நாளுக்கு நாள் தமிழக முதல்வர் விஜயின் அலப்பறைகளும், த.வெ.க. விசுவாசிகளின் அலப்பறைகளும் எல்லை இல்லாமல் போய்க் கொண்டுள்ளது.

விஜயின் பிறந்த நாளுக்காக பள்ளி மாணவர்களை கொளுத்தும் வெயிலில் கிரவுண்டில் விஜயின் உருவப்படத்தை போல் வரிசையாக அமர வைத்து ஃபோட்டோ சூட் நடத்துகிறார்கள். விஜயின் சினிமா பாடல்களுக்கு பள்ளி மாணவர்களை குத்தாட்டம் போடவும் வைக்கிறார்கள். இதை “என் புள்ளைய கூத்தாடி ஆக்கவா நான் ஸ்கூலுக்கு அனுப்புறேன்; யாரைக் கேட்டு வெயில் உக்கார வச்சீங்க” என்றெல்லாம் சில பெற்றோர்கள் பள்ளி நிர்வாகிகளை கோபத்துடன் கண்டிப்பதை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. விஜய் பாட்டிற்கு ஆடினால் என்ன தப்பு என்று கேட்கிறார்கள் அமைச்சர்கள்.

குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது உங்கள் தனிப்பட்ட விருப்பம். அதை ஒரு அமைச்சராகவோ, எம்எல்ஏ ஆகவோ இருந்து கொண்டு பள்ளியில் போய் செய்யாதீர்கள் என்பதுதான் சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் வைக்கும் விமர்சனம்.

இதற்கெல்லாம் மேலே முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசிவிட்டு ஒரு ஆக்சன் செய்து காட்டுகிறார். இவரை நம்பி மாற்றம் வரும் என்று ஓட்டு போட்டவர்கள் தமது தலையில் அடித்துக்கொண்டு அழத்தான் வேண்டும்.

இவர் தப்பு செய்யவும் விட மாட்டாராம்; தப்பு செய்தவரையும் விட மாட்டாராம்! நம்மை நம்பச் சொல்கிறார். பஞ்ச் டயலாக் முதல்வருக்கு நாம் சில கேள்விகளை முன் வைக்கலாம்.

பதில் சொல்லுங்கள் முதல்வரே!

  1. ஒன்பது சிறுமிகளை (வெளிவந்துள்ள எண்ணிக்கையின் படி) அம்மோனியா வாயுவால் துடிதுடிக்க கொன்றுள்ள செயின்ட் பீட்டர் பால் சீ புட் நிறுவனத்தை, அதன் முதலாளிகளை என்ன செய்து விட்டீர்கள்? இந்த நிமிடம் வரை கொலைக் குற்றத்தில் வழக்குப்பதிந்து உள்ளே தள்ளியுள்ளீர்களா? அல்லது, பெயருக்கு கைது செய்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறீர்களா?
  2. மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ் லிமிட்டெட்டிலிருந்து அமோனியாவை வாங்கும் நிறுவனமானது, எந்த தொழிற்சாலை நிபுணரின் உதவியுடன் கையாண்டு வந்தது? அவர் பாதுகாப்பு விதிகளை ஏன் மதிக்கவில்லை? எதனால் விபத்து நடந்து உயிர்ப்பலிகள் வரைக்கும் போய் உள்ளது? இதற்கு உங்களிடம் உங்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் அல்லது தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் ஏதேனும் பதில் உள்ளதா முதல்வரே
  3. அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த ஆலையை பரிசோதிக்க வேண்டிய தொழிற்சாலை ஆய்வாளர் என்ன செய்து கொண்டிருந்தார்? எப்படி அரசு துறையின் கண்காணிப்பே இல்லாமல் அலட்சியமாக விதிகளை மீறி அம்மோனியாவை கையாண்டு படுகொலை வரைக்கும் போய் உள்ளது?
  4. இதற்கு அந்தத் துறையின் அதிகாரிகளின் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தவறு செய்தவர்கள் தப்பி விடாதபடி உங்கள் அரசின் எதிர் நடவடிக்கையை வெளிப்படையாக சொல்ல முடியுமா? இன்று தவறு செய்துள்ளவர்களும், நேற்று தவறு செய்தவர்களும், உங்கள் சொற்படி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்களா? அல்லது இந்த விபத்தையும் பயன்படுத்தி கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்களா?
  5. ஆலையில் பணிபுரிந்த சிறுமிகளின் எண்ணிக்கையை 400 முதல் 800 வரை இருக்கலாம் என ஆலையை சுற்றி இருப்பவர்கள் பேசிக் கொள்கிறார்கள். உண்மை கணக்கு என்ன? இவர்களில் எத்தனை பேர் கடந்த சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள்? அதாவது 18 வயது நிரம்பியவர்கள். கணக்கு உள்ளதா?
  6. மஞ்சாங்கரனை, கன்னிகைபேர் கிராமத்தினர் இந்த ஆலைக்கு எதிராக புகார் தந்துள்ளனர். இம்மாதத்தில் நடந்த ஜமாபந்தியில் கூட ஆலையை மூட வேண்டும் என்று மனு தந்துள்ளனர். அப்படி இருந்தும் அதிகாரிகள் ஏன் கார்ப்பரேட் முதலாளிகளின் பக்கமே சாய்ந்துள்ளனர்? பதில் கிடைக்குமா?  “வாயு வெளியேறியது முதல் முறை அல்ல; ஏற்கனவே வாயுவை திறந்து விடுவார்கள் அல்லது கசியும். துர்நாற்றம் கொண்ட அது எங்களை சுவாசிக்க விடாமல், உணவு உண்ண விடாமல், கண் எரிச்சலை கிளப்பி உறங்கவிடாமல் தொந்தரவு செய்யும். அந்த அளவு இப்பொழுது அதிகமாகி உயிரிழப்பு வரை போய் உள்ளது என்கின்றனர்.
  7. பாதுகாப்பானது தான் இந்த ஆலை என்றால் ஆலையில் பணிபுரியும் அதிகாரிகளின் குடியிருப்புகள் மட்டும் ஏன் வளாகத்திற்குள் இல்லை. பணிபுரியும் சிறுமிகளுக்கான குடியிருப்புகள் மட்டுமே வளாகத்திற்குள் ஏன் அமைக்கப்பட்டுள்ளன? பதில் உள்ளதா முதல்வரே?
  8. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்பினர் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி கேட்டு ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதி கேட்டால் உங்களின் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையானது சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மறுக்கிறது. சட்டதவிரோதமாக சிறுமிகளைக் கொண்டு நச்சு வாயுவை கையாள செய்து படுகொலை செய்வதற்கு செயின்ட் பீட்டர் பவுல் கார்ப்பரேட்டுகளுக்கு சட்டப்பூர்வ அனுமதி உண்டு. அந்த படுகொலைக்கு நீதி கேட்டால் சட்டம் ஒழுங்கு கெடுகிறதா? இதுதான் நீங்கள் நிலைநாட்டும் (அ)நீதியா?

