கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே!

தமிழ் மக்கள் இசை விழா!

பேரன்பு மிக்க தமிழ் மக்களே,

வணக்கம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் “தமிழ் மக்கள் இசை விழா” மீண்டும் போர்க் குணத்துடன் – கம்பீரமாகப் பயணத்தைத் துவங்கி உள்ளது; ஆம்!

கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி!

வேத நாகரிகத்தைத் துரத்தியடி!!

இந்திய வரலாற்றைத் தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர் முழக்கம்…

–என்ற போர்ப்பரணி பாடும் முழக்கங்களின் கீழ் “தமிழ் மக்கள் இசை விழா”-வினை எதிர்வரும் 22-08-2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை தஞ்சை மாநகரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக மிகவும் எழுச்சியுடன் நடத்திட விழாக் குழு திட்டமிட்டு அறிவிப்பு செய்துள்ளது.

கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், பறை இசைகள் – என விரிவாகத் திட்டமிடப்பட்டு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.

தியாகிகள் நினைவுச் சின்னம் முன்பாக கொடியேற்று நிகழ்ச்சி துவங்கி, அனைவரையும் ஈர்க்கும் புகைப்படக் கண்காட்சியை தமிழ் மக்கள் கண்டு களிக்கும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடி நரம்புகளைத் தட்டி எழுப்ப, இரு வேறு பறை இசைக் குழுவினர் தமக்கே உரிய பாங்குடன் மேடையைக் குலுங்க வைக்க – திடலில் அமர்ந்துள்ள மக்களை உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கடிக்க வருகின்றனர்.

கருத்தரங்கில் தலைப்பிற்கு ஏற்ற வகையில் ஆளுமைகள் பலர் பங்கேற்று தத்தம் வலுவான கருத்துக்களை ஆழமாகப் பதிவு செய்து மக்களை போராட்டத் திசை நோக்கி பயணப்படச் செய்ய – முத்திரை பதிக்க வருகின்றனர்.

வாழ்த்து அரங்கத்தில் நமது தோழமை அமைப்புகளின் முன்னோடிகள் நேசக்கரம் நீட்டி, நாட்டைக் கவ்வி இருக்கும் கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தின் கோர முகத்தைப் படம்பிடித்துக் காண்பித்து, அதனை முறியடிக்க அறைகூவல் விடுக்க வருகின்றனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு கலை இலக்கிய அமைப்பினர், கடந்த காலங்களைப் போல எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களைத் தட்டி எழுப்பி உணர்வூட்டும் வகையில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்யக் குவிகின்றனர்.

ஆக 22 தஞ்சையில் தமிழ் மக்கள் இசைவிழா!

வழக்கம்போல் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுவினர் தமது பிரம்மாண்டத்தை நிறுவிடத் தயாராகி வருகின்றனர்.

விழாவில் போர்க் குணமிக்க தீர்மானங்களை நிறைவேற்றிட ம.க.இ.க. சிறப்பான திட்ட மிடுதல்களை மேற்கொண்டு வருகின்றது.

காவி அரசின் சதியை முறியடிப்போம்!

அரசே தொல்லியல் அகழாய்வு நடத்த கீழடியைத் தேர்வு செய்யுமாம்; ஆனால், அன்றைய கீழடி தொல்லியல் அகழாய்வு முதன்மை ஆய்வாளரும் இன்றைய உ.பி. மாநில நொய்டா தொல்லியல் அகழாய்வுத் துறை இயக்குனருமான திரு K. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் 2023 ஜனவரியில் இந்தியத் தொல்லியல் துறையினரிடம் 100 சதவீதம் உண்மையை அடிப்படையாகக் கொண்ட 982 பக்க கீழடி அகழாய்வு அறிக்கையை ஒப்படைத்திருந்தும், ஒன்றியக் காவி அரசு, அதனை ஊறுகாய்ப் பானையில் போட்டு ஊற வைத்துவிட்டது.

