2024ஆம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது, அதானியின் மீது மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதில் சூரிய மின்சக்தி தொடர்பான ஒப்பந்தங்களை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலருக்கும் அதிகமாக லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து, தவறான தகவல்களை அளித்து சுமார் 750 மில்லியன் டாலர் வரை, அமெரிக்க முதலீட்டாