எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் ஐபோன்களை உளவு பார்க்கும் பாஜக அரசு!


மெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்று ஐபோன். ஐபோனில் பல்வேறு வகையான பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் அந்த ஃபோனில் இருந்து தரவுகளை திருடுவதோ அந்த ஃபோன்களில் ஒட்டு கேட்பதோ இயலாத காரியம் என்று பரவலாக நம்பப்படுகிறது.  எனவே இந்த ஐபோன் உலக அளவில் மிகவும் புகழ் பெற்றதாக உள்ளது. இந்தியாவில் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என பல்வேறு  பிரபலங்கள்  ஐபோன்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட புகழ்வாய்ந்த ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் ஐபோன் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றோருக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளது.

அந்த எச்சரிக்கை மின்னஞ்சலில் “எச்சரிக்கை: உங்களது ஐபோன் அரசால் நிதி அளிக்கப்பட்ட தாக்குணர்களால் (State – sponsored attackers)குறி வைக்கப்பட்டிருக்கலாம்” என்றும் அவர்களால் தொலைவில் இருந்தபடியே உங்கள் ஐபோனில் உள்ள தரவுகளையும் உங்களது தகவல் பரிமாற்றங்களையும் மேலும் உங்களது  மைக்ரோஃபோன்களையும் கேமராக்களையும் அணுகமுடியும்” (அதாவது அவற்றில் உள்ளவற்றை உளவுபார்க்க முடியும்) என்று கூறியுள்ளது.

மேற்கண்ட எச்சரிக்கை மின்னஞ்சல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்பி சசிதரூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, ஆம் ஆத்மி எம்பி ராகவ்  சதா, சிவசேனா (யுடிபி) எம்பி பிரியங்கா சதுர்வேதி , ராகுல் காந்தியின் அலுவலகத்தில் வேலை செய்யக்கூடிய பல்வேறு நபர்கள், மோடி அரசை விமர்சிக்கின்ற  தி ஒயர், டெக்கான் கிரானிக்கல் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர்கள் என 20 பேருக்கு ஆப்பிள் நிறுவனத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

மற்றவர்களின் உரிமையை கூந்தல் அளவிற்கு கூட மதிக்காதவர்களான பார்ப்பனப் பாசிஸ்ட்டுகள் தங்களது எதிரிகளை வீழ்த்துவதற்கு எதையும் செய்யத் துணிந்தவர்கள். அதில் மானம், அவமானம் பார்ப்பது, நியாயம் அநியாயம் பார்ப்பது என்ற பேச்சிற்கே இடம் கிடையாது என்பதில் உறுதியாக உள்ளவர்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இஸ்ரேலிய தயாரிப்பான பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் போன்றோரின் செல்போன்களை பாஜக அரசுஉளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ‘பாஜக அரசு அப்படி உளவு பார்க்கவே இல்லை’ என்று  ஆணித்தரமாக பதில் எதையும் கூறவே இல்லை. மாறாக மழுப்பலான பதில்கள் கூறி சமாளித்தது என்பதை நாடே கண்டது.

அப்படிப்பட்ட நிலையில் தான் இப்போதும் பாஜக அரசு உளவு பார்த்து வருகிறது என்ற விஷயம் மீண்டும் வெளியில் தெரியவந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் கொடுத்துள்ள தாக்குதல் எச்சரிக்கை என்பது வெறும் ஒட்டுக் கேட்பது மட்டுமல்ல. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ரோனா வில்சன் போன்றவர்களின் கணினிகளில் அவர்களுக்கே தெரியாமல் வெளியில் இருந்து ஆவணங்கள் புகுத்தப்பட்டதுபோல எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது பொய் குற்றஞ்சாட்ட போலி ஆவணங்களை புகுத்தும் அபாயமும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போதும் பாசிச பாஜக அரசு எப்படி பதில் கூறுகிறது? ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை மின்னஞ்சல் குறித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஸ்நவ்” எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றும்

“ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை மின்னஞ்சலில் தெளிவான தகவல்கள் இல்லை என்றும் இதுபோன்ற அறிவுரைகள் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன” என்றும் “மத்திய அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார். மேலும் ‘இந்திய அரசு இந்திய குடிமக்கள் அனைவரின் அந்தரங்கத்தையும் பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்தும் பணியை மிகவும் தீவிரமானதாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், இந்த எச்சரிக்கையை அதன் அடியாழம் வரை சென்று விசாரிக்கப் போவதாகவும்’ கூறியுள்ளார்.

இதை நாட்டு மக்கள் எப்படி புரிந்து கொள்வது? அதை கீழ்க்கண்டவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:

அதானியின்  தேச விரோத செயல்கள் குறித்து ஆதாரங்களுடன் ஹிண்டன்பார்க் அறிக்கை வெளிவந்துள்ள போதிலும் அது குறித்து மேலோட்டமான விசாரணை கூட இல்லை. நிலக்கரி வாங்கியதில் அதானி செய்த ஊழல்கள் குறித்து பேச்சே இல்லை. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ரோடு போடுவது, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஆண்களுக்கு பிரசவம் பார்த்தது, இறந்து போனவர்களுக்கு வைத்தியம் பார்த்தது போன்ற பாஜகவினரின் ஊழல்கள் குறித்து எந்த பேச்சும் இல்லை. இந்த பார்ப்பன                பாசிஸ்டுகள்  ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை குறித்தும் உண்மையாக விசாரிக்கப் போவதில்லை. ஏனெனில் உளவு பார்ப்பதே அவர்கள் தான்.

உளவு பார்த்த, பார்க்கும் குற்றவாளிகள் உண்மையாக விசாரித்து தண்டிக்கப்பட வேண்டுமானால் அதற்கு பாசிச பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்பது மட்டும் போதுமானது அல்ல; உளவு பார்த்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மாபெரும் மக்கள் எழுச்சி நடந்தால்தான் வரும் காலத்திலாவது அது சாத்தியமாகும்.

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here