எளிமையான வாழ்க்கை,
கடுமையான உழைப்பு,
சாமானிய மக்களுடன் பிணைந்த வாழ்க்கை நடைமுறை –
இதுவே நமது பாதை.

-தோழர் மாசேதுங். மார்ச் 1957.

2

புரட்சியின்போது நமக்கு இருந்த அதே சக்தியும், புரட்சிகர உணர்வும் மரணத்தையும் துச்சமாக மதிக்கும் நெஞ்சுரமும் இப்போதும், எப்போதும் நம்மோடு இருக்கட்டும். புரட்சியின் நோக்கங்கள் நிறைவேறும் வரை இந்த உணர்வுகளை காப்பாற்றுவோம். “மரணத்தையும் துச்சமாக மதிக்கும் நெஞ்சுரம்” என்றால் என்ன? “நீர் எல்லை” என்ற புதினத்தில் மரணத்துக்கும் அஞ்சாத மாவீரன் மூன்றாம் சகோதரன் ஷி சியு என்றொரு0 பாத்திரம் வருகின்றது. அந்தப் பாத்திரத்தின் மன உறுதியும், நமது மன உறுதியும் ஒன்றே. அந்த மன உறுதியுடன் தான் நாம் புரட்சியை சந்தித்தோம். மனிதன் வாழ்வது ஒரு முறையே. ஒருவர் 60 வயது வரை வாழலாம் ஒருவர் 90 வயது வரை வாழலாம். ஒருவர் எத்தனை வயது வாழ்ந்தார் என்பதல்ல. வாழ்ந்த போது இந்த சமூகத்துக்கு என்ன செய்தார். எதை விட்டுச் சென்றார் என்பதே முக்கியம்.. நீங்கள் செய்ய வேண்டியதை புரட்சிகர உணர்வுடனும், மரணத்துக்கும் அஞ்சாத நெஞ்சுரத்துடனும் செய்க. ஆனால் சில தோழர்களிடம் இந்தப் போராட்ட உணர்வும், சக்தியும் இல்லை. எனவே அவர்களிடம் முன்னேற்றமும் இல்லை. இந்தப் போக்கு உடனடியாக களையப்பட வேண்டியதாகும். இவர்களுக்கு தகுந்த கல்வியும், பயிற்சியும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த கட்சியும் அரசியல், தத்துவார்த்தப் பணிகளை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இன்றைய அமர்வில் கலந்துக் கொண்டுள்ள தோழர்களில் ஒரு கணிசமான பகுதியினர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். நமது இராணுவத்தில் அரசியல், தத்துவார்த்த பணிகளின் நிலைமை எவ்வாறு உள்ளது. அமைதிக் காலத்தில் அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கும், போர்க்காலத்தில் அதே பணிகளை மேற்கொள்வதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா? போர்க்காலத்தில் மக்களுடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டியுள்ளது இராணுவ அதிகாரிகள் தமது வீரர்களுடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டியுள்ளது. இராணுவம் மக்களிடம் நெருக்கமான உறவைப் பேண வேண்டியுள்ளது. அப்போது நாம் சில தவறுகளை செய்தாலும் மக்கள் அதை பெரிதுபடுத்தாமல் மன்னித்து விடுவார்கள். இப்போது போர் முடிந்துவிட்டது. இது அமைதிக்காலம். இது மோதலுக்கான காலம் அல்ல. நாம் பயிற்சி பெற வேண்டிய காலம். மக்களுடன் நெருக்கமான உறவு இல்லையெனில் நமது தவறுகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இராணுவத்தில் பதவி முறையை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளோம். எனினும் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் தொடர்ந்து தமது சக அதிகாரிகளுடனும், கட்சி ஊழியர்கள் படை வீரர்களுடனும், பணியாற்றுவார்கள். உயர் அதிகாரிகளை சக அதிகாரிகளும், கட்சி ஊழியர்களை படைவீரர்களும் விமர்சிக்கும் உரிமையை தொடர்ந்து பெற்றிருப்பார்கள். உதாரணமாக இவர்கள் கட்சி மாநாட்டை நடத்தலாம். அங்கே வெளிப்படையாக விமர்சனங்கள் செய்யலாம். “மூன்று தீமைகளுக்கு” எதிரான இயக்கத்தின் போது சென் யி கூறுவதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். “இதுவரையிலும் நமக்கு கீழேயுள்ளவர்களுக்கு கட்டளைகள் இட்டுக் கொண்டிருந்தோம். இப்போது அவர்கள் நம்மை விமர்சிக்க அனுமதிப்போமே? குறைந்தது ஒரு வாரகாலமாவது அவர்கள் இந்த உரிமையை அனுபவிக்கட்டுமே?” அவர் கூறியது முற்றிலும் சரி. விமர்சனங்களை முன்வைக்கும் முன்னால் சில முன்னேற்பாடுகளை செய்யுங்கள். சிறு அறிக்கையை முன்வையுங்கள். சுய விமர்சனத்தையும் முன்வையுங்கள். அதன்பின் பேசுங்கள். விமர்சனம் செய்யுங்கள். மக்கள் வெளிப்படை யானவர்கள் அவ்வளவு எளிதாக நடந்தவற்றை மறந்து விட மாட்டார்கள்.

