சனாதனம் என்கின்ற பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம்!
இந்தியாவின் பெரும்பான்மை மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துகின்ற, பிரிவினைவாத கொள்கையை அமல்படுத்துகின்ற ஆர்எஸ்எஸ் – பாஜக   சனாதனக் கொள்கைகளை முன்வைத்து மக்களை பிளவுபடுத்தி வருகின்றன.

ந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளையும், பார்ப்பன மேலாதிக்கத்தையும் நிலை நாட்டுகின்ற சனாதனம் எனப்படும் வர்ணாசிரமக் கொள்கைகள் பல நூற்றாண்டுகளாக ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமாகவும், ஒடுக்குமுறை கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்திற்கு முன்னால் நிலவிய இந்த பார்ப்பன மதக் கொடுங்கோன்மையானது காலனி ஆதிக்கத்தினால் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மாறாக, “தனது பிரித்தாளும் கொள்கைக்கு உகந்த வகையிலேயே இருப்பதால் அவை கோட்டை கட்டி பாதுகாக்கப்பட்டது” என்கிறார் இந்து மதக் கொடுங்கோன்மையின் கீழ் என்ற நூலை எழுதிய தர்ம தீர்த்த அடிகளார்.

90- களில் இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு இந்த நாட்டின் பிற்போக்கு கூறுகளை பயன்படுத்தி மக்களை ஒன்று திரட்ட விடாமல் தடுக்கின்ற சாதிய வர்ணாசிரமக் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதவெறி பாசிசம் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பதை முன்வைத்து போராடத் துவங்கியது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.

“நாடு மீண்டும்  காலனியாவதை முறியடிப்போம்! பார்ப்பன (இந்து) மத வெறி பாசிசத்தை முறியடிப்போம்!” என்ற செயல் தந்திர அரசியலின் கீழ் மக்களை திரட்டிப் போராடியது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.

நாடு முழுவதும் தனது, “இந்து-இந்தி- இந்தியா” என்ற இந்து ராஷ்ட்டிரக் கொள்கையை அமல்படுத்துவதற்கு,  நாம் அனைவரும் இந்துக்கள் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் பெரும்பான்மை மக்களை ஒன்று படுத்துவதற்கு முயற்சித்த காலத்திலிருந்து அதன் உச்சகட்டமாக பாபர் மசூதியை இடித்து இங்கு தான் ராமன் பிறந்தான் என்ற பெயரில் பார்ப்பன மதவெறியாட்ட கலவரங்களை நடத்திய காலம் வரை அதற்கு எதிராக பார்ப்பன மதத்தின் பல்வேறு கொடுங்கோன்மை அம்சங்களை அம்பலப்படுத்தி தோலுரித்துக் காட்டியது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.

சனாதனம் என்று பார்ப்பன கும்பல் முன்வைக்கின்ற பார்ப்பன மதத்தின் பரிணாம வளர்ச்சியானது பார்ப்பன பயங்கரவாதமாகவும், பார்ப்பன பாசிசமாகவும் உருவெடுத்து வருகிறது என்பதை இந்தியாவில் யாவருக்கும் முன்னோடியாக மார்க்சிய லெனினிய இயக்கம் வரையறுத்து முன் வைத்ததை தனது அரசியல் கட்டுரைகள் மூலமாகவும், வெளியீடுகள் மூலமாகவும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றது புதிய ஜனநாயகம்.

90களில் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவர்கள் மற்றும் அறிவுத்துறையினர் ஆகியோர் அனைவரையும் ஒன்று திரட்டி நடத்தப்பட்ட திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் முதல் தஞ்சையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தமிழ் மக்கள் இசை விழாக்கள்; பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை அம்சமான சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரான இயக்கங்கள்; சாதி மறுப்பு திருமணங்கள்; தமிழகத்தில் பாசிச ஜெயா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு எதிரான இயக்கங்கள்; ஆடு கோழி பலியிடுவதை தடுக்கின்ற சட்டத்திற்கு எதிரான கிடா வெட்டும் போராட்டம் போன்றவை மட்டுமின்றி சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் போராட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக சனாதனத்தை எதிர்த்துப் அது இன்றைய நிலையில் பார்ப்பன பாசிசமாக உருவெடுத்துள்ள சூழலில் அதை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.

