பத்திரிக்கைச் செய்தி


“கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி!
வேத நாகரிகத்தை துரத்தியடி!
இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர் முழக்கம்…!”

என்ற வீரியமிக்க முழக்கங்களின் கீழ் எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 22 அன்று தஞ்சை திலகர் திடலில் (திருவள்ளுவர் திடலில்) மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் காலை 10 மணி துவங்கி இரவு 10 மணி வரை ஆய்வரங்கம், கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் என எண்ணற்ற நிகழ்வுகளை அரங்கேற்ற முனைந்துள்ளோம்.

இந்த போர் முழக்கங்களுக்கான போதுமான விளக்கங்களை அறிமுக மற்றும் நீண்ட துண்டு பிரசுரங்கள், இ போஸ்டர்கள், முகநூல் பதிவுகள், வீடியோ உரைகள், இணையதளங்களில் விளம்பர உரைகள், தமிழ்நாடு எங்கும் சுவரெழுத்துக்கள், சுவரொட்டிகள் என பல்வேறு வடிவங்களில் வீச்சான பிரச்சாரங்களில் முடுக்கி விட்டுள்ளோம்.

குறிப்பாக, கீழடியில் தொல்லியல் அகழாய்வறிஞர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் 2014-2016 இரண்டாண்டுகளில் ஆய்வு செய்து சுமார் 6000 தரவுகளை கண்டறிந்து 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஒன்றிய தொல்லியல் துறை யினரிடம் 2023 ஜனவரி மாதத்திலேயே ஒப்படைத்து விட்டார். இந்த ஆய்வு என்பது இந்துத்துவ மனப்பான்மை கொண்ட ஒன்றிய அரசுக்கு – ஒன்றிய தொல்லியல் துறைக்கு மாறுபாடானதாக இருந்ததால் அவர்கள் ஒரு குழு அமைத்து 114 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை தயாரித்து அதனை அமர்நாத் அவர்களிடம் கொடுத்து அறிக்கையை திருத்தி எழுதித் தருமாறு கோரி உள்ளதாக அறிகின்றோம். 114 பக்க ஒன்றிய தொல்லியல் துறையின் அறிக்கை உண்மைக்கு புறம்பானதாக இருந்ததால் திருத்தி எழுதுவதற்கு அமர்நாத் அவர்கள் இசைவு தெரிவிக்க மறுத்துவிட்டார். அத்துடன் கீழடி அகழாய்வு பணியை முடக்கியது ஒன்றிய அரசு. அதன் பிறகு முந்தைய திமுக அரசு மாநில அரசின் நிதியிலிருந்து பல கோடி முதலீடு செய்து அகழாய்வு பணியை 11 கட்டங்களாக மேற்கொண்டது; மென்மேலும் புதிய புதிய தரவுகள் கிடைக்கப்பெற்றன.

அத்தரவுகள் என்பது அமர்நாத் அவர்கள் கண்டுபிடித்த கிமு 8-ம் நூற்றாண்டுக்கும் மிகவும் முந்தையதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒன்றிய அரசைப் பொருத்தமட்டில் இந்திய வரலாறு என்பது வடக்கில் இருந்து தான் தோன்றுகிறது; குறிப்பாக சரஸ்வதி நாகரிகம் என அழைக்கப்படும் வேத நாகரிகம் தான் தொன்மையானது என்ற பொய்யான வரலாற்றை இந்திய மக்களிடையே நிலைநிறுத்த தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆக, அமர்நாத் அவர்களிடம் அவரது அறிக்கையை திருத்தி எழுதித்தருமாறு கோரி அவர் மறுத்த ஒன்பது மாதங்கள் வாளாவிருந்து விட்டு – தற்போது மக்கள் கலை இலக்கிய கழகம் மேற்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் போர்க் குணமிக்க இசை விழாவினை முன்னெடுப்பதால் அதனை அறிந்து கொண்ட ஒன்றிய அரசு தொல்லியல் அகழாய்வு அறிஞர்களுக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் ஒன்றை கடந்த ஜூலை 27 அன்று போட்டுள்ளது.

அதாவது ‘தொல்லியல் துறையைச் சேர்ந்த எவரும் தாம் அகழாய்வில் கண்டுபிடிக்கும் எந்த ஒரு செய்தியையும், அறிக்கைகளையும், உண்மைகளையும் நேர்காணல் மூலமாகவோ ஆய்வரங்கங்கள், கருத்தரங்கங்கள் மூலமாகவோ, வெளிநாட்டினருக்கோ பரப்பிடக்கூடாது; இது CCS Rules-ன்படி கடும் நடவடிக்கைகளுக்கு உரிய செயல்பாடாக எடுத்துக் கொள்ளப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என மிரட்டி உள்ளது. இதனை தி பிரிண்ட் (THE PRINT) ஆங்கில இதழ் ஜூலை இறுதியில் வெளியிட்டுள்ளதில் காண முடிந்தது. ஒன்றிய தொல்லியல் துறையின் இச்செய்கை என்பது தொல்லியல் ஆய்வு வரலாற்றில் கடந்த 150 ஆண்டு காலத்தில் இல்லாத ஒன்றாகும்.

