SIR என்ற பெயரில் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன! வாக்காளர் பெயர் சேர்த்தல் படிவம் 6-ல், மற்ற இரண்டு ஆணையாளர்களைக் கலந்தாலோசிக்காமல் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக மாறுதல்கள் செய்துள்ளார். Data Centralization-லிலும் ஞானேஷ் குமாரால் தில்லுமுல்லுகள் நடந்துள்ளன. கடந்த பத்து மாதங்களில் 14 முறைகள் தேர்தல் முறைகேடுகளில் தங்களின் ஆட்சேபனைகளை சுக் பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இரு ஆணையாளர்களும் தெரிவித்தும் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகவே இந்த தேர்தல் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் திருட்டு முழுமையாக அம்பலமானதும் குறைந்தபட்சம் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டுமென கோரி இந்தியா கூட்டணி ஏற்கனவே போராட்டத்தைத் துவங்கி விட்டது. ஞானேஷ் குமாரோ பாஜக ஊட்டும் தைரியத்தில் தனது பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டு அதிகாரத் திமிரில் மிதக்கிறார்.
இந்த நிலையில்தான் ஞானேஷ்குமாரை பதவி விலகக் கோரி CJP எனும் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி ஏற்கனவே ஒரு சுற்று போராட்டத்தை நடத்திய பின் அக்டோபர் 10 அன்று காலை டெல்லியில் CJP மற்றும் மாணவர் இளைஞர் அமைப்புகள் “ஜந்தர் மந்தர் 2,0” என்ற பெயரில் மாபெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர்.
இதற்குள் தேர்தல் திருட்டுக்கு முழு காரணமான மற்றும் முழு பலன் பெற்ற ஒன்றிய பாஜக அரசு அக்டோபர் 9-லேயே டெல்லியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டது. டெல்லியை மூடக்கூடாது என்று பெயரளவுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு காற்றில் பறக்கிறது. டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. டெல்லியில் 50,000 பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் குவிக்கப் பட்டனர். நான்கு கிலோமீட்டர் ரேடியஸிற்கு இன்டர்நெட் சேவையை முடக்கி உள்ளது. இன்றைய ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக் களம் கண்ட ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்களை போலீஸ் படை அத்துமீறி கைது செய்து, மூர்க்கமாக தடியடி நடத்திஅராஜகமாக வாகனங்களில் ஏற்றி சென்றுள்ளன.
இவ்வளவு அடக்குமுறைகள் ஏவப்பட்டும் டெல்லியில் பல கிலோமீட்டர் தூரம் வாகன போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிக்கும் வகையில் போர்க்களமாகியுள்ளது டெல்லி.
டெல்லியை நோக்கி வரும் சாலைகள் எங்கும் வாகனத் தணிக்கைகள் செய்யப்பட்டு ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றனர்; கைது செய்யப்படுகின்றனர்!
இப்போராட்டங்கள் சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களிலும் மாணவர் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு ‘Anti-SIR’ பதாகைகளை ஏந்தி மாணவர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அவர்களையும் அந்தந்த மாநில அரசுகள் கைது செய்து அடக்குமுறைகளை ஏவுகின்றன. பாஜகவின் அதே பாதையில் தவெக அரசும் இளைஞர்கள் மாணவர்களை கைது செய்துள்ளது. அடக்குமுறைகளுக்கு எதிராக அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட துவங்கி விட்டன.
படிக்க:
♦ ”SIR” எனும் பாசிச தாக்குதல்! பீகாரை அடுத்து மேற்கு வங்கம், தமிழ்நாடு!
♦ ஞானேஷ்குமாரின் சர்வாதிகாரமும், பாசிச மயமாகும் அரசுக் கட்டமைப்பும்!
போராட்டம் துவங்குவதற்கு முன்பே விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடத்தி முக்கியத் தலைவர்களை கைது மற்றும் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
CJP நிறுவனர் அபிஜீத் திப்கே டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
CJP அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், அவ்வமைப்பின் முக்கிய இளம் தலைவர் அசுதோஸ் ரங்கா முதலானோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்ச ஜனநாயகத் தோற்றம் அளித்து வேடம் தரித்திருந்த ‘பாராளுமன்ற ஜனநாயகத் தொழுவம்’ பாசிச பாஜக மற்றும் தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாரால் கிழிந்து கந்தல்கந்தலாக தொங்குகின்றன.
இந்நிலையில் தேர்தல் திருட்டுக்கு மூலக் காரணமாக விளங்கும் ஞானேஷ் குமார் கைது செய்யப்பட வேண்டும்; சிறையில் தள்ளப்படல் வேண்டும் என்பதை எமது அமைப்பின் வேண்டுகோளாகத் தெரிவிக்கின்றோம்.
அதே தருணத்தில் குறைந்தபட்சம் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி CJP மற்றும் மாணவர் – இளைஞர் அமைப்புகள் முன்னெடுத்த போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் – பெண்கள் என்றும் பாராமல் காயங்கள் ஏற்படும் அளவில் அடியாள் படையான போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையின் ஒடுக்குமுறையையும், இதற்குக் காரணமான ஒன்றிய பாசிச பாஜக அரசையும் “மக்கள் கலை இலக்கியக் கழகம்” சார்பாக வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.
இந்த நியாயமான போராட்டத்தில் பின்னடைவுக்கு இடமே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகள், அனைத்து ஜனநாயக அமைப்புக்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் அமைப்புகள் என ஒருங்கிணைந்து போராட்டக் களத்தில் கரம் கோர்ப்போம் வாரீர் என “மக்கள் கலை இலக்கியக் கழகம்” அறைகூவல் விடுக்கிறது!
மாநில செயற்குழு,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.
10-10-2026






