சுதந்திரமா? யாருக்கு சுதந்திரம்! எங்கள் ஊரை அழித்து விமான நிலையம் கட்டுவீர்கள்! அதை தடுக்க நாங்கள் போராடினால் ஊரைச்சுற்றி போலீஸ் காவல் போட்டு தனிமைப்படுத்துவீர்கள்! உங்கள் கிராம சபை நாடகத்தையோ, சுதந்திரம் என்ற மோசடியையோ நம்ப தயாரில்லை என ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 15 ல் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.

இரண்டு போகம் விளைகின்ற பாசன வசதிகொண்ட எங்கள் நிலங்களை பிடுங்கித்தான் விமான நிலையம் கட்ட வேண்டுமா? பாசன வசதியற்ற பகுதியில் ஏன் இதை செய்யக்கூடாது என்ற 13 கிராம மக்களின் கேள்விக்கு அரசு இதுவரை விளக்கம் தரவில்லை.

385 நாட்களாக தொடரும் போராட்டத்தை தமிழகத்தின் பிற பகுதி மக்கள் ஆதரிக்க கூட அனுமதியில்லை. தமிழகத்தை ஆளும் திமுக அரசோ இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து துணைநிற்க வரும் ஒருவரையும் ஊரை நெருங்ககூட அனுமதிப்பதில்லை.

அறிவிக்கப்படாத ”அவசரநிலை” தான் பரந்தூரில் அமலில் உள்ளது. கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குதான் அனைத்து துறைகளும் தாரைவார்க்கப்படுகின்றன. விமான நிலையங்களை இயக்கி பராமரிக்க அதானி குழுமம் களமிறங்கியுள்ளது. ஒன்றிய அரசுக்கு சொந்தமாக ஒரு பயணிகள், சரக்கு விமானம் கூட இல்லாத நிலையில் மோடி அரசு 20,000 கோடிகளை வாரி இறைத்து சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை யாருக்காக அமைக்கிறது.

ஜனநாயக உரிமையில் போராடும் உரிமையும் உண்டுதானே! சுதந்திரம் என்பதில் யாரும் எங்கும் செல்ல உரிமை உண்டு தானே! ஏற்கனவே தூத்துக்குடி மக்கள் முத்துநகர் கடற்கரையில் கூடி ஊரைக்காக்க குண்டடிபட்டு தியாகிகளானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தவதற்கே மே22-ல் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. மண்டபத்துக்குள் அழுதுகொள் என்றது.

இதையும் படியுங்கள்: பரந்தூர் விமான நிலையம்: மக்கள் வரிப்பணத்தில் கார்ப்பரேட் கும்பல் கொழுக்க!

தற்போது NLC விரிவாக்கத்திற்கு எதிராக நெய்வேலியை சுற்றியுள்ள கிராமத்தினர் கிராம சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற கோரியுள்ளனர். ஊர்மக்களுக்கு ஒரு தீர்மானம் நிறவேற்றும் சுதந்திரம்கூட இல்லை என்பதை போலீசார் உதவியுடன் அதிகாரிகள் புரியவைத்துள்ளனர்.

கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து களம்காணும் மக்களுக்கு தமிழக அரசு அடக்குமுறையையே பரிசாக தருகிறது. தமிழகத்தை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக்க மோடி அரசின் திட்டங்களுக்கு துணை நிற்கிறது. இனியுமா நாம் சுதந்திரமானவர்கள் என்று ஏமாந்திருப்பது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here