மிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை அமல்படுத்துவதில் எந்தவித தயக்கமும் இன்றி செயல்பட்டு வருகிறார் என்பதும், அதற்கு எதிரான பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன என்பதும் அன்றாட செய்தியாக வருகிறது.

மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத, ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற இந்த ஆளுநர்கள் பல்வேறு மாநிலங்களில் இவ்வாறு கொட்டமடித்து வருகின்றனர் என்பதற்கு என்ன காரணம்? தற்போது நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டம் இந்த ஆளுநர்களை பாதுகாத்து வருகிறது என்பது மட்டுமின்றி, சட்டப்படியாக அவர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளையும், அவர்களின் நிர்வாக செலவு முதல் சோத்துக்கான செலவு வரை அனைத்தையும் அவர்கள் ஆளுகின்ற மாநில அரசுகளின் தலையில் விடிகிறது என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும்.

‘ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு’ என்று அண்ணாதுரை முன்வைத்த வாதத்தை அனைவரும் இன்றுவரை கவர்னர் என்கின்ற ஆளுநருக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஆளுநர் என்ற அமைப்புமுறை, அரசியல் அமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்படுவதால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றாத வரை ஆளுநர்களை ஒன்றும் செய்யவே முடியாது.

ஆளுநருக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை!
மக்களால் தேர்வு செய்யப்படுவதுமில்லை!
தமிழகத்தின் ஆளுநர்கள் குடியிருக்கும் ராஜ் பவன் என்று சொல்லக்கூடிய கிண்டி மாளிகை 156.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் தமிழக அரசின் வனத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகியவற்றின் மூலமாக 6718 மரங்கள் பராமரிக்கப்படுகிறது. ஆளுநர்கள் ‘மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட களைப்பில் இருந்து ஓய்வெடுப்பதற்காக’ ஊட்டியில் உள்ள ராஜ் பவன் மாளிகை 86.72 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இந்த இரண்டு மாளிகைகளையும் பராமரிக்கவே ஆண்டுக்கு ஆறரை கோடி ரூபாய் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவிடப்படுகிறது.

அவர்கள் நிர்வாகம் செய்வதற்கு தேவையான நாற்காலி, மேசைகளுக்கு ஆண்டுக்கு 7.5 லட்சமும், அவரை பராமரிப்பதற்கு 1.66 கோடி ரூபாயும், கவர்னர் மாளிகையில் நிர்வாக செலவுகள் என்ற வகையில் 2,84,97,000 ரூபாயும், ஆளுநருக்கு மாதம் ஒன்றிற்கு 4.5 லட்சம் ரூபாய் சம்பளமும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொட்டி அளக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஆட்டுக்குத் தாடி அவசியமா?

மக்களின் வரிப்பணத்தில் இருந்து மஞ்சள் குளிக்கும் இது போன்ற ஆளுநர்கள் ‘தமிழ்நாடு’ என்று வாயில் வராது என்று கொக்கரிக்கும் போது ஒட்டுமொத்த தமிழகம் எழுந்து வெளியே போ என்று முழங்க வேண்டும். அவ்வாறு தமிழகம் உடனடியாக ‘கோ பேக் ரவி’ என்று ஹேஷ்டேக் செய்ததும், தொடர்ந்து பல்வேறு கட்சிகள் கண்டனங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகின்றனர்.

ஏன் இந்த இறுமாப்பு?
எப்படி வந்தது இந்த துணிச்சல்?
இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டன்; இந்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்வதற்கு கவர்னர் ஜெனரல், வைஸ்ராய் போன்ற அதிகாரம் கொண்ட நபர்களை நியமித்தது.
1773 முதல் வாரன் ஹேஸ்டிங்ஸ் துவங்கி அன்றைய கல்கத்தா பகுதியை தலைமையாக கொண்டு ஆண்டவர்கள் ‘வங்க ஆளுநர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.. அதன் பிறகு 1828 வில்லியம் பெண்டிங் துவங்கி 1856 டல்ஹெளசி காலம் வரை இந்தியாவை ஆண்ட பிரிட்டன் ஆட்சியாளர்கள் கவர்னர் ஜெனரல் என்று அழைக்கப்பட்டனர். 1857 இரண்டாவது இந்திய விடுதலைப் போராட்டம் துவங்கிய காலத்தில் இருந்து அதாவது சிப்பாய்க் கலகம் துவங்கிய காலத்தில் இருந்து இந்த கவர்னர் ஜெனரல் என்ற முறை மாற்றப்பட்டு தில்லியை தலைமையாக கொண்டு ஆண்டவர்கள் கானிங் பிரபு துவங்கி மவுண்ட் பேட்டன் பிரபு வரை வைஸ்ராய் என்று அழைக்கப்பட்டனர்.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதாக கூறப்பட்ட போதிலும் 1950 ஜனவரி 26 அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்டு குடியரசாக அறிவிக்கப்படும் வரை பிரிட்டன் எஜமானர்களின் கீழ் டொமினியன் அதிகாரம் கொண்ட பிரிட்டன் காலனியவாதிகளின் தூதர்களாகவே ஜவகர்லால் நேரு, ராஜாஜி போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தனர். அந்த வகையில் ராஜாஜி பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த கடைசி கவர்னர் ஜெனரலாக செயல்பட்டார்.

