தடைபடும் ஏற்றுமதி! கருகும் தேயிலை விவசாயிகளின் வாழ்க்கை!

ரசாயனத்தின் அளவு அதிகரிப்பதால் மனிதர்களுக்கும் அதை பயன்படுத்துகின்ற இதர உயிர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

ந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை உலக நாடுகளில் நிராகரிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்கள் அருந்துகின்ற பானம் தேநீர் தான்.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது நமது நாட்டில் திணிக்கப்பட்ட கலாச்சாரங்களில் ஒன்று காலையில் தேனீர் குடிப்பது.

பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு அவர்களின் தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை உற்பத்தி பணப்பயிராக மாறியது. இயற்கை வளம் கொஞ்சுகின்ற இந்தியாவின் நீண்ட மலைத் தொடர்களில் தேயிலை பயிரிடப்படுகிறது.
அதுமட்டுமன்றி இந்தியாவில் அதிகபட்ச வேலை வாய்ப்பை வழங்குகின்ற இரண்டாவது பெரிய தொழில் தேயிலை துறை ஆகும். உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் சீனாவின் 36 சதவீதமும், இந்தியா 22.6 சதவீதமும் உற்பத்தி செய்கிறது. அதே சமயத்தில் உலகம் முழுவதும் உள்ள தேயிலை நுகர்வில் இந்தியா 25% தேயிலையை நுகர்கிறது. இந்தியாவின் தேயிலை சந்தை மதிப்பு ஏறக்குறைய ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதில் உடல் கொழுப்பை கரைப்பதாக நம்பப்படும் கிரீன் டீ சந்தை மதிப்பு 250 கோடி ரூபாய்.

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் தான் தேயிலை உற்பத்தி முன்னணியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேரில் தேயிலை பயிரிடப்படுகிறது.

இந்தியா ஏறக்குறைய 130 கோடி மக்கள் தொகை கொண்ட, அதிக மனித உழைப்பை வெளிப்படுத்தும் உழைப்பு சந்தையை மையமாக கொண்ட நாடாகும்.
சுதந்திரம் வாங்கியதாக கூறப்பட்ட 75 ஆண்டுகளுக்கு பிறகும் தொழில்துறையில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால், அதாவது சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைக்கின்ற தேசிய தொழில்களை வளர்ப்பதற்கு பதிலாக ஏகாதிபத்தியங்களின் உற்பத்திக்கு பின் நிலமாக இந்தியாவின் தொழில் துறை மாற்றப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டே வாழ்கின்றனர்.

அதில் ஒன்றுதான் தேயிலை உற்பத்தி. மலைப் பிரதேசங்களில் வாழ்கின்ற பழங்குடி மக்களுக்கு போதிய கல்வி அறிவையும் உரிய வேலைவாய்ப்பையும் வழங்காத இந்திய அரசு அவர்களை தேயிலைத் தோட்டங்களில் மணிக்கணக்கில் வேலை செய்ய வைக்கிறது. குறைந்தபட்ச கூலி கொடுத்து அவர்களின் உழைப்பை சுரண்டுவதின் மூலம் அபரிமிதமாக உற்பத்தி செய்யப்படும் தேயிலை விற்பனை, முதலாளிகளை பல ஆயிரம் கோடிகளுக்கு கொழுக்க வைக்கிறது.

இத்தகைய சூழலில் தேயிலையில் பூச்சிகள் தாக்காத வண்ணம் பயன்படுத்துகின்ற குளோர் பென்சிலேட் என்ற பூச்சி மருந்தின் விகிதம் சர்வதேச நிர்ணயத்தை விட அதிகமான அளவில் பயன்படுத்தப்படுவதால் இந்த காலாண்டில் தேயிலை இறக்குமதி பல நாடுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் காலனி நாடுகளான காமன்வெல்த் கூட்டமைப்பு தான் இந்தியாவின் தேயிலையை அதிகபட்சம் இறக்குமதி செய்கிறது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியாவும், ஈரானும் அதிக அளவில் தேயிலை இறக்குமதி செய்கின்றன.
இவ்வாறு தேயிலையை இறக்குமதி செய்து கொள்கின்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து நடக்கும் தேயிலை ஏற்றுமதி 2020-21 ஆம் ஆண்டில் 20.38 கோடி கிலோ என்ற அளவிலிருந்து 2021- 22 காலகட்டத்தில் 20.08 கோடி கிலோவாக குறைந்துள்ளது.

உற்பத்தி லாப நோக்கத்தில் விவசாயிகளின் மீது திணிக்கப்படும் செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் மண்ணின் தன்மையை மாற்றுவது மட்டுமல்லாமல் அதில் விளைகின்ற விலை பொருள்களிலும் பூச்சி மருந்தின், அதாவது ரசாயனத்தின் அளவு அதிகரிப்பதால் மனிதர்களுக்கும் அதை பயன்படுத்துகின்ற இதர உயிர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமை இதே காரணத்திற்காக சர்வதேச சந்தையில் நிராகரிக்கப்பட்டது. தற்போது தேயிலை நிராகரிக்கப்பட்டு இருப்பதால் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற கார்ப்பரேட்டுகளுக்கு பாதிப்போ இல்லை.

ஆனால் அதன் உற்பத்தியில் ஈடுபட்டு வாழ்கின்ற மக்களுக்கு வேலையின்மை என்ற புதிய சிக்கலையும் உருவாக்கியுள்ளது.

இந்த நெருக்கடியை தேயிலை மற்றும் காய்கறி உற்பத்தி செய்கின்ற விவசாயிகளின் மீது கட்டாயமாக திணிப்பதால் உடனே இயற்கை வேளாண்மைக்கு மாறுங்கள் என்று நிர்பந்தபடுத்துவதால் விவசாயிகள் தவிக்கின்றனர்.

ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு காலம் இயற்கை வேளாண்மையை ஒழித்துக்கட்டி இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மலட்டு விதைகள் போன்றவற்றின் மூலம் விவசாயத்தை ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் லாப வேட்டைக்கு திறந்து விட்டனர்.
மொத்தத்தில் இந்திய விவசாயத்தை வேளாண் வர்த்தக கழகங்களுக்கு தாரைவார்த்துள்ளனர்.

படிக்க:

♦  விவசாயத்துறையை காா்ப்பரேட்டுகள் விழுங்குவது பற்றி பஞ்சாப் தேர்தல் கட்சிகள் அடக்கி வாசித்து ஏன்!

♦  கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம்! தொடரும் மக்கள் திரள் போராட்டம்!

அதே வரிசையில் இந்திய ஆளும் வர்க்கங்கள் தேயிலை உற்பத்தியையும் அவர்களுக்கு தாரைவார்த்து தேயிலை விவசாயிகளின் வயிற்றில் அடித்து உள்ளது.
பச்சை தேயிலையில் இருந்து வருகின்ற சிவப்பு வெறும் நிறமல்ல! அது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உதிரத்தின் ஒரு பகுதி என்பதை புரிந்து கொண்டு அவர்களுடன் இணைந்து போராடுவோம்.

  • திருச்செங்கோடன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here