ஆப்பசைத்த குரங்காகும்   அமித்ஷா!

அம்பேத்கரின் பெயரைச் சொல்லி வம்புக்கு இழுத்ததன் மூலம், வேறு வழியின்றி ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் அமித்ஷாவை கண்டிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டனர். நாம் அவரை மண்டியிட வைப்போம்.

2

டிசம்பர் 19ஆம் தேதியான இன்று பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்துள்ளனர். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள்  கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளனர்.

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன குரல்கள் எழுந்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அமித்ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கருக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய ராகுல்காந்தி, மல்லிகார்ஜூனே கார்கே உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நுழையும் போது பாஜக எம்பிக்களால் திட்டமிட்டு தடுக்கப்பட்டனர். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ராகுல்காந்தி தள்ளியதாக கீழே விழுந்த பாஜக எம்பிக்கள் நாடகமாடி அம்பேத்கர் பிரச்சினையை திசை திருப்ப முயல்கின்றனர்.

எதற்காக போராட்டம்?

அம்பேத்கரின் பெயர் உச்சரிக்கப்படுவதை கூட சகிக்க முடியாத சங்கி அமித்ஷாவின் வெறுப்பு பேச்சை கண்டித்து தான் இப்போது போராட்டம் நடந்து வருகிறது.

ஆனால் இந்த வரம்பையும் தாண்டி செயல்பட்டாக வேண்டிய தேவையும் உள்ளது. அதாவது குறிப்பான சிலவற்றை இணைத்தும் போராட்டங்களை முன்னெடுக்க கூடுதல் கவனம் தர வேண்டியுள்ளது.

பாசிச மோடி அரசு ஜனநாயகத்தின் மீதோ, உழைக்கும் மக்களின் மீதோ அடுக்கடுக்காக தொடுத்து வரும் தாக்குதல்களுக்கு எதிரானதாகஒன்றிணைக்கப்படும் வகையில் இப் போராட்டங்களை கட்டமைக்க வேண்டும்.

தற்போது நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கத்தில் உள்ள “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா” தாக்கல் செய்யப்பட்டு, அது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்தும் இணைத்து போராடுவதாக முன்னெடுக்கப்பட  வேண்டும்.

பாசிஸ்டுகள் பல நேரங்களில் தமது பாசிச நடவடிக்கைகளுக்கு நேர் எதிராக நின்று எதிர்க்கட்சிகள் போராட்டக் களம் காண்பதை தடுக்கும் விதமாகவும், மடைமாற்றும் விதமாகவும்  திட்டமிட்டே சதிகளில் ஈடுபடுகின்றனர்.

தெலுங்கு மொழி பேசும் மக்கள்  குறித்து கஸ்தூரி வாயை விட்டு, ஆப்பசைத்த குரங்காக அலறி, மன்னிப்பும் கேட்டு  அம்பலப்பட்டார். அதே நிலை தான் அமித் ஷாவுக்கும் வர உள்ளது.

பாராளுமன்றத்தில்  சங்கிகள் வாய்க்கொழுப்பெடுத்து பேசிய அம்பேத்கர் குறித்த விவகாரத்தால் தான் தற்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பகுதி போராட்டங்களின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் சங்கிகள்!

அம்பேத்கரின் ஆளுமையை சிதைக்க முடியாமல், அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தியுள்ள தடைகளை சகிக்கவும் முடியாமல் தவிக்கின்றனர் காவி பாசிஸ்டுகள்.

தற்போது   இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதியவர்களில் முதன்மையானவரான  பாபாசாகிப் அம்பேத்கரை குறிப்பிட்டு வம்புக்கு இழுத்து புதிய நிகழ்ச்சி நிரலை முன்னுக்கு தள்ளிவிட்டார் அமித்ஷா.

அதாவது, எதிர்க்கட்சிகள் ஓயாமல் ‘“அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர்” என்று கூப்பாடு போடுவதற்கு பதிலாக, கடவுள் பெயரைச் சொன்னால் சொர்க்கமாவது கிடைக்கும் என விமர்சித்துள்ளார் அமித்ஷா.

அம்பேத்கரின் பெயரைச் சொல்லி வம்புக்கு இழுத்ததன் மூலம், வேறு வழியின்றி ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் அமித்ஷாவை கண்டிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டனர். நாம் அவரை மண்டியிட வைப்போம்.

சங்கிகளைப் பொறுத்தவரையில் அம்பேத்கர் மட்டும் எதிரி அல்ல. பார்ப்பனியத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் அனைவருமே தாக்குதல் இலக்குகள் தான்.

