மிழக மக்களின் வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் ஆர்.என்.ரவி வேலை இல்லாமல் கிளப்பும் விவாதங்கள் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளை திசைத் திருப்புகின்றன. சொல்லப்போனால் கமலாலயம் எழுதிக் கொடுக்கும் அஜண்டாக்களை அவர்கள் சொல்லும் நேரங்களில் செயல்படுத்துவதே தமிழக ஆளுநரின் தலையாய பணியாக உள்ளது.

தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்துவதில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அலாதி பிரியம். விருந்துக்கு மட்டும் செல்வதே வேலையாய் இருக்கும் ஆர்.என்.ரவி திருச்சியில் தனியார் ஐஏஎஸ் அகாடமி நடத்திய மருது சகோதரர்கள் நினைவு விழாவில் கலந்துக் கொண்டு ஒரு இழிவான உரையாற்றியுள்ளார்.

அந்த உரையில் தமிழகத்தை இதுவரை ஆண்ட அரசுகள் விடுதலைப் போராட்ட வீரர்களை கண்டுக் கொள்ளவில்லை, அவர்களை சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள் என்றாம், இந்தியாவில் ஆரியம், திராவிடம் என்று எதுவும் இல்லை, இந்தியாவை பிரித்தாள பிரிட்டிஷாரின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என்றாம் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுதலை போராட்ட வீரர்கள் மறைக்கப்பட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ்.ரவி வருந்துவதெல்லாம் “ஆடு நனைகின்றது என ஓநாய் அழுத கதைதான்” ஆர்.எஸ்.எஸ் சின் ‘விடுதலை போராட்ட மரபை’ அறிந்த அனைவருக்கும் இது தெரியும். அவரது நோக்கம் தமிழ்நாட்டில் சாதி-தீண்டாமைக்கு எதிராகவும், அதன் சித்தாந்த வேரான ஆரிய பார்ப்பனியத்துக்கு எதிராகவும் போராடிய திராவிட இயக்கத்தின்மீது அவதூறு பரப்புவதே.

இந்த வன்மம் நிறைந்த பேச்சில் தமிழகத்திற்கு வந்த பொழுது விடுதலை போராட்ட வீரர்களின் பட்டியலை கேட்டதாகவும் அதற்கு 40-க்கும் குறைவான பெயர் பட்டியலை தந்ததாகவும், அதன் பிறகு அவரே தேடிப் பார்த்ததில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் விடுதலைக்கு போராடியிருப்பதையும் தெரிந்துக் கொண்டதாக  தெரிவித்துள்ளார்.

ஆர்.என்.ரவி தேடிப்பார்த்தார் என்பதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்று வாசகர்கள் கருதலாம். எங்களுக்கும் அதே சந்தேகம் தான். எந்த ஊடகமும் ஆளுநரிடம் மைக்கை நீட்டி பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களில் 10 பேரை சொல்லுங்கள் என கேட்க போவதில்லை. ஒருவேளை கேட்டாலும் சொல்லப்போவதில்லை. இது அண்ணாமலை 20,000 புத்தகம் படித்த கதையை போல் கடந்துப் போய்விட வேண்டியது தான்.

ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் துரும்பையும் அசைக்காமல், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரின் வாரிசுகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களை பற்றியும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி இன்னுயிர் ஈந்திய தியாகிகளை பற்றியும் பேசுவதற்கு அருகதை இல்லை என்பதை நாம் உரக்கக் கூற வேண்டியுள்ளது.

துரோகி தொண்டைமானால் காட்டிக் கொடுக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தன் மீது சுமத்தப்பட்ட ‘குற்றங்களை’ மறுக்கவும் இல்லை, உயிர் பிச்சை கேட்கவும் இல்லை. ஒரு தேசபக்தனுக்கே உரிய கம்பீரத்தோடு “ஆம் கம்பெனிக்கு எதிராக பாளையங்களை திரட்டினேன், போர் நடத்தினேன்” என்றான். இதுவல்லவோ வீரம்.

தொண்டைமான், எட்டப்பன் வழியில் வந்த ஆர்.என்.ரவி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுப்பதும், மன்னிப்பு கடிதம் எழுதுவதும், காலில் விழுவதுமே வீரம்..

இந்தியாவின் 75வது சுதந்திரதினத்தையொட்டி வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், பூலித்தேவன் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை பெருமைப் படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஊர்தியை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது பாசிச பாஜக. காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை போற்றுபவர்கள் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி பேசுவது நகைப்புக்குரியது.

