தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடந்து முடிந்துள்ளது. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் குவிந்துள்ளதையும், உற்சாகப் பெருக்கெடுத்து தன் தலைவனை பார்த்து அவர்கள் கத்தி குதுகலிப்பதையும் செய்தி சேனல்கள் அவ்வப்போது காட்டி வருகின்றன. முகநூல், இன்ஸ்டா என காட்சித் துணுக்குகள் பரப்பப்பட்டுள்ளன.
மாநாடு தொடங்கும் முன்னரே பிளாஸ்டிக் சேர்களை போட ஒத்துக் கொண்ட ஒப்பந்ததாரர்கள் காலை வாரிவிட்டதால் கேரளாவில் இருந்து சேர்களை கொண்டு வந்து அடுக்கியதை ஒளிபரப்பினர்.
100 அடி உயர கொடிக்கம்பத்தை கிரேன் உதவியுடன் நடும்பொழுது ரோப் அறுந்து, கம்பம் சரிந்து, காரை அப்பளம் போல் நொறுக்கியதையும் மீடியாக்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பின.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டவுட் கட்டும்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞனை பற்றியும் செய்திகள் ஓடின.
இப்படி பல்வேறு வகையான விமர்சனங்களுடனும் எதிர்பார்ப்புகளுடனும் அதிர்ச்சிகளுடனும் ஒரு வழியாக தவெக – வின் மதுரை மாநாடு நடந்து முடிந்துள்ளது.
விஜய்யின் நண்பன் யார் ? எதிரி யார்?
தமிழக வெற்றி கழகத்தின் விஜய் தமக்கு கொள்கை எதிரி என்று பாஜகவையும், அரசியல் எதிரி என்று திமுகவையும் அதாவது ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதா கட்சி கொள்கை எதிரியாகவும், தமிழகத்தை ஆண்டு வரும் மு.க.ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் எதிரியாகவும் இருப்பதாக விளக்கினார். இது முதல் மாநாட்டில் கூறிய செய்திதான்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தியாகியான ஸ்னோலினின் தாயார் விஜய்யை தனது தம்பி என்று ஏற்றுக் கொண்டாராம். அதாவது ஸ்னோலினுக்கு விஜய் தாய் மாமாவாம். கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் அப்படி தான் ஒரு தாய் மாமா தான் என்று விளக்கினார் விஜய்.
மற்றவர்களைப் போல் மார்க்கெட் போனபின் அரசியலுக்கு வரவில்லையாம் மார்க்கெட் இருக்கும்பொழுது மக்கள் படையை கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளாராம். விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்கிறது கும்பல்.

நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவாஜியிடம் கேமரா தேவைக்கு அதிகமான நடிப்பு இருக்கும் என்பார்கள். இப்போது சினிமாவில் இருந்து வந்துள்ள விஜய் மாநாடு மேடைக்கேற்ப முகபாவங்களைக் கூட்டி நடிக்க முயற்சிக்கிறார். ஒரளவு வென்றும் உள்ளார். குரலில் ஏற்ற இறக்கங்கள் உணர்ச்சி ததும்பும் உச்சரிப்புகள் என தான் ஒரு நடிகன் என்பதை அழுத்தமாகவே நிரூபிக்கிறார். நாம் விஷயத்திற்கு வருவோம்.
அது என்ன கொள்கை எதிரி?
பாரதிய ஜனதா கட்சியானது இந்துராஷ்டிரத்தை அமைக்க போவதாக தனது லட்சியமாக அறிவித்துக் கொண்டுள்ளது. அதற்கு தடையாக இருப்பார்கள் என்று வகைப்படுத்தி இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும், தலித் மக்களையும், பகுத்தறிவாளர்களையும், கம்யூனிஸ்டுகளையும் நரவேட்டை ஆடி வருகிறது.
மற்றொருபுறம் கார்ப்பரேட்டுகளுக்கு அதாவது தேசம் கடந்த தரகு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய நாடுகளின் கார்ப்பரேட்டுகளுக்கும் நமது நாட்டை அகல திறந்து விட்டு கொள்ளையிடத் துணை நிற்கிறது.
மோடியின் எஜமானவர்களாக உள்நாட்டில் அம்பானி, அதானி, அனில் அகர்வால் போன்றோர்களும், உலக அளவில் ஹூண்டாய், ஃபோர்ட், மைக்ரோசாப்ட், சாம்சங் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்களும்தான் உள்ளனர்.
பாசிச மோடி இந்திய மக்களிடம் சுதேசி பேசிக்கொண்டு, தானே ஒரு விதேசியாக வலம் வருகிறார். இந்த கொள்கையில் இருந்து தமிழக வெற்றிக் கழகமோ விஜயோ எதில் வேறுபடுகின்றனர்? இதற்கு மாற்றாக தாங்கள் எத்தகைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, தொழிற் கொள்கையை, முன்வைக்கின்றனர்? தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையும் திட்டமும் தான் என்ன என்பது வெளிப்படையாக தெரியவில்லை.
