த தொழில்துறையில் உறுதியளித்தேன்.
தரமான வேலைவாய்ப்பை உருவாக்கி, இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தி, மதிப்புச் சங்கிலியை நிலையாக உயர்த்த நாம் ஒன்றிணைந்து செயல்படுவதால் தொழில் தலைவர்கள் தங்கள் முதலீடுகளை தமிழகத்தில் தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினேன். உள்ளடக்கிய வளர்ச்சி, சமூகப் பொறுப்பை சந்தை திறனுடன் சமநிலைப்படுத்துதல் ஆகியவற்றின் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்.” என்று ஆங்கிலத்தில் உளறுவதைப் போலவே தமிழிலும் உளறியுள்ளார்.
அண்மையில் குவிந்துள்ள முதலீடுகள்!
கடந்த 50 நாட்களில் குவிந்துள்ள முதலீடுகள், 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் முதலமைச்சர் விஜய்யின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கும் என அதிகாரப்பூர்வமான அவர் கட்சியின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
◾ஆசியாவின் மிகப்பெரும் கட்டுமான நிறுவனமான, டெக்னாலஜி சர்வீசஸ், பைனான்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய எல்&டி யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான எஸ். எஸ். சுப்ரமணியன் சுமார் 5.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடையவராக உள்ளார். இவரது நிறுவனம் முதலீட்டை வாரிக் கொட்டியுள்ளது.
படிக்க:
♦ இந்தியப் பொருளாதாரம் திவாலாகிறது! வர்க்கமாய் திரள்வோம்! நாட்டைக் காப்போம்!
♦ இந்தியப் பொருளாதாரத்தை துதிபாடும் ஐஎம்எப் தலைவர்! உண்மை என்ன?
எல்&டி நிறுவனத்தின் முதலீடு மூன்று திட்டங்களில் மேற்கொள்ளப்படும். இதில், கோயம்புத்தூரில் அமையவிருக்கும் ரூ. 2,500 கோடி மதிப்பிலான மின்னணு உற்பத்தி மையம், மின்னணு மற்றும் வாகனத் துறைகளுக்கு வலுவூட்டியுள்ளது. இந்நிறுவனம், சென்னைக்கு அப்பால் அடுத்தகட்ட டிஜிட்டல் வழித்தடத்தை உருவாக்கும் வகையில், காஞ்சிபுரத்தில் ஹைப்பர்ஸ்கேல் மற்றும் எட்ஜ் ஏஐ தரவு மையத்தை அமைக்க ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. அதேபோல காட்டுப்பள்ளியில் கடல் காற்றாலை உள்கட்டமைப்புக்காக ரூ.1,100 கோடி முதலீடு செய்யவுள்ளது,
◾கரூர் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளது. இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ₹850 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. வரவிருக்கும் இரண்டாவது ஆலையில் அடிடாஸ் காலணிகள் உற்பத்தி செய்யப்படும்.
அடிடாஸ் உற்பத்தி ஆலையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டின் காலணி உற்பத்திச் சூழலமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த வகையில் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் இணைந்து ₹1,700 கோடி மொத்த முதலீட்டைக் குவித்துள்ளன.
◾விக்ரம் சோலார் நிறுவனம், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் புதிய பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக, தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்டது.
ரூ.15,037 கோடி மதிப்பிலான முதலீட்டை குவித்துள்ள இந்த நிறுவனம் முன்மொழிந்துள்ள இந்த ஆலையின் மூலமாக, தமிழகத்தின் அடுத்த தலைமுறை தூய்மையான எரிசக்தி உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியப் படியாக அமையும் என்று கூறியுள்ளனர்.
இந்த ஆலை, நெல்லை கங்கைகொண்டனில் வளர்ந்து வரும் தூய்மையான எரிசக்தி சூழலமைப்பிற்கு வலு சேர்ப்பதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்கல சேமிப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் பங்கையும் வலுப்படுத்தும் என்று அறிவித்துள்ளனர்.
