உலக மேலாதிக்க போட்டியில் அமெரிக்க ஒற்றைத் துருவ வல்லரசுக்கு மாற்றாக பல்துருவ வல்லரசு ஒன்றை உருவாக்குவது என்ற பெயரில் சீனா படிப்படியாக பொருளாதார ரீதியிலான தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.
ஏகாதிபத்தியத்தின் தனித்த பண்புகளில் ஒன்றான மூலதன ஏற்றுமதியைப் பற்றி தோழர் லெனின் முன்வைப்பது இதுதான்.
”தடையில்லா போட்டி தனியாட்சி புரிந்த பழைய முதலாளித்துவத்தின் குறி பண்பாய் இருந்தது. பண்டங்களின் (அதாவது சரக்குகளின்) ஏற்றுமதி ஏகபோகங்கள் ஆட்சி புரியும் முதலாளித்துவத்தின் இன்றைய (அதாவது ஏகாதிபத்திய) கட்டத்தின் குறிப் பண்பாய் இருப்பது மூலதனத்தின் ஏற்றுமதி ஆகும்”.(ஏகாதிபத்தியம் பற்றி தோழர் லெனின்.)
இந்த மூலதன ஏற்றுமதியின் மூலமாக சீனா உலக மேலாதிக்க போட்டிக்கான வளர்ச்சி பாதையில் பயணிக்கின்றது என்பதை தான் பிரிக்ஸ் கூட்டமைப்பு நிறுவப்பட்டதும், தற்போதைய நிலையில் புதிதாக ஐந்து நாடுகளை இணைத்து விரிவான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதும் காட்டிக் கொண்டுள்ளது.
BRICS உருவான சுருக்கமான வரலாறு.
BRIC (பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா) நாடுகளின் தலைவர்கள் முதல் முறையாக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஜூலை 2006 இல் G8 அவுட்ரீச் உச்சிமாநாட்டின் விளிம்பில் சந்தித்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, செப்டம்பர் 2006 இல், குழு முறைப்படுத்தப்பட்டது. நியூயார்க் நகரில் ஐ.நா சபையின் பொது விவாதத்தின் ஓரத்தில் கூடிய 1வது BRIC வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது BRIC. தொடர்ச்சியான உயர்மட்டக் கூட்டங்களுக்குப் பிறகு, 1வது BRIC உச்சி மாநாடு 16 ஜூன் 2009 அன்று ரஷ்யாவின் யெகாடெரின்பர்க்கில் நடைபெற்றது.
செப்டம்பர் 2010 இல் நியூயார்க்கில் நடந்த BRIC வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தென்னாப்பிரிக்கா முழு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் BRIC குழு BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) என மறுபெயரிடப்பட்டது. அதன்படி, தென்னாப்பிரிக்கா 3வது BRICS உச்சி மாநாட்டில் கலந்து கொண்டது. 14 ஏப்ரல் 2011 அன்று சீனாவின் சான்யாவில். பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு நடத்தப்பட்டது.
இன்றைய நிலவரப்படி உலக மக்கள்தொகையில் 41% கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24% மற்றும் உலக வர்த்தகத்தில் 16%க்கும் அதிகமான பங்கைக் கொண்ட உலகின் வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான கூட்டமைப்பு ஆகும். BRICS நாடுகள் பல ஆண்டுகளாக உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரங்களாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் கலாச்சாரம் மற்றும் மக்கள் பரிமாற்றம் ஆகிய மூன்று தூண்களின் கீழ் முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்க பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.
2021 ஆம் ஆண்டு வாக்கிலேயே இந்த நாடுகள் தங்கள் பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டு வியப்படைந்தன. மேலும், BRICS இன் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் G7 கூட்டமைப்பு நாடுகளை விட அதிகமாக இருந்தது.
சீனா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய உலக வல்லரசுகளையும், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற அவர்களின் கண்டங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளையும் பிரிக்ஸ் உள்ளடக்கியிருந்தாலும், அதன் உறுப்பினர்கள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நாடுகளுக்கு கடன் கொடுக்கும் உலக வங்கி போன்ற முக்கியமான அமைப்புகளை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்க மேல்நிலை வல்லரசு கட்டுப்படுத்துவதாக புகார் கூறுகின்றனர்.
இதனால் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிரான இந்த கூட்டமைப்பு ஐந்து புதிய உறுப்பு நாடுகளைக் கூடுதலாகப் இணைத்துள்ளது. இரான், எகிப்து, எத்தியோப்பியா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகளான இந்த ஐந்து நாடுகளையும் உள்ளடக்கி விரிவாக்கப்பட்ட குழுவில் சுமார் 3.5 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 45 சதவிகிதம் பேர் உள்ளனர். அதன் ஒட்டுமொத்த பொருளாதாரம் 28.5 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது, இது உலகப் பொருளாதாரத்தில் 28% ஆகும். உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயில் 44% அளவுக்கு பிரிக்ஸ் நாடுகள் உற்பத்தி செய்கின்றன.