அது என்ன அரசியல் எதிரி?
விஜய்க்கு யார் இந்த அரைவேக்காட்டுத்தனமான ஸ்கிரிப்ட் எழுதி தந்தார்களோ தெரியவில்லை. விஜய் பேசுவதை கேட்க சிரிப்பை அடக்க முடியவில்லை. கொள்கைக்கு ஓர் எதிரி என்று பிஜேபியை அறிவித்தாகி விட்டது. அடுத்ததாக அரசியலுக்கு ஒரு எதிரி என்று திமுகவை சுட்டிக் காட்டுகிறார்.
திமுகவின் செயல்பாடுகளில் இந்தி சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பையோ, கல்வியை காவி மயமாக்க மறுத்து தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எதிர்ப்பு காட்டி வரும் அரசியலையோ, கீழடியை ஊத்தி மூட எத்தணிக்கும் பாஜக அரசின் அயோக்கித்தனங்களுக்கு எதிராக களமாடுவதையோ, மதுரையில் கலவர குன்றம் ஆக்க எத்தனிக்கும் சங்கிகளை (பெயரளவேனும்) எதிர்த்து நிற்பதையோ எப்படி பார்க்கிறார் என்று தெரியவில்லை.
திமுகவின் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்கள், சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் தொழிலாளர்களை கைவிட்டது, குப்பை அள்ளுவதைக்கூட கான்ட்ராக்ட்களுக்கு விட்டு துப்புரவு தொழிலாளர்களை குப்பைகளைப் போல் வீசி எறிவது, போராடிய துப்புரவு தொழிலாளர்களை மிரட்டி பணிய வைக்க எத்தனித்ததையும், சாதி ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வராமல் இருப்பது பற்றியோ எதுவும் பேசவில்லை.
அப்பறம் என்ன “அரசியல் எதிரி” என்று தெரியவில்லை. பொதுவாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு என்று உருட்டுகிறார்.
மற்ற கட்சிகள் எல்லாம் கட்சி தொடங்கியபின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைய (ஆதரவு பெற) முயற்சிக்கின்றனர். ஆனால் விஜயோ ஏற்கனவே ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டுதான் கட்சியையே தொடங்கியுள்ளாராம். பஞ்ச் டயலாக் நன்றாகத்தான் இருக்கிறது.
படிக்க: ஆளும் வர்க்கம் உருவாக்கும் நபர்கள் தான் விஜய்யும் சீமானும்! | மக்கள் அதிகாரம் | தோழர் சி.ராஜூ
அவரது உரையில் சவடால் பேச்சுக்களுக்கு குறைவில்லை. ரசிகனை, தொண்டனை உசுப்பி விடுவதற்கு இத்தகைய பேச்சுகள் மட்டுமே போதும் என்பதுதான் விஜயின் கணக்கு.
தமிழகத்தையோ, இந்தியாவையோ ஆள்பவர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் தான் உள்ளனர். பெரும்பான்மையான கிராமப்புறங்களில் பார்ப்பனியத்தின் நால்வர்ண அடிப்படையில் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி வருவதும், ஆணவக் கொலைகளை அரங்கேற்றி வருவதும் தான் கள எதார்த்தமாக உள்ளது. தனது தொண்டனையோ, ரசிகனையோ சாதி ஆதிக்கத்துக்கு எதிராக, ஆணவ படுகொலைக்கு எதிராக களத்துக்கு வர சொல்கிறாரா என்றால் இல்லை. அவரே வாய்திறக்க மறுக்கிறார். அவர் எங்கே ரசிகர்களை சாதி ஆதிக்கத்துக்கு எதிராக களமிறக்குவது?
அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் விஜய்!
பாசிச மோடி, ஜெயலலிதா பாணியில் ஒவ்வொரு தொகுதியிலும் ‘அவரே ‘ நிற்கிறாராம். அவர் சார்பாக நிற்கும் ஒவ்வொருவருக்கும் மக்கள் போடும் ஓட்டானது விஜய்க்கு போடும் ஒட்டுதானாம். விஜயின் சார்பில் யார் ஜெயித்தாலும் அது ஓட்டு போட்ட ஒவ்வொரு குடும்பத்தினரின் வெற்றியாகுமாம்.