◾ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனம் செங்கல்பாட்டுவில் உள்ள தனது ஆலையை விரிவுபடுத்தும், அதே நேரத்தில் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் போரூரில் உள்ள தனது ஹிட்டாச்சி எனர்ஜி குளோபல் டெக்னாலஜி அண்ட் இன்னோவேஷன் சென்டரையும் விரிவுபடுத்தும் என்று மாநில அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தெரிவித்தது.
மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள 1000 கோடி அளவிலான முதலீடுகள், சென்னையில் உள்ள உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தில் (GTIC) 1,000 உயர் மதிப்புள்ள தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, குறைக்கடத்தி அடிப்படையிலான HVAC-ஐ HVAC-ஆக மாற்றும் உபகரணங்களுக்கான ஒரு புதிய உற்பத்தி ஆலையையும் நிறுவும்.
சென்னையில் உள்ள தனது ஜி.டி.ஐ.சி (GTIC) மற்றும் செங்கல்பட்டில் உள்ள எச்.வி.டி.சி (HVDC) வால்வு உற்பத்தி ஆலை மூலம் ஹிட்டாச்சி எனர்ஜி ஏற்கனவே தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. இது, மேம்பட்ட மின் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய மையமாக மாநிலத்தின் நிலையை வலுப்படுத்துகிறது என்று கைடன்ஸ் தமிழ்நாடு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற அடுத்தடுத்த கார்ப்பரேட் நிறுவனங்களும் தென்னிந்திய முதலாளிகள் கூட்டமைப்பை சார்ந்த பல்வேறு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், கோவையை மையமாகக் கொண்டு இயங்குகின்ற ஜவுளி ஆலை முதலாளிகள் என்று பல்வேறு பிரிவினரும் மூலதனத்தை குவிப்பதற்கும், தனது மூலதனத்திற்கு பாதுகாப்பான ஆட்சி என்றும் பாசிச கோமாளி விஜய்யின் ஆட்சியை கருதுகின்றனர்.
ஆனால் தேசிய நீரோட்ட ஊடகங்கள் முதல் தமிழகத்தில் இயங்குகின்ற ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவை ஆட்சி மாற்றம் வந்தவுடன் முதலாளித்துவத்தின் கொள்ளை, லாபவெறி ஆகியவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது போல ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றனர்.
படிக்க:
♦ தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாசிச பாஜக முன் வைக்கும் அரசியலை முறியடிப்பது எப்படி?
♦ 2023 பட்ஜெட் : வழக்கம் போல கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட் தான்!
தேர்தலுக்கு முன்னரும் சரி! தேர்தலுக்குப் பின்னரும் சரி! கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தை கோடிக்கணக்கில் வாரி கொட்டி வருகின்ற இந்த ஆட்சியின் உண்மை முகத்தை தோலுரிப்பதன் மூலம் தான் இதன் மீதான பிரமைகளை ஒழிக்க முடியும். கார்ப்பரேட் நலனும், கார்ப்பரேட் முதலாளிகளின் அரசியல் பொருளாதார பின்னணி கொண்ட பாசிச கோமாளியின் விஜய் ஆட்சி ஒருபோதும் பாஜகவிற்கு எதிரானது அல்ல.
“நவீன கால முதலாளித்துவத்தின் அரசியல் ஏற்பாடுகளான பத்திரிகைகள், பாராளுமன்றம், கழகங்கள், காங்கிரஸ்கள் முதலானவை உயர்குல மனப்பான்மையும், பணிவுமுடைய, சீர்திருத்தவாத, தேசபக்த அலுவலகச் சிப்பதிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், பொருளாதார சலுகைகளுக்கும், ரொட்டி துண்டங்களுக்கும் ஏற்றதான அரசியல் சலுகைகளையும், ரொட்டித் துண்டங்களையும் படைப்பித்திருக்கின்றன.
