
பிரிட்டிஷ்காரன் இந்தியாவை ஆண்ட பொழுது அவன் உருவாக்கிய நியமனப் பதவி தான் ஆளுநர் பதவியாகும். அன்றைய காலக் கட்டத்தில் அவனது சுரண்டலுக்கு ஏற்ற தன்மையில் இப்படிப்பட்ட நியமனப் பதவிகளை உருவாக்கி வைத்திருந்தான். ஆனால் 1947-ல் நாடு சுதந்திரம் அடைந்து விட்டதாக கூறப்படும் இக்கால சூழலிலும் 150 ஏக்கர் நிலப்பரப்பில் மாபெரும் ஆளுநர் மாளிகை சொகுசு குளிர்சாதன அறைகள், கூட்ட அரங்கம், ஐ ஏ எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பாதுகாப்புக்கு என காவல் அதிகாரிகள், கீழ்நிலைப் பணியாளர்கள் என நூற்றுக்கணக்கில் ஒரு பெரும் படையே மாளிகையில் அடைந்து கிடக்கின்றது. மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு சொகுசு வாழ்க்கையை ஒரு நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பதவியில் இருந்து கொண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார் இந்த சங்கி ஆரியன் RN.ரவி.
இதுவும் போதாது என்று பிரிட்டிஷ்காரன் ஆளுநர்களாக இருந்த தருணத்தில், இந்தியாவின் வெயில் கொடுமை தாங்க மாட்டாமல், ஊட்டியில் சகல வசதிகளுடன் அங்கும் ஒரு ஆளுநர் மாளிகை எப்பொழுதாவது செல்கையில் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு வசதிகளையும் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அனுபவித்துக் கொண்டு இவர் என்ன வேலையை செய்கிறார் என்று பார்க்கின்ற பொழுது தான் தமிழ்நாட்டு மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகிறார்.
பொதுவாக ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவர்களை அடக்கியாள அல்லது இணையான முதல்வராக செயல்பட வைக்க தேர்ந்தெடுத்து சில முழு சங்கி உணர்வு பெற்ற அதிகார வர்க்கத் தோரணையில் உள்ள நபர்களை ஆளுநர்களாக நியமனம் செய்கிறார்கள்.
இதே ஆளுநர் RN. ரவி வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் ஆளுநராக பணியாற்றிய பொழுது இதே போன்று அம்மாநில மக்களுக்கு எதிரான குதர்க்கமான சங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அடித்து துரத்தப்பட்டு, அத்தோடு வீட்டுக்கு அனுப்பப்படாமல், அவரது IPS தகுதி, RSS பிடிப்பு, முழுச்சங்கி என்பதை உணர்ந்த மோகன் பகவத் மோடிக் கூட்டம் தமிழ்நாட்டு மக்களின் தலையில் கட்டி இவரை ஆளுநராக நியமித்தார்கள்.
ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் எவை?
ஆர்.என்.ரவி, முதலில் கிண்டி ஆளுநர் மாளிகையை – தமிழ்நாட்டின் ஆர் எஸ் எஸ் தலைமையகமாகவும், பாஜகவின் தலைமையக மாகவும் மாற்றிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பாஜக இந்துத்துவ காவி கூட்டத்திற்கு பயிற்சி பட்டறை நடத்தும் மாளிகையாக மாற்றிக் கொண்டார். அங்கே அவர்கள் கும்மாளம் அடிக்கும் முறையே வித்தியாசமானது. சில முக்கிய நிகழ்வுகளை யொட்டி அழைப்பிதழ் தயாரிக்கின்ற பொழுது தமிழ்நாடு அரசின் லட்சணையை புறந்தள்ளிவிட்டு ஒன்றிய அரசின் லட்ச்சனையை மட்டும் அச்சாக்குவது; உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு பூணூல் அணிவித்து, காவி உடை தரித்துவிட்டு ஒரு பார்ப்பனராக காண்பித்து வருவதை நடைமுறை யாகக் கொண்டிருந்தார் இதே ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்கின்ற பொழுது, புது நிகழ்வுகளுக்கு செல்கின்ற பொழுது அங்கே ஆர்எஸ்எஸ் சார்ந்த பிரச்சாரத்தை செய்ய இவர் தவறுவதில்லை. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனங்கள் போன்றவற்றுக்கு ஆர்எஸ்எஸ் உணர்வு கொண்ட நபர்களையே நியமிப்பது என்ற அயோக்கியத்தனமான காரியங்களில் ஈடுபட்டார். தமிழ்நாடு அரசு பற்றியும் தவறான கருத்துக்களை போகின்ற இடங்களில் எல்லாம் பரப்புரை செய்தார். சட்டமன்ற கூட்டத் தொடரில் அரசு தயாரித்து கொடுக்கின்ற உரையை படிக்காமல் சிலவற்றை நீக்குவதும் சிலவற்றை சேர்ப்பதுமான அருவருக்கத் தகுந்த செயல்களில் ஈடுபட்டு வந்தார். தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன்; தமிழகம் என்றே கூறுவேன்- என்று அடம் பிடித்தார்.
