இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகம் தேர்தல் மூலம் பாதுகாக்கப்பட்டு வருவதாக பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தேர்தல் அரசியல் கட்சிகள்.

மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு உரிமை இருப்பது போலவும்; அவர்கள் விரும்பிய கட்சியை தேர்ந்தெடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருப்பதைப் போலவும்; அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சகல அதிகாரங்களும் படைத்தவர்கள் என்பதைப் போலவும் ஒரு கருத்துருவாக்கம் மக்களின் இந்திய ஒன்றியத்தில் வாழ்கின்ற மக்களின் மூளைக்குள் திணிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள், அவர்களின் அதிகாரம் ஆகியவை அனைத்தும் உண்மையான அதிகாரம் கொண்ட தேசங்கடந்த தரகு முதலாளிகள், தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் கூட்டு சர்வாதிகாரத்தின் கீழேதான் உள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இந்த உண்மை மக்களுக்கு புரிய வரும்போது, அதாவது இந்த கருத்து மக்களைப் பற்றிக் கொள்ளும் போது ஒரு பௌதீக சக்தியாக உருவெடுத்து, மக்கள் எழுச்சியின் மூலம் பாசிச சர்வாதிகாரிகள் வீழ்த்தப்படுவார்கள் என்பது தான் உலக வரலாறு.

இந்திய ஒன்றியத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றிய அதிகாரத்தை கைப்பற்றி வைத்துக் கொண்டு அரசு கட்டமைப்பு முதல் அனைத்து வகையான கட்டமைப்புகளையும் பாசிசமயமாக்கி வருகிறது ஆர்எஸ்எஸ் பாஜக. தேர்தல் அரசியல் கட்சிகளை பல்வேறு தகிடுதத்தங்கள் மூலம் பின்னடையச் செய்ய வைத்துள்ளது; எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவது, பேரம் பேசி அவர்களை தனது கட்சிக்குள் இணைத்துக் கொள்வது; ‘ சூப்பர் வாஷிங் மெஷின்’ மூலம் அவர்களை உத்தமர்களாக சித்தரிப்பது போன்ற தனது கொள்கைகளின் மூலம் இந்தியாவில் பெரும்பான்மை எதிர்க்கட்சிகளை கடந்த ஐந்தாண்டுகளாக படிப்படியாக ஒழித்துக் கட்டி வருகிறது.

இந்த சூழலில் மாணவர்கள் இளைஞர்கள் குறிப்பாக ஜென்சி இளைஞர்கள் கரப்பான் பூச்சி கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து ஆர் எஸ் எஸ் பாஜகவை அம்பலப்படுத்துவதில் முன்னிலையில் நிற்கிறார்கள். படித்து முடித்தவுடன் தான் பெற்ற கல்வி மற்றும் பட்டத்திற்கு உரிய வேலை கிடைக்காதது; கிடைத்த வேலையை செய்து தனது வயிற்றைக் கழுவி வாழ்க்கையை நடத்துவது; இந்த வாய்ப்புகளும் கிடைக்கப் பெறாத நிலையில் விரக்தி அடைந்துள்ள இளைஞர்கள் ஆகியவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்துள்ளது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.

படிக்க: கரப்பான் பூச்சிகளின் நாடாளுமன்ற முற்றுகையும், சோனம் வாங்சுக்கின் போராட்டமும்!

நீட் தேர்வு மோசடி என்பதை அம்பலப்படுத்தி கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானை வீட்டுக்கு அனுப்பியது போல, தற்போது தேர்தல் மோசடி மன்னன் ஞானேஷ்குமாரை வீட்டுக்கு அனுப்புவதற்கு டெல்லி ஜந்தரமந்தருக்கு வருமாறு நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மாணவர்கள், பெண்கள் மற்றும் பாசிச எதிர்ப்பு சக்திகள் ஆகிய அனைவருக்கும் அறைகூவல் விடுத்துள்ளனர் கரப்பான் பூச்சி கட்சியினர்.