தற்போதைய அரசியலமைப்புச் சட்டம், அம்பேத்கர் பெரியாரிய மார்க்சிய சிந்தனைகள், தத்துவங்கள், கண்ணோட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இம்மண்ணிலிருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற வெறியுடன் செயல்படுகின்றனர்.

எனவே பாசிஸ்டுகளின்  கேடான நோக்கங்களை உழைக்கும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, அவர்களை தனிமைப்படுத்த வேண்டியது அவசியமானது தான்.

அதே நேரம் இந்த பாசிஸ்டுகளை ஆட்சியதிகாரத்தில் இருந்து இறக்க வேண்டியதற்கு தேவையானவற்றை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டியதும் முக்கியமான, பாசிச எதிர்ப்பு கட்சிகளும், இயக்கங்களும் தவிர்க்கவே கூடாத நிபந்தனையாக உள்ளது.


படிக்க: அம்பேத்கரை இழிவு படுத்திய ஆர்எஸ்எஸ் அமித்ஷா பார்ப்பன பாசிச பயங்கரவாத கும்பல்.


அதாவது நடப்பு நிகழ்வுகளுக்கு எதிர்வினை ஆற்றுவதும், ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வர தேவையான மாற்று வடிவத்தை முன்வைப்பதுமான இரண்டையும் இணைத்து செய்ய வேண்டி உள்ளது.

நமது முதன்மையான தாக்குதல் இலக்கை நோக்கி நாம் நகர்வதற்கு சங்கிகள் எளிதில் விடமாட்டார்கள். அவர்கள் ஏற்படுத்தும் பல்வேறு தடைகளையும் தாண்டித்தான் நாம் நமது பிரதான தாக்குதல் இலக்கை நோக்கி மக்களை அரசியல்படுத்தி அமைப்பாக்கவும், மோதி வீழ்த்தவும் வேண்டி உள்ளது.

தற்போது குறிப்பாக, இந்திய அரசியலமைப்பின் மீதும், ஆகப்பெரும்பான்மையான இந்திய உழைக்கும் மக்களின் மீதும், மோடியும், மோடியின் எஜமானர்களான தேசம் கடந்த தரகு முதலாளிகளும், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும் சேர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. நாம் காவி, கார்ப்பரேட் இரண்டையும் இணைத்து அம்பலப்படுத்துவோம்.

சலசலப்புகளுக்கு அஞ்சத் தேவையில்லை!

சங்கிகளை தோல் உரிப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. இந்தியாவில் ஆகப்பெரும்பான்மையான ஊடகங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கும் சங்கிகளால் முற்போக்கு அமைப்புகளை, இயக்கங்களை, ஜனநாயக சக்திகளை திசை திருப்பும் வேலைகளை எளிதாக செய்ய முடிகிறது .

தனது ஊடக பலத்தின் மூலம் சங்கிகள் தான் பேச விரும்பும் விஷயங்களை, தான் விரும்பும் கோணத்தில் முன் வைக்கவும்,  விவாத பொருள்களாக்கவும், மக்கள் மத்தியில் திணிக்கவும், பரப்பவும் கூட முடிகிறது தான்.

தற்போது நாடாளுமன்றத்தில் அமைச்சர் பேசியவற்றை ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரித்து புரட்டுவதாகவும், முழுமையாக சொல்லாமல் வெட்டி சுருக்கி அவதூறு செய்வதாகவும் அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட சங்கிகள்  எதிர்க்கட்சிகளை வசை பாடுகின்றனர். சங்கிகள் முட்டுச் சந்தில் வசமாக சிக்கும் போதெல்லாம் நன்றாக வெளுக்க வேண்டும் தான்.


படிக்க: அமலாக்கத் துறையை அனுப்பி இரண்டு பேரை கொன்ற பாஜக அரசு!


கார்ப்பரேட் காவி பாசத்தை முழுமையாக வீழ்த்த வேண்டும் என்றால் நாம் அவர்களின் உயிர் நாடியில் தான் மிதிக்க வேண்டும். அவர்கள் நீட்டும் கையையோ, காலையோ அடித்துக் கொண்டிருந்தால் போதாது.

 மாற்றை முன்வைத்து களம் காண்போம்!

தேசம் கடந்த தரகு முதலாளிகளும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும் நமது நாட்டை தாராளமாக சுரண்டவும் கொள்ளையடித்துக் கொழுக்கவும்தான் பாசிசம் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளது.