தற்போது நடைமுறையில் நிலவுகின்ற பல்வேறு நிர்வாக வடிவங்களான தாசில்தார், கலெக்டர் துவங்கி மாநில முதன்மை செயலர், கவர்னர் போன்ற பதவிகள் வரை அனைத்தும் 1935 இல் உருவாக்கப்பட்ட இந்திய அரசு சட்டத்தின் மறுபதிப்பாகவே இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்!

1956 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏழாவது சட்ட திருத்தம்,. பிரிவு 152 ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களில் கவர்னராக ஒரு நபர் நியமிக்கப்படலாம் என்பதும், மாநிலத்தில் கவர்னர் என்பவர் மூலமாக இந்திய ஒன்றிய அரசு நிர்வகிக்கும் முறை ஒரு ஆட்சி வடிவமாகவும் கொண்டுவரப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 156 பிரிவின் படி ஜனாதிபதியின் நியமன உறுப்பினராக ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதால் அவரது ஏஜெண்டாக, அதாவது இந்திய ஒன்றிய அரசின் ஏஜென்ட் ஆக ஐந்து ஆண்டு காலம் பதவியில் நீடிக்க முடியும்.
1974 ஆம் ஆண்டு ஷம்ஷேர் சிங் VS பஞ்சாப் என்ற வழக்கில் ஏழு பேர் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அரசியலமைப்பு அமர்வு “அமைச்சர் குழுவின் ஆலோசனைப்படி செயல்பட மறுப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை. இத்தகைய நிலைப்பாடு பொறுப்பான அரசாங்கம் என்ற கருத்துக்கு எதிரானது” என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இந்த தீர்ப்புதான் சட்ட மன்ற உரிமையை மதிக்கிறது. ஆனால் நடைமுறையில் ஆளுநர்கள் இதனை மதிப்பதே கிடையாது. தீண்டாமை ஒரு பாவச் செயல் என்பது போன்றதுதான் இந்த தீர்ப்பு.

அரசியலமைப்புச் சட்டத்தின் 166-வது பிரிவின்படி முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம், மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம், மாநில அட்வகேட் ஜெனரலை நியமிக்கும் அதிகாரம், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிக்கும் அதிகாரம் போன்றவை அனைத்தும் கவர்னருக்கு உள்ளது.

மாநிலத்திற்குள் அவசர நிலைமையை கொண்டு வருகின்ற சூழல் ஏற்பட்டால், ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் அதிகாரமும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதும், துணை வேந்தர்களை நியமிக்கின்ற அதிகாரமும் ஆளுநர்களுக்கு உண்டு. தான் விருப்பப்பட்ட போது சட்டமன்றத்தை கூட்டுவதற்கும், சட்டமன்றத்தை ஒத்தி வைப்பதற்கும், 360 வது பிரிவின் படி அதனை கலைப்பதற்கும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

சபாநாயகர், துணை சபாநாயகர் அலுவலகம் காலியாக இருந்தால் மாநில சட்டப்பேரவையில் இருந்து எந்த ஒரு உறுப்பினரையும் தற்காலிகமாக தலைமை தாங்குவதற்கு நியமிக்கின்ற அதிகாரமும், சிறப்பு அறிவு உள்ளவர்களை தேர்வு செய்து ஆறில் ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கின்ற அதிகாரமும், தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து மாநிலங்களவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு அதிகாரமும் ஆளுநருக்கு உள்ளது.

