பத்திரிக்கைச் செய்தி

பிரதமர் மோடியின் நண்பன் கார்ப்பரேட் கொள்ளையன் அதானியை எதிர்த்த ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை!

24 மணி நேரத்தில் எம்.பி பதவி பறிப்பு!

சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், என்.ஐ.ஏ, ஊபாவை தொடர்ந்து மோடி அரசின் ஆயுதம் எம்.பி பதவி பறிப்பு!

பாசிசம் முற்றுகிறது, காத்திருக்க நேரமில்லை! களத்தில் இறங்குவோம்!

தானி நிறுவனத்தின் மோசடிகளை அம்பலபடுத்தி வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை மீது பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போராடி வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு தேர்தல் முதல் தனது வெற்றிகளுக்கு முழு உதவி செய்து வரும் தனது நண்பர் அதானி மீதான குற்றச்சாட்டுக்கு பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி வாயை திறந்து எந்த பதிலையும் சொல்லவில்லை. மாறாக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் நாட்டை ஆளுகின்ற பா.ஜ.கவே முடக்கி வைத்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த அதானியை உள்ளுர் பணக்காரன் என்ற நிலையிலிருந்து உலக பணக்காரனாக மாற்றியதில் பிரதமர் மோடியின் பங்கு பிரிக்க முடியாதது. ஒன்றிய அரசு நிறுவனங்கள் அனைத்தும் அதானிக்காக இரவும், பகலும் ஏவல் நாயாக வேலை செய்துள்ளது. இந்த உண்மை உலகத்திற்கே தெரியும்.

அதானியும், மோடியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை காட்டி பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன உறவு என்று பதில் சொல்லுங்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதற்கான பதில்தான் எம்பி பதவி பறிப்பு.

இந்திய வங்கிகளிலிருந்து அதானிக்கு கொடுத்த கடன் விபரங்களை சொல்லுங்கள் என கேட்டால் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொல்லமுடியாது என்கிறார். வங்கியில் உள்ளது மக்கள் பணம். அது எங்கே யாருக்கு செல்கிறது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிந்து கொள்ள முடியாது என்றால் நாட்டில் நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி இல்லை மாறாக கார்ப்பரேட் முதலாளிகளின் குறிப்பாக  அதானி ஆட்சிதான் நடக்கிறது என்பதை ராகுல் காந்தி  எம்பி பதவி பறிப்பு நிரூபித்துள்ளது.

குஜராத்தை சார்ந்த முன்னாள் அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆன பா ஜ க தலைவர் திரு. பூர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது 2019 -ல் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 23-3-2023 அன்று  இரண்டாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் கொடுத்து தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது. மேல்முறையீடு தாக்கல் செய்தால் இந்த தீர்ப்புக்கு உடனே தடை கிடைத்துவிடும். ஆனால் பாசிஸ்டுகளான ஆர்எஸ்எஸ் மோடிக்கு பழிவாங்கும் அவசரம். சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த உடனே இந்திய ஒன்றிய அரசு ராகுல் காந்தியின் எம்.பி பதவியை 24 மணி நேரத்திற்குள் பறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதே போன்ற பல அவதூறு வழக்குகள் இந்தியா முழுவதும் பல அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இன்னும் எத்தனை எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகப்போகிறது  என்று கூற முடியாது. ஆனால் இதனை நாம் அனுமதிக்க  கூடாது.

கடந்த 2019-ல் கர்நாடக கோலார் தொகுதி பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, பா.ஜ.க அரசை பற்றி விமர்சிக்கும் பொழுது “எப்படி எல்லா திருடர்களுடனும்  மோடி என்ற பெயர் ஒட்டிக் கொண்டுள்ளது” என பேசினார். உதாரணமாக. ஓடிப் போன வைர வியாபாரி நீரவ் மோடி, ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடி பேர் வழி லலித் மோடி, ரபேல் விமான முறைகேட்டில் அம்பலப்பட்ட நரேந்திர மோடி ஆகியோரை குறித்தே ராகுல் காந்தி இவ்வாறு விமர்சனம் செய்து பேசினார். இதற்கு மேலும் லட்சக்கணக்கானவர்கள் தினம் தோறும் பேசி வருகின்றனர் அதுதான் கருத்து சுதந்திரம், ஜனநாயகம்.  ஆனால் அதை ஒடுக்க துடிக்கிறது பாசிசம்.

நான்காண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் பேசினார். ராகுல் காந்தி வீடு டெல்லியில் உள்ளது. பாதிக்கப்பட்டதாக அவதூறு வழக்கு தொடுத்த பூர்னேஷ் மோடியோ குஜராத் மாநிலம் சூரத்தை சார்ந்தவர். இதிலிருந்து ஆர் எஸ் எஸ் இன் சதித்திட்டம் பட்டவர்தனம் ஆகிறது.

பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி நடந்தது. மாட்டு சாணத்தில் அணுக்கதிர்வீச்சு உள்ளது, பசு கோமியத்தில் மருத்துவ குணம் உள்ளது என்பதை நம்பமுடியாதவர்களுக்கு, உள்ளுர் பணக்காரனை உலக பணக்காரனாக அதானியை மாற்றியது தான் பிரதமர் மோடி அரசின் சாதனை. அதானி வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி, இதை பாராட்டாமல் எதிர்ப்பவர்களுக்கு சி.பி.ஐ ரெய்டு, எம்.பி பதவி பறிப்பு, ஊபா சட்டத்தில் சிறை இதுதான் கார்ப்பரேட் காவி பாசிசம்.

பிரபலமான எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு இதுதான் நிலைமை என்றால் சாதாரண விவசாயிக்கும் தொழிலாளிக்கும் என்ன நிலைமை என்று புரிந்து கொள்வோம். ஜனநாயகத்திற்கு கல்லறை கட்ட இறுதி ஆணியை சவப்பெட்டியின் மேல் அடித்துள்ள பாசிச ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பலுக்கு எதிராக, பிரிட்டன் காலனிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி போல் தொடர் போராட்டம் நடத்தி பா.ஜ.க மோடி அரசை செயலிழக்கச் செய்வதுதான் ஒரே வழி. அனைத்து எதிர்கட்சிகளும், இயக்கங்களும் ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பலின் கார்ப்பரேட்-காவி பாசிச நடவடிக்கையின் அபாயத்தை முறியடிக்கும் வகையில் போராட வேண்டும். பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடி வீழ்த்துவோம்.

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச் செயலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here