கரப்பான் பூச்சி கட்சி மட்டுமின்றி சிபிஐ எம்.எல் (விடுதலை) கட்சியின் மாணவர் அமைப்பு மற்றும் பிற இடதுசாரி இயக்கங்களின் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பாக இந்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றன.

இத்தகைய சூழலில் அக்டோபர் 10 அதாவது இன்று அறிவிக்கப்பட்டுள்ள ஜந்தர் மந்தர் மக்கள் திரள் போராட்டத்தை முடக்குகின்ற வகையில் பாசிச பயங்கரவாத அடக்குமுறைகளை ஏவ தொடங்கிவிட்டது ஆர்எஸ்எஸ் பாஜக.

டெல்லி முழுவதும் இணையதளம் ஒன்பதாம் தேதி இரவு 9 மணி முதல் பத்தாம் தேதி இரவு 10 மணி வரை முடக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 57 மெட்ரோ ரயில் நிலையங்களையும் மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் நேற்று இரவு 9 மணி முதல் இன்று இரவு 9 மணி வரை செயல்பட விடாமல் தடுத்துள்ளது.

நாடு முழுவதிலிருந்து டெல்லியை நோக்கி வருகின்ற ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது டெல்லியை நோக்கி வருகின்ற ரயில் பெட்டிகள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு அதில் உள்ள போராட்டக்காரர்கள் என்று கருதப்படுகின்ற மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய அனைவரையும் நடு வழியிலேயே இறக்கி கைது செய்து விடுகிறார்கள்.

படிக்க: இந்தியாவின் கரப்பான்பூச்சிகள் அதிகார வர்க்கத்தை நடுங்க வைத்தது எப்படி?

ஊடகத்தின் மூலம் செய்திகள் பரவக்கூடாது என்பதற்காகவும், சமூக வலைதளங்கள் மூலமாக மக்களை ஒன்று திரட்டி விடக்கூடாது என்பதற்காகவும், ஊடக கார்ப்பரேட்டுகள் மூலம் பேரம் பேசி போராட்டத்தை வெளி உலகத்திற்கு தெரிவிக்காமல் முடக்குவது; கைது நடவடிக்கைகளை காட்டாமல் தடுப்பது போன்ற மக்கள் விரோத செயல்களில் பகிரங்கமாகவே ஈடுபடுகின்றனர்.

நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே ஒன்றிய அரசு இணைய முடக்கம் செய்வதையும், ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஆகியவற்றை முடக்கம் செய்வதையும் கண்டித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடுகின்ற அளவிற்கு பாசிச சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது.

இது ஒருபுறமிருக்க ஆர்எஸ்எஸ் பாஜக தனது குண்டர் படையான பஜ்ரங் தள் அமைப்பை டெல்லி ஜந்தர் மந்தர் திடலில் இன்று அணி திரட்டி உள்ளது ஆர்எஸ்எஸ் பாஜகவின் சமூக ஊடகங்கள் வெளியிடுகின்ற தகவல்களின் அடிப்படையில் ஏறக்குறைய 10 லட்சம் குண்டர்கள் அங்கு தயாராகி விட்டார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இவை மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் என்று இருந்தால் கூட ஓரளவிற்கு உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

“டெல்லி போலீசே விலகிக் கொள்! ஆர் எஸ் எஸ் அதனை கவனித்துக் கொள்ளும்” என்று சமூக வலைதளங்களில் சவால் விடுத்தும் எச்சரிக்கை விடுத்தும் பல்வேறு பதிவுகள் வெளியாகி கொண்டுள்ளது.

படிக்க: டெல்லி ஜந்தர் மந்தர், மும்பை சிவாஜி பார்க்: மாணவர் இளைஞர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தை நாடு முழுதும் பரவச் செய்வோம்!