இந்தியாவை சாதி, மத ரீதியில் பிளவுப்படுத்தி சாதி கட்சி தலைவர்களை பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கி கேடான அரசியல் செய்யும் பாஜகவின் அதிகார ஏஜெண்ட் ஆர்.என்.ரவி சாதியை பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். ஆனால் வெட்கம், மானம், சூடு, சொரணையை ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் எதிர்பார்க்க முடியாது.

குழந்தை திருமணம் செய்ததை பெருமையாக பேசியது மட்டுமல்லாமல் குழந்தை திருமணம் செய்து வைத்த குற்றவாளிகளுக்கு துணைபோனதும் பார்ப்பன பாசிஸ்டான ஆர்.என்.ரவியும் கடைந்தெடுத்த அயோக்கியதனம். குழந்தை திருமணம் செய்வதே சாத்திரம் எனும் ஆரியத்திற்கு அதனை எதிர்த்துப் போராடிய திராவிடத்தின் மீது வன்மம் இருக்கத்தானே செய்யும்.

இதையும் படியுங்கள்: தீட்சிதர்கள் பின்னால் ஆளுநர்? POCSO போடுங்க ஸ்டாலின்! Adv Raju

எந்த சாதியும், இனமும், மதமும் நாங்கள் கலப்பில்லாத தூய்மையான ரத்தம், மரபு என பேசுவது தற்காலத்தில் வேண்டுமானால் பொருந்தாது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கும் தனித்தனி இனக்குழு சமூகங்களாக வெவ்வேறு பிரதேசங்களில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் பல்வேறு இனப் பிரிவுகளாக மக்கள் வாழ்ந்தது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

இந்து ராஷ்ட்ர தர்ஷன் என்ற நூலில் சாவர்க்கர்: “எங்களது முன்னோர்கள் சிந்து நதிக்கரையில் வாழ்ந்து வந்ததாகவும், இன மற்றும் பண்பாட்டு அடிப்படையில் அவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறுகிறார். அந்த ஆரியர்கள் கங்கை நதி, விந்திய மலை மற்றும் கோதாவரி ஆற்றை கடந்து இந்தியாவின் தென்பகுதிக்கு வந்ததாகவும், அங்கே ஆரியர் அல்லாத மக்களுடன் தொடர்பு மோதல் ஏற்பட்டதாகவும், அந்த மக்களை தன்வயப்படுத்துதல், ஒழித்துக்கட்டுதல் போன்ற முறைகளை கையாண்டு ஒரே நாடாக உருவாக்கியதாகவும் கூறுகிறார்.

மேலே குறிப்பிட்ட தகவல் திராவிடர்கள் கூறியது அல்ல. ஆரியர் சாவர்க்கர் கூறியது.

இப்படி அடுக்கடுக்கான பொய்யை கூறுவதும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை பார்ப்பனர்களின் வரலாறாக மாற்றத்துடிப்பதும் அவர்களின் பேச்சில் புரிந்துக் கொள்ள முடிகிறது.

தற்போது ஆரியர்-திராவிடர் இரண்டு தூய்மையான இனப்பிரிவுகள் உள்ளதா என்பதல்ல, ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிராக திராவிட கருத்தியல் தொடர்ந்து மோதுவதே  ஆர்.எஸ்.எஸ்க்கும் ஆர்.என்.ரவிக்கும் பிரச்சினை. அந்த பிரச்சினையின் வெளிப்பாடே ஆர்.என்.ரவியின் தமிழ் மக்களுக்கு எதிரான பேச்சுக்களும் நடவடிக்கைகளும்.

இதையும் படியுங்கள்: ஆளுநர் ரவி: அரசியலமைப்புச் சட்டம் பெற்றெடுத்த போக்கிரி குழந்தை!

தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட 21 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். அதில் முக்கியமானது மருத்துவ கனவில் இருக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வு ரத்து தீர்மானம்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நீண்ட போராட்டம் நடத்தியே மசோதாவை சட்டமாக்க முடிந்தது. இப்படி மக்கள் நலனுக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு பாஜகவின் கொள்கையை அமல்படுத்தும் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதுவும் செய்யாமல் அவர்கள் வரிப்பணத்தில் சோறு தின்னும் தெண்டச்சோறு தான்.

ஆர்.எஸ்.எஸ்-க்கு அடியாள் வேலை பார்க்கும் ஆர்.என்.ரவி மக்கள் பிரச்சினைகளை திசைத் திருப்பவே இதுபோன்ற புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்குகிறார். இந்த தெண்டச்சோறு ஆர்.என்.ரவியை ஆளுநர் பதவியிலிருந்து விரட்டுவதற்கான போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here