
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் வயலூர் அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயிலின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிரபு, ஜெயபால் இருவரும் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கப்படுவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
000
வரலாற்றின் மிக முக்கியமான முடிவாக அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கண்ட கனைவை நனவாக்கும் வகையில் பார்ப்பனரல்லாத சமூகங்களைச் சார்ந்த அர்ச்சகர் பயிற்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழிபாடு செய்யும் வாய்ப்பினை தமிழக அரசு வழங்கியது. அதற்கு எங்களது உள்ளப் பூர்வமான நன்றிகள்.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழக அரசால் பணிநியமனம் வழங்கப்பட்ட 24 பேரில், பிரபு, ஜெயபால் ஆகிய இருவரும் திருச்சி குமாரவயலூர் ஆலயத்தில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை கடந்த 4 ஆண்டுகளாக விநாயகர் சந்நிதி மற்றும் நவக்கிரக சந்நிதியில் பணியாற்றி வருகிறார்கள் .
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறையின் சார்பில் பணி செய்யப்பட்ட குமாரவயலூர் முருகன் சந்நிதியின் கருவறையில் நுழைந்து பூசை செய்வதற்கு இன்றுவரை இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மந்திரங்கள், பூசைமுறைகளை கடைப்பிடிப்பதில் எந்தவித குறையோ புகாரோ இவர்கள் மீது இதுவரை யாரும் கூறியதில்லை. கோயிலுக்கு வருகின்ற உள்ளூர் வெளியூர் பக்தர்களைப் பொருத்தவரை எவ்வித வேறுபாடுமின்றித்தான் இவர்களை நடத்துகிறார்கள்.
படிக்க:
♦ அனைத்து சாதி அர்ச்சகர் ரத்து! சனாதனமே இனி ஆட்சிமுறை!
♦ திருச்சி குமார வயலூர் முருகன் கோயில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் ரத்து!
எனினும் சிவாச்சாரியார்கள் இவர்களை அவ்வாறு நடத்துவதில்லை. கருவறைக்குள் அனுமதிப்பதுமில்லை. சாதி ரீதியாக அவர்களை ஒதுக்கப்படுவது போல இருக்கிறது. இந்த மாணவர்கள் நான்கு ஆண்டுகளாக இது போன்று பல இடையூறுகளை சந்தித்துள்ளார்கள் கருவறையில் இன்றுவரை பூஜை செய்ய முடியவில்லை ஆனாலும் கொலை மிரட்டல்களும், வழக்குகளும், அவதூறுகளும் போன்று அந்த மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகிறார்கள் அதைத் தாண்டி தான் பூஜை செய்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தான் இந்த பணியானை வழங்கப்பட்டது. அந்த பணியானை மதிக்காமல் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும், இந்து சமய அறநிலை துறையும் இதை முறையாக கடைபிடிக்கவில்லை என்பதாகவே தெரியவருகிறது.

இந்நிலையில் வருகின்ற 19.2.2025 அன்று வயலூர் முருகன் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவிலும் அம்மாணவர்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு, பெரும் மன உளைச்சலுக்கும் அவமதிப்புக்கும் அவர்கள் ஆளாகியுள்ளார்கள். குடமுழுக்கு விழாவுக்கு வருகின்ற இவர்கள் குடும்பத்தார், ஊர்க்காரர்களின் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை என கூறுகின்றனர்.இத்தனை நாள் கருவறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. குடமுழுக்கு விழாவிலோ மொத்தமாகவே அம்மாணவர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டனர். எனவே நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் யாகசாலை, கோபுரம் மற்றும் மூலக்கருவறை உள்ளிட்ட இடங்களில் அம்மாணவர்களை பயன்படுத்துவதற்கும், அவர்களை சமமாகவும் கண்ணியமாகவும் நடத்துவதற்கும் ஆணை பிறப்பிக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
ம.ஜீவா, மாவட்ட செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்
திருச்சி மாவட்டம், தொடர்புக்கு: 8056905898.
மேற்க்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில் இன்று (17.02.2025) காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. விவரங்களை கேட்டறிந்த ஆட்சியர் மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்நிகழ்வில் ம.க.இ.க மையக் கலைக்குழு பொறுப்பாளர் லதா, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக மாவட்ட துணைத் தலைவர் செந்தில், மாவட்ட இணைச் செயலாளர் மணலிதாஸ், ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்:
ம.க.இ.க
திருச்சி மாவட்டம்
