ந்தியாவில் 90களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் படிப்படியாக இந்த நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் பிடியில் செல்வதை உத்தரவாதப்படுத்தி வந்தது.

மறுகாலனியாக்கத்தை திணிக்கின்ற காட் போன்ற ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அமலாக்கப்பட வேண்டும் என்ற விதிகளை ஏற்கனவே ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி திறம்பட கடைப்பிடிக்கவில்லை. கார்ப்பரேட்டுகள் எதிர்பார்த்தபடி விரைவாக அனைத்தையும் வாரி கொடுக்கின்ற செயல்களை செய்யவில்லை என்பதாலேயே கார்ப்பரேட்டுகளின் நேரடியான கைக்கூலிகளும், ‘ தேசபக்தர்கள்’ என்ற போர்வையில் உலவி வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங் பரிவார கும்பல் 2014 ஆம் ஆண்டு நேரடியாக இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

இந்த அதிகாரத்தை கைப்பற்றிய காலத்தில் இருந்து இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள்; இயற்கை கனிம வளங்கள்; காடுகள்; கடல் வளங்கள் மட்டுமின்றி, பல்லுயிர் காப்பகங்கள், வனவிலங்கு பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் உள்ளிட்ட இயற்கை உயிர் வாழ் இடங்கள் மட்டுமின்றி, ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கப்படுகிறது.

அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளில் இந்தியாவில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் தரகு முதலாளிகளிலேயே வளர்ந்து வந்த தேசங்கடந்த தரகு முதலாளிகள் நாட்டை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்று சூறையாடி வருகிறார்கள்.

இதற்கு எதிராக போராடுகின்ற நாட்டுப் பற்றாளர்கள், மனித உரிமை போராளிகள் ஆகிய அனைவரும் நகர்ப்புற நக்சல்கள் என்ற பெயரில் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். மாவோயிஸ்டுகள், நக்சல்பாரி அரசியலை ஏற்று செயல்படுகின்ற கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரையும் அடக்கி ஒடுக்குவது, கொன்று ஒழிப்பது என்பதில் பாசிச பாஜக அரசாங்கம் கொலை வெறியாட்டம் ஆடி வருகிறது.

இந்த நாட்டில் இன்னமும் இறையாண்மை இருப்பது போலவும், ஜனநாயக ரீதியிலான ஆட்சி தான் நடந்து கொண்டிருப்பது போலவும் குட்டி முதலாளித்துவ அற்பவாதிகளும், மார்க்சியத்தின் பெயரால் குழப்பித் திரிகின்ற பல்வேறு பித்தலாட்டப் பேர்வழிகளும், பாசிசம் வந்தால் அதனை எதிர்ப்போம்! என்று இந்தியாவில் பாசிசம் அதிகாரத்திற்கு வரவில்லை, அவ்வாறு வரவில்லையாதலால் எங்களது நீண்ட கால திட்டத்தையே பஜனை போல செய்து கொண்டிருப்போம் என்று பிதற்றி வருகின்றனர்.

சமீபத்தில் பொலிவியாவில் அதிக அளவில் இனப்பெருக்கமான நீர்யானைகளை இந்தியாவில் உள்ள தனது பூங்காவிற்கு அனுப்பி வைக்குமாறு அம்பானி குழுமத்தின் உரிமையாளர் ஆனந்த் அம்பானி கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு இணையாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், அணு உற்பத்தி நிலையங்கள், சுரங்கங்கள் போன்றவை உருவாக்கப்பட்டது மட்டுமின்றி உயிரியல் பூங்காக்களையும் தனியார் நடத்தி வருகிறார்கள் என்ற செய்திகள் பிரபலமாகி வருகிறது.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி நடத்தும் வந்தாரா விலங்கியல் பூங்காவில், நூற்றுக்கணக்கான யானைகள், புலிகள் மற்றும் பிற விலங்குகள் உள்ளன. மோடியின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் சுமார் 2000 கோடி ரூபாய் செலவு செய்து 3500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது இந்த விலங்கியல் பூங்கா.

