NLC  யின் 3 ஆம் கட்ட சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, நெய்வேலி அருகிலுள்ள கிராம மக்கள், அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். தமிழக வாழ்வுரிமைக்கட்சி உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளும் சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் விவசாயிகளை வேட்டையாடுவதை அனுமதிக்காதே! “நிலம் எனது உயிர்! நிலம் எனது அதிகாரம்!” என முழங்குவோம்!

வளையமாதேவி கிராமத்தில் கடலூர் SP ராஜாராம் தலைமையில் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவ்வூரில் NLC நிர்வாகம் இயந்திரங்கள் மூலம் மண் அணைகளை – வாய்க்கால்கள் வெட்டுவதை எதிர்த்து பா.ம.க.வினர் மறியல் செய்ததோடு இன்று (11.03.2023 இல்) கடலூரில் பந்த்தையும் அறிவித்துள்ளனர். அவர்களுக்கே “உரிய பாணியில்” நேற்று நள்ளிரவில் பஸ் கண்ணாடி உடைப்பு, 7 ஆயிரம் போலீசார் குவிப்பு என அமளிப்படுகிறது கடலூர். போராடும் மக்களுக்கு ஆதரவு தர சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் வளையமாதேவி கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். NLC க்கு எதிர்ப்பு – ஆதரவு என முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை பார்ப்போம்.

வஞ்சிக்கப்படும் கிராம மக்கள்!

பொதுத்துறை நிறுவனங்கள் தமது திட்டங்களை முன்னெடுக்க  ஊர்மக்களின் நிலத்தை கேட்டுப்பெறுவது வழக்கம்தான். ஆனால் அப்போது  மக்களின் வாழ்வாதாரமான நிலத்தை தருவதற்கு ஈடாக குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை தருவதாக ஊரைக்கூட்டி சொன்ன வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவதும்கூட வழக்கமானதாகிவிட்டது. வளர்ச்சித்திட்டங்கள்  முன்னெடுக்கப்படும் போது தரப்படும் இத்தகைய போலி வாக்குறுதியும்கூட நில உரிமையாளருக்குத்தான் தரப்படுகிறது. அந்நிலத்தில் கூலிக்கு, குத்தகைக்கு  உழைப்பவர்களுக்கு அதுகூட தரப்படுவது இல்லை.

நரிமணம் ONGC போலவே , நெய்வேலியில் NLC க்கு மூன்று சுரங்கங்களுக்கு இடத்தை தந்து, நிர்வாகமும் அரசும் வாக்களித்த வேலை முழுமையாக கிடைக்காமல் ஏமாந்துள்ளனர். நெய்வேலியில் ஆண்டுக்கு 30 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரியை வெட்டியவர்களுக்கு என்ன நடந்தது? காண்ட்ராக்ட் வேலையில் உயிரை பணயம் வைத்து சுரங்கத்துக்குள் போய் நிலக்கரியை வெட்டி எடுத்த இம்மக்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் கிடைக்கவில்லை.  இதை சொந்த அனுபவத்தில் உணர்ந்த மக்கள் இம்முறையும்  NLC நிர்வாகத்திடம் ஏமாற விரும்பாமல் எதிர்க்கின்றனர்.

நெய்வேலியில் 10 ஆண்டுகளை கடந்தும் வஞ்சிக்கப்படும் ஒப்பந்த பணியாளர்களின் உழைப்பை சுரண்டித்தான் வருடத்துக்கு1,300 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதன்மூலம் 2022 இல் மட்டும் ரூ.873 கோடியை நிகர லாபமாகவே குவித்துள்ளது NLC. நிர்வாகத்தின் சார்பில் பேசும் அதிகாரிகள் மட்டும் நிரந்தரப்பணியில் இருந்துகொண்டு தமக்கு மட்டும் லட்சங்களை மாத சம்பளமாக ஒதுக்கிக்கொள்கின்றனர். அதைவிட அதிகமாக ஒப்பந்ததாரர்கள்மூலம் கமிஷன்களை அள்ளி கோடிகளை குவித்துக்கொண்டே உழைப்பவர்களின் உரிமைகளை காலில்போட்டு மிதிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: நெய்வேலி NLC நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் தோழர் ராஜூவின் உரை!

