பத்திரிக்கைச்செய்தி

நாள் 22-4-2022.

பொய்வழக்குகளாலும் போலீசு அடக்குமுறைகளாலும்
உரிமைப்போராட்டங்ளை தடுக்க முடியாது!

மணல்கொள்ளையை எதிர்ப்பவர்கள் இந்த நாட்டின் தேசதுரோகிகள் என்றால்
மணல் மாபியாக்களும் அவர்கள் வீசும் எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு துணைபோகும் அதிகாரிகளும் தேசபக்தர்களா?

அன்பார்ந்த பொது மக்களே!

மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சி.ராஜு மீது 1-10-2017ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் குற்ற எண் 220 / 2018 இ.த.ச. பிரிவு 124 A, 153 A, (தேசதுரோக, மற்றும் இருபிரிவினரிடையே கலவரம் ஏற்படுத்தல்) பதிவு செய்யப்பட்டு சிதம்பரம் நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

தோழர் சி.ராஜூ, மக்கள் அதிகாரம், மாநில பொதுச் செயலாளர்.

மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சி.ராஜூ மற்றும் சிலர் மீது இதற்கு முன் மக்கள் அதிகாரம் நடத்திய மூடு டாஸ்மாக் திருச்சி மாநாட்டில் பேசியதற்காகவும், நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைத்த காவிரி உரிமை போராட்டத்தில் பேசியதற்காகவும் 124ஏ தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இது மூன்றாவது தேசதுரோக வழக்கு. இன்னும் எதற்கெல்லாம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை பொருத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

124 ஏ தேசதுரோக சட்டப்பிரிவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற விவாதம் நாடு முழுவதும் நடந்து வருகிறது. காலனி ஆட்சியில் ஆங்கிலேயனுக்கு எதிராக விடுதலைக்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட இந்த தேசதுரோக சட்டத்தை “சுதந்திர இந்தியாவில்” ஆளும் அரசை விமர்சிப்பவர்கள் மீது போடுவது ஜனநாயகத்தின் அடிப்படைகளான கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்பவற்றை கேள்விக் குள்ளாக்குகிறது.

தமிழகத்தை ஆண்ட கிரிமினல் கொள்ளைக்கூட்டமான அதிமுக ஆட்சியில், மக்கள் பிரச்சினைகளுக்காக போராடிய பல இயக்கத்தலைவர்கள் மீது 124 ஏ உள்ளிட்டு எண்ணற்ற வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் உள்ளது.

கூடங்குளம் டாஸ்மாக், காவிரி, ஸ்டெர்லைட், மணல்கொள்ளை, என போராட்டங்களை பட்டியலிட முடியும். தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய வழக்குகள் அனைத்தும் தமிழக அரசு திரும்ப பெறும் வகையில் அனைவரும் அரசை வலியுறுத்த வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது .

2015 முதல் கடலூர் மாவட்டத்தில் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் என்பதை உருவாக்கி பல கிராமங்களில் பிரச்சாரம் செய்து கார்மாங்குடி மணல் குவாரி கூடலையாத்தூர் மணல் குவாரி, முடிகண்ட நல்லூர் மணல் குவாரி என வரிசையாக ஆற்று மணல் குவாரியை பொது மக்களை திரட்டி அங்கேயே முற்றுகையிட்டு நிரந்தரமாக மூடினோம். அதற்காக அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் செய்த குற்றம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விருத்தாசலம் நீதிமன்றத்தில் கிராம மக்களுடன் வழக்கறிஞர் ராஜுவும் விசாரணையை எதிர் கொண்டு வருகிறார்.
அதுபோல சேத்தியாத்தோப்பில் மணல் கொள்ளைக்கு எதிராக 2017 -ல் நடந்த பொது கூட்ட உரையின் மீது போடப்பட்ட வழக்கு பற்றி இது வரை ரகசியமாக வைத்திருந்து குற்ற பத்தரிக்கை தாக்கல் செய்து 2022 ஏப்ரல் 20 அன்றுதான் தெரிய வருகிறது.

பல நூறு கோடி ரூபாய் மதிப்பு ஆற்றுமணல் வணிகத்தை தடுத்து நிறுத்தி வெள்ளாற்றை பாதுகாக்க முன்னணியாகப் போராடிய வழக்கறிஞர் ராஜு மீது லாரி ஏற்றிக் கொலை செய்யாமல், போலீசை வைத்து தேசதுரோக வழக்கு போட்டதற்கு மக்களின் ஆதரவுதான் காரணம்.

ஆற்றுமணல் உள்பட இயற்கை வளங்களையும், பொதுத் துறை நிறுவனங்களையும் கொள்ளையடிக்க வெறிகொண்டு அலையும் தற்போதைய கார்ப்பரேட்-காவி பாசிச அரசியல் சூழலில் போராடும் மக்கள் இன்னும் எச்சரிக்கையாக ஒன்றிணைந்து உறுதியாக போராட வேண்டும்.

மீண்டும் பிணந்திண்ணி கழுகுகளாக மணல் மாபியாக்கள் வெள்ளாற்றை சுற்றி வருகிறார்கள். போராடுபவர்களை அச்சுறுத்துவதற்குதான் வழக்கறிஞர் ராஜு மீதான இந்த தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

 

மக்கள் அதிகாரம் இத்தகைய பொய் வழக்குகளுக்கும், அரசின் அடக்கு முறைகளுக்கும் ஒரு போதும் அஞ்சாது. ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், பாசிசத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களாக பரிணமிக்கும் போது இத்தகைய வழக்குகளை இல்லாமல் செய்துவிடும்.

தோழமையுடன்,
தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர்.
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு-புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here