மீபத்தில் sony liv ஓடிடியில் வெளியான படம் தான் விட்னஸ் (witness). இந்தியாவில் மலக்குழி மரணங்கள் தொடர்ந்துக் கொண்டிருப்பதும், இது குறித்து இந்த சமூகம் அக்கறைக் கொள்ளாமலிருப்பதும் இது தொடர்கதையாகியுள்ளதையும் பார்க்கிறோம்.

இப்படி நாம் கடந்து போகின்ற அவலத்தை சினிமாவாக்கியுள்ளார் இயக்குனர் தீபக். மலக்குழி மரணமும், அதற்கு நீதி கேட்கும் போராட்டமும் தான் கதை. யாரும் கண்டுக் கொள்ளாத ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதையும் கூட.

இந்தியாவில் துப்பரவு வேலை செய்யவும், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவும், சாக்கடை அள்ளவும் ஒரு குறிப்பிட்ட சாதி தான் செய்ய வேண்டும் என்கிறது பார்ப்பனீயம். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, யாருப்பா இப்பல்லாம் சாதி பாக்குறா என்று சொல்பவர்கள் கடந்த வருடம் தமிழ்நாட்டில் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்ய இறங்கி இறந்தவர்களின் பட்டியலை பார்த்தால் புரியும். இன்றும் கருவறைக்குள் தங்களை தவிர வேறு சாதிகாரர்கள் நுழையக் கூடாது என்கிறார்கள் பார்ப்பனர்கள். சட்டத்தை துளியும் மதிக்காமல் வர்ணாசிரம தர்மத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள்.

இந்த படத்தில் தூய்மை பணியாளராக நடித்திருக்கும் ரோகிணி(இந்திராணி), அவரது மகனாக தமிழரசன்(பார்த்திபன்) இருவரும், சென்னை நகருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் செம்மஞ்சேரியில் குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்கள். கணவனை இழந்த இந்திராணி தனது மகனை படிக்க வைப்பதற்காக இரவு நேர தூய்மை பணியாளராக வேலை பார்க்கிறார். தாயின் கஷ்டத்தை உணர்ந்த நீச்சல் வீரனான பார்த்திபன், கல்லூரி நேரம் போக நீச்சல் பயிற்சியாளராகவும் உள்ளார்.

அப்படி ஒருநாள் தன் தாயை இரவு பணிக்கு பேருந்தில் அனுப்பி விட்டு வரும் பார்த்திபன் வீடு திரும்பவில்லை. காலையில் பணி முடித்து விட்டு வரும் இந்திராணி தனது மகன் வீட்டில் இல்லாமல் இருப்பதை பார்த்து விட்டு அக்கம் பக்கத்தில் விசாரிக்கிறார். அப்போது பார்த்திபனின் நண்பனிடம் இருந்து அழைப்பு வருகிறது. பார்த்திபனுக்கு அடிபட்டு விட்டதாகவும் அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் கூறுகிறான். பதறிய தாய் அங்கு சென்று பார்க்கையில் மகன் பிணவறையில் இருப்பதாகவும், மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்கையில் அதிகமாக மது அருந்தியதால் மூழ்கி இறந்துவிட்டதாகவும் கூறுகிறார். காவல்துறை அதிகாரி.

அபார்ட்மெண்டில் கட்டாயபடுத்தி மலக்குழியில் இறக்கிவிடப்பட்ட மகன் இறந்ததிற்கு தாய் நீதி கேட்டு போராடுவது தான் மீதி கதை. இந்த போராட்டத்தில் அவருக்கு உதவும் தொழிற்சங்க தலைவர், வக்கீல், இன்ஜினியராக நடித்திருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் என அனைவரும் படத்தில் எதார்த்தமான கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்கள்.

செம்மஞ்சேரி பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் அனைவரும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போலீசின் முகத்திரையும் கிழித்துள்ளார் இயக்குனர். படம் மலக்குழி மரணம் குறித்து மட்டும் பேசவில்லை. தூய்மை பணியாளர்கள் நடத்தப்படும் விதம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கம்யூனிஸ்டுகளின் அநீதிக் கெதிரான போராட்டம், பூர்வக் குடி மக்களை சென்னையில் இருந்து ஒதுக்கு புறமாக துரத்தியடிக்கப்படுவது குறித்தும், தொழிற்சங்கமாய் இணைய வேண்டியதின் அவசியம் குறித்தும் சொல்லியிருகிறார் இயக்குனர் தீபக்.

