விடுதலையின் மீதான எமது நம்பிக்கை.

மட்டுப்படுத்தவே முடியாத பாடலின் லயமொன்று எம்மிடம் உண்டு: அது எமது நம்பிக்கை. விடுதலையிலும் சுதந்திரத்திலுமான நம்பிக்கை.

நாங்கள் வீரர்களாகவோ பலியாட்களாகவே இல்லாத எளிய வாழ்வு குறித்த நம்பிக்கை.

எமது குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்றுவருவது குறித்த நம்பிக்கை.

மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் தன் உயிருள்ள குழந்தையைப் பிரசிவிப்பாள்,

ராணுவச் சோதனைச் சாவடி முன்னால் ஒரு இறந்த குழந்தையைப் பிரசவிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை.

சிவப்பு வண்ணத்தின் அழகை எமது கவிகள் சிந்திய குருதியிலல்ல, ரோஜாவில் காண்பார்கள் எனும் நம்பிக்கை.

அன்பும் சமாதானமும் என அர்த்தம் தரும் ஆதாரமான பெயரை இந்த நிலம் எடுத்துக்கொள்ளும் எனும் நம்பிக்கை.”

  • பாலஸ்தீன புரட்சிக் கவிஞர் மஹ்மூத் தர்விஷ்.

(மொழிப்பெயர்ப்பு : யமுனா ராஜேந்திரன்)

தனது தாய் நாட்டை, அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு தமது மக்களின் மீது கொடூரமான தாக்குதல்களை நிகழ்த்தி வருவதை கண்டித்து விடுதலை உணர்வுடன் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூத் தர்விஷ் எழுதிய கவிதை, நாட்டுப்பற்றையும், நம்பிக்கையையும் ஒருங்கே நமக்கு உணர்த்துகிறது.

உலக மேலாதிக்க போர் வெறியன் அமெரிக்காவின் தலைமையில்  அணிதிரண்டுள்ள பாசிச பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே குரலில் பாடுகிறார்கள். எமது தாக்குதல் பாலஸ்தீன மக்களுக்கு எதிரானது அல்ல. ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கத்திற்கு எதிரானது என்பதுதான். தீவிரவாதத்தை ஒழிக்கின்றேன் என்று முன்வைத்து விட்டால் வெண் பாஸ்பரஸ் குண்டுகள் முதல் உயிரியல் ஆயுதங்கள் வரை அனைத்தையும் ஏவி எதிரிகளை அழிக்கலாம் என்பது ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பயங்கரவாதத்தின் நீதியாகும்.

பாலஸ்தீனம் அழிகிறது! நமது எதிர் வினை என்ன?

போர் விதிகளை மீறி பாலஸ்தீனில் உள்ள மருத்துவமனைகளின் மீது குண்டு வீசி தாக்குகிறார்கள். வடக்கு, தெற்கு காசாவின் எல்லையில் பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் அடுக்கி வைத்து பாலஸ்தீனத்தின் எல்லை பகுதியான காசா நகரை ஆக்கிரமிக்க வெறியுடன் காத்திருக்கிறார்கள். மரண ஓலங்கள் வீதி எங்கும் விண்ணை முட்டுகிறது. குழந்தைகளின், தாய்மார்களின் கதறல்கள் நமது செவிப்பறைகளில் விழவில்லையா?

பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்த்து பீரங்கிகளின் மீதும், இராணுவத்தின்  மீதும் கல் எரிந்து போராடிய வீர மரபு, பாலஸ்தீன சிறுவர்களின் மரபு, நம்மை பார்த்து ஏளனமாக சிரிக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கையையும், அழிக்கப்பட்ட சொத்துக்களின் புள்ளி விவரங்களையும், நாசமாகின்ற பாரம்பரிய நகரங்களையும், பள்ளி, கல்லூரிகளையும் எடுத்துக் கூறினால் மட்டும்தான் ஒரு வேளை நமது இதயத்தில் இரக்கம் கசியுமோ?

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூரமான இன அழிப்பு யுத்தத்தை எதிர்த்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், மொரோக்கோவில்,ஜோர்டானில் கொல்கத்தாவில் வீதிகளில் திரண்டு போராடுகிறார்கள். இஸ்ரேலின் எல்லையை வெறும் கைகளைக் கொண்டு தாக்குவதும், எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பரண் களை தாண்டி ஏறி செல்வதற்கும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் லெபனான் மக்கள். அவர்களுக்கும் ‘உயிர் மீதான ஆசை’ இருக்கத்தான் செய்யும். ஆனாலும் கண்ணெதிரே நடக்கும் படுகொலையை கண்டித்து தனது உயிரை விலை கொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நமது நிலை என்ன?

பாலஸ்தீனம் அழிகிறது! நமது எதிர் வினை என்ன?
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மொராக்கோவில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்!

“எனக்கு வேலை இருக்கிறது, எனக்கு கல்லூரி இருக்கிறது, எனக்கு அன்றாட பணிகள் இருக்கிறது, ஏற்கனவே நான் திட்டமிட்ட வேலை இருக்கிறது, நான் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல இருக்கிறேன், எங்கள் வீட்டில் முக்கியமான நிகழ்வு, எனது உயிர் நண்பனின் குழந்தைக்கு பிறந்த நாள்.  ஆயுத பூஜைக்கு தயாரிப்பு பணிகளில் இருக்கிறேன்”

என்று சமாதானப்படுத்திக் கொள்ளும் நமது இரக்கமற்ற மனசாட்சி பாலஸ்தீனத்தின் குழந்தைகளின் கேள்விகளுக்கு முன்பாக வெட்கித்தான் நிற்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:

“நான் வாழும் வரை என் சொற்களும் வாழும். சுதந்திரப் போராளிகளின் கைகளில் ரொட்டியாகவும், ஆயுதமாகவும் என்றும் இருக்கும்”. – மஹ்மூத் தர்விஷ்.

எழுதிய உயிர் துடிப்புள்ள கவிதையை கம்யூனிஸ்டுகள் என்றும், போராளிகள் என்றும், தேசிய விடுதலையை ஆதரிப்பவர்கள் என்றும், சமூக செயல்பாட்டாளர்கள் என்றும், நேர்மையான ஊடகவியலாளர்கள் என்றும், கவிஞர்கள் என்றும், எழுத்தாளர் என்றும், வழக்கறிஞர்கள் என்றும், பேராசிரியர்கள் என்றும் பல பெயர்களுடன் உலவிக் கொண்டு அமைதி காக்கும் நம் மனசாட்சிக்கு சமர்ப்பிக்கின்றேன்.

  • பா.மதிவதனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here