அது மட்டுமல்ல தனது ஆளுகையின் கீழ் உள்ள மாநிலத்தில் தேவைகளை ஒட்டி அவசர சட்டங்களை ஆளுநர் போட முடியும். அவை ஆறு வாரத்திற்குள் சட்டமன்றத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும். மேற்கண்ட அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நபராகவே ஆளுநர் உலா வருகிறார் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தை திருத்து!
ஆளுநர் பதவியை நிரந்தரமாக தடுத்து நிறுத்து!
எனவே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்று வாதாடுவது பலவீனமான, மொன்னையான வாதமாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் பெயராலேயே இத்தனை அதிகாரங்களை கையில் குவித்து கொண்டுள்ள ஆளுநரின் பதவியைப் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக மத்திய, மாநில அரசாங்கங்கள் எதிர்த்து போராடியது இல்லை. தன்னுடைய பதவிக்கு எப்போதாவது இடையூறு வருகின்ற போது மட்டும் ஆளுநர் பதவியை எதிர்த்துப் போராடுகிறார்களே ஒழிய ஆளுநர் என்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, அதிகார வர்க்கத்திற்கு இப்படிப்பட்ட வானளாவிய அதிகாரம் உள்ளது, அதை அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது என்ற உண்மையை மக்கள் முன் வைத்து அதற்கு எதிராக மக்களை திரட்டுவதில்லை.
இதனால்தான் தமிழிசை போன்ற ஆளுநர்கள் ஆர்.என்.ரவி சட்டப்படிதான் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார். வேறொன்றும் அவரை செய்துவிட முடியாது என்று துணிச்சலாக, திமிராக அறிவிக்கின்றனர்.

ஆளுநரை நியமிக்கும் போது ஜனாதிபதி அவர் ஒரு பக்க சார்பாகவும் அல்லது சட்டவிரோதமாகவும் அல்லது அதிகார துஷ்பிரயோகம் செய்பவராகவும் இருக்கக்கூடாது என்பதையெல்லாம் சொல்லி பதவி பிரமாணத்தை செய்து வைக்கிறார் என்பதெல்லாம் சரிதான். ஆனால் இதுவரை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அனைவரும் மத்தியில் ஆளுகின்ற அரசியல் கட்சிகளின் எடுபிடிகளாகவும், அடியாள் படைகளாகவும் மாநிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதுதான் உண்மை.

இந்த வகையில் தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசாங்கத்தை கடுகளவும் மதிக்காமல் ஆர்எஸ்எஸ் கைக்கூலியாகவும் பார்ப்பன-சனாதன தர்மத்தை பட்டவர்த்தனமாக ஆதரித்துக் கொண்டும், தமிழகத்தில் அப்படிப்பட்ட ஆதீனங்கள், மடாலயங்கள் மற்றும் பண்ணையார்கள், முதலாளிகள் அனைவருடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதே நடைமுறையாக உள்ளது. இந்த நடைமுறைக்கு அரசியலமைப்புச் சட்டம் துணை போகிறது என்பதே நிதர்சனமாகும்.

“மூக்கு இருக்கின்ற வரை சளி பிடிக்கும்” என்பதைப் போல இந்த அரசியலமைப்புச் சட்டத்தை அப்படியே பாதுகாப்பது என்ற நோக்கத்தில் செயல்படுகின்ற வரை ஆளுநர்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. ஆளுநர்கள் போன்ற நிழல் அதிகார போஸ்டிங்குகளையும், ஆர்.என் ரவி போன்ற சர்வ அதிகாரங்களையும் கேடாக பயன்படுத்தும் சர்வாதிகாரிகளையும் உருவாக்குவதற்கு பயன்படுகின்ற அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் நீக்குவதும், மக்கள் கையில் உண்மையான அதிகாரத்தை கொடுக்கின்ற வகையில் சட்ட திருத்தம் ஏற்படுத்துவதும் புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதும் தான் உடனடி தேவையாகும்.

இதெல்லாம் உடனடியாக நடக்கக்கூடிய காரியமா என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தால், மக்கள் மத்தியில் உண்மையை எடுத்துச் சொல்லி அதற்கு எதிராக அரசியல் கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் நிலவுகின்ற சமூக அமைப்பில் சற்று மேம்பட்ட வாழ்க்கை ஒன்றை உருவாக்குகின்ற மோசடிக்கு நாமும் துணை நிற்போம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here