படிக்க:
♦ தெண்டச்சோறு ஆளுநர் ரவியும் ஆர்.எஸ்.எஸ் ன் தேசப்பக்தியும்!
♦ ஆளுநர் ரவி: அரசியலமைப்புச் சட்டம் பெற்றெடுத்த போக்கிரி குழந்தை!
தந்தை பெரியாரின் மாபெரும் உழைப்பிற்கு பின்னால் தமிழ்நாட்டில் ஆண்களே தன் பெயருக்குப் பின்னால் சாதி பட்டத்தை போட்டுக் கொள்வதை நிறுத்திக் கொண்டார்கள்.ஆனால் திருச்சியில் ராதா தேவர் என்ற ஒரு சங்கிப் பெண் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு ஆள் பிடிக்கும் நோக்கோடு ஆர்.என்.ரவியோடு கலந்து பேசி திருச்சியில் பல்வேறு கல்லூரிகளின் மாணவர்களை ஒரு பெரும் அரங்கத்தில் கூட்டி வைத்து ஆர்எஸ்எஸ்க்கு ஆள் பிடிக்கும் காவிப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் கூட தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் புர்….ரட்சியாளரும், தற்போது சங்கியாகி சாதி அமைப்புகளில் ஐக்கியமாகிக் கொண்ட ஒரு நபரும் கூட ஆளுநர் அருகில் அமர்ந்து ‘பெரும் பாக்கியம்’ பெற்று உரை நிகழ்த்தி தனது ‘பெருமை’யை உயர்த்திக்கொண்டார்; புளகாங்கிதமும் அடைந்தார்; பிரச்சாரமும் செய்து கொண்டார்.
இவ்வாறாக ஆளுநருக்கென ஒதிக்கீடு செய்யப்பட்ட பணியைத் தவிர அனைத்து அற்பத்தனமான காவிக் கொள்கையை பரப்புகின்ற ‘பெரும் பணியை’ ஆற்றி மோடி – அமித்ஷா – மோகன் பகவத் முதலானோரிடம் ‘நற்பெயர்’ ஈட்டுவதிலேயே குறியாக இருந்தார்; தமிழ்நாட்டு மக்களின் முழு நலனையும் புறக்கணித்து வந்தார்.
ஆர்.என்.ரவி காவி ஆளுநர் என்ப தோடு – தான் ஒரு ஐபிஎஸ் என்ற மமதை கொடி கட்டி பறந்தது!
ஆளுநரை ஒன்றிய அரசின் பரிந்துரையுடன் இந்திய குடியரசுத் தலைவரே நியமனம் செய்கிறார். ஆனால் அவர் ஒன்றிய அரசின் பிரதிநிதியாகவோ, கைப்பாவையாகவோ ஒரு மாநில ஆளுநராகச் செயல்பட சட்டத்தில் எங்குமே இடமில்லை. அவர் எந்த மாநிலத்தில் ஆளுநராக பொறுப்பேற்று இருக்கிறாரோ அந்த மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு கையெழுத்து போடும் உரிமை மட்டுமே அவருக்குரியதாகும். அதற்கு மேல் தமக்கு வானளாவிய அதிகாரம் குவிந்து கிடப்பதாக கருதுவது மடமையிலும் மடமை. அதிலும் குறிப்பாக ஆர்.என்.ரவி ஆளுநர் என்பது மட்டுமல்ல; தான் ஒரு ஓய்வு பெற்ற IPS அதிகாரி என்ற மமதை, கொழுப்பு மிக அதிகமாகவே பெற்றவர்.
அதனால் தான் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் அனைத்தையும் தன் பின்னால் ஒன்றிய சங்கி அரசு இருக்கிறது என்ற மிதப்பில், அனைத்தையும் நாற்காலிக்கடியில் போட்டு அமர்ந்து கொண்டு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வருடக் கணக்கில் தேக்கமுறச் செய்தார். மேலும் ‘நான் கையெழுத்து போடவில்லை என்றால், அம்மசோதா செத்துப் போய்விட்டதாக அர்த்தம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தெனாவட்டாக ஒரு முறை கூறினார். தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்தார்; மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார்; இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை ஆதரித்தார்; திராவிட – தமிழ் கலாச்சாரத்தை கேலி பேசினார்;
ஆரியம் – பிராமணியம் சார்ந்த கலாச்சாரமே உயர்ந்த வடிவம் பெற்றது என வெட்கமின்றி பிரச்சாரம் செய்தார்… இவ்வாறாக இவரது தமிழ் தேசிய இன மக்கள் விரோத போக்குகள் கணக்கில் அடங்காதது.