மோடி அரசு தனது எஜமானன் அவர்களின் தேவைக்கேற்பத்தான் தற்போது நடப்பில் உள்ள அனைத்து சட்டங்களையும் நடைமுறைகளையும் ஒழித்துவிட்டு   ஒரு பார்ப்பன பேரரசை கட்டி எழுப்ப எத்தனிக்கிறது.

ஜனநாயகத்தை வெறுக்கின்ற சங்கிகளின் கேடான நோக்கங்களையும், முன்னெடுப்புகளையும் சரியாக புரிந்து கொண்டிருக்கின்ற பெரும்பாலானோர் அடக்குமுறைகளை கண்டு அஞ்சாமல் எதிர்வினை ஆற்றுகின்றனர்.  நாட்டு நலனில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பினரும் காவி பாசிஸ்டுகளை  கண்டித்து  பேசியும், எழுதியும், போராடியும் வருகின்றனர்.

ஆனால் தனி நபர்களால் பாசிச அரசை வீழ்த்த முடியாது. அதற்கான பொறுப்பு எதிர் கட்சிகளின் – ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர இயக்கங்களின் – தோளின் மீதே சுமத்தப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சியாக ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள பாசிச பாஜகவை வீழ்த்த அதே களத்தில் மோதியாக  வேண்டும். அங்கு – தேர்தல் களத்தில் – மோசடிகள் அதிகரித்து ஜனநாயக பூர்வமான  வாய்ப்பு மறுக்கப்படுமானால் மக்களைத் திரட்டி எழுச்சிக்கு வழிநடத்தவும் தயாரிப்புகளை செய்ய வேண்டும்.

அதற்கு முதல் படியாக, பாசிச மோடி அரசுக்கான மாற்று ஜனநாயக வடிவத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து விவாத பொருளாக்க வேண்டும். மோடியின் மக்கள் விரோத திட்டங்களுக்கு மாற்றாக எதை செய்ய உள்ளோம் என்பதை – குறைந்தபட்ச செயல் திட்டத்தை – தீவிரமாக பிரச்சாரமாக கொண்டு செல்ல வேண்டும்.  இவற்றில் ஒன்றுபடும் கட்சிகள் அனைத்தையும் ஒரே முன்னணியாக ஒன்றிணைக்கவும் வேண்டும்.

எனவே, சங்கிகளின் அவ்வப்போதைய செயல்பாடுகளுக்கு எதிர்வினை ஆற்றுவதோடு, நாட்டின் முதன்மையான அரசியல்   நிகழ்ச்சி நிரலை நாமே தீர்மானிப்போம்; குறிப்பான இலக்கு வைத்து, மேல் கை எடுத்து காவிகளை புரட்டி எடுப்போம்! கார்ப்பரேட் காவி பாசிசத்தை துடைத்தெறிவோம்.

  •  இளமாறன்

2 COMMENTS

  1. தோழர் இளமாறனின் ‘ ஆப்பசைத்தக் குரங்காகும் அமித்ஷா’ கட்டுரையை அதன் உள்ளடக்கத்தை முழுமையாக உள்வாங்கி மக்களிடத்திலே பரவலாக கொண்டு செல்ல வேண்டும். இந்த சங்கிகள் கூட்டம் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போல உண்மையான அவசர அவசியமான பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் மற்றும் புரட்சிகர ஜனநாயக சக்திகள் முன்னெடுக்கும் பொழுதெல்லாம் அவற்றை மழுங்கடிக்கும் வகையில் மடை மாற்றி விடுவதில் சங்கிகளுக்கு நிகர் சங்கிகளே! எனவே, ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற பாசிஸ்டுகளின் முன்னெடுப்புகள் ஒற்றை சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய ஒன்றே! அதை மடை மாற்றவே அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை இழிவு படுத்தி அமித்ஷா கபட நாடகம் போடும் செயலும் அடங்கி இருக்கிறது. ஆக இந்த இரண்டு பிரச்சனைகளோடு அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டர்களின் இணைத்து மொத்த எதிரிகளையும் வீழ்த்தக்கூடிய பயணத்தில் மக்களை அணி திரட்டும் பணியை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அனைத்து புரட்சிகர ஜனநாயக சக்திகளும் சரியான மார்சியல் லெனினிய அரசியல் கண்ணோட்டத்தில் களம் காண வேண்டும்! அந்த அடிப்படையில் தான் கட்டுரையாளரும் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!

  2. சரியான நேரத்தில் , சரியான கன்னோட்டத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here