கொல்கத்தாவில், இந்திய அரசு அமல்படுத்தி வரும் நவ தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மிகவும் உறுதியான போராட்டத்திற்கு அகில இந்திய தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு (AIPWF) அழைப்பு விடுத்துள்ளது.  மேலும், சமீபத்தில் முடிவடைந்த 10வது மாநாட்டில், பெருந்தோட்டத் தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சுகாதார அட்டைகள் போன்றவற்றை வழங்க வேண்டும் என அந்த அமைப்பு கோரியுள்ளது.

இது 1972 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் தனது முதல் அகில இந்திய மாநாட்டின் மூலம், முதன்முதலில் தொடங்கப்பட்ட AIPWF இன் 50வது ஆண்டாகும்.  10வது மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு -வின் பொதுச்செயலாளர் தபன் சென் பேசுகையில் நாட்டில் தேயிலை, ரப்பர் மற்றும் காபி தோட்டங்களை உள்ளடக்கிய தோட்டத் துறையில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தோட்ட நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதனை முறியடிக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது எனவும் பேசியிருந்தார்.  சிறந்த பள்ளிகள், அதற்கான கல்வி உட்கட்டமைப்புகள், சிறந்த சுகாதார சேவைகள் மற்றும் நாட்டில் தோட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் உட்பட பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மற்றும் வேலை செய்யும் சமூகங்களுக்கு மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் தேவையாக உள்ளது என்று அவர் கேட்டுக்கொண்டார்.  மேலும், தோட்டப் பகுதி மக்களின் நில உரிமை மற்றும் குறைந்தபட்ச ஊதியத்திற்கான உரிமைக்கான கோரிக்கையும் சென் தனது உரையில் எழுப்பினார்.

இதையும் படியுங்கள்: டான் டீ தொழிலாளர்கள் நிலையும், பாஜகவின் முதலைக் கண்ணீரும்!

AIPWF இன் 10வது மாநாடு டார்ஜிலிங்கில் நடந்தது. இதை இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) தலைவர் கே.ஹேம்லதா தொடங்கி வைத்தார். ஹம்ரோ கட்சி (HUMRO Party), ஜிஎன்எல்எஃப் (GNLF), மற்றும் சியா கமான் மஸ்தூர் யூனியன் (Chiya Kaman Mazdoor Union) மற்றும் பிற கட்சிகள் உட்பட மலையகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மாநாட்டின் தொடக்க அமர்வில் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில், புதுடெல்லியில் உள்ள சிறு-குறு-நடுத்தர விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழில்துறையுடன் தொடர்புடைய விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் ஒரு மாபெரும் பேரணியை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தோட்ட நிலங்களை அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையகப்படுத்தும் முயற்சியை ஆபத்தான போக்காகக் கருதி, அதற்கு எதிராக நாடு முழுவதுமான அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில், மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 143 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டின் கடைசி நாளில், சுமார் 40 மணி நேரம் பிரதிநிதிகளின் ஆலோசனைக்குப் பிறகு, AIPWF அதன் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தது. CK உன்னிகிருஷ்ணன் AIPWF இன் தலைவராகவும், ஜியாஉல் ஆலம் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜியா உல் ஆலம்,  தோட்டத் தொழிலாளர்கள் நாட்டில் முக்கியப் பங்காற்றுகின்றனர். தேயிலை, ரப்பர் மற்றும் காபி ஆகியவை பெருந்தோட்டத் தொழிலின் முக்கிய தூண்களாகும். மேலும் தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் மேலாளர்கள், உழைக்கும் மக்கள் உட்பட சுமார் நாற்பது லட்சம் மக்கள் இத்தொழிலுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். மறைமுகமாக சுமார் இருபது லட்சம் மக்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். தொழிலாளர்கள் தினந்தோறும் உழைத்தாலும், லாபம் உரிமையாளர்களால் பறிக்கப்படுவதாகவும், தோட்டத் தொழிலாளர்கள் ஒட்ட சுரண்டப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: தடைபடும் ஏற்றுமதி! கருகும் தேயிலை விவசாயிகளின் வாழ்க்கை!

மேற்கு வங்கத்தின் தேயிலை தொழிலின் மோசமான நிலையை சுட்டிக்காட்டிய ஆலம், சராசரி தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக கூறினார். இது நாடும், மாநிலமும் வெட்கப்பட வேண்டிய விஷயம். தேயிலை தோட்டங்களில், பாதுகாப்பான குடிநீர், சுகாதார சேவைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. நாட்டின் பெருந்தோட்டத்துறையில் குறைந்தபட்ச சம்பளத்தை கட்டாயப்படுத்த அரசாங்கத்தால் முடியவில்லை, இதனால் அத்துறையில் கடுமையான பாதிப்பு மற்றும் அதிருப்தி நிலவுகிறது என்றார்.

மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் அதே வேளையில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுள்ள வெற்றியை ஆலம் விவரித்துப் பாராட்டினார். தற்போதைய இந்த மோசமான நிலைக்கு அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநில அரசுகளும், மத்திய அரசும் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இது வெறுமனே தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனை என்று பாராமல் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் இந்த அரசும் – கார்ப்பரேட் முதலாளிகளும் தொடுக்கும் போர் என்று கருத வேண்டும்.  இவர்களின் போராட்டத்திற்கு நாம் ஆதரவு அளிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் உரிமைக்காக நாமும் குரல் கொடுப்பது இன்று அவசியமாகவும் தேவையாகவும் உள்ளது.

சந்தீப் சக்ரவர்த்தி

  • மொழிபெயர்ப்பு: தாமோதரன்

ஆங்கில கட்டுரை link: https://www.newsclick.in/plantation-workers-call-strengthened-fight-neo-liberal-policies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here