இந்த படம் மசாலா படங்களை போல் அல்லாமல் ஒரு ஹீரோவை மீட்பர் போல் காண்பித்து அவர் நியாயம் பெற்று தருவது போல் அல்லாமல், எதார்த்தமாக இந்த பிரச்சினையின் முடிவை சொல்லியிருக்கிறார் இயக்குனர். படம் முடியும் போது நமக்கு நிச்சயம் வலியை ஏற்படுத்தும். நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைக்கும்.

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் காலத்தில் ஏன் இன்னும் மலத்தை கையால் அள்ளுவதும், மலக்குழியை சுத்தம் செய்வதற்கும் இன்னும் இயந்திரம் கண்டுபிடிக்கவில்லை என்பதையும் படத்தில் வழக்கறிஞருக்கும், என்ஜினியருக்கும் நடக்கும் உரையாடல் அருமை.

இதையும் படியுங்கள்: மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவலத்திற்கு தீர்வு என்ன?

நீச்சல் வீரர்கள் பொதுவாக நீண்ட நேரம் மூச்சை அடக்கி வைக்க முடியும். அப்படிப்பட்ட நீச்சல் வீரரான பார்த்திபனால் கூட மலக்குழியில் மூச்சை அடக்க முடியவில்லை. சாதரண மக்களால் எப்படி முடியும் என்பதை பார்த்திபன் கதாபாத்திரம் மூலம் உணரவைத்துள்ளார் இயக்குனர்.

மலக்குழி மரணங்கள் தொடர்பாக இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை எனவும் யாரும் தண்டிக்கபட்டதில்லை என்பதும் படம் பார்ப்பவர்களுக்கு புதிதாய் தோன்றலாம். ஆனால் அது தான் சமூக யதார்த்தம்.

படத்தில் பேசக் கூடிய கருத்துக்கள் அனைத்தும் நடைமுறையில் குறிப்பிட்ட சமூக மக்கள் அனுபவிக்கும் அவலங்களே. மக்களின் பிரச்சினைக்கு போராடக் கூடிய சங்க தலைவராக வரும் நிஜ வாழ்வில் களப்போராளியாக வரும் ஜி.செல்வாவும், அவரது சகாக்களும் படத்திலும் கம்யூனிச போராளிகளை நினைவுபடுத்துகிறார்கள்.

சங்கதலைவரை கைது செய்து விட்டால் போராட்டம், வழக்கு நடைபெறாது என்று நினைக்கும் அதிகார வர்க்கத்திற்கு ‘என் மகன் இறப்பு கோர்ட் படியேறி பதில் சொல்லனும் சார்’ என துணிந்து நிற்கும் தாயாக ரோகிணி படம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை உணர்ந்து இந்திராணி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். போராட்டங்களில் ஒருவரை முடக்கிவிட்டால் போராட்டம் ஓய்ந்து விடாது என்பதை பதிவு செய்துள்ளார் இயக்குனர் தீபக்.

சாதிவெறி பிடித்த ஆண்களுக்கு மத்தியில் உறுதியாக உண்மையின் பக்கம் நிற்கும் பெண்ணாக சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படித்தியுள்ளார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். படத்தில் நடித்த பலரும் படத்தின் கதாபாத்திரமாக கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

துப்பரவு பணி என்பது இந்திய மக்களின் சுகாதாரத்தை சார்ந்தது. மக்கள் நோய்நொடி இல்லாமல் வாழ சுகாதாரம் அவசியம். அந்த பணியை செய்யக் கூடிய தொழிலாளர்களின் வாழ்க்கையோ மிகவும் மோசம். அதில் ஒப்பந்த பணியாளர்களாக வேலைப் பார்க்கும் தொழிலாளர்களுக்கு அற்ப கூலியாக 5000, 6000 ரூபாய் தான் ஊதியமாக வழங்கப்படுகிறது. அவர்கள் பணியிடத்தில் இறந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ முறையாக இழப்பீடு வழங்கப்படுவதில்லை. பணிபாதுகாப்பும் இல்லை.

கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் சட்டம் 2013-ல் இயற்றப்பட்டாலும் இன்று வரை அந்த அவலம் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்றும் பெரிய இரயில் நிலையங்களில் பலமுறை கையால் மலம் அள்ளுவதை பார்த்திருப்போம். இதற்கு முடிவெழுத தடையாக இருப்பது பார்ப்பனிய கட்டமைப்பும் அதற்கு துணையாக இருக்கும் காவி பாசிஸ்டுகளும் தான். அவர்களுக்கு முடிவு கட்டாமல் இந்த சாதிய அடுக்குமுறையை தகர்க்க முடியாது.

சினிமா என்பது மக்களுக்கு சரியான கருத்துக்களை கொண்டு செல்லும் மிகச் சிறந்த கலை வடிவம். இப்படி சமூகத்தில் நடக்கும் அவலங்களை சினிமாக்களாக எடுக்க ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை சினிமாவாக்கும் இயக்குனர்களும் தயங்கும் நிலையில் இதை சினிமாவாக்கிய இயக்குனர் தீபக் போன்றவர்கள் கையில் தான் இந்திய சினிமா இருக்க வேண்டும்.

 • சுவாதி

2 COMMENTS

 1. கொஞ்சம் தாமதமாத்தான் ‘விட்னஸ்’ படத்தை சோனிலைவ்ல பார்த்தேன். 2022ல பார்த்த படங்கள்ல மிகமுக்கியமான படமா இது இருக்கும். பரபரப்பான ஒரு இன்வெஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லர் படமா மாத்திருக்க கூடிய எல்லா வாய்ப்பும் உள்ள கதை. ஆனா இயக்குநர் ரொம்ப கவனமா அப்படி பண்ணல. அப்படி பண்ணிருந்தா கவனப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள விட்டு விலகி கதை வெறும் பொழுதுபோக்குக்கான ஒன்னா மாறி இருக்கும்!

  மலக்குழி மரணங்கள் பத்தி விகடன்ல சில கட்டுரைகள் எழுதிருக்கேன். மலக்குழில செத்துப்போனவங்க குடும்பங்களை நேர்ல சந்திச்சிருக்கேன். எத்தனையோ போராட்டங்கள் தெருவுலருந்து நீதிமன்றம் வரை நடந்திருக்கு. இன்னைக்கு வர செத்துப்போன யாருக்கும் நீதி கிடைச்சதில்ல. இந்த நீதி மறுப்பைதான் விட்னஸ் பேசுது.

  படம் ஜெய்பீம் மாதிரிதான்னாலும் அந்தப் படத்தை விடவும் ஒருமடங்கு அதிகமாவே இதை சமூகம் பேசிருக்கணும். விவாதிச்சிருக்கணும். என்னமோ அவ்வளவா யாரும் பேசல. ஒருவேளை நம்மைதான் வில்லனாவும் குற்றவாளியாவும் ஆக்குறாங்கன்றதால மௌனமாகி இருக்கலாம். மக்கள்கிட்ட சோனிலைவ் அக்கவுண்ட் இல்லையோ என்னவோ. எல்லார்கிட்டயும் எதிர்பார்க்கவும் முடியாது.

  குறிப்பா தலித் அமைப்புகள் இந்தப்படத்தை ஏனோ கண்டுக்காத மாதிரி ஒரு உணர்வு. படம் கம்யூனிஸ்டுகளால தலித் அல்லாத ஒரு இயக்குநரால எடுக்கப்பட்டதுன்றதாலயானு தெரியல. படத்துலயும் கூட ஏனோ துப்புறவு தொழிலாளர்களோட போராட்டங்கள்ல அம்பேத்கரிய இயக்கங்களோட பங்களிப்ப சேர்க்கலைனு தோணுச்சு. அதுவும் ஒருகாரணமா இருந்திருக்கலாம். சமீபகாலமா தலித்துகளோட பிரச்சனைகளை பேசுகிற படங்களை தலித்துகள்தான் எடுக்கணும்னு சிலர் பேச தொடங்கிருக்காங்க. அதுக்கு பின்னால உள்ள லாஜிக் என்னனு புரிபடல. ஆனால் ஒடுக்கப்படும் தலித்துகளுக்கான நீதியை பத்திதான் இந்தப்படம் பேசிருந்தாங்க. அதை சமரசமில்லாம பேசிருந்தாங்க.

