சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? – நூல் அறிமுகம்!


கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதிய தோழர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் உலகம் முழுவதும் அந்த காலத்தில் இருந்த சோசலிச இயக்கம் மற்றும் சோசலிசவாதிகள் பற்றி வரையறுத்து கூறியிருந்தார்கள். அதாவது பொதுவாக சோசலிசம் என்று பார்க்க முடியாது. அதிலேயே பிற்போக்கு சோசலிசம், பிரபுத்துவ சோசலிசம், குட்டி முதலாளித்துவ சோசலிசம், மெய்யான சோசலிசம், பழமைவாத அல்லது முதலாளித்துவ சோசலிசம், கற்பனாவாத சோசலிசம், விஞ்ஞான சோசலிசம் என்று பல வகை சோசலிசம் நிலவுகிறது என்று சுட்டிக் காட்டினார்கள்.
அதுபோலவே கம்யூனிஸ்டுகளிலும் பல ரக கம்யூனிஸ்டுகள் உள்ளனர். பொதுவாக கம்யூனிச கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருமே கம்யூனிஸ்டுகள் ஆகிவிடுவதில்லை.

கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்வதும், அதனை அமல்படுத்துகின்ற ஏதாவது ஒரு அரங்கில் பணியாற்றுவதும், தனது உழைப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அமைப்பிற்கு வழங்குவதும் மூன்று முக்கிய கடமைகளாக உள்ளன.
கட்சியில் இல்லை, ஆனால் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருக்கிறேன் என்று பிதற்றுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஏனென்றால் ஒருவர் செய்கின்ற தவறுகளை பரிசீலனைக்கு உட்படுத்தாமல் அல்லது சரியான அம்சங்களை அங்கீகரிக்க அமைப்பு ரீதியான செயல்பாடு இல்லாமல் செயல்படுவது என்பது கம்யூனிச கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு ஒருகாலும் உதவாது.
ஒருவர் கம்யூனிஸ்ட்டாக மாறுவதற்கு முயற்சி செய்கின்ற போது வர்க்க சமுதாயத்தில் பல்வேறு தவறான கருத்துகளுடன் தான் அமைப்பிற்குள் வருகிறார்.

அவ்வாறு வந்த பிறகு அவரிடம் வெளிப்படும் கடந்த கால வர்க்க பண்புகளை களைந்து கொள்வதற்கு அவர் நேர்மையாக நடத்துகின்ற போராட்டங்களின் மூலமே அவர் சிறந்த கம்யூனிஸ்டாக மாற முடியும் என்பதை இந்த நூல் நமக்கு விளக்குகிறது.
ஒரு முரண் அறிவியலாக இந்த நூலை எழுதி சிறந்த கம்யூனிஸ்ட்களை உருவாக்கிய லியு சாவோகி சீனாவில் பிற்காலத்தில் திரிபுவாதியாக மாறி புரட்சிக்கு எதிராக செயல்பட்டார்.

ஆனால் அவர் முன்னணி தோழராக செயல்பட்ட காலத்தில் வழிகாட்டிய சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி என்ற நூல் இன்றளவும் உலகளவில் மார்க்சிய- லெனினியவாதிகளால் அங்கீகரிக்கப்பட்டு வழிகாட்டும் நூலாக ஏற்கப்பட்டுள்ளது.
சிறந்த கம்யூனிஸ்டாக செயல்படுகின்ற ஆவலுடன் முன்னேறும் ஒவ்வொரு இளம் தோழரும் படிக்க வேண்டிய அவசியமான நூல் ஆகும்.

ஏனென்றால் அனுபவவாதம், சுயநலவாதம், சொந்த வாழ்க்கை நாட்டம், சந்தர்ப்பவாதம், திரிபுவாதம் போன்ற பல பிற்போக்கு கோட்டைகளை தகர்ப்பதற்கு இந்த நூல் நமக்கு வழிகாட்டி நிற்கிறது.

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் – 8925648977

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here