படிக்க:

 ”சனாதனம் ஒழிக” – சட்டமன்றத்தில் உதயநிதியின் முழக்கமும் – சங்கிகள் ஊளையிடலும்!

 சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியதே! உரக்கச் சொல்வோம்!

சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து அவரவர்கள் மனதில் தோன்றிய வகையில் அதற்கு வியாக்கியானம் செய்து வருகிறார்கள். பார்ப்பன மதத்தின் புனித பூமி என்று கருதப்படும் காசியில் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் மூலமாக 1898 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட, ‘ மத்திய இந்துக் கல்லூரி’ 1916 இல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. அந்த பனாரஸ் பல்கலைக்கழகத்தின் மூலமாக  1904 ஆம் ஆண்டு சனாதன தர்மம் என்ற பாடபுத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த நூலில், நான்கு சாதிகள் என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் உள்ளது. அந்த அத்தியாயத்தில், “சனாதன தர்மத்தின் தனித்தன்மை என்னவென்றால் யாவருக்கும் பொருந்தும் இந்த நான்கு கட்டங்களையும், அதாவது பிரம்மச்சரியம், கிரகஸ்தம் வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகிய நான்கு கட்டங்களையும் சமூக ஒழுக்கின் அடிப்படையாக ஆக்கியுள்ளது. இவை நான்கு நிச்சயமான புறவய சாதிகளாக அல்லது வகுப்புகளாக பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளன. முதல் கட்டமானது சூத்திர சாதியால், இரண்டாவது கட்டமானது வைசிய சாதியால், மூன்றாவது கட்டமானது சத்திரிய சாதியினால், நான்காவது கட்டமானது பிராமண சாதியினால் பிரதிநிதித்துவ படுத்தப்பட்டுள்ளன.  இந்த வர்ணாசிரம அமைப்பு தான் சனாதன தர்மத்தின் தனித்தன்மை” என்கிறது இந்த நூல் இந்த நூல் இன்று வரை இந்து ராஷ்ட்ர பைத்தியங்களான ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின்  வேத நூலாகவே பராமரிக்கப்படுகிறது. இந்த வகையில் மக்களை இயல்பாகவே பிரிக்கின்ற சனாதன கொள்கையை வர்ணாசிரமத்தை பிரிட்டன் காலனி ஆதிக்கம் ஏற்றுக்கொண்டது.

அதனால் தான், 1911 ஆம் ஆண்டு பிரிட்டிஷ அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியலின மக்களும், பழங்குடியினரும் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றே குறிப்பிடுகின்றனர். அதற்கான பத்து வரையறைகளை அன்றைய சென்சஸ் கமிஷனர் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார். இதை  தீண்டத்தகாதவர் யார் என்ற நூலில் ஆதாரம் காட்டுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

“பார்ப்பானின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள்; வேதங்களின் ஆளுமையை மறுப்பவர்கள்; இந்து கடவுள்களை வணங்க மறுப்பவர்கள்; பார்ப்பன பூசாரியின் பூசையை மறுப்பவர்கள்; இந்து கோவில்களுக்குள் பிரவேசம் மறுக்கப்பட்டவர்கள்; தொட்டால் அல்லது குறிப்பிட்ட தூரத்தில் வந்தால் தீட்டுக்கு காரணமானவர்கள்; பசுவை வணங்காதவர்கள்; மாட்டிறைச்சி உண்பவர்கள் ஆகியவை முக்கியமானவை” என்கிறது பிரிட்டிஷாரின் வரையறை.

இந்த வரையறையை இன்று வரை பார்ப்பன மதத் தலைவரான சங்கராச்சாரி முதல் சராசரி சவுண்ட் பார்ப்பான் வரை அனைவருமே ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தான் தீண்டாமை சேமகரமானது என்கிறார் செத்துப்போன ‘ மகா பெரியவரான’ சங்கராச்சாரி.

படிக்க:

 ‘சனாதனத்தை எதிர்த்தால் உரிய பாடம்’. இதுவே இந்து தர்மம்?

 சனாதனத்தைப் பாதுகாக்கும் காலச்சுவடின் பார்ப்பனியம்!