அமெரிக்காவின் உலக உலக மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளான ஐஎம்எப், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை காலனி, அரைக் காலனி, நவீன காலனி மற்றும் மறுகாலனிய நாடுகளை கடன் பொறியமைப்பிற்குள் சிக்கவைத்து நிரந்தர கடனாளியாகவும், அடிமைகளாகவும் மாற்றி வருகின்றனர்.
இதனால் பாதிப்படையும் காலனிய நாட்டு அரசாங்கங்கள் அமெரிக்காவை எதிர்த்து பேசுவதற்கோ அல்லது பொருளாதார ரீதியாக தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கோ பொருத்தமான புதிய கூட்டமைப்புகளை தேடிக் கொண்டிருக்கும் சூழலில் தான் இந்த பிரிக்ஸ் ’ஆபத்பாந்தவனாக’ உதவி கொண்டிருக்கிறது. இந்த கூட்டமைப்பில் இயல்பாகவே சீனா ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட எரிசக்தி தொடர்பான ஒப்பந்தங்களை சீனா போட்டுள்ளது. இதனை பிரகடனப்படுத்தும் வகையில் சீனா-ஆப்பிரிக்கா இரண்டிற்கும் இடையில் போடப்பட்டுள்ள 30 அம்ச அறிக்கையானது அமெரிக்காவின் கடன் வலையிலிருந்து தப்புவதற்கு இந்த ஒப்பந்தங்கள் உதவுவதாக முன் வைத்துள்ளது.
2008 ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வீழ்த்தி அதற்கு இணையாக தான் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படையில் முன்னேறி வரும் நவீன சமூக ஏகாதிபத்தியமான சீனா பிரிக்ஸ் கூட்டமைப்பின் மூலம் உலகின் தெற்கு பகுதியிலுள்ள பல்வேறு நாடுகளுக்கு கடன் வழங்கி அமெரிக்காவைப் போலவே கடன் வலைக்குள் சிக்க வைத்து வருகிறது.
ஒரு எடுத்துக்காட்டாக அமெரிக்கா இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கை துணை போகின்ற வகையில் காசாவை அழித்தொழிப்பதற்கு பல ஆயிரம் டாலர்களை நிதியாக வழங்குகின்ற சூழலில் சீனா ஆப்பிரிக்காவின் ’வளர்ச்சிக்காக’ 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கி உள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் கீழ் தனக்கு போட்டியாக புதிதாக வளர்ந்து வருகின்ற பிராந்திய வல்லரசுகளையும், அதன் அரசாங்கங்களையும் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா பல்வேறு வகையிலான முயற்சிகளை மேற்கொள்கிறது. அதில் குறிப்பாக இந்தியாவை தனது நம்பகமான கூட்டாளியாக நம்பி பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக் கொள்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தரமான இடம் கொடுக்கின்றோம் என்று கூறியுள்ளதைப் போலவே ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள இரண்டு நாடுகளுக்கு நிரந்தர இடம் தருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது போன்ற முயற்சிகளில் மூலம் சீனாவின் பிடியிலிருந்து பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளை பிரிப்பதற்கு முயற்சித்து கொண்டிருந்தாலும் தற்போதைய சூழலில் இந்தியா உட்பட பிரிக்ஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளது என்பது மட்டுமின்றி சார்க் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு துணை போகின்றது.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறிக்கொள்ளும் CPC என்ற போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் 2022 ஆம் ஆண்டு நடந்த 20வது மத்தியக் குழுவின் உச்சபட்ச கூட்டத்தில், ”சார்க் பிராந்தியத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் முன்னிலை வகிக்க போவதாகவும், 2050 ஆம் ஆண்டு அமெரிக்காவை தள்ளிவிட்டு உலக மேலாதிக்கத்தில் சீனா முதலிடம் வகிக்க போகிறது” என்பதை சீன அதிபர் ஜி ஜின்பிங் பகிரங்கமாகவே வெளி வைத்ததை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
இந்த சூழலில் அமெரிக்காவிற்கு போட்டியாக ’ஜனநாயகத்தை’ வழங்குகின்றேன், நாடுகளின் வளர்ச்சிக்கு கடன் வழங்குகிறேன் என்ற போர்வையில் புதிதாக உலகை கட்டுப்படுத்த ’சிவப்பு போர்வையில்’ நடமாடிக் கொண்டிருக்கும் சீனாவின் நயவஞ்சகத்தை தோலுரித்து அம்பலப்படுத்துவதே பாட்டாளி வர்க்கத்தின் கடமையாக மாறிஉள்ளது.
- முகம்மது அலி.