டெல்லி ஜந்தர் மந்தர், மும்பையின் சிவாஜிபார்க் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் திருத்தப்(SIR) பணியின் காரணமாக சுமார் 13 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழந்துள்ளனர். ஹிட்லர், யூதர்களை இனப்படுகொலை செய்ததற்கு எந்த அளவிற்கு மலை போன்ற ஆதாரங்கள் குவிந்துள்ளனவோ, அதே போன்று, இந்த எஸ் ஐ ஆர் மூலம் தகுதியுள்ள வாக்காளர்களை திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதற்கு – முறைகேடுகள் நடந்துள்ளதற்கு மலையளவு ஆதாரங்கள் குவிந்து வருகின்றன.

குறிப்பாக கூற வேண்டுமெனில் பாஜகவினருக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்களின் வாக்குகள் திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் எஸ் ஐ ஆர் பணியில் எவ்வித தவறும் நடக்கவில்லை என்று பாசிச பாஜகவினர் தொடர்ந்து கூப்பாடு போட்டு வருகின்றனர்.

எஸ் ஐ ஆர் பணி எந்த அளவிற்கு முறைகேடாக நடந்துள்ளது – நடந்து வருகிறது என்பதற்கு மேற்குவங்கம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை வகை மாதிரியாக எடுத்து நாம் இங்கு பரிசீலிக்கலாம்.

எஸ் ஐ ஆர் நடைபெற்று முடிந்துள்ள மேற்குவங்க மாநிலத்தில் மாநிலம் முழுமைக்கும் சேர்த்து 27,05,162 வாக்காளர்கள் தகுதியற்றவர்கள் என்று நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18.98 லட்சம் பேர் அதாவது 70.02% பேர் முஸ்லிம்களாக உள்ளனர்.

மால்டா (Malda / Maldah), முர்ஷிதாபாத் (Murshidabad), உத்தர தினாஜ்பூர் (Uttar Dinajpur) ஆகிய மூன்று மாவட்டங்களில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களில் 94.4% பேர் முஸ்லிம்களாக உள்ளனர்.

இந்த மூன்று மாவட்டங்களில் மொத்தம் 43 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 18 தொகுதிகள் பங்களாதேஷ் எல்லையையொட்டி அமைந்துள்ளன. இந்த 18 தொகுதிகளில் இருந்த மொத்த முஸ்லிம் வாக்காளர்களில் 42% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம் வாக்காளர்களில் சராசரியாக 15% பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் நீக்கப்பட்ட முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இந்த 18 தொகுதிகளில் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர்.

படிக்க:

♦ ஞானேஷ்குமாரின் சர்வாதிகாரமும், பாசிச மயமாகும்  அரசுக் கட்டமைப்பும்!

♦ ஞானேஷ்குமார் இனியும் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் நீடிக்கக் கூடாது!

இது குறித்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் பற்றிய விவரங்களை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ,நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தீர்ப்பாயங்களின் ஆய்வில் (ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, வாக்குரிமை பறிக்கப்பட்ட வாக்காளர்களில்) 91.13% வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று முடிவு செய்யப்பட்டு மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மேற்குவங்க மாநில அளவில் 2.17% மேல்முறையீட்டு மனுக்கள் மட்டுமே இதுவரை விசாரித்து முடிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள 16 தொகுதிகளில் இந்த தீர்ப்பாயங்கள் இன்று வரை விசாரணையை நடத்தாமல் முடங்கிக் கிடக்கின்றன. இந்த தீர்ப்பாயங்கள் அதற்கான காரணங்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

வாக்காளர் சேர்க்கை, நீக்கம் தொடர்பான முறையீட்டை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான சட்டர்ஜி அவர்கள் ஒரு முறையீட்டை விசாரிப்பதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆகும் என்றும் அந்த விசாரணை குறித்த உத்தரவை எழுதுவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆகும் என்றும் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 வழக்குகளை மட்டுமே விசாரித்து தீர்ப்பளிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

அவருக்கு மொத்தம் 11 தொகுதிகளின் மேல்முறையீடுகளை விசாரிக்க பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் இன்னும் 6,34,156 பேரின் மேல்முறையீட்டை விசாரிக்க வேண்டி உள்ளது. இவற்றை விசாரித்து முடிப்பதற்கு அவருக்கு 174 ஆண்டுகள் ஆகும் என்ற நிலை உள்ளது. ஆக இந்த 11 தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் ஆகப்பெரும்பான்மையான வாக்காளர்களின் பெயர்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, மீண்டும் இணைக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலையை இந்தத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து இதுவரை பார்த்தோம். இனி வாக்காளர்கள் எவ்வளவு அயோக்கியத்தனமான நடைமுறையின் வாயிலாக, சட்ட விரோதமாக நீக்கப்படுகிறார்கள் என்பதை கர்நாடக மாநிலத்தின் நடைமுறையில் இருந்து இனி பார்ப்போம்.