காரணம் கீழடி நாகரிகம், ஆம்! தமிழர் நாகரிகம் – தென்னிந்திய நாகரிகம் – அகழாய்வு மூலமாக கண்டெடுக்கப்பட்ட அரிதினும் அரிதான மிகத் தொன்மை வாய்ந்த நாகரிகப் பொருட்கள், அதனுடைய வரலாற்றுப் பூர்வமான கால அளவின் ஊடாக மற்ற எல்லா அகழாய்வுகளினின்றும் – மிக நீண்ட அதாவது கி.மு.6-ம் நூற்றாண்டு காலநீட்சி கொண்டதாகவும், நகரமயமான தமிழ் மக்களின் வாழ்க்கை என்பது மிகவும் மதி நுட்பத்துடன் திட்டமிட்டு கட்டப்பட்ட குடியிருப்புகள், தொழில் முறை உற்பத்தி, எழுத்தறிவு, வர்த்தகத் தொடர்புகள், புத்திக் கூர்மை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஒரு முன்னேறிய சமூகம் என்பதையே தொல்லியல் அகழாய்வு ஆய்வாளர் திரு கே. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் நிறுவினார். அன்றைய தமிழ்நாடு திமுக அரசு கீழடி அகழாய்வுப் பணியில் தம் அதிகாரத்திற்கு உட்பட்டு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் இவ்விடயத்தில் செய்ததையும், பல நூறு கோடிகள் பணச் செலவு மேற்கொண்டதையும் இத்தருணத்தில் நினைவுகூரக் கடமைப் பட்டுள்ளோம்!

தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் கண்டெடுத்தது தமிழகம் மட்டுமல்ல; உலகமே அறியும் வகையில் பறை சாற்றியவை என்பதனால், ஒன்றிய காவி அரசை அசைத்துப் பார்த்து விட்டது. தலை குனியச் செய்து விட்டது. தமிழ்-பிராமி எழுத்துக்கள், மண்பாண்டங்கள், தொழிற் கூடங்கள், வளையக் கிணறுகள், இரும்புக் கருவிகள், ஆபரணங்கள், நாணயங்கள் இன்ன பிற யாவும் சங்க காலத் தமிழ் சமூகத்தின் வளத்தையும், வளர்ச்சியையும், அறிவாற்றலையும் அடையாளப்படுத்தி உள்ளன. இந்தியாவில் வேறு எங்கனும் இப்படிப்பட்ட அகழாய்வு உண்மைகள் இதுவரை கண்டறியப்பட வில்லை. தமிழ்நாட்டின் இன்னும் பல பகுதிகளிலும் கூட இத்தகைய அகழாய்வுகள் மூலம் புதிய புதிய நாகரிக மரபுகள் கண்டெடுக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளன.

பொறுக்குமா ஆர்எஸ்எஸ் ஆரிய பார்ப்பன இந்துத்துவக் காவிக் கூட்டம்? அவர்கள் வேத மரபை உயர்த்திப் பிடிக்கின்றனர்; உண்மை அவர்களைச் சுடுகிறது; அவர்கள் ஏற்கனவே தயாரித்திருந்த வேத மரபை உயர்த்திப் பிடிக்கும் சரஸ்வதி நாகரிகத்தை, ஆம் – வேத நாகரிகத்தை உண்மையென நம்பச் சொன்ன
‘வரலாற்றாளர்களின்’ பொய்க்கு எதிராக உண்மையை உணர்ந்த வரலாற்று ஆசிரியர் ரோமீலா தாபர், இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து தொடங்க வேண்டும் என்றே விளம்பினார்.

பாடப் புத்தகங்களில் சிந்து சமவெளி – மொகஞ்சதாரா – ஹரப்பா நாகரிகங்கள் 6500
ஆண்டுகள் தொன்மத்தை வெளிப்படுத்தி னாலும், தென்னிந்தியாவின் தொன்மையான நகர நாகரிகங்கள், இரும்பைக் கண்டுபிடித்து பயன்படுத்தல், தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மேம்பாடு, நாகரிகம்
ஆகியோவற்றுடன் ஒப்பிட்டால் சிந்து சமவெளி – ஹரப்பா நாகரிகங்கள் மிகக் குறைந்த வளர்ச்சியையே கொண்டுள்ளன.

