ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் (NCERT) மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ் இயங்கும் (CBSE) பள்ளி வகுப்புகளுக்கு பாடத்திட்டம் வகுக்கக்கூடிய அமைப்பு ஆகும். கூடுதலாக, தேசிய பாடத்திட்ட வரையறை உருவாக்கக் கூடிய வேலையையும் அது செய்து வருகிறது.
தேசிய கல்விக் கொள்கை 2020யை அடிப்படையாக கொண்டு பள்ளி பாடத்திட்டங்கள் வகுப்பதற்கான ஆலோசனைகள் வழங்க NCERT பல்வேறு குழுக்களை அமைத்துக் கொண்டுள்ளது. அதில் ஒரு குழுதான் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் நமது நாட்டை “இந்தியா” என்று குறிப்பிடுவதை மாற்றி “பாரத்” என மாற்ற வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இது கடும் எதிர்ப்பிற்கு உள்ளான பிறகு NCERT ‘பாரத்’ எனக் குறிப்பிட முடிவு எதுவும் எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
மோடி அரசின் கீழ் NCERTயின் நடவடிக்கைகள்
பாரத் என மாற்ற முடிவு எடுக்கவில்லை எனினும் மோடி அரசின் கீழ் இயங்கும் NCERT யின் காவிமயமாக்கல் நடவடிக்கைகள் அம்பலமாவது புதிதல்ல. ஏற்கனவே 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து டார்வின் பரிணாம கோட்பாடு பற்றிய அத்தியாயங்களை கைவிட்டுள்ளது.10 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து – ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, மக்கள் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயகத்திற்கான சவால்கள் – அத்தியாயங்களையும் நீக்கியுள்ளது.
மேலும் காந்தியைக் கொல்ல இந்து தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அவர் கொல்லப்பட்ட பிறகு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை பற்றிய பத்திகள் NCERT-யால் நீக்கப்பட்டது. 2002 குஜராத் கலவரம், இந்தியாவில் முகலாயர் ஆட்சி மற்றும் 1975ல் நாடு தழுவிய அவசரநிலை ஆகியவை தொடர்பான உள்ளடக்கத்தையும் கைவிட்டது. இப்போது எந்த NCERT பாடப்புத்தகத்திலும் குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை கண்டித்து அப்போது பாடத்திட்ட ஆலோசனை குழுவில் இருந்த யோகேந்திர யாதவ், சுஹாஸ் பல்ஷிகர் உள்ளிட்டோர் ஆலோசனைக் குழுவில் இருந்து விலகுவதாகவும் தங்கள் பெயர்களை பாடப்புத்தகங்களில் கொண்டு வரக்கூடாது எனக் கூறியும் கடிதம் அளித்தனர் அந்த கடிதத்தில் “பாடப்புத்தகங்கள் இப்படி அப்பட்டமான பாகுபாடான முறையில் வடிவமைக்கப்படக் கூடாது, சமூக அறிவியல் மாணவர்களிடையே விமர்சனம் மற்றும் கேள்வி எழுப்பும் உணர்வைத் தணிக்கக் கூடாது. இந்த பாடப்புத்தகங்கள் இப்போது இருக்கும் நிலையில், அரசியல் அறிவியல் மாணவர்களுக்கு அரசியல் கொள்கைகள் மற்றும் காலப்போக்கில் ஏற்பட்ட அரசியல் இயக்கவியலின் பரந்த வடிவங்கள் ஆகிய இரண்டையும் பயிற்றுவிக்கும் நோக்கத்திற்கு சேவை செய்யாது.” என மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.
சங்கியின் தலைமையில் ஆலோசனைக் குழு
இந்த நிலையில், தற்போது பாரத் என மாற்ற முடிவெடுக்கவில்லை என NCERT கூறினாலும் அந்த குழுவின் தலைவர் அதற்கு சொன்ன காரணம் அபத்தத்தின் உச்சமாக உள்ளது.. பாரத் என பெயர் மாற்ற வேண்டியதற்கு காரணம் “பாரத் என்பதுதான் பழமையான பெயர்.” “பாரத் என்ற பெயர் 7000 வருடத்துக்கு முன்பு எழுதப்பட்ட விஷ்ணு புராணத்தில் எழுதப்பட்டது” என அந்த குழுவின் தலைவரான பேராசிரியர் ஐசக் பச்சையாக புளுகியுள்ளார். ரிக் வேதமே 3000-3500 ஆண்டுகள் பழமையானதுதான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் நிலையில், வேதங்களை பின்பற்றி எழுதப்பட்ட விஷ்ணு புராணத்தை 7000 ஆண்டுகள் பழமையானது எனக் கூறுவதற்கான முட்டாள்தனமான தைரியம் சங்கிகளுக்கு மட்டுமே வாய்க்கும். அப்படிப்பட்ட சங்கிதான் பேராசிரியர் C.I.ஐசக்.
