இந்திய உயர்கல்வி நிறுவனங்களில்  நிலவும் சாதி ரீதியான ஒடுக்குமுறைகளால் பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் நிகழ்வாக உள்ளது.

இந்த நிலையில் இப்படிப்பட்ட சாதி ரீதியான ஒடுக்குமுறைகளை தடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மானிய குழுவால் (University Grants Commission – UGC) கடந்த ஜனவரி 13 ஆம் தேதி அன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த சுற்றறிக்கையில் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாகுபாடு, ஒடுக்குமுறைகள் தொடர்பான புகார்களை ஆய்வு செய்வது, அந்தப் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை செய்வதற்கு ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் சமத்துவக் குழு (Equity Committee) அமைக்கப்பட வேண்டும் என்றும் புதிய விதிமுறைகளில், பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகிய சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கும் குழுவில் இடம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த சுற்றறிக்கையில் உள்ள புதிய  விதிமுறைகள் ‘உயர் சாதி’யினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக கூறி ஆர் எஸ் எஸ் பாஜக சங்கிகள் தங்களின் வெறித்தனமான எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இந்த சுற்றறிக்கைக்கு எதிராக டெல்லி, ஜெய்ப்பூர், பாட்னா, இந்தூர், ராஞ்சி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிகளால் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இந்த வழிகாட்டுதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதுமட்டுமன்றி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரில் மாஜிஸ்திரேட் ஆக பணியாற்றி வரும் அலங்கார் அக்னிஹோத்ரியும் தனது அரசு பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தவர்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு பதவிகளோ அல்லது வேறு ஏதேனும் சன்மானங்களோ கிடைக்கும் என்பதற்காக தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தார்களா? அல்லது சாதிய ஒடுக்கு முறையை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தங்களது பதவிகளை தியாகம் செய்தார்களா ?என்பது நமக்கு உறுதியாக தெரியாது. ஆனால் இவர்களின் ராஜினாமா சாதி வெறியர்களின் மனதில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செய்தித் தொடர்புத் தலைவர் சுனில் அம்பேகர், சனிக்கிழமையன்று (அக்டோபர் 31) இந்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது “அந்தச் சுற்றறிக்கை சமநிலையற்றதாக இருந்தது என்பதில் ஆர்.எஸ்.எஸ். தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அரசாங்கமும் இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

நீதிமன்றம் இந்த விதிமுறைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இனிமேல் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சமநிலையுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய கருத்து. அரசாங்கம் இதை உறுதிப்படுத்த வேண்டும். நீதிமன்றத்திலும் இதே நோக்கத்துடன் இந்த விவகாரம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

நமது சமூகத்தை நாம் வலுவாக வைத்திருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால், இதுபோன்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் உருவாகும் என்று நான் கருதுகிறேன்.” என்று விசத்தை கக்கியிருக்கிறார்.

படிக்க: உயர்கல்விக்கு ஆபத்து: புதிய சட்டம் வருகிறது! – ரவிக்குமார் எம்.பி

சாதிய ஒடுக்கு முறைகளை விசாரிக்க அமைக்கப்படும் சமத்துவ குழுவில் உயர்சாதியினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதால் அதை “சமத்துவமற்றது” என்று சங்கிகள் கூறுகின்றனர்.

உண்மையில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆதிக்க சாதியை சேர்ந்த ஆசிரியர்களே நிரம்பி வழிகின்றனர் என்ற நிலையில், சாதிரீதியான ஒடுக்குமுறைகளில் உயர் சாதியைச் சேர்ந்த ஆசிரியர்களே ஈடுபடும் நிலையில், இவர்களின் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது என்பது அயோக்கியத்தனமான ஒன்று.

மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியாளர் நியமனத்தில் இடஒதுக்கீடு) சட்டம், 2019-ன்படி, ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி (SC) – 15 %, எஸ்டி (ST) – 7.5 %, ஓபிசி (OBC) – 27 % என மொத்தம் 49.5% ஆசிரியர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எதார்த்த நிலைமை இதற்கு நேர் எதிராக உள்ளது.

மும்பை ஐஐடியின் முன்னாள் மாணவரான பிரணவ் ஜீவன் பி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெற்ற தரவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன. இவர் ஆர்டிஐ மூலம் பெற்ற

தகவல்களைப் பரிசீலிக்கும் போது ஏழு (காரக்பூர், ரூர்க்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஐஐடி (BHU), ஜோத்பூர், பாட்னா, ரோப்பர், திருப்பதி) ஐஐடிகளில் உள்ள ஆசிரியர் பணியாளர்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 20 சதவீதம் மட்டுமே உள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் (TISS) சமூக அறிவியல் துறையின் இணைப் பேராசிரியரும், சமத்துவ வாய்ப்பு மையத்தின் முன்னாள் முதன்மையருமான பேராசிரியர் அவத்தி ராமையா அவர்கள் ‘ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுக் குழுக்களில் பாட நிபுணராகவோ பார்வையாளராகவோ, தான் பங்கேற்றிருந்ததாகவும் இடஒதுக்கீட்டுப் பணியிடங்களுக்குப் போட்டியிடும் விண்ணப்பதாரர்களிடம், அவர்களின் சாதியை மையமாகக் கொண்டு அடிக்கடி கடினமான கேள்விகள் கேட்கப்படுவதாகவும் பின்னர், அந்த விண்ணப்பதாரர்கள் ‘பொருத்தமானவர்கள் அல்ல’ என்று தேர்வுக் குழுக்கள் முடிவு செய்கின்றன’ என்றும் கூறுகிறார்.

படிக்க: உயர்கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மூடு விழா காணப்போகும் முதற் பல்கலைக்கழகம்!

ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களை உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக தேர்ந்தெடுத்து விடக்கூடாது என்பதற்காக ‘உயர்சாதி’யினர் அரும்பாடு படுகின்றனர். ‘உயர்சாதி’யினரை (அதாவது சாதிவெறி கண்ணோட்டம் கொண்டவர்களை) சமத்துவக் குழுக்களில் இணைத்துக் கொள்ளாததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடு முழுவதும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

சமத்துவக் குழுவில் ‘உயர் சாதி’யினர் இடம்பெற்று இருந்தால்தான் சாதிய ஒடுக்குமுறை குறித்த புகார்களின் மீதான விசாரணையை சீர்குலைக்க முடியும். இந்த நோக்கத்திற்காக தான் ஆர் எஸ் எஸ் பாஜக சங்கிகள் இப்பொழுது அமைக்கப்பட்ட சமத்துவக் குழுவை எதிர்த்து சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி, உயர்கல்வி நிறுவனங்களில் எப்படி, எந்த வழிமுறைகளில் சாதிய ஒடுக்கு முறைகளை கையாண்டு பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களை, சங்கிகள், தற்கொலைக்கு தள்ளுகிறார்கள் (கொலை செய்கிறார்கள்) என்பதை பார்ப்போம்.

தொடரும்…

– குமரன்

1 COMMENT

  1. உயர்கல்வி நிறுவனங்கள் முழுவதும் பார்ப்பன கூடாரமாக இருந்தது தற்போது ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறி அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது பார்ப்பன வர்ணாசிரம பாகுபாட்டை இருத்துகிறது. எனவே மக்களிடம் இதை அம்பலப்படுத்த வேண்டும் மாணவர் போராட்டங்கள் தீவிர படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here