ரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்தியாவிலிருந்த ராயல் நேவிப் படைக்கு பல இந்தியர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர். ஐந்து வருடங்களுக்கு முன் இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமானோர் சேர்க்கப்பட்டனர்.

அவர்கள் எல்லாருமே பிரிட்டிஷ் அரசுக்கு பணியாற்றினர். சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தோனேசியா, பர்மா போன்ற இடங்களின் போர்களில் அவர்களும் பங்கேற்றதால் ‘சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களாக’ அவர்கள் கொண்டாடப்பட்டனர். சொந்த நாட்டிலோ விடுதலை கிடையாது. பிறகுதான் மெல்ல அரசியல்படத் தொடங்கினர்.

போருக்கு பின்னான பொருளாதார வீழ்ச்சியால் கப்பலில் பணியாற்றியோருக்கு ஊதியம் மிகக் குறைவாகக் கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் மாலுமிகள் வாங்கிய சம்பளத்தைக் காட்டிலும் பத்து மடங்குக் குறைவு. உணவும் மிக மோசமாகக் கொடுக்கப்பட்டது. தங்குமிடமும் சரியில்லை. இவற்றையெல்லாம் தாண்டி பிரிட்டிஷாரின் இனவெறி வேறு. இந்தியர்களை கறுப்பர்கள் என்றும் கூலிகள் என்றும் அழைத்தனர். மோசமான வசவு வார்த்தைகளில் திட்டினர். அவ்வப்போது இந்திய உழைப்பாளிகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்திய போதும் அவை உடனே நசுக்கப்பட்டது.

போர் முடிந்த சூழலில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடியது. கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தொழிலாளர் வர்க்கத்தை திரட்டி பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியது. 1945-46 வரையிலான காலத்தில் மட்டும் 1200 தொழிலாளர் போராட்டங்கள் நாட்டில் நடத்தப்பட்டிருந்தன.

பம்பாயைச் சேர்ந்த கடற்படைக் கப்பல் His Majesty Indian Ship Talwar ஆகும். பம்பாய் மற்றும் கொல்கத்தா பகுதிகளில் மூண்டெழுந்து கொண்டிருந்த தொழிலாளர் போராட்டங்களில் கப்பலின் ஊழியர்கள் ஈர்க்கப்பட்டனர். குறைவான ஊதியம், மோசமான உணவு போன்றவற்றை எதிர்க்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளத் தொடங்கினர். அதே சமயத்தில் நடந்து கொண்டிருந்த நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் மீதான விசாரணைகளும் அவர்களை கோபப்படுத்தியிருந்தன. கிளர்ச்சி செய்வதென முடிவெடுத்தனர்.

பிப்ரவரி 17, 1946 நல்ல உணவு, ஊதிய உயர்வு முதலிய விஷயங்களுக்காக மீண்டும் போராட்டம் அறிவித்தனர் HMIS தல்வார் கப்பல் ஊழியர்கள். நிர்வாகத்தில் இருந்து வந்த பதில்தான் ‘Beggars cannot be choosers’. பிச்சைக்காரர்களுக்கு தேர்வு செய்யும் உரிமை கிடையாதாம்.

அடுத்த நாள். கிட்டத்தட்ட 1500 பேர் உணவு உண்ணும் அறைக்குள் சென்றனர். கிளர்ச்சியை அறிவித்தனர்: “இது உணவுக்கான போராட்டம் மட்டுமில்லை. நாங்கள் வரலாறு படைக்கவிருக்கிறோம். சுதந்திர இந்தியாவை வேண்டி இக்கிளர்ச்சியைத் துவங்குகிறோம்”.

அவ்வளவுதான். சடசடவென காட்சிகள் மாறின. அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட்வர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், நல்ல உணவும் ஊதியமும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. கிளர்ச்சி அடுத்தடுத்து என 70 கப்பல்களுக்கு பரவியது. அடுத்த நாளில் (பிப்ரவரி 20) எல்லாம் கிளர்ச்சி கொல்கத்தா, கராச்சி, மெட்ராஸ், விசாகப்பட்டினம், கொச்சி என எல்லா கடற்படை மையங்களுக்கும் பரவியது. 20,000 பேர் கிளர்ச்சியில் பங்கு பெற்றனர். 48 மணி நேரங்களில் பிரிட்டிஷின் கடற்படை அதன் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறியிருந்தது.

இந்தக் கிளர்ச்சியின் சிறப்பே என்னவென்றால் மக்களும் பங்கேற்றனர் என்பதுதான். கப்பல் ஊழியர்கள் நடத்திய ஊர்வலங்களுக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். ‘இந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்குக’, ‘இன்குலாப் ஜிந்தபாத்’ என்ற கோஷங்கள் உரத்தன. கிளர்ச்சி செய்தோரைப் பட்டினி கிடக்க பிரிட்டிஷார் முடிவெடுத்தபோது மக்கள் தங்கள் கடைகளை அவர்களுக்கு திறந்தனர். தங்கள் உணவுப் பொருட்களை கொடுத்து உதவினர்.

பிரிட்டிஷார் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட முடிவெடுத்தனர். ஆனால் சுவாரஸ்யம் என்ன தெரியுமா? அவர்கள் ஏவிவிட்ட ராணுவத்திலும் விமானப்படையிலும் இருந்த இந்தியர்கள் கிளர்ச்சியாளர்களைத் தாக்க ஒப்புக் கொள்ளவில்லை. எனவே பிரிட்டிஷ் படையினர் தாக்கினர். கிளர்ச்சியாளர்கள் பக்கம் இறப்புகள் நேர்ந்தன. பம்பாயில் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாக மாணவர் சங்கம் நடத்திய வேலை நிறுத்தத்துக்கும் பெரும் ஆதரவை மக்கள் வழங்கினர்.

இதையும் படியுங்கள்: 

இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியக் கட்டாயத்தை பிரிட்டிஷுக்கு ஏற்படுத்தியது கப்பல்புரட்சி. அதை முன்னின்று நடத்தியரின் பெயர் எம்.எஸ்.கான். இஸ்லாமியர்.

கப்பலில் இருந்த பிரிட்டிஷ் கப்பற்படை கொடி இறக்கப்பட்டது. மூவர்ணக் கொடி அல்ல, மூன்று கொடிகள் ஏற்றப்பட்டன.

காங்கிரஸ் கொடி, முஸ்லிம் லீக் கொடி, கம்யூனிஸ்ட் கட்சிக் கொடி!

நகைச்சுவை என்னவென்றால் இந்த எதற்கும் சம்பந்தமில்லாதோர் வந்து கொடியை முகப்புப் படமாக வைக்கச் சொன்னதுதான்.

எனவே, அவர்கள் தேசபக்தர்கள் என அழுது மட்டும்தான் சாதிக்க முடியும்!

  • ராஜசங்கீதன்

X பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here