படிக்க:

 திருவள்ளூர் விஷவாயு படுகொலை இதுவரை 07 பேர் பலி

 ‘வடமாநிலத் தொழிலாளி’ செத்தால் எனக்கென்ன?

அமோனியா வாயு கசிவு விபத்து பிரச்சினை ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல் வாக்குறுதி கொடுத்தது போல் கடன் தள்ளுபடி செய்யச் சொல்லிப்‌ போராடும் விவசாயிகள், கடந்த ஆட்சி தூய்மை பணியைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்து விட்டு உங்கள் ஆட்சியில் 12 மாநாகராட்சியில் தூய்மை பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கிறீர்கள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை- தொடர்நிகழ்வாக உள்ளது போன்று பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இவை குறித்தெல்லாம் பேசும் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.

உங்கள் அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ, தொண்டர்களோ, ரீல்ஸில் காட்டும் ஆர்வத்தை மக்களுக்காக களத்தில் நிற்பதிலும், மக்களின் மீது தாக்குதலை தொடுப்பவர்களை சட்டப்படி கறாராக தண்டிப்பதிலும் காட்டுங்கள். உங்கள் பெருமை என்பது சட்டமன்றத்தில் நடித்துக் காட்டுவதில் இல்லை. இருக்கின்ற பதவி அல்லது அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்காக நிற்க முடிகிறதா? செயல்பட முடிகிறதா? என்பதில் தான் அடங்கியுள்ளது.

நீங்கள் மக்களின் முதல்வரா? அல்லது கார்ப்பரேட்டுகளின் கையாளா? இதற்கு நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. உங்கள் நடவடிக்கையே அதை மக்களுக்கு உணர்த்தப் போகிறது.

உங்கள் தவறுகளில் இருந்து நேர்மையாக கற்றுக்கொள்ளுங்கள் விஜய்! திருத்திக் கொள்ளுங்கள் விஜய்! அது உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும், இந்த நாட்டிற்கும் நல்லது. அல்லது மக்கள் போராட்டங்களின் மூலம் திருத்தப்படுவீர்கள். உங்கள் வேசங்கள் கலையும்போது தேர்ந்தெடுத்த மக்களாலயே தூக்கி எறியவும் படுவீர்கள். இதுவும் கூட இந்நாட்டிற்கும் நல்லது தான்.

  • இளமாறன்

1 COMMENT

  1. இந்த கேடுகெட்ட தற்குறி விஜய் மற்றும் அவரது ஆட்சியின் அவலங்களை பொறுத்துக் கொண்டு, அவரது ஆட்சி நீடிக்க போட்டி போட்டுக் கொண்டு முட்டுக் கொடுக்கும் “முற்போக்காளர்கள்’ குறித்தும் (விஜய்யை அம்பலப்படுத்தி இருப்பது போல) அம்பலப் படுத்தியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here