பெரியார் கொண்டு வந்த சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கியது‌ தாங்கள் தான் என மேடை தோறும் மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் பொதுச் செயலாளர் இல்லத் திருமணம் பகட்டாக, பார்ப்பனிய சடங்குகளுடன் நடந்துள்ளது வெட்கக்கேடானது.

பெரியார் முன்வைத்த சுயமரியாதை இயக்கம் என்பது வெறும் மேடைப் பேச்சுக்கானவை அல்ல; அது அன்றாட வாழ்வியலுக்கான கொள்கை. தாலி என்பது பெண்ணை அடிமைப்படுத்தும் வேலி; வேத மந்திரங்களும் புரோகிதமும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் கருவிகள். எனவேதான், இவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்து ‘சுயமரியாதை திருமணங்களை’ பெரியார் அறிமுகப்படுத்தினார்.

ஒரு உண்மையான சுயமரியாதைத் திருமணம் என்பது:

ஜாதகம் பார்க்கக் கூடாது.

நல்ல நாள், முகூர்த்த நேரம் பார்க்கக் கூடாது.

அய்யரோ அல்லது பிற புரோகிதர்களோ வேத மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தக் கூடாது.

தாலி அணியும் சடங்கு இருக்கக் கூடாது (தாலி தமிழர் மரபும் அல்ல).

ஆடம்பரம், பகட்டு மற்றும் வீண் செலவுகளுக்கு இடமளிக்கக் கூடாது.

திருமணத்திற்குப் பிந்தைய குடும்ப வாழ்க்கையிலும் பார்ப்பனியம் அண்டக் கூடாது

இத்தகைய, தமிழர் வாழ்வில் இடையில் புகுந்த சடங்குகளைத் தூக்கி எறிந்தால் மட்டுமே தமிழர் பண்பாட்டையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க முடியும்.

வர்க்க அரசியலின்மையும், சொத்துடமை தரும் அச்சமும்!

திராவிடக் கருத்தியலின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், அது வர்க்க அரசியலைப் (Class Politics) பேசுவதில்லை. பொதுவுடமைக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் முறையையும் பண்பாட்டையும் முன்மொழிவதோடு, அவற்றைச் சமூகத்தில் நடைமுறைப்படுத்தி மக்களுக்கு முன்மாதிரியாக வாழும்போதுதான் எந்தவொரு கருத்தியலும் மக்களைப் பற்றிக்கொள்ளும்.

திராவிட இயக்கங்களின் சுயமரியாதைத் திருமணங்கள் சாமானிய மக்களைப் பற்றிக் கொள்ளாமல் போனதற்கு முதன்மையான காரணமே — மக்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பின்பற்றுவதற்கு அந்த இயக்கங்களில் தற்காலத்தில் முன்னோடிகள் எவரும் இல்லை என்பதுதான்.

சுயமரியாதை இயக்கங்களின் பின்னணியில் வந்தவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. மெல்ல மெல்லப் பணம், சொத்து சுகம், வசதியான வாழ்க்கை ஆகியவை முதன்மை பெற்றன. சொத்து சுகம் சேரும்போது, அதை இழந்துவிடுவோமோ என்ற அச்சமும் சேர்ந்தே வளர்கிறது. அந்த அச்சம் ஒருவரைக் கவ்விக்கொண்டால், அது இயல்பாகவே அவரைச் சடங்குகளிலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்க வைத்துவிடும்.

பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை பேசிய எண்ணற்ற சுயமரியாதை இயக்க முன்னோடிகளின் வீடுகளில், இன்று மீண்டும் பார்ப்பனியம் கோலோச்சுவதற்கு இந்த “வர்க்க அரசியலின்மை – சொத்து சேர்ப்பு – அச்சம் – சடங்கு” என்கிற சுழற்சியே அடிப்படையான காரணமாகும். இதன் வெளிப்படையான சான்றுதான், திமுகவின் மூத்த முன்னோடியான துரைமுருகன் இல்லத்தில் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற மணவிழா!

பார்ப்பனர்களின் தில்லு முல்லு சடங்கு சம்பிரதாயங்களைப் பட்டியல் போட்டு அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்தியவர் அம்பேத்கர். பட்டியல் சாதி மக்கள் பாட்டாளிகளாய் வாழ்ந்த போது அவர்களை தூரநின்று அருவெறுப்பாய் பார்த்த பார்ப்பனியம் இன்று அதே பட்டியல் சாதி மக்களில், சொத்து சுகம் சேர்த்தவர்களின் இல்லங்களில் நுழையும் பொழுது அதை பல்லிளித்துக் கொண்டு தழுவிக் கொள்கிறார்கள். பார்ப்பனியம் நுழையும் பட்டியல் சாதி மக்கள் இல்லங்களின் சுவர்களில் அம்பேத்கர் பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

பெரியார் ஊர் ஊராகச் சென்று பகுத்தறிவைப் பேசினார்; பேரறிஞர் அண்ணா திராவிடக் கருத்தியலை மேடைகளில் முழங்கினார். அன்று பேச்சு மேடைகள் வெறும் பேச்சோடு நிற்காமல் மக்களின் வாழ்க்கை நடைமுறைக்கான ஓர் அங்கமாகவே மாறின.

