ஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்காக காத்திருந்தது போல எதிர் தாக்குதலை ஆரம்பித்து போரை நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேலின் பாசிச நெதன்யாகு அரசாங்கம். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். கொலை செய்யப்பட்டதில் 3-ல் ஒரு பகுதி குழந்தைகள் என்கிறது அல்-ஜசீரா இணையதளத்தின் தரவுகள்.

ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய உடனேயே, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் என அறிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்க்கும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

“Deeply shocked by the news of terrorist attacks in Israel. Our thoughts and prayers are with the innocent victims and their families. We stand in solidarity with Israel at this difficult hour.” இஸ்ரேலில் தாக்குதல் நடந்தவுடன் மோடி உடனடியாக எக்ஸ்-ல் பதிவிட்ட செய்தி.

ஒரு நாட்டில் தாக்குதல் நடந்தால் மற்ற நாட்டின் தலைவர்கள் ஆதரவளிப்பதும் கருத்து கூறுவதும் இயல்பானது தான் என்றாலும், இந்திய பிரதமர் மோடியின் கருத்து மட்டும் ஏன் இவ்வளவு பேசப்படுகிறது என்பதை பார்ப்போம்

இந்தியாவில் மோடி அன் கோ உருவாக்கியிருக்கும் இஸ்லாமிய வெறுப்பும் , அதன் காரணமாக நடக்கும் படுகொலைகளும், தாக்குதல்களும் உலகம் அறிந்ததே. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற பிம்பத்தையும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் உருவாக்கியுள்ளது. அதன் காரணமாக தான் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் என்ற அமைப்பு நடத்திய தாக்குதலை தீவிரவாதிகள் தாக்குதல் என்று கூறுகிறார் இந்திய பிரதமர் மோடி.

இதனை பற்றிக்கொண்ட சங்பரிவார் கும்பலோ பாலஸ்தீனியர்கள் குறித்த  பொய் செய்திகளையும், காணொளிகளையும், இஸ்லாமிய வெறுப்பையும் சமூகவலைதளங்களில் பரப்புகிறது. இந்தியாவில் இருந்து தான் அதிகமான பொய் செய்திகள் பாலஸ்தீனியர்கள் குறித்து பரப்பப்படுவதாக அல்-ஜசீரா இணையதளம் கூறுகிறது.

4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இனவாதிகளால் குக்கி பழங்குடிகள் வேட்டையாடப்பட்டதும், பழங்குடியினப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டதும் பலர் கொலை செய்யப்பட்டதும் மோடி பிரதமராக இருக்கும் இந்தியாவில் தான்.

இதையும் படியுங்கள்:

ஆனால் மோடியோ இதுகுறித்து இதுவரை வாய்திறக்கவில்லை. இத்தனைக்கும் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியே நடக்கிறது. பழங்குடியினப் பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட காணொளி சமூகவலைதளங்களில்  வைரலாகி விமர்சனத்துக்குள்ளான பின்னரே அது குறித்து மட்டும் வருத்தம் தெரிவிக்கிறார் மோடி.

இஸ்ரேலில் நடக்கும் தாக்குதலை கண்டித்து பாலஸ்தீன பயங்கரவாதிகள் தான் தாக்குகிறார்கள் என்று இஸ்ரேலுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் மோடி, சொந்த நாட்டில் நடக்கும் படுகொலைகளை கண்டும் காணாமல் செல்வதற்கான காரணம், மணிப்பூரின் கலவரத்திற்கு மைய காரணமாக இருப்பதே மோடி தலைமையிலான பாஜக அரசு தான்.

சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் தொடுக்கும் மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்பதில் ஆச்சரியமில்லை. மோடி மட்டுமல்ல அவர் போன்ற வலதுசாரிகள் ஆளும் நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஒருபடி மேலே உலக மேலாதிக்க ரவுடியான அமெரிக்காவின் அதிபர் பிடன் கடந்த புதன் கிழமை வெள்ளை மாளிகையில், “பயங்கரவாதிகள் குழந்தைகளின் தலையை துண்டிக்கும் படங்களை நான் பார்ப்பேன் உறுதிபடுத்தியிருப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை,ஹோலோகாஸ்டுக்குப் பிறகு யூதர்களுக்கு மிகக் கொடிய நாள்” என்று விவரித்தார்.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் ஜோபிடனும்

இதைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டின் கேள்விகளுக்கு பதிலளித்த வெள்ள மாளிகையின் செய்தி தொடர்பாளர் பிடனின் கூற்றை நிராகரித்து, தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களை அதிபர் பிடன் பார்க்கவில்லை என்று கூறினார்.

இவையல்லாமல் மேலும் இரண்டு பொய்களை கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பிடன். அதில் முக்கியமானதும் நகைக்க தக்கதுமான பொய், பயங்கரவாதிகள் வேண்டுமென்றே பொதுமக்களை குறி வைத்து கொல்வதாகவும், நாங்கள் போர் சட்டங்களை கடைபிடிப்பதாகவும் மிகப்பெரிய பொய்யை கூறியுள்ளார் பிடன்.

ஈராக், சிரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பலநாடுகளில் அமெரிக்க மேலாதிக்க கும்பல் செய்த போர் குற்றங்கள் ஏராளம் இதனை உலகமே அறியும். இதைப் பற்றி தெரிந்தும் மிகப்பெரிய பொய்யை பாசிஸ்டுகளால் மட்டுமே கூற முடியும்.

இஸ்ரேல் காசாவின் மீது வெண்பாஸ்பரஸ் குண்டுகளை தூவி அப்பாவி மக்களை எரித்து கொல்வதை கண்டும் காணாமல், சமாதானம் பேச இன்று இஸ்ரேலுக்கு செல்கிறார் அமெரிக்க அதிபர் பிடன். நேற்று காசாவின் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய கொடூரமான தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதனால் பிடனுடனான சந்திப்பை தவிர்த்திருக்கிறார் பாலஸ்தீன அதிபர்.

வெண்பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்று போர் விதிகள் இருந்தாலும் அதனை மயிரளவுக்கும் மதிப்பதில்லை பாசிஸ்டுகள்.  இதனை அமெரிக்க அதிபரும், இந்திய பிரதமரும் கண்டிக்கப் போவதில்லை. அதே போல் மோடி சொந்த நாட்டின் மக்கள் மீது தொடுக்கும் தாக்குதலையும் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கண்டிக்க போவதில்லை. பாசிஸ்டுகள் அனைவரும் தங்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தத்தை போட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால் பாசிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக நாடு கடந்து மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போர்க்கு எதிரான போராட்டங்கள் நடக்கிறது. இந்திய பிரதமர் பாசிஸ்ட் மோடி இஸ்ரேலுக்கு துணை நின்றாலும், இந்திய மக்கள் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின்  பின்னே நிற்கிறார்கள். இந்திய மக்கள் மட்டுமல்ல உலக மக்களும் தான் என்பதை உலகம் முழுவதும் நடக்கும் மக்கள்  நடத்தும் போராட்டங்களே சாட்சி.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here