மேலும் கூர்மையான அறிவும், தமிழ் சமூகத்தில் இருந்திருந்தபடியால் எந்த ஒரு கடவுள் – மதச் சார்பு அடையாளங்கள் எவையும் கீழடியில் தென்படவில்லை. எனவே தான் காவிக் கும்பல், ஏதேனும் ஒரு விநாயகர், சரஸ்வதி இப்படிப்பட்ட இந்து மதம் சார்ந்த கடவுள் சிலைகள் கிடைக்கப் பெறாவிடினும், உள்ளே புதைத்து வைத்தாவது மீட்டெடுத்து ‘இந்து பார்ப்பன நாகரிகத்தை’ – ‘வேத நாகரிகத்தை’ கற்பனையாக நிறுவிடத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்; அதற்காக சதித் திட்டத்துடன் கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்திக் கேடான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக 22 தஞ்சையில் தமிழ் மக்கள் இசைவிழா!
கீழடி

அதனால் தான் தொல்லியல் துறை அகழாய்வு இயக்குனர் திரு கே. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களிடம் அறிக்கையை காவிக் கும்பல் விரும்பியவாறு திருத்தி எழுதித்தரக் கோரிய பொழுது, அமர்நாத் அவர்கள், ‘அந்த அறிக்கையில் ஒரு புள்ளி அல்லது ஒரு கமா எதையும்கூட மாற்ற மாட்டேன்; அறிக்கையை மாற்றி எழுதித் தரவும் மாட்டேன்’ – என்ற பாணியில் கம்பீரமாக – துணிச்சலுடன் எதிர்த்து நின்றார். ஏனெனில் அவரது அறிக்கை முழுவதும் உண்மைகள் நிரம்பியது. அவர் ஆத்திக உணர்வு கொண்டவரே யாயினும், எச்சூழ் நிலையிலும் உண்மைக்குத் துரோகம் செய்ய விரும்பவில்லை! அந்த வகையில் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

அதன் விளைவு காவி யோகி முதல்வராக உள்ள உபி நொய்டாவுக்கு மாறுதல் என்ற பெயரில் அவர் தூக்கி வீசப்பட்டார்! இப்போது சங்கிகளுக்கு இசைவான அகழாய்வு ஆய்வாளர்களை நியமித்துத் தாம் பெற்றுப் போட்ட பிள்ளையான தவெக மூலம் தாம் விரும்பியவாறு புது அறிக்கை ஒன்றினைப் பெற்றிட வரிந்து கட்டிக் கொண்டு வேத நாகரிகமே தொன்மை வாய்ந்தது என்ற ‘போலியை’ உண்மையென நம்பச் செய்ய – ராமர் கோவில் ஊழல் போன்ற வியாபாரம் செய்ய அறிவியல் சார்ந்த இந்த அகழாய்வு திட்டப் பணிகளிலும்கூட உண்மையை மறைத்திட தமது கோர முகத்தைக் காட்டி ஆர்ப்பரித்து நிற்கின்றனர்.

படிக்க: கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிடு! இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுது!

இந்நிலையில் உண்மையை உரத்துக் கூற – வெளிச்சம் போட்டுக் காண்பிக்க – கீழடி அகழாய்வு முடிவுகளை வெளிக் கொணரச் செய்ய – அறிக்கை முடிவுகளை அமுல்படுத்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்த “தமிழ் மக்கள் இசை விழா” தூண்டு கோலாய் அமைந்து,

கீழடி நாகரிகத்தை உயர்த்திப் பிடிக்கச் செய்வோம்!

வேத நாகரிகத்தைத் துரத்தி அடித்து விரட்டுவோம்!

இந்திய வரலாற்றை தென்னிந்தியா விலிருந்து துவங்கிட போர் முழக்கம் எழுப்புவோம்!

அதற்குத் தமிழ் மக்களை வீதியில் இறங்கி சமர் புரிய அணி திரட்டுவோம்!

மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்ட மரபை – மெரினா ஜல்லிக் கட்டுப் போராட்ட மரபை – தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட மரபை – மதுரை அரிட்டாப்பட்டி டங்ஷனுக்கு எதிரான போராட்ட மரபை நிலைநிறுத்திக் காண்பிப்போம்!

களம் காண்போம்!

வெற்றி வாகை சூடுவோம்!

குடும்பம் குடும்பமாய் – உற்றார் உறவினராய் – நண்பர்கள் தோழர்களாய் – அரசியல் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் அனைவருமாய் …..

அணி திரண்டு வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

இந்தப் போர்க் குணம் மிக்க “தமிழ் மக்கள் இசை விழா” வெற்றிகரமாக நடந்தேற, தமிழ் மக்கள் அனைத்து வகைகளிலும் தங்களின் நேசக்கரத்தை நீட்டி, எல்லாவித உதவி களையும் கடந்த காலங்களைப் போல் செய்வீர்கள் என்று பெரிதும் நம்புகிறோம்! பேருதவிகளைக் கனிவுடன் வேண்டுகிறோம்!

மிக்க நன்றி.

அன்புடன்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here