சட்டபூர்வமாகவே அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டும் போலீசு, ராணுவம் மற்றும் நீதித்துறை ஆகிய அனைத்தையும் தனது கைக்குள் வைத்துக்கொண்டு போராடுகின்ற மாணவர்கள் இளைஞர்கள் மீது கடும் அடக்கு முறையை ஏவி விட்டுள்ளது மட்டுமின்றி, இணையான அரசாங்கத்தை நடத்துகின்ற பாசிச குண்டர் படையையும் தூண்டிவிட்டு இந்த போராட்டத்தை ஒடுக்கி விட முடியும் என்று கனவு காண்கிறது ஆர்எஸ்எஸ் பாஜக.

இதன் மூலமெல்லாம் பாசிஸ்டுகள் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு கண்டு கொண்டுள்ளனர். ஆனால் மேற்கண்ட மக்கள் விரோத தேசவிரோத நடவடிக்கைகள் அனைத்தும் பாசிஸ்டுகளின் வீழ்ச்சியை குறிப்பதாகவே உள்ளது.

தனது நிழலை கூட நம்பாத பாசிச சர்வாதிகாரிகள், பாசிச பயங்கரவாதிகள் தற்போது நாடு முழுவதும் எழுந்துள்ள ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு எதிரான அலையையும் கார்ப்பரேட் காவி பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிராக பயங்கரவாதத்திற்கு எதிராக எழுந்துள்ள மக்கள் போராட்ட உணர்வுகளையும் கண்டு பீதியடைய துவங்கிவிட்டனர். இது தெரியாமல் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்ற ஆர்எஸ்எஸ்ஸின் பாதம் தாங்கிகள் குதித்துக் கொண்டுள்ளனர்.

மக்கள் திரள் போராட்டங்கள், எழுச்சிகள் தான் பாசிசத்தை வீழ்த்தும் என்பதில் எந்த வகையிலும் இரண்டு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.. தமிழகத்தில் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதற்கும், தேர்தல் அரசியல் மூலமாக பாசிசத்தை நிலை நிறுத்துவதற்கு ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் அதன் பினாமி கும்பல்கள் மேற்கொள்கின்ற முயற்சிகள் ஆகிய இரண்டுக்கும் உள்ள தொடர்பு புரிந்து கொள்ள முடியாத கம்ப சூத்திரங்கள் அல்ல.

படிக்க: காவிப் பாசிசம்: மதச்சார்பற்றசோசலிஸ்ட்வார்த்தைகள் நீக்க மசோதா!

ஆனால், மக்களிடமிருந்து விலகி நிற்கின்ற அரசியல் தற்குறிகளும், இடது சந்தர்ப்பமாக அரசியலை முன்னிறுத்துகின்ற அராஜக கும்பலும் தேர்தல் அரசியலின் வரம்புகளை துச்சமாக கருதுகின்றனர். அதே சமயத்தில் கரப்பான் பூச்சி கட்சி போன்றவை நடத்துகின்ற மக்கள் திரள் எழுச்சியில் தங்களை இணைத்துக் கொள்ளவும் இவர்கள் தயாராக இல்லை.

இதுபோன்ற சில ‘ அரசியல் சில்லறைத்தனங்கள்’ இருக்கின்ற போதும் பெரும்பான்மை மக்களின் கடுமையான எதிர்ப்புணர்வுடன் பாசிசத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்பதை முன்னறிவிப்போம்.

இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் மக்கள் திரள் எழுச்சியை உருவாக்கி கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம். மீண்டும் பாசிச பயங்கரவாதமும் அதனை முன் வைக்கின்ற ஆர்எஸ்எஸ் – பாஜக போன்ற கட்சிகளும் தலையெடுத்து விடாமல் ஜனநாயகக் கூட்டரசு ஒன்றின் மூலம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி நாட்டையும், மக்களையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராட்டக் களத்தில் முன்னணியாக இருப்போம்.

  • தமிழ்ச்செல்வன்

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here