“பார்ப்பன (இந்து) மதம் ஒரு மதமே அல்ல. அது ஒரு சட்ட தொகுப்பு. சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் இந்து மதம் விதித்துள்ள ஆன்மீக நடவடிக்கை என்பது மேல் வர்ணத்தாரின் மனம் கோணாமல் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்வதும் அவர்களுடைய அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு அடிபணிந்து கிடப்பதும் தான்.” என்று சவுக்கால் உரிக்கின்றார் டாக்டர் அம்பேத்கர்.

இந்த சனாதனம் என்ற பார்ப்பன கொடுங்கோன்மையானது மறுகாலனி ஆதிக்கம் திணிக்கப்பட்ட போது பார்ப்பன பயங்கரவாதமாகவும், பார்ப்பன பாசிசமாகவும் உருவெடுக்க துவங்கியது. காங்கிரஸ் கட்சியினால் இத்தகைய பார்ப்பன பாசிசத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்ற காரணத்தினால் தான் சனாதனத்தையும், வர்ணாசிரமக் கொள்கைகளையும், பார்ப்பன கொடுங்கோன்மையும், இந்து இந்தி இந்தியா என்ற பெயரில் தனது கொள்கையாகக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலை தனது நம்பகமான அடியாளாக ஏற்றுக் கொண்டது இந்திய ஆளும் வர்க்கங்கள்.

2014 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தை கைப்பற்றிய ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் அமல்படுத்துகின்ற தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மைகள் தற்போது பார்ப்பன பாசிசமாக தலைவிரித்தாட துவங்கியுள்ளது.

சனாதனத்தை பற்றியும், அதன் சித்தாந்த மூலத்தை பற்றியும் புரிந்து வைத்துள்ளவர்கள் பலரும் அது சாதி வர்ணாசிரம கொடுமைகளாக நீடிக்கின்றது என்பதை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்தியாவின் பெரும்பான்மை மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துகின்ற, பிரிவினைவாத கொள்கையை அமல்படுத்துகின்ற ஆர்எஸ்எஸ் – பாஜக   சனாதனக் கொள்கைகளை முன்வைத்து மக்களை பிளவுபடுத்தி வருகின்றன.

இவ்வாறு பிளவுபடுத்தப்படுகின்ற பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மறுகாலனியாக்கத்தின் தீவிர தன்மையையும், அது கார்ப்பரேட் பாசிசமாக உருவெடுத்துள்ளதையும் புரிந்து கொள்ள முடியாமல் தடுக்கப்படுகின்றனர். இதனால்தான் அதற்கு எதிராக ஒன்று திரண்டு போராடாமல் தடுக்கின்ற திருப்பணியை பார்ப்பன பாசிசம் கச்சிதமாக செய்து கொண்டுள்ளது.

படிக்க:

 சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு – பாகம் 2

 சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டு! – தொடர் கட்டுரை

தேர்தல் அரசியல் கட்சிகள் தனது வேட்பாளர்களை தேர்வு செய்வது துவங்கி அதிகார வர்க்கத்தினர்; நீதித்துறையினர்; ஊடகத்துறையினர் ஆகிய அனைவரும் இந்த சனாதன கண்ணோட்டத்தில் தீர்மானிக்கப்படுவதும் அதன் அடிப்படையில் அவர்கள் வீரியமாக செயல்படுவதும் தான் நாடு இன்று எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும்.

இந்தியாவின் பொருளாதாரம் திவாலாகி வருகின்ற சூழலில், இந்தியாவின் நாணய மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவில் சரிந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து அந்நிய கார்ப்பரேட்டுகளின் முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறி கொண்டுள்ள சூழலில், இந்திய உழைக்கும் மக்கள் ஒன்றாக திரள்வதற்கு தடையாக உள்ள சாதி வர்ணாசிரம கொள்கைகள் அடங்கிய சனாதனத்தை அதன் பரிணாம வளர்ச்சியில் இன்றைய கட்டத்தில் பார்ப்பன பாசிசமாக உருவெடுத்துள்ள சனாதனத்தை மோதி வீழ்த்துவதற்கு தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவர்கள், அறிவுத்துறையினர் ஆகிய அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம்.

தமிழகம் பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற முன்னோடி போராட்டக் களம் என்பதை இந்தியாவிற்கும், உலகிற்கும் தெரியப்படுத்துவோம்.

  • தமிழ்ச்செல்வன்

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here