ஆணவக் கொழுப்பிற்கு உச்சந்தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது உச்சநீதிமன்றம்!
பொதுவாக கூர்ந்த அரசியல் ஞானத்தில் பார்ப்போமேயானால் இந்த கார்ப்பரேட் பெரும் முதலாளித்துவ சமூக கட்டமைப்பில் வாழும் மக்களுக்கு மிகச் சரியான அறிவியல் கல்வியை புகட்டுகின்றோமா? முற்றிலும் பிரிட்டிஷ்காரன் மெக்காலே கல்வி முறைக்கு மாற்றாக அறிவியல் சார்ந்த கல்வி முறையை கொண்டு வந்து விட்டோமா? என்பதெல்லாம் பரிசீலிக்கப்பட வேண்டிய மிக முக்கிய அம்சங்களாகும். ஆனால் அப்படிப்பட்ட கல்வி முறையை – அனைவருக்கும் சமமான கல்விமுறையை ஒரு புரட்சிகர சமூக மாற்றத்தின் மூலமே கொண்டுவர முடியும். எனினும் இச்சமூக கட்டமையில் இருக்கக்கூடிய சட்ட முறைகளின் படி எந்த அளவிற்கு காரியம் ஆற்ற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் நாம் பயணப்பட வேண்டியதும் அவசியம் ஆகிறது.
இத்தருணத்தில் நாம் இன்னொன்றையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் என்றால் நாடு முழுமையும் கடுமையான எதிர்ப்பு போராட்டம், நாடாளுமன்றத்தில் இம் மசோதாவிற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு; அமளி -வாக்கெடுப்பிலும் மிகக் குறைந்த விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மசோதாவிற்கு ஆதரவு. இப்படிப்பட்ட நிலையிலும் கூட வெற்றிகரமாக மசோதாவை நிறைவேற்றி விட்டோம் என்ற இறுமாப்பில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் இந்திய நாட்டின் ஜனாதிபதி த்ரௌபதி முர்மு கையொப்பமிட்டு விட்டார். ஆனால் தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களும் தமிழ்நாட்டில் எங்கும் எதிர்ப்பு இல்லை; போராட்டம் இல்லை; மாறாக ஆதரவே பெருக்கெடுத்திருந்தன. ஆர்.என்.ரவிக்கு எதிராக கண்டன குரல்கள், போராட்டங்கள் தான் பெருக்கெடுத்தன. அவ்வாறு இருந்தும் இந்த சங்கி ஆர்.என்.ரவி கையொப்பமிடாமல் தேக்கி வைத்திருந்தது தான் வினோதமானது.
படிக்க:
♦ ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!
♦ அய்யா வைகுண்டருக்கு ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் இரவி! தமிழ் ஆன்மீக சமூகத்தின் கண்டனம்!
எனவே இவ்விடயத்தில் பாராளுமன்ற சட்ட திருத்த மசோதாவையும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களையும் சமப்படுத்தி விடமுடியாது என்பதனையும் கணக்கிற் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக, ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தமிழ்நாடு அரசின் மசோதாக்கள் அனைத்திற்கும் ஒப்புதல் தரத்தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்த நிலையில் 08-04-2025-ல் உச்ச நீதிமன்றம் ஆர்.என்.ரவியின் உச்சந்தலையில் சம்மட்டியால் அடித்து தீர்ப்பு ஒன்றினை வழங்கி உள்ளது.