இதையும் படியுங்கள்:
♦ பெயர் வைப்பதில் ஆயிரம் பிரச்சினை இருக்குது, கேள் மகளே !
♦ கல்வித்துறையை மொத்தமாக விழுங்கத் துடிக்கும் காவி கும்பல்!
கேரளாவில் உள்ள CMS கல்லூரியில் தான் வேலை செய்த போது தனது அரசியல் நிலைப்பாடுகளுக்காக பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகவும் அப்போது தனக்கு ஆர்.எஸ்.எஸ்தான் துணை நின்றது என்றும் அதுவே ஆர்.எஸ்.எஸ் மத பாகுபாடு பார்க்காத அமைப்பு என்பதற்கு சான்று என ஆர்.எஸ்.எஸ்காரர்களே அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் பேசியவர்தான் பேராசிரியர் ஐசக். இவர் இந்திய வரலாற்றியல் ஆராய்ச்சி மன்றத்திலும் (ICHR) உறுப்பினராக உள்ளார். இவர் 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனிய ஆட்சியர்களுக்கும், மலபாரில் ஆதிக்கம் செய்த நிலப்பிரபுக்களுக்கும் எதிராக மாபெரும் கலகத்தில், வீரமிக்க போராட்டத்தில் ஈடுபட்ட மாப்ளா போராளிகளை விடுதலை போராட்ட வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரைத்த 3 பேர் கொண்ட ICHR குழுவிலும் உறுப்பினராக இருந்த ‘பெருமை’ கொண்டவர்.
பாரம்பரிய இந்தியாவின் வரலாறு?
மேலும், “பண்டைய இந்திய வரலாறு” என்பதை மாற்றி “பாரம்பரிய இந்தியாவின் வரலாறு” என மாற்ற வேண்டும் என்றும்; முகாலயர்களிடம் இந்தியர்கள் தோற்றது மட்டும் தற்போது வரலாற்றுப் பாடங்களில் உள்ளது. அதனை மாற்றி “முகலாய மன்னர்களை இந்துக்கள் வெற்றி கொண்ட வரலாற்றையும் இணைக்க வேண்டும்” என்றும்; “சுதந்திரம் வாங்குவதற்கு முன்பான வரலாற்றுப் பகுதியை குறைத்துவிட்டு அந்த இடத்தில் 1947க்குப் பிறகான வரலாற்றை கொண்டு வர வேண்டும்” என்றும் பரிந்துரைத்துள்ளது ஐசக் தலைமையிலான குழு.
இவர்கள் சொல்லும்படி பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் எனில் பாரம்பரிய இந்தியாவின் ‘பெருமைகள்’ பற்றி இந்தியாவின் மிக முக்கியமான அறிஞர் டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ளவற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்; இந்து மன்னர்களின் ‘வெற்றி’ வரலாற்றை பேச வேண்டும் எனில் அவர்களின் துரோகத்தையும் பேச வேண்டும்; 1947க்குப் பின்னான இந்திய வரலாற்றை சேர்க்க வேண்டும் எனில் முதல் நிகழ்வாக காந்தியை பார்ப்பன இந்து பயங்கரவாதி கோட்ஸே படுகொலை செய்ததைப் பற்றி எழுத வேண்டும்; அதுவே சரியானதாக இருக்கும். ஆனால் மோடி அரசின் கீழ் இயங்கும் NCERT இதனை செய்யாது.
பள்ளி மாணவர்களின் மத்தியிலேயே பாசிச கருத்துக்களை பரப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பல். இதை ஒரு திட்டமாகவே செய்து வருகின்றனர். அதற்காகவே 3 முதல் 12;ம் வகுப்பு பாடப்புத்தகங்களை இறுதி செய்வதற்கான 19 பேர் கொண்ட குழுவில் பாடகர் சங்கர் மகாதேவன், ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் தேப்ராய், ஆர்.எஸ்.எஸ் யுடன் இணைந்து செயல்படும் சம்ஸ்கிரித பாரதி அமைப்பின் நிறுவனர் சமு கிருஷ்ண சாஸ்திரி, Infosys சுதா மூர்த்தி போன்ற சங்கிகளைக் கொண்டு இட்டு நிரப்பியுள்ளது.
பாசிச மோடி அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் காவிமயமாக்கும் நடவடிக்கைகளை முறியடித்தே தீர வேண்டும். பாசிச பாஜக ஆட்சியதிகாரத்தில் இருக்கும் வரை அவர்களின் இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது மிகப்பெரும் சவாலாகவே இருக்கும். இந்த நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டே பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியும் வேலைகளிலும் ஈடுபட வேண்டியதே மக்கள் முன்னிருக்கும் முதற்கடமையாக உள்ளது.
- திருமுருகன்