படிக்க:

♦ சட்டவிரோதமாக நடந்துகொண்ட ஞானேஷ் குமார் கைது செய்யப்பட வேண்டும்!

♦ ஞானேஷ்குமார்: தேர்தல் ஆணைய வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளி…!

படிவம் 7 (Form 7) என்பது வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவரின் பெயரை நீக்குவதற்கு அல்லது சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குப் பயன்படுத்தப்படும் படிவமாகும்.

கர்நாடக மாநிலத்தில் பெலகாவி (Belagavi), பீதர் (Bidar), விஜயபுரா (Vijayapura) ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள் பெருமளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பீதர் (Bidar) மாவட்டத்தில், பாள்கி (Bhalki) தாலுகாவில் “Nittur” என்ற கிராமத்தில் உள்ள நான்கு வாக்குச்சாவடிகளில் 500-க்கும் மேற்பட்ட Form 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

சில விண்ணப்பங்களில் வாக்காளர் விவரங்கள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றைத் தாக்கல் செய்தவர்கள் தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.

இந்த கிராமத்தில் உள்ள Booth Level Officer (BLO) ஒருவரிடம் சுமார் 200 வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கான Form 7 படிவங்களில் கையெழுத்திடுமாறு ஒரு கும்பல் கட்டாயப்படுத்தியது, ஆனால் அந்த BLO படிவங்களில் கையெழுத்திட மறுத்துள்ளது குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன.

இப்படி கர்நாடகாவின் பல இடங்களில் பெரும் தொகையான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள் (படிவம் 7) கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் படிவத்தை கொடுத்த நபரின் பெயர் பேனாவில் கையால் எழுதப்பட்டுள்ள நிலையில், அந்தப் படிவங்களில் பெயர் நீக்க வேண்டிய வாக்காளர்களின் பெயர், EPIC எண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆக இந்தப் படிவங்களை தயாரித்துக் கொடுத்தவர்கள் யார்? அவை எடுத்து வந்து BLOவிடம் கொடுப்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல படிவங்களில் யார் அந்த படிவத்தை (விண்ணப்பத்தை) கொடுக்கிறார் என்ற விவரமே அதில் குறிப்பிடப்படவில்லை . அதாவது பெயர் இல்லாத மொட்டைக் கடிதாசி போன்று விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் சிறப்பான ஒன்று. இப்படிப்பட்ட முறைகேடான வழிகள் மூலமாக வாக்காளர்கள் நீக்கப்படுவது மாநிலம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த முறைகேடுகள் வெளிவந்திருக்கின்றன.

பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க கூடிய வாக்காளர்களை நீக்குவதற்காகவே எஸ் ஐ ஆர் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எஸ் ஐ ஆர் என்பது சட்டத்திற்கு புறம்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரால் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

இந்த நிலையிலும் கூட தேர்தல் ஆணையத்தின் மீதான எந்த விமர்சனத்திற்கும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதில் அளிக்க மறுக்கிறார். மேலும் தலைமை தேர்தல் ஆணையம் சட்டப்படி, விதிமுறைகளின்படி இயங்குவதாக அறிக்கை வெளியிடப்படுகிறது.

பாசிச பாஜகவை தொடர்ந்து ஆட்சியில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்திய தேர்தல் ஆணையம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது இப்பொழுது மக்கள் மத்தியில் நன்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக கூட்டு அரசு என்ற ஒரு மாற்றை முன்வைத்து மக்களை ஓர் அணியில் திரட்டி போராடுவதன் மூலமாகத்தான் இந்திய தேர்தல் ஆணையத்தையும் பாசிச பாஜகவையும் வீழ்த்த முடியும்.

– குமரன்

ஆதாரம்: https://m.thewire.in/article/communalism/in-bengal-tribunal-remedy-has-been-slowest-where-the-sir-has-affected-muslim-voters-the-most/amp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here