ஆம், “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது; குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது; ஆளுநருக்கென தனித்த அதிகாரம் – வீடோ பவர் எதுவும் இல்லாத பொழுது ஆட்டம் ஆடியது; சட்ட முறைகளை பின்பற்ற தவறியது; ஒரு மாநில அரசு அனுப்பும் மசோதாவை நிறுத்தி வைக்க உரிமையே இல்லாத பொழுது தொடர்ந்து நிறுத்தி வைத்தது; இதன் மூலம் ஆளுநர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை ஊர்ஜிதம் செய்தது; “… என்பன போன்ற சம்மட்டி அடிகளை ஆளுநர்மீது இறக்கியதுடன், இனி எந்த ஒரு மசோதா மீதும் ஒரே மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்; ஆட்சேபனை தென்பட்டால் மூன்று மாத கெடுவுக்குள் முடிவுக்குக் கொண்டு வரல் வேண்டும்; மாநில அரசு சொல்வதை பின்பற்ற வேண்டும்; தன்னிச்சையாக செயல்படவே கூடாது; மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம்; அரசின் தீர்மானங்களை, மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய பின் அதற்கு தடையாக இருந்து முட்டுக்கட்டை போடக்கூடாது; … என்று ஆர்.என்.ரவிக்கு அடி மேல் அடி கொடுத்த உச்ச நீதிமன்றம் கடைசியில் இப்படி முடிவினை அறிவித்தது:
“வேறு வழியில்லை; தமிழ்நாடு அரசின் தேங்கி கிடக்கும் பத்து மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் சட்ட அமைப்பு விதி 142-ன்படி ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது”
– என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பரிதிவாலா, மகாதேவன் அமர்வு மிக முக்கியமான பாசிச போக்கிற்கு எதிரான தீர்ப்பினை அத்தி பூத்தாற் போல வழங்கி உள்ளது. எனினும் நீதிபதிகளின் இத்தீர்ப்புரையை வரவேற்போம்! வாழ்த்துவோம்!
ஒப்புதல் பெறப்பட்ட மசோதாக்களும் அரசின் பாரியக் கடமைகளும்!
மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா;கால்நடை மருத்துவத்துறை பல்கலைக்கழக திருத்த மசோதா;
தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் திருத்த மசோதா; தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா;
தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழக திருத்த மசோதா; தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா;
தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்ட மசோதா;
தமிழ்நாடு பல்கலைக்கழக இரண்டாம் திருத்த மசோதா;
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா;
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா….
ஆகிய மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அது உடனே நடைமுறைக்கு வந்து விட்டது.
இதன் மூலம் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக முதலமைச்சரே வேந்தர் ஆகிறார். துணைவேந்தர்கள்/பேராசிரியர்கள் நியமனங்கள் அனைத்தும் இனி வேந்தராக இருக்கக்கூடிய முதல்வரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
முதலில் வேந்தர் பொறுப்பிற்கு வந்துவிட்ட முதலமைச்சரின் முதல் நடவடிக்கையாக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களாக/பேராசிரியர்களாக ஆர்.என். ரவியால் சட்ட நியாயங்களுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்ட சங்கி/காவி/RSS உணர்வு பெற்ற நபர்களை அப்புறப்படுத்த வேண்டும். ஆளுநருக்கு ஊட்டியில் வழங்கப்பட்டுள்ள ஆளுநர் மாளிகையை அரசினர் விருந்தினர் மாளிகையாக மாற்றத்தக்க சட்ட திருத்தம் செய்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்! ஏனெனில் ஆளுநருக்கு கிண்டியில் மட்டுமே 150 ஏக்கர் நிலப்பரப்பில் பங்களாவும் இன்ன பிற வசதிகளும் கொண்ட சொகுசு வசதிகளை அனுபவிக்கின்ற பொழுது, பிரிட்டிஷ்காரனுக்கு பிந்தைய இக்காலத்தில் ஊட்டியில் அவருக்கென ஒரு மாளிகை இருப்பது அவமானகரமானது.
துணைவேந்தர்கள்/பேராசிரியர்கள் நியமிப்பதில் வெளிப்படை தன்மை இருத்தல் வேண்டும். உரிய தகுதி, உரிய முதுநிலை, உரிய இட ஒதுக்கீடு அனைத்தையும் பின்பற்றி சட்டத்தின் ஆட்சிதனை கல்விக்கூடங்களில் நடைமுறைப்படுத்தல் வேண்டும். எவ்விதப் பரிந்துரைக்கும் கடுகளவும் இடம் அளிக்கக் கூடாது. அப்போது மட்டுமே இத்தகைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழுமையான நியாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தகுதியைப் பெற்றவர்களாக ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொள்ள முடியும்.
எந்த வகையிலும் இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அளவிற்கு பார்ப்பன பாதம் தாங்கி ஆர் எஸ் எஸ் ஆளுநர் ஆர்.என். ரவியின் அடாவடித்தனத்திற்கெதிராக உச்சநீதி மன்றம் வரை சென்று வழக்குத் தொடர்ந்து வெற்றியினை ஈட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது இயக்கத்திற்கும், வழக்காடிய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கலாம்!
தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வரும் ஆர்.ஆன்.ரவியிடம் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கவும், ஆளுநர் பதவி என்ற தேவையில்லாத ஆணியைப் பிடுங்கியெறியவும் போராடுவோம்!
ஒன்றிய அதிகாரக் குவிப்பைத் தடுப்போம்! மாநிலத் தன்னாட்சியை வென்றெடுப்போம்!
- எழில் மாறன்