சர்க்காரிலோ, இராணுவ தொழில் கமிட்டிகளிலோ, பாராளுமன்றத்திலோ, பல்வேறு வகையான கமிட்டிகளிலோ சட்டமுறைப்படி வெளிவரும் “கௌரவமான” பத்திரிகைகளின் ஆசிரியர் குழாம்களிலோ, இதேபோல கௌரவமான “முதலாளித்துவ வர்க்கத்திற்கு பணிந்து நடக்கும்” தொழிற்சங்கங்களின் நிர்வாக குழுக்களிலோ, கொழுத்த சம்பளத்துக்குரிய சொகுசான வேலைகள் தரப்படுகின்றன. ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் இந்த இரையை வைத்துக் தான் “முதலாளித்துவ தொழிற் கட்சிகளின்” பிரதிநிதிகளையும் ஆதரவாளர்களையும் கவர்ந்திழுத்து சன்மானம் அளிக்கின்றனர்.
அரசியல் ஜனநாயகத்தின் இயங்கு சக்தியும் இதே திசையில் தான் செயல்படுகிறது. நாம் வாழும் இக்காலத்தில் தேர்தல்களின்றி எதுவும் நடைபெறாது. மக்கள் திரளின்றி அணுவும் அசையாது. அச்செழுத்துக்கும் பாராளுமன்றவாதத்துக்குமுரிய இச்சகாப்தத்தில், புகழ்ச்சி, பொய் பித்தலாட்டம், செல்வாக்கமிக்க புதிய மோஸ்தராகிவிட்ட மினுக்கு சொற்களாலான வாய்ச்சவடால், தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தை கவிழ்ப்பதற்கான புரட்சி போராட்டத்தை தவிர்க்கும் வரை அவர்களுக்கு எல்லா வகையான சீர்திருத்தங்களையும், வசதிகளையும் செய்து தருவதாய் கண்ணை மூடிக்கொண்டு வாக்குறுதியளித்தல் ஆகிய யாவுயும் அடங்கலாய் நன்கு அமைந்து பாங்குடன் நிர்வகிக்கப்படும் விரிவான வலை பின்னல் அமைப்பு இல்லாமல் மக்கள் தெறலின் ஆதரவை திரட்டுவது சாத்தியமன்று.” என்று ஏகாதிபத்தியம் தோன்றிய காலத்திலேயே அதாவது நூறாண்டுகளுக்கு முன்னரே ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டினார் தோழர் லெனின்.
ஆட்சி மாற்றம் என்பது வெறும் அதிகார மாற்றத்தை மட்டுமே கொண்டது அல்ல. இரட்டை ஆட்சி நடக்கின்ற இந்திய சமூக அமைப்பில் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சி மாறி வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றம் நிகழ்ந்து விட்டதாக முன் வைப்பது எல்லாம் பொய் பித்தலாட்டம் புரிவதும், உழைக்கும் மக்களை ஏமாற்றுகின்ற அயோக்கியத்தனமும் ஆகும்.
பாசிசக் கோமாளி விஜய் ஆட்சி தற்குறி கும்பலால் போற்றப்படுகின்ற, அரசியலற்ற அரசியலை முன்வைக்கின்ற ஆட்சியாகவும், கார்ப்பரேட் மூலதனத்தை பின்புலத்தில் கொண்டு இயங்குகின்ற ஆட்சியாகவும் விளங்குகிறது என்பதை தான் 50 நாட்களில் நிரூபித்துள்ளது.
எனவே, கவர்னர் ஆட்சி வராமல் தடுப்பதற்கு தான் விஜய்யை ஆதரிக்கின்றோம் என்கின்ற அரசியல் பித்தலாட்டங்களும்; அதிமுக வராமல் தடுப்பதற்கு தான் விஜயை ஏற்றுக்கொண்டோம் என்ற அரசியல் பித்தலாட்டங்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் நாடகங்களில் ஒன்று என்பதுதான் புரிந்துக் கொள்ள வேண்டிய, பிரச்சாரம் செய்ய வேண்டிய உண்மையாகும்.
◾ஆல்பர்ட்
புதிய ஜனநாயகம் தினசரி