படிக்க: திருமணம்: ஒரு நெருக்கடியாக மாற்றப்படும் அவலம்!

ஆனால், அண்ணாவிற்குப் பிறகு திராவிட இயக்கங்கள், குறிப்பாக திமுக, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சார வேலையை முற்றிலுமாக கைவிட்டுவிட்டன.

பெரியாரைப் போலவோ, அண்ணாவைப் போலவோ கொள்கைகளைப் பற்றித் தொடர்ந்து பேச இன்று ஆளில்லாத சூழல் உருவாகியுள்ளது.

எந்த ஒரு கொள்கையையும் மக்கள் மனங்களில் தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்; இல்லையெனில், அது காலப்போக்கில் தேய்ந்து அழிந்துவிடும்.

மார்க்சிய-லெனினிய இயக்கங்களின் முன்மாதிரிப் பங்கு

திராவிட இயக்கங்கள் கைவிட்ட, பகுத்தறிவு சுயமரியாதைக் கொள்கைகளையும் வாழ்வியலையும் இன்றைக்கு யார் காப்பாற்றுகிறார்கள் என்று பார்த்தால், பொதுவுடமைத் தோழர்கள்தான் — குறிப்பாக மார்க்சிய-லெனினிய இயக்கத் தோழர்கள்தான் வர்க்க அரசியலோடு இணைந்த சுயமரியாதைத் திருமணங்களைப் ‘புரட்சிகரத் திருமணங்களாக’ வளர்த்தெடுத்து இன்றும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

திருமணத்திற்குப் பிந்தைய குடும்ப வாழ்க்கையிலும் பார்ப்பனியம் அண்டக் கூடாது. தமிழர் வாழ்வில் இடையில் புகுந்த சடங்குகளைத் தூக்கி எறிந்தால் மட்டுமே நமது உண்மையான பண்பாட்டையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க முடியும். திருமணத்திற்குப் பிறகும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் பார்ப்பனியத்தையும் மூடநம்பிக்கைகளையும் வீட்டை விட்டு வெளியே வீசி எறிந்து, முழுமையான சுயமரியாதை வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். கடைநிலை உறுப்பினர்கள் வரை சுயமரியாதை திருமண முறையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.

வரலாறு யாரையும் மன்னிக்காது!

மனித சமூகம் சொத்துரிமைச் சமூகமாக மாறியதன் விளைவே மதங்கள், சடங்குகளின் பெருக்கமாகும். தங்களது உடைமையையும் சொத்தையும் காப்பாற்ற ஒரு வாரிசு வேண்டும் என்கிற அச்சமும் எதிர்பார்ப்பும்தான் மனிதர்களை மீண்டும் சடங்குகளுக்குள் இழுத்துச் செல்கிறது.

படிக்க: கவின் ஆணவப் படுகொலையும் – குற்றவாளிகள் இருவர் விடுதலையும்! நீதி பரிபாலன முறையின் லட்சணம்!

இயற்கையில் ஆணும் பெண்ணும் சேர்வது என்பது இனப்பெருக்கத்திற்கான ஒரு நிகழ்வு மட்டுமே; மற்ற உயிரினங்களைப் போல மனிதனுக்கும் இது இயல்பானது. மனமொத்த இருவர் சேர்ந்த வாழ எதற்கு இத்தனை சடங்குகள், சம்பிரதாயங்கள், முகூர்த்தங்கள் மற்றும் ஆடம்பரங்கள்? இதைத்தான் பெரியார் கேள்வி கேட்டார்.

பெரியார் சொன்னதைத் தூக்கி எறிந்துவிட்டு, சடங்குகளைச் செய்பவர்களுக்குப் பெரியார் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் உரிமையும் இல்லை. திராவிட மற்றும் பகுத்தறிவு இயக்கங்கள் இனிமேலாவது சுயமரியாதைக் கருத்துகளை மக்கள் மனங்களில் பதிய வைத்து, நடைமுறையில் வாழ்ந்துகாட்ட வேண்டும் இல்லை என்றால், வரலாறு அவர்களைக் காலத்தின் குப்பைத் தொட்டியில் தள்ளிவிடும்!

  • தமிழ்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here