மோடி ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டு காலத்தில் இந்தியாவில் வெடிகுண்டுகள் எங்கும் வெடிக்கவில்லை என்ற மாபெரும் புளுகு மூட்டைகள் அடங்கிய, அழுகிப்போன குண்டை தமிழக மக்களின் மீது பாஜகவின் தமிழக தலைவர் திருவாளர் அண்ணாமலை வீசியுள்ளார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் சாசனத்தில் 370 வது பிரிவை ரத்து செய்து காஷ்மீரை இரண்டாகப் பிரித்தபோது காஷ்மீர் முழுவதும் வெடிகுண்டுகள் வெடிக்கத் துவங்கியது. 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காக காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் என்ற பெயரில் 40க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டனர் என்பதில் துவங்கி தற்போது மணிப்பூரிலும், ஹரியானாவில் நடந்து வரும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் குண்டர் படையினர் நடத்தும் பல்வேறு கொலை வெறி தாக்குதல்களில் வெடிகுண்டுகள் வெடித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

சமீபத்தில் தமிழகத்தில் கவர்னர் மாளிகையின் மீது கருக்கா வினோத் என்ற முன்னாள் ரவுடியும், இந்நாள் பாஜகவின் ஆதரவாளருமான பொறுக்கி ஒருவன் பெட்ரோல் குண்டு வீசினான். அதனை வைத்து தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுப் போய்விட்டதாக புரளிக் குண்டுகளை ஆர்எஸ்எஸ் பாஜகவினரும் அந்த பித்தலாட்டங்களுக்கு தலைமை ஏற்கும் அண்ணாமலையும் ஊர் ஊராக திரியும் பாதயாத்திரையின் போதும், ஊடகங்களில் கொடுக்கும் பேட்டிகளின் போதும் வீசி வருகின்றனர்.

இதற்கு அக்கம்பக்கமாக கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமச்சேரி என்ற இடத்தில் சர்ச் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பை காரணம் காட்டி கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும், இஸ்ரேலுக்கு எதிராக போராடக்கூடிய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புரளி குண்டை வீசியுள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் வரிப்பணத்தில் இயங்குகின்ற ராணுவத்தை தவிர ஆர் எஸ் எஸ் என்ற பார்ப்பன பாசிச பயங்கரவாத அமைப்பு நேரடியாகவே விஸ்வ இந்து பரிசத், சனாதன் சன்ஸ்தான், இந்து முன்னணி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளின் மூலம் கொலை வெறியாட்டத்தை நடத்தி வருவது தொடர்ந்து அம்பலமாகி கொண்டிருக்கிறது.

ஆனால் இது பற்றி கவலைப்படாத திருவாளர் அண்ணாமலை மோடியின் ஆட்சியில் குண்டுவெடிப்பு நடக்கவில்லை என்று அபாண்டமான ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு துணிச்சலுடன் தமிழகத்தில் வலம் வந்து கொண்டுள்ளார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வெடி மருந்துகளையும், பீரங்கிகளையும், ஏவுகணைகளையும், டாங்கிகளையும் அடுக்கடுக்காக வாங்கி குவிப்பதற்கு ராணுவ பட்ஜெட் 2022 ஆம் ஆண்டு 5.24 லட்சம் கோடி ரூபாய்க்கும், அதுவே 2023 ஆம் ஆண்டு 5.94 லட்சம் கோடி ரூபாய் ஏறக்குறைய 13 சதவீதம் அதிகரிக்கப்பட்டு போடப்பட்டுள்ளது. இந்த ராணுவ பட்ஜெட்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் வெடிகுண்டுகளை வாங்கவில்லை என்று அண்ணாமலை சத்தியம் செய்வாரா என்று நமக்கு புரியவில்லை.

இதையும் படியுங்கள்: புல்வாமா தாக்குதலும், பாஜகவின் பிண அரசியலும்                                                                                                                            காவி பயங்கரவாதம்: அச்சுறுத்தலாகும் ஆர்.எஸ்.எஸ்.

பாகிஸ்தானுக்கு எதிராகவும், சார்க் பிராந்தியத்தில் இலங்கை உள்ளிட்ட நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ்  கொண்டு வருவதற்கு அமெரிக்காவின் அடியாளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவில் குண்டு வெடிப்புகள் நிகழவில்லை என்று பேசுவது அப்பட்டமான பித்தலாட்டமாகும்..

பாஜகவினர் “குன்னக்குடியில் மொட்டை போட்டு விட்டு, கொண்டையில் பூவை சுற்றி கொண்டவர்களைப் போல, அமைதி பூங்காவாக வலம் வருவதாக”, தமிழகத்தையும், ஏன் இந்தியாவையும் ஏய்த்துக் கொண்டுள்ளனர்.

முன்னாள் போலீஸ் அதிகாரிகள், முன்னாள் ராணுவ உயர் பதவியில் இருந்த அதிகாரிகள், முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் போன்ற அதிகார வர்க்க பொறுப்பில் இருந்து மக்களின் வரிப்பணத்தில் தனது வாயையும் வயிறையும் வளர்த்துக் கொண்ட கும்பல், ஓய்வு பெற்ற பிறகு பாஜகவின் இணைந்து சேவை செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு என்று நம்மை நம்ப சொல்கிறார்கள். இதுவே ஒரு இமாலய பித்தலாட்ட குண்டாகும்.

1925 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு மூன்று முறை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தலைமை பீடமான நாக்பூரில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மீதும் நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள் மீதும் தொடர்ந்து அவதூறுகளை ஏவி விடுவது, கொலைவெறி தாக்குதல்கள் நடத்துவது, சொந்த நாட்டு மக்களின் மீது குண்டு வெடிப்புகளை நடத்துவது, தேசிய வெறியை கிளப்புவதற்காக அண்டை நாட்டு மக்களின் மீது குண்டுகளை வீசி தாக்குவது என்று கைதேர்ந்த பயங்கரவாத கும்பலான ஆர்எஸ்எஸ் குண்டு வெடிப்பு பற்றி பேசுவது அபத்தமான வேடிக்கையாகும்.

மனித உயிர்களை கொன்று குவிக்கும் வெடிகுண்டுகளை வீசி படு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அண்ணாமலை போன்ற கோயபல்ஸ்கள் புரளிக் குண்டுகளையும் வீசி வருகிறார்கள் என்பதுதான் நாட்டு மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டிய செய்தி.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here