தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி ஈரோடு, நாமக்கல், சேலம் பகுதிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்களை அகற்றியும் மறைத்தும் பயணிக்கும் இளைஞர்கள், விதிமீறிப் பயணிப்பது, அதிக ஒலியில் ஹாரன் எழுப்புவது, மக்களைப் பார்த்து கூச்சலிடுவது, வாகனங்கள் மீது ஏறி நிற்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இளைஞர்களின் இத்தகைய செயல் அருவருப்பை ஏற்படுத்துகிறது.

சாதிவெறி அமைப்புகளால் கொம்புசீவி விடப்படும் இளைஞர்கள் விடுதலைப் போராட்ட வீரரின் நினைவுநாளை அனுசரிக்கவில்லை. மாறாக அவரை தன்னுடைய சாதியின் தலைவனாக சுருக்கி கும்பலாட்டம் போடுகிறார்கள். இது தீரன் சின்னமலையைப் பற்றி அறியாத பொதுமக்களிடம் அவர் ஏதோ சாதித் தலைவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாதா? 

விடுதலைப் போராட்ட வீரரின் நினைவு நாளை எவ்வாறு அனுசரித்திருக்க வேண்டும்? அவர் கிழக்கிந்திய கும்பலை எதிர்த்து நின்று போராடிய வீரத்தை பேசியிருக்க வேண்டும். சாவுக்கு அஞ்சாமல் போரிட்ட வீரமரணமடைந்த துணிவை நாமும் வரித்துக் கொள்ள வேண்டும் என இளைஞர்களிடம் உணர்வை ஊட்டியிருக்க வேண்டும். ஆனால் இவையெதுவும் செய்யப்படவில்லை. 

சாதிய அமைப்புகளின் இத்தகைய மோசமான செயல்பாடுகளை ‘சமூகநீதி’ பேசும் அரசியல் கட்சிகள் கண்டிப்பதற்கு மாறாக அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கின்றன. குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கை பெறுவதற்காக இவ்வாறு செய்கின்றன. இங்கேதான் தேசத்தின் மீதான பற்றும் அந்நிய சுரண்டலும் அதற்கு எதிராக போராடிய வீரமும் மடைமாற்றி விடப்படுகிறது.

இதைவிட கொடுமை அவர் கவுண்டர் சமூகத்தில் பிறந்தார் என்ற காரணத்திற்காகவே அவர் பெயரில் செயல்படும் சாதிவெறி அமைப்பு ‘கலாச்சார காவலர்கள்’ என்ற பெயரில் ஆணவப் படுகொலையை அரங்கேற்றும் அவலத்தையும் நடத்துகின்றன. அப்படி ஒரு செயலை செய்து ‘தியாகி’ ஆனவர் தான் கோகுல்ராஜ் கொலைக் குற்றவாளியும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவருமான யுவராஜ். இச்சமூகத்தை சேர்ந்த சிலர் தீரன் சின்னமலையை பின்தொடரவில்லை. இந்த கொலைக் குற்றவாளியையே பின்தொடர்கிறார்கள்.

யார் இந்த தீரன் சின்னமலை?

தீரன் சின்னமலை தமிழ்நாட்டின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த மாவீரர் ஆவார். இவர் 1756 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்திற்கு அருகிலுள்ள மேலப்பாளையம் (இன்றைய காங்கேயம்–சென்னிமலைப் பகுதி) பகுதியில் பிறந்தார். தனது வீரத்தாலும், நாட்டுப்பற்றாலும், மக்களிடையே “தீரன் சின்னமலை” என்ற பெயரில் புகழ் பெற்றார். அவர் கிழக்கிந்திய கம்பெனியால் கொல்லப்படும் வரையிலும் சாதிய பெயரால் அழைக்கப்படவில்லை. 

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தைக் கருவறுக்க ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, திருநெல்வேலி எனப் பரந்து விரிந்த கூட்டிணைவை உருவாக்க மராட்டியப் போராளி ‘துந்தாஜிவாக்’கைச் சந்திக்கச் சென்ற மூன்று தூதுக்குழுவில் சின்னமலையின் பெருந்துறை பாளையமும் பங்கேற்றது. கொங்குப் பகுதி மைசூர் ஆட்சியின் கீழ் வரிவசூல் பகுதியாக இருந்தாலும் பொது எதிரியான கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டும் என்ற திப்புவின் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலேய படைகளை திப்புவுடன் சேர்ந்து எதிர்த்துப் போராட 10,000 படை வீரர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார் சின்னமலை. அங்கே ஜாக்கோபின் என்ற பிரெஞ்சு புரட்சி வீரர்களால் சின்னமலை படைக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சீரங்கப்பட்டினப் போரில் சிறப்பாக மாலவல்லி எனுமிடத்தில் ஆங்கிலேய படைக்குப் பெருத்த சேதத்தையும் விளைவிக்கிறது கொங்குப்படை. (விடுதலைப் போரின் வீர மரபு நூலில் இருந்து)

தீரன் சின்னமலை தலைமையில் நடைபெற்ற போர்களில் காவிரி கரைப் பகுதிகளிலும், ஓடாநிலை மற்றும் அரச்சலூர் சுற்றுவட்டாரங்களிலும் நடைபெற்ற மோதல்கள் குறிப்பிடத்தக்கவை. பலமுறை ஆங்கிலேயப் படைகளை அவர் பின்வாங்கச் செய்தார். அவருடைய துணிச்சலும், போர்த் திறமையும் காரணமாக ஆங்கிலேய அதிகாரிகள் அவரை மிகவும் அச்சத்துடன் எதிர்கொண்டனர்.