  ஜெயிக்குறம் தோக்குறம் ஆனா எதிர்த்து நின்னு போரடணும்ன்ற விஷயத்த வலியுறுத்திருந்த விதம் ரொம்ப பிடிச்சிருந்தது. குறிப்பா துப்பரவு தொழிலாளர்களோட வாழ்க்கைய அவங்க தினம் தினம் படற வேதனைய யாரும் பெருசா கண்டுக்கறதில்ல. அவங்க மேல பச்சாதாபப்பட தேவையில்ல அவங்களுக்கு உண்டான உரிமைய குடுங்கனு முகத்துல அடிச்சமாதிரி பேசிருக்காங்க. எங்களுக்கு தேவை உங்க பச்சாதாபம் இல்ல நீதின்றத சிறப்பா பேசிருக்காங்க. அதனாலயே பொதுவா மலக்குழி மரணங்கள் பத்தின படைப்புகள்ல காட்ற காட்சிகள் இதுல வைக்கல.

  நமக்கான உரிமைக்காக போராடறதுன்றது நமக்கான உரிமைக்காக மட்டுமில்ல நாளைக்கே நமக்கு நடந்த அநீதி இன்னொருத்தருக்கு நடக்காம இருக்கணும்ன்ற காரணத்துக்காகவும்தான்ற செய்தி இன்னைக்கு தேதிக்கு ரொம்ப முக்கியமானது! அந்த ஆர்கிடெக்ட் பாத்திரத்தின் வழியா சொல்லி இருக்கிற செய்தியும் முக்கியமானது.

  ரோகிணி தோழருக்கு லைப்டைம் ரோல். கிட்டத்தட்ட அற்புதம் அம்மாவை நினைவுபடுத்திருந்தாங்க. தோழரை நேர்ல பார்த்து டீ வாங்கி தந்து ஒரு அஞ்சு நிமிஷம் கைகளை பிடிச்சிக்கணும். அருமையான நடிப்பு, நம்ம ஊர்ல அம்மாவா நடிச்சா சிறந்த நாயகினு விருது தரமாட்டாங்க… ரோகிணி தோழருக்கு அதுதான் குடுக்கணும்.

  செல்வா தோழருக்கும் இயக்குநருக்கும் கூட ஸ்பெஷல் டீ வாங்கித்தரணும். ஒட்டுமொத்த டீமுக்கும் வாழ்த்துகள்.

  – அதிஷா வினோத்

 2. கொஞ்சம் தாமதமாத்தான் ‘விட்னஸ்’ படத்தை சோனிலைவ்ல பார்த்தேன். 2022ல பார்த்த படங்கள்ல மிகமுக்கியமான படமா இது இருக்கும். பரபரப்பான ஒரு இன்வெஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லர் படமா மாத்திருக்க கூடிய எல்லா வாய்ப்பும் உள்ள கதை. ஆனா இயக்குநர் ரொம்ப கவனமா அப்படி பண்ணல. அப்படி பண்ணிருந்தா கவனப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள விட்டு விலகி கதை வெறும் பொழுதுபோக்குக்கான ஒன்னா மாறி இருக்கும்!

  மலக்குழி மரணங்கள் பத்தி விகடன்ல சில கட்டுரைகள் எழுதிருக்கேன். மலக்குழில செத்துப்போனவங்க குடும்பங்களை நேர்ல சந்திச்சிருக்கேன். எத்தனையோ போராட்டங்கள் தெருவுலருந்து நீதிமன்றம் வரை நடந்திருக்கு. இன்னைக்கு வர செத்துப்போன யாருக்கும் நீதி கிடைச்சதில்ல. இந்த நீதி மறுப்பைதான் விட்னஸ் பேசுது.

