செல்லாக்காசான ஆட்டுத்தாடி ஆளுநர்!

வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பின்மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பலால் நிறுத்தப்பட்டிருந்த ஆளுநர்களுக்குக் கடிவாளம் போடப்பட்டிருக்கிறது.

0

செல்லாக்காசான ஆட்டுத்தாடி ஆளுநர்!

ந்தியாவெங்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தனது ஆளுநர்கள் மூலம் போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிச கும்பல் தமிழ்நாட்டிலும் அத்தகைய முயற்சிகளை எடுத்துவந்து. அதற்காகவே நாகாலாந்து மாநிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட ஆர்.என். இரவியை செப்டம்பர் 2021-ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமித்தது. அவர் நியமிக்கப்பட்ட புதிதில் “முன்னாள் போலீசு அதிகாரி, நாகாலாந்தில் பிரிவினைவாதிகளை ஒழித்துக்கட்டியவர், தமிழ்நாட்டில் தி.மு.க.-வுக்கு சரியான ஆப்பு” என்றெல்லாம் பாஜக சங்கிகள் துள்ளிக்குதித்தனர்.

அவரும் தனக்கு ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் ஒப்படைத்த வேலையை, அதாவது போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருந்தார். அரசின் மேல்மட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள், போலீசு அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்களையெல்லாம் கூட்டி பேசுவது, தன்னிச்சையாக மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்வது, ஆளுநர் மாளிகையில் மதவாத கும்பலை அழைத்து கூட்டம் போடுவது என்று ஆட்டம்  காட்டிக்கொண்டிருந்தார். வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, திராவிட  கருத்தியலை, பெரியாரை, காரல் மார்க்ஸை, கம்யூனிசத்தை தாக்குவது, மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பது என்று தனது நரித்தனத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.

அதுபோக, தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சுமார் 17 சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தனது சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ். ரவியின் இந்த வரம்புமீறி செயல்களைக் கண்டித்து ஆளுநரை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் உள்ள முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரி அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவந்தன. எமது “மக்கள் அதிகாரம்” அமைப்பும் “ஆட்டுத்தாடி ஆளுநரே தமிழகத்தைவிட்டு வெளியேறு!” என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.

படிக்க:

♠  ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!

♠  தெண்டச்சோறு ஆளுநர் ரவியும் ஆர்.எஸ்.எஸ் ன் தேசப்பக்தியும்!

மற்றொரு பக்கம் ஆளும் திமுக உச்சநீதிமன்றத்தில் ஆளுநரின் அடாவடிகளுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திவந்தது. இதில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் குட்டுப்பட்டபோதும் அறிவுவாராத ஆளுநர் மீண்டும் தனது அடாவடிகளைத் தொடர்ந்துவந்தார். இந்நிலையில்தான் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக திருத்த மசோதாக்களை ஒப்புதல் தராத ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அவ்வழக்கு விசாரணையின் தீர்ப்பில் ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்த அனைத்து சட்ட மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதோடு ஆட்டுதாடி ஆளுநரின் செயலுக்கும் கடும் கண்டணத்தைத் தெரிவித்து இனிவரும் காலங்களில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை 30 முதல் 90 நாட்களுக்குள் மாநிலத்தின் ஆளுநர்கள் முடிவெடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பின்மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலால் நிறுத்தப்பட்டிருந்த ஆளுநர்களுக்குக் கடிவாளம் போடப்பட்டிருக்கிறது.

இந்திய உச்சநீதிமன்றத்தில் வராதுவந்த மாணிக்கம்போல மிக அபூர்வமாக கிடைக்கும் இதுபோன்ற தீர்ப்புகளை நாம் வரவேற்கிறோம். ஆளுநரின் செவிட்டில் அறைந்தாற்போல வந்திருக்கும் இத்தீர்ப்பையடுத்து நாட்டுமக்கள் மத்தியில் அம்பலமாகி அவமானப்பட்டு நிற்கும் ஆளுநர் உடனடியாகப் பதவி விலகி தனது மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு தனது ஊர்ப்பக்கம் போவதுதான் நல்லது. ஆனால் எத்தனைதான் அம்பலப்பட்டாலும் அவமானப்பட்டாலும் அதையெல்லாம் துடைத்துக்கொண்டு மீண்டும் முதலிலிருந்து தொடங்குவதுதான் சங்கிகளின் வாடிக்கை. ஆளுநர் ஆர்.என்.ரவி அதிலிருந்து மாறுபடுகிறாரா, வெட்கம், மானம், சூடு, சுரணை கொஞ்சமாவது உள்ளதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளால் இந்தியாவின் வளங்களை தங்குதடையில்லாமல் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவியை அடியோடு ஒழித்துக்கட்டுவதே மாநில நலன்களைக் காப்பதாக அமையும். அதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். கார்ப்பரேட்-காவி பாசிஸ்டுகளை வீழ்த்தி அமையும் ஜனநாயகக் கூட்டரசில் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்வோம்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here