பொலிவியாவில் கொன்றொழிக்க பட இருந்த நீர்யானைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்து அதனை பாதுகாப்பது என்ற அளவிற்கு மிகப்பெரும் மனிதாபிமான வாதியாக தன்னை காட்டிக் கொள்கின்ற கார்ப்பரேட் கொள்ளை கூட்டத்தின் தலைமை கொள்ளைக்காரர்களில் ஒருவரான அம்பானி நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுவது; அவற்றுக்கு எதிராக போராடுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகளை கடுமையாக ஒடுக்குவதை உத்தரவாதப்படுத்துவது தான் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம் ஆகும்.

இதற்கு நிகராகவே கொலம்பியா மற்றும் பொலிவியா போன்ற நாடுகளில் இருந்து, அதானி குழுமம் குஜராத்தில் அமைத்து வரும் பிரம்மாண்ட விலங்குகள் காப்பகத்திற்கு (Greens Zoological Rescue and Rehabilitation Kingdom) நீர்யானைகள், சிங்கங்கள், வரிக்குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு விலங்குகளைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது.

படிக்க:

 எல்.ஐ.சி யின் பணத்தை எடுத்து அதானிக்கு கறி விருந்து படைக்கும் பாஜக அரசு!

 அதானிக்கு நிலம் 1 ரூபாய்! மக்களுக்குப் புற்றுநோய் இலவசம்!

பொலிவியாவில் இருந்து அதானி பூங்காவுக்கு (அதானி குழுமத்தின் கிரீன்ஸ்வாலஜிக்கல் ரெஸ்க்யூ அண்ட் ரிஹாபிலிடேஷன் கிங்டம், குஜராத்) நீர்யானைகள் (Hippopotamus) கொண்டுவரப்படுவது தொடர்பான செய்திகள் கடந்த காலங்களில் வெளியாயின. இதுவும் அம்பானி குடும்பத்தால் உருவாக்கப்பட்டுள்ள உயிரியல் பூங்காவும் உலகிலேயே மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“இந்தியாவை நான்கு இந்தியர்கள் ஆள்கிறார்கள். அதில் இரண்டு இந்தியர்கள் விற்கிறார்கள். இரண்டு இந்தியர்கள் வாங்குகிறார்கள்” என்று சுருக்கமாக கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை 2023 வாக்கிலேயே தோலுரித்துக் காட்டினார் எழுத்தாளர் அருந்ததிராய்.

அம்பானி, அதானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு முதலாளிகள் நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுவது; அவர்களின் பிரதிநிதியாக இந்தியாவை ஆண்டு வருகின்ற கார்ப்பரேட் கைக்கூலிகளான ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் உண்மையாக நாட்டை பாதுகாக்க போராடுகின்ற கம்யூனிச போராளிகளை தேச துரோகிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்று பீதியூட்டி மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

நாட்டின் பெரும்பான்மை மக்களான தொழிலாளர்கள் விவசாயிகள் சிறு குறு தொழில் முனைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வாங்குகின்ற ஜியோ நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் அவர்களுக்கு பல்லாயிரம் கோடி லாபமாக கொட்டுகிறது. இதனை வைத்துக் கொண்டு மேலும் நாட்டின் சொத்துக்களை வாங்கி குவித்து இணையான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் 1947 ஆம் ஆண்டு பெறப்பட்டதாக கூறப்படும் போலி சுதந்திரத்தை ஒழித்துக் கட்டிவிட்டு, அப்பட்டமான, அம்மணமான மறுகாலனியாக நாட்டை மாற்றுவதற்கு ஆயிரம் கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தை ஏந்தி வரும் ஆர் எஸ் எஸ் பாஜகவை வீதியில் வீழ்த்துவதற்கு போராடுவதைத் தவிர மாற்று வழி கிடையாது.

மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here