படிக்க:

 எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, சாமானிய மக்களுடன் பிணைந்த வாழ்க்கை நடைமுறை- இதுவே நமது பாதை! தோழர் மாசேதுங்

 21 ஆம் நூற்றாண்டிற்கான சோசலிசத்தின் வழிகாட்டி மகத்தான லெனினிசமே!

கம்பெனி, பிளாட்டூன் படைப்பிரிவுகளின் தளபதிகள் தமது வீரர்கள் தங்களை விமர்சிக்க அனுமதிக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறையாவது வெளிப்படையான விமர்சனக் கூட்டங்களை நடத்த வேண்டும். அது பல நாட்கள் நடக்க வேண்டும். கடந்த காலத்தில் இராணுவத்தில் இது போன்ற ஜனநாயகத்தை நாம் அனுபவித்தோம். அது நல்ல பலன்களையும் தந்தது. இராணுவத்தில் நாம் நிறுவியுள்ள பதவி முறை உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கும், சக கீழ்மட்ட வீரர்களுக்கும் இடையேயான உறவையும், இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையேயான உறவையும், இராணுவத்துக்கும் உள்ளூர் நிர்வாகத்திற்கும் இடையேயான உறவையும் எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கும், கீழ்மட்ட ஊழியர்களுக்கும் இடையேயான உறவு தோழமை உணர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. கட்சி ஊழியர்கள் படைவீரர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இராணுவமும் மக்களுடனும் உள்ளூர் கட்சிக்குழுவுடனும் அரசு நிர்வாகத்துடனும் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் அதிகாரம, உயர் பதவி, மூப்பு ஆகியவற்றை நம்பி நீங்கள் செயல்படாதீர்கள். மூத்த தோழர்களை கட்சி மதிக்கின்றது. ஆனால் நீங்கள் ஒரு மூத்த தோழர் என்பதற்காக தவறு செய்தாலோ, முட்டாள்தனமாக ஏதாவது செய்தாலோ மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நீங்கள் கடந்த காலத்தில் அளப்பரிய தியாகங்களை செய்திருக்கலாம். மிக உயர்ந்த பதவியில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு உங்கள் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையெனில், பிரச்சனைக்கு தீர்வு காணவில்லையெனில் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது எனில் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். நீங்கள் மூத்த தோழர் என்பதால் மட்டுமே மக்கள் உங்களை மதிக்கின்றார்கள் என்று எண்ணாதீர்கள். மக்களின் பிரச்சினைகளை நீங்கள் எவ்வாறு அணுகுகின்றீர்கள், தீர்க்கின்றீர்கள் என்பதை பொறுத்த விஷயம் அது. அதாவது பதவி, அதிகாரம், மூப்பு போன்ற அனைத்தையும் மறந்து விட்டு, மக்களோடு மக்களாக, சக ஊழியர்களுடன் ஊழியராக நீங்கள் இரண்டறக் கலந்து விட வேண்டும்.

குறிப்பாக மூத்த தோழர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என வேண்டுகின்றேன். புதிதாக வருகின்ற ஊழியர்களுக்கு அதிகமான பொறுப்புகளோ, சுமைகளோ இருப்பதில்லை என்பதால் மூத்த தோழர்கள் இவர்களை தரக்குறைவாக நடத்தக்கூடாது. புதிய ஊழியர்களிடம் பழைய ஊழியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது இதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here