  படம் ஜெய்பீம் மாதிரிதான்னாலும் அந்தப் படத்தை விடவும் ஒருமடங்கு அதிகமாவே இதை சமூகம் பேசிருக்கணும். விவாதிச்சிருக்கணும். என்னமோ அவ்வளவா யாரும் பேசல. ஒருவேளை நம்மைதான் வில்லனாவும் குற்றவாளியாவும் ஆக்குறாங்கன்றதால மௌனமாகி இருக்கலாம். மக்கள்கிட்ட சோனிலைவ் அக்கவுண்ட் இல்லையோ என்னவோ. எல்லார்கிட்டயும் எதிர்பார்க்கவும் முடியாது.

  குறிப்பா தலித் அமைப்புகள் இந்தப்படத்தை ஏனோ கண்டுக்காத மாதிரி ஒரு உணர்வு. படம் கம்யூனிஸ்டுகளால தலித் அல்லாத ஒரு இயக்குநரால எடுக்கப்பட்டதுன்றதாலயானு தெரியல. படத்துலயும் கூட ஏனோ துப்புறவு தொழிலாளர்களோட போராட்டங்கள்ல அம்பேத்கரிய இயக்கங்களோட பங்களிப்ப சேர்க்கலைனு தோணுச்சு. அதுவும் ஒருகாரணமா இருந்திருக்கலாம். சமீபகாலமா தலித்துகளோட பிரச்சனைகளை பேசுகிற படங்களை தலித்துகள்தான் எடுக்கணும்னு சிலர் பேச தொடங்கிருக்காங்க. அதுக்கு பின்னால உள்ள லாஜிக் என்னனு புரிபடல. ஆனால் ஒடுக்கப்படும் தலித்துகளுக்கான நீதியை பத்திதான் இந்தப்படம் பேசிருந்தாங்க. அதை சமரசமில்லாம பேசிருந்தாங்க.

  ஜெயிக்குறம் தோக்குறம் ஆனா எதிர்த்து நின்னு போரடணும்ன்ற விஷயத்த வலியுறுத்திருந்த விதம் ரொம்ப பிடிச்சிருந்தது. குறிப்பா துப்பரவு தொழிலாளர்களோட வாழ்க்கைய அவங்க தினம் தினம் படற வேதனைய யாரும் பெருசா கண்டுக்கறதில்ல. அவங்க மேல பச்சாதாபப்பட தேவையில்ல அவங்களுக்கு உண்டான உரிமைய குடுங்கனு முகத்துல அடிச்சமாதிரி பேசிருக்காங்க. எங்களுக்கு தேவை உங்க பச்சாதாபம் இல்ல நீதின்றத சிறப்பா பேசிருக்காங்க. அதனாலயே பொதுவா மலக்குழி மரணங்கள் பத்தின படைப்புகள்ல காட்ற காட்சிகள் இதுல வைக்கல.

  நமக்கான உரிமைக்காக போராடறதுன்றது நமக்கான உரிமைக்காக மட்டுமில்ல நாளைக்கே நமக்கு நடந்த அநீதி இன்னொருத்தருக்கு நடக்காம இருக்கணும்ன்ற காரணத்துக்காகவும்தான்ற செய்தி இன்னைக்கு தேதிக்கு ரொம்ப முக்கியமானது! அந்த ஆர்கிடெக்ட் பாத்திரத்தின் வழியா சொல்லி இருக்கிற செய்தியும் முக்கியமானது.

  ரோகிணி தோழருக்கு லைப்டைம் ரோல். கிட்டத்தட்ட அற்புதம் அம்மாவை நினைவுபடுத்திருந்தாங்க. தோழரை நேர்ல பார்த்து டீ வாங்கி தந்து ஒரு அஞ்சு நிமிஷம் கைகளை பிடிச்சிக்கணும். அருமையான நடிப்பு, நம்ம ஊர்ல அம்மாவா நடிச்சா சிறந்த நாயகினு விருது தரமாட்டாங்க… ரோகிணி தோழருக்கு அதுதான் குடுக்கணும்.

  செல்வா தோழருக்கும் இயக்குநருக்கும் கூட ஸ்பெஷல் டீ வாங்கித்தரணும். ஒட்டுமொத்த டீமுக்கும் வாழ்த்துகள்.

  – அதிஷா வினோத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here