இறுதியில், துரோகம் காரணமாக தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். விசாரணை நடத்தப்பட்ட பின்னர், 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று  தூக்கிலிடப்பட்டார். மரண தண்டனையையும் அவர் அஞ்சாமல் எதிர்கொண்டார். அவரது வீரமரணம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.

படிக்க

 சாதிவெறி கொலைகாரனை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லையா?  

 விடுதலைப் போரின் வீரமரபு 13

தீரன் சின்னமலையின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு தேசப்பற்று, தைரியம், தியாகம் மற்றும் தன்னம்பிக்கை ஆகிய உயர்ந்த பண்புகளை உணர்த்துகிறது. அவர் வாழ்ந்த வாழ்க்கையும் செய்த தியாகமும் என்றும் தமிழர்களின் நினைவில் நிலைத்து நிற்கும். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தீரன் சின்னமலை என்ற பெயர் என்றென்றும் பொற்குறிப்பாக விளங்கும்.

தன்னை சாதிய அடையாளத்திற்குள் சுருக்கிக் கொள்ளாமல் அனைத்து சமூக மக்களையும் இணைத்துக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்புரிந்தவர்; அவர் விட்டுச் சென்ற பணியை தொடரவிடாமல், காலனியாதிக்கத்தை எதிர்த்து சமர் புரிந்த தீரன் சின்னமலையை சாதிய அடையாளத்திற்குள் சுருக்கும் நிலைக்கு தள்ளியுள்ளார்கள் பார்ப்பன அடிமைகள். அதாவது சாதிவெறி பிடித்தவர்கள். 

“ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் சிந்தனைகளாக மாறுகின்றன” என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.

இந்தக் கருத்து வரலாற்று நினைவுகளுக்கும் பொருந்துகிறது. எந்த சமூகத்தில் வரலாற்று நாயகர்கள் எவ்வாறு நினைவுகூரப்படுகிறார்கள் என்பது, அந்தச் சமூகத்தின் அரசியல் தேவைகளாலும் அதிகார உறவுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில், ஆங்கிலேயக் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய தீரன் சின்னமலையை இன்று ஒரு சாதியின் எல்லைக்குள் அடைத்துப் பார்ப்பதில் பார்ப்பனியத்தின் நலன் அடங்கியுள்ளது.

தீரன் சின்னமலை வாழ்ந்த காலம் இந்தியாவில் காலனிய விரிவாக்கம் தீவிரமடைந்த காலமாகும். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகத்தை அரசியல் ஆதிக்கமாக மாற்றிக்கொண்டிருந்தது. நிலம், வரி, உற்பத்தி, வணிகம் ஆகிய அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றது. இதற்கு எதிராக தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஆயுத எதிர்ப்புகள் உருவாயின. அந்த எதிர்ப்பின் முக்கியமான முகங்களில் ஒருவராகவே தீரன் சின்னமலை வரலாற்றில் இடம்பெறுகிறார்.

காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் வெறும் வீரக் கதைகள் அல்ல. அவை பொருளாதாரச் சுரண்டலுக்கும் அரசியல் ஆதிக்கத்துக்கும் எதிராக மக்களிடையே உருவான எதிர்ப்பின் வெளிப்பாடுகள். எனவே, தீரன் சின்னமலையைப் புரிந்துகொள்வது என்பது அவரது பிறப்புச் சாதியை அறிந்துகொள்வது அல்ல; அவர் எதிர்த்த காலனிய அரசியல் அமைப்பைப் புரிந்துகொள்வதாகும்.

ஆனால் தமிழ்நாட்டின் சமகால அரசியலில் பல வரலாற்று நாயகர்கள் தேர்தல் அரசியலின் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் சிந்தனைகள், அரசியல் இலக்குகள், போராட்ட வரலாறுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சாதி அடையாளங்கள் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இந்தப் போக்கு தீரன் சின்னமலைக்கும் நிகழ்ந்துள்ளது. அவரை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமைச் சின்னமாக மட்டுமே சித்தரிப்பது, அவரது காலனிய எதிர்ப்புப் போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை மங்கச் செய்கிறது.

இதற்கு அரசியல் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். தேர்தல் அரசியலில் வாக்கு வங்கிகளை உறுதிப்படுத்தும் நோக்கில், வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சாதி அடிப்படையில் மறுவடிவமைக்கப்படுகின்றன. நினைவு நாள், சிலை, மணிமண்டபம், விழா போன்றவை வரலாற்றைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இல்லாமல், சமூகங்களைப் பிரித்து அணிதிரட்டும் கருவிகளாகப் பயன்படுத்தப்படும் சூழல் உருவாகிறது. இது காலனிய ஆட்சிக்கு எதிராக உருவான மக்களின் ஒற்றுமை என்ற வரலாற்று உண்மையை மறைக்கிறது.

தீரன் சின்னமலை ஒரு சாதியின் தலைவர் அல்ல; காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்டிய போராட்டத் தலைவர். அவரது வரலாற்றைப் பாதுகாப்பது என்பது, அவரை சாதி அரசியலின் சின்னமாக மாற்றுவது அல்ல; ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமூக நீதி, மக்களின் ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக மீட்டெடுப்பதாகும்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here