இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தை கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத கும்பல் கைப்பற்றியது முதல் நாடு முழுவதும் பெரும்பான்மை உழைக்கும் மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவர்கள், வியாபாரிகள் ஆகியவர்களின் மீதும் குட்டி முதலாளித்துவ நடுத்தர வர்க்கத்தினர் மீதும் கொடூரமான பல தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த ஆர்எஸ்எஸ்-பாஜக 1925 முதல் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும் மூன்று முறை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதாலும், ஆர்எஸ்எஸ் முன்வைக்கின்ற இந்துத்துவா என்பது பார்ப்பன மேலாதிக்கத்தை, அதாவது பார்ப்பன அடிமைத்தனத்தை நிரந்தரமாக ஏற்றுக் கொண்ட இந்து மதத்தை உருவாக்குவது தான் என்பதால் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தை நீண்ட காலம் கைப்பற்ற முடியாமல் இருந்தது.
2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு, உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம் தூக்கி வீசி எறியப்பட்டு அப்பட்டமான பாசிச சர்வாதிகார ஆட்சி அதாவது சிறு கும்பலாட்சி ஒரு ஆட்சி வடிவமாகவும், ஆட்சி முறையாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தப் பாசிசக் கும்பல் ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல்கள், பாராளுமன்ற அமைப்பு முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதும், கைப்பற்றிய பிறகு பாராளுமன்ற அமைப்பு முன் வைக்கின்ற சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகள், விதிமுறைகள் ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு ஒரு கும்பல் நலனுக்காக அதாவது கார்ப்பரேட் முதலாளித்துவ நலனுக்காகவே ஆட்சி அதிகாரத்தை நடத்தி வருகின்றனர்.
படிக்க:
♦ தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாசிச பாஜக முன் வைக்கும் அரசியலை முறியடிப்பது எப்படி?
♦ வரம்புள்ள செயல்தந்திரம் : ஐக்கிய முன்னணிகள் கட்டியமைப்பது குறித்து
இந்த பாசிச கும்பலுக்கு உலகு தழுவிய ஒருங்கிணைப்பும், பல்வேறு நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான கோடி டாலர்களுக்கு சொந்தமான அதிபர்கள், பிரதமர்கள், அவர்களின் பின்னால் இயங்குகின்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பும் உள்ளதால் ஒரு நாட்டில் மட்டும் இவர்களுக்கு எதிராக போராடுவது குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும். உலகெங்கிலும் உள்ள பாசிச பயங்கரவாதிகளையும், அதன் பின்னணியில் இயக்குகின்ற ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்க சக்திகளையும் முழுமையாக தூக்கி எறியாமல் பாசிசத்தின் மீதான வெற்றியைப் பெற முடியாது.
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் இந்திய பங்காளிகளான, பலமிக்க பின்னணிக் கொண்ட கார்ப்பரேட் காவி பாசிச சக்திகளை முறியடிப்பதற்கு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் பாசிசத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாத, அதே சமயம் ஏற்கனவே நிலவிய போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை, போலி ஜனநாயக ஆட்சி முறையை உயர்த்திப் பிடிக்கின்ற அரசியல் கட்சிகளை வைத்து தேர்தல் காலங்களில் அவர்களை மீண்டும் ஆட்சியை கைப்பற்ற விடாமல் தடுப்பது மிக அவசியமான கடமையாக மாறியுள்ளது.
2021 முதல் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் கடைபிடிக்கின்ற “கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம், ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்!” என்ற செயல் தந்திரத்துக்கு பொருத்தமான வகையில் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று அறிவித்து கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், தற்போது தமிழகத்தில் நடக்கின்ற சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை கொண்டு செல்கின்றோம்.
இவ்வாறு கொண்டு செல்லும்போது பலமிக்க கார்ப்பரேட் காவி பாசிச சக்திகளுக்கு எதிராக களமாடுகின்ற குறைந்தபட்ச ஜனநாயகத் தன்மை கொண்ட, பாசிசத்தை எதிர்த்து செயல்படுகின்ற கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கின்றோம். அதே சமயம் “நிர்பந்திப்போம்” என்ற முழக்கத்தையும் முன்வைக்கின்றோம்.
கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற திமுக அதன் கூட்டணி கட்சிகளை நிர்பந்திப்போம்! ஆதரிப்போம் என்று முழக்கத்தை முன் வைத்தவுடன் அவர்களை நிர்பந்திப்பதற்கு போதுமான சக்திகள் உங்களிடம் உள்ளதா? அவர்கள் உங்களை ஒரு பொருட்டாக கருதுவார்களா? அவர்களை நிர்பந்திப்பதற்கு என்ன வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் பிதற்றத் துவங்கி விட்டனர்.
படிக்க:
♦ அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: இதுவே ஆர்எஸ்எஸ் – பாஜக உருவாக்கியுள்ள இந்திய சமூக அமைப்பு.
♦ மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு பாதியாக குறைந்துள்ளது!
நாடு தழுவிய அளவில் பாசிச பாஜகவை தேர்தலில் வீழ்த்துவதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவே இந்திய அளவில் பார்த்தால் ஒரு சிறிய கட்சி தான். ஏனென்றால் 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி என்ற அடிப்படையில் இந்தியாவை பொறுத்தவரை இது ஒரு சிறிய கட்சி தான். இருந்த போதும் இந்தியா கூட்டணியில் திமுக குறைந்தபட்ச திட்டத்தை வைத்து பாசிச பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளையும், சக்திகளையும் ஒன்று திரட்ட முடியும்; பாசிசத்திற்கு எதிராக களமாட முடியும் என்று நம்புபவர்கள், தமிழகத்தில் திமுகவை நிர்பந்திப்போம் என்றால் மட்டும் இதெல்லாம் சாத்தியமா என்று அங்கலாய்க்கின்றனர்.
திமுகவை நிர்பந்திப்பது என்பது திமுகவிடம் கோரிக்கை மனுக்களை முன்வைத்து இப்படிப்பட்ட ஆட்சியை நடத்த வேண்டும் என்று கோருவது அல்ல. மாறாக கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு புதிய ஜனநாயகம் அதன் தோழமை அமைப்புகள் முன்வைக்கின்ற குறைந்தபட்ச செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கு கீழிருந்து ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குவதற்கு பிரச்சாரம் செய்வது; அதன் மூலம் இந்த கட்சிகளுக்கு ஒரு நிர்பந்தத்தை உருவாக்குவது என்பதுதான் அதன் பொருளே ஒழிய, கட்சிகளை நம்பி அவர்களுக்கு கோரிக்கை வைப்பது என்று சுருக்கி புரிந்துக் கொண்டால் அது அவர்களின் அரசியல் பாமரத்தனமாகும்.
மார்க்சிய லெனினிய இயக்கம் என்ற அடிப்படையில் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக ஏன் பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி பலமுறை, பல கோணங்களில் விளக்கிச் சொல்லி விட்டோம் என்ற போதிலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு மக்களிடமிருந்து தனிமைப்படுகின்ற தேர்தல் புறக்கணிப்பு அரசியலே புரட்சிக்கு வழிவகுக்கும் என்று ஒரு சிறு கும்பல் சுற்றி வருகின்ற சூழலில், தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்துவோம் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுத்து பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு மாற்றை முன்வைத்து நிர்பந்திப்போம்! ஆதரிப்போம் என்ற முழக்கங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
தேர்தல் காலங்களில் மக்கள் முழுவதும் அதில் கவனத்தில் இருக்கும்போது வேறு ஒரு பிரச்சனையை முன்வைத்து பிரச்சாரம் செய்வது ஒரு போதும் மக்களை அரசியல் படுத்தாது என்பதுதான் மார்க்சிய லெனினிய ஆசான்கள் முன்வைத்த வழிகாட்டுதல்கள் ஆகும். அந்த ஒளியில் நின்று குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் புதிய ஜனநாயகத்தின் தோழமை அமைப்புகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முன் வைத்துள்ள “பாசிச பாஜக-அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்! மாற்றை முன்வைத்து திமுக கூட்டணியை நிர்பந்திப்போம்! ஆதரிப்போம்! பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்த ஜனநாயகக் கூட்டரசு அமைக்கப் போராடுவோம்” என்ற பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டுச் செல்வோம்.
- கணேசன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