ஆனால் UPSC விதி 72-ன்படி, தொல்லியல் அகழாய்வறிஞர்களுக்கு தாம் கண்டுபிடித்த உண்மைகளை ஆய்வரங்குகளிலோ நேர்காணல்களிலோ வழங்குவதற்கு முழு உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. ஆக கீழடி உண்மை என்பது காவி கூட்டத்தை கதி கலங்க வைத்துள்ளது. அதனாலயே சட்டத்திற்கு புறம்பான முறையில் இப்படிப்பட்ட வாய்ப்பூட்டு மிரட்டல் உத்தரவுகளை – பாசிச அடக்குமுறை உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது.

படிக்க:

 ஆக 22 தஞ்சையில் தமிழ் மக்கள் இசைவிழா!

 வேத நாகரிகத்தைத் துரத்தும் கீழடி!

தற்போது என்ன நடக்கிறது என்றால், இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் (ASI) தயாரித்த 114 பக்கங்கள் கொண்ட “Critical Evaluation and Recommendations” அறிக்கையை ஆய்வு செய்த 5 பேர் கொண்ட உள் குழு உறுப்பினர்கள் பிரியங்க குப்தா (Priyank Gupta), கரிமா கௌஷிக் (Garima Kaushik), பி.அரவாழி(P. Aravazhi), ஹேம்சாகர் ஏ. நாயக் (hemsagar A.nayak ), நந்தினி பட்டாச்சாரியார் சாஹு(Nandini Bhattacharya Sahu) ஆகிய இந்த ஐவர் குழுவுடன் சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறையில் வேலை பார்க்கும் ராஜேஷ் என்கிற ஆர். எஸ்.எஸ் நபரையும் இந்தக் குழுவில் இணைத்திருக்கிறார்கள். இந்த ராஜேஷ் சென்னையில் Temple Survey Project என்ற துறையில் தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

ஏற்கனவே கீழடி இரண்டு கட்டங்களாக அகழாய்வு செய்த பின்னர் ஸ்ரீராம் என்ற R.S.S-ஐ சேர்ந்தவரை நியமனம் செய்து, அவர் “இனி கீழடியில் தோண்டுவதற்கு ஒன்றுமே இல்லை “ என்று அறிக்கை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

ஒன்றிய அரசு நீடித்து செய்ய மறுத்த அகழாய்வு பணியை முந்தைய திமுக அரசு முன்னெடுத்து அந்தப் பணியை செய்து வருகிறது. அதற்குப் பிறகு 11 கட்டங்கள் ஆய்வில் மிக அரிய பொருட்கள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் காலம் கி மு 10-ம் நூற்றாண்டு வரை செல்கிறது. தற்பொழுது ராஜேஷ் போன்ற R.S.S. பின்னணி கொண்ட கீழடி மேலாய்வு குழு வரும் ஆகஸ்ட் 17 அன்று கீழடியை ‘மேலாய்வு’ செய்து அகழாய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அரும்பாடு பட்டு கண்டுபிடித்த கீழடி நாகரிக அரிய உண்மைகளை மண்ணோடு மண்ணாகப் புதைக்க எத்தனிக்கிறது.

இந்நிலையில் தற்போதைய தமிழ்நாடு அரசு எள்ளின் முனையளவும் விட்டுக் கொடுக்காமல், ஒன்றிய அரசின் நயவஞ்சகத்தனத்திற்கு இடம் கொடுத்து விடாமல், அகழாய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா கண்டறிந்து 2023 ஜனவரியில் ஒன்றிய தொல்லியல் துறை யினரிடம் சமர்ப்பித்த உண்மை அறிக்கையை வெளியிடச் செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராட வேண்டும்.

இந்த கோரிக்கையை முன் வைத்தே, தமிழ்நாட்டு மக்களை போர் குணமிக்க மெரினா ஜல்லிக்கட்டு போராட்ட மரபை உயர்த்திப் பிடிக்கும் வகையில் களம் காண வேண்டும் என்று இதன் மூலம் அறைகூவல் விடுக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தமிழ் மக்கள் இசை விழா!

எனவே, ஆகஸ்டு 22 தஞ்சை தரணியில் கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடித்து… வேத நாகரிகத்தைத் துரத்தியடித்து… இந்திய வரலாற்றை தென் இந்தியாவில் இருந்து திருத்தி எழுதுவோம்…வாருங்கள் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களே, மாணவர்களே, இளைஞர்களே…என அறைகூவி அழைக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகம்!

அன்புடன்,

கோவன்,
மாநில செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

1 COMMENT

  1. கீழடி வரலாறை உலகறிய செய்ய ஒன்றிணைந்து போராடுவோம் குரல் கொடுப்போம் தமிழ் மக்கள் இசை விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here