நம் நிலம் அவர்களுக்கு வேண்டும். நிலக்கரி எரிக்கப்பட்டு நம் காற்று மாசடைய வேண்டும்.  நாம் சுரங்கத்திற்குள் சென்று நுரையீரல் கெட்டு காண்ட்ராக்ட்டிலேயே நொந்து சாக வேண்டும்.  கோடிகளை குவிக்கும் பொதுத்துறைகளை அரசே நடத்தக்கூடாது. கூடிய விரைவில் NLC யையே அதானிகளுக்கு விற்க வேண்டும். இதையெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு என்று அனைவரும் நம்பவேண்டும். இதைத்தான் அரசு முன்வைக்கிறது. இதை எதிர்த்தால்   மின்சாரம் இல்லாமல் இருக்க முயுமா என சில அதிபுத்திசாலிகள் கேட்கின்றனர்.

நெய்வேலியில் கிராம மக்கள் சொந்த ஆதாயத்துக்காக, –  பொருளாதார நலன்களுக்காக, எதிர்ப்பதாகவே இருக்கட்டும். ஆதரிப்பவர்களின் கண்ணோட்டம் சரியா என்பதையும் பார்ப்போம்.

வருகிறது கோடை! மின்சாரம் தேவை!

நாட்டின் வளர்ச்சிக்கு, தொழில் வளர்ச்சிக்கு, மக்களின் தேவைக்காக மின்சார உற்பத்தியை பெருக்க வேண்டும் என்கின்றனர். இது மேலோட்டமாக பார்த்தால் சரிதான். அனைவருக்கும் மின்சாரம் அத்தியாவசியமானதுதான். ஆனால் அதை  அரசு பொறுப்பாக விநியோகிக்கின்றதா? என்பதையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டும்.

தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கம் போன்ற பிரம்மாண்ட விளையாட்டு மைதானத்தில் இரவை பகலாக்கும் லைட்டுகளை போட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சம்பகலில் இருக்க இரவு போட்டிகளுக்கு மின்சாரம் வழங்குவது அத்தியாவசியமா? IPL – கிரிக்கெட், கபடி போட்டிகள் கார்ப்பரேட்டுகளின் விளம்பரத்திற்கு பகலிலும் ஒளிரும் மிகப்பிரம்மாண்ட LED திரைகள் அவசியமாக இருக்கலாம். இதற்கெல்லாம்   நாம் ஏன் மின்சாரம் தரவேண்டும்?

நகரினுள்ளும், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் பிரம்மாண்ட விளம்பர போர்டுகள் கண்ணை கவரும் ஒளிவெள்ளத்தில் இரவு முழுவதும் ஜொலிக்கின்றன. சுரங்க விரிவாக்கத்தை நியாயப்படுத்துபவர்கள் முதலில் கார்ப்பரேட்டுகளின் லாபவெறி, தொழிற்போட்டியால் அதிகரிக்கும் இந்த ஊதாரித்தனமான மின்நுகர்வை கணக்கில் எடுத்து கண்டிக்க வேண்டாமா?

பிரம்மாண்டமான பிரபல ஜவுளி, நகைக்கடைகளில், மல்டி பிளக்ஸ், ஹைப்பர் மார்க்கெட்களில் மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன எந்திரத்துக்கு போகும் மின்சாரமும் அத்தியாவசிய பட்டியலில் சேருமா?

மக்களை கொல்லும் வளர்ச்சி!

புவி வெப்பமயமாதலை தடுக்க புதை படிவ எரிபொருளை எரிக்க கூடாது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உலக நாடுகளின்முன் கடந்த COP 27 பருவநிலை மாநாட்டில், இந்தியா கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கப் போவதாக உதார் விட்டது. இங்கோ நிலக்கரியை வெட்டியெடுக்க முனைப்பு காட்டுகின்றனர். காவிரிடெல்டாவிலும்,  கடலோரத்திலும்மீத்தேன் உறிஞ்ச டெண்டர் விடுகிறார்கள். பொதுப்போக்குவரத்தை அதிகரிக்காமல் கார் உற்பத்தியை பெருக்குகிறார்கள்.

புவியைக்காக்க நாமும் NLC சுரங்க விரிவாக்கத்தை எதிர்க்கும் கிராம மக்களுடன், சுரங்க விரிவாக்கத்தை எதிர்த்து போராடும் அனைவருடனும் கைகோர்ப்போம். எதிர்கால சந்ததிக்கு புவியில் எஞ்சி இருப்பதையாவது பாதுகாப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here