சினிமா கதாநாயகர்களின் கவர்ச்சி அரசியல் பார்முலாவை தான் விஜயும் உயர்த்தி பிடிக்கிறார். எம்ஜிஆர், விஜயகாந்த்துக்கு அடுத்து இவர்களின் வாரிசாக விஜய் களமிறங்கியுள்ளாராம். எம்ஜிஆரையும், விஜயகாந்த்தையும் கட் அவுட்டில் போடுவதற்கு அதிமுகவும் தேமுதிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் கதாநாயகனாக நடித்ததன் விளைவாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடம் விஜய் மீது ஒரு ஈர்ப்பு உருவாகியுள்ளது. தமிழகத்தில் நேரடியாக திமுகவையோ அல்லது அதிமுகவையோ எதிர்த்து நின்று வேர் பிடிக்க முடியாமல் பாஜக தொடர்ந்து தள்ளாடியே வருகிறது. பகையாளிக்குடியை உறவாடி கெடுக்கும் தந்திரத்துடன் அதிமுகவை பிளவுபடுத்தி காரியம் சாதித்துள்ளது பாஜக. காரியம் முடிந்த பின் கருவேப்பிலையை தூக்கி எறிவது போல ஒபிஎஸ்ஐ கழட்டி விட்டு, மீண்டும் மீண்டும் கூட்டணி அரசுதான் என்று அறிவித்து எடப்பாடியின் நெஞ்சு அழுத்தத்தை எகிர வைத்துள்ளது. அதிமுகவை அஸ்திவாரம் அற்றதாக மாற்றும் வேலையில் முன்னேறியும் உள்ளது. அந்த அதிமுகவுக்குப் பதிலாக 2026ல் திமுக vs தவெக தான் என்கிறார் விஜய்.
ஸ்டாலினை நோக்கி “பதில் சொல்லுங்க அங்கிள்” என்று கிண்டல் அடிக்கும் தொணியில், உணர்ச்சியை தூண்டிவிடும் பஞ்ச் டயலாக்குகளை கொண்டு விஜயின் உரை கட்டமைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமே இருந்தது என்பதுதான் குறை.
தமிழக மக்கள் இலவு காத்த கிளி போல் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றால் தமிழக வெற்றி கழகத்தினரின் சட்டையை பிடித்து, உனது கொள்கை என்ன? தற்போதைய ஆட்சிமுறையில் இருந்து மாற்றாக நீங்கள் வைக்கும் திட்டம் தான் என்ன? என்று தாய்மாமனையும், மருமகன்களையும் உலுக்கி கேட்க வேண்டும்.
- இளமாறன்







தாவெகா மாநாடு ஒரு அரவேக்காடு மாநாடு கொள்கையோ, பிடிப்போ எதுவே இல்லாமல் வாய் சவடால் மட்டும் அடித்துக் கொண்டிருக்கிறார் தற்போது ஆட்சியில் இருப்பவர்களை கண்டித்து அதற்கு மாற்றாக எந்த ஒரு கொள்கையும் இளைஞர்களை முன்னேற்றும் விதமாக இந்த சமூகத்தை முன்னேற்றும் விதமாக எந்த ஒரு திட்டமும் இல்லாமல் சினிமா பாணியில் வாய்க்கு வந்ததை எல்லாம் கொட்டி தீர்த்து தான் வென்று விடலாம் என்று நினைப்பதை தவிடு பொடி ஆக்கி இளைஞர்களை இவர்கள் பக்கம் திரும்பாமல் நாம் திசை திருப்ப வேண்டும்
தவெக மதுரை மாநாடு ஒரு அறவே காட்டு பஞ்ச் டயலாக் பேச்சாக முடிந்துள்ளது கொள்கை எதிரியை பற்றியோ ? அரசியல எதிரி பற்றியோ ? எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை மாநாட்டில் நடந்த நிகழ்வுகள் விபத்துக்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் தவெக வின் கொள்கை என்ன ? கோட்பாடு என்ன ?அவர் எந்த திசையில் பயணிக்க போகிறார் என்ற எந்த விதமான கேள்வியும் ஊடகங்கள் கேட்கவில்லை தவெக தலைவரும் விஜயையும் அவருடைய கொள்கை என்ன கோட்பாடு பற்றி மக்களுக்கு விளக்கவில்லை எம்ஜிஆர் விஜயகாந்த் தனது தலைவர்களாக வருணித்து கட்டவுட்டில் போட்டு உள்ளார் மக்களுக்கு அரசியல் மாற்றத்தையோ ஆட்சி மாற்றத்திற்கான தீர்வையோ சொல்லாத ஒரு அரைவேக்காடு தற்குறி விஜயாக முடித்துள்ளார் மாநாட்டை கட்டுரை ஆசிரியர் இளமாறன் அவர்கள் சரியாக தெளிவுபடுத்தி உள்ளார்
கொள்கை இல்லாத கோமாளி திரைப்படம் ரிலீஸ் ஆனது, மாநாடு ரெண்டு உணர்த்தும் உண்மை சம்பவம் தான் இது, பாஜகவையும், ப்ளீஸ் ப்ளீஸ் நீட் விலக்கு தாருங்கள் என்று கெஞ்சுவதும், தி.மு.க.வை அங்கிள் என்று நடிப்பின் உச்சத்தை தொட்டு இருக்கிறார், விஜய் மக்கள் களத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் பேசாதபோதும், தற்போது நடந்த துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தையும் ஒருபோதும் இந்தப்படம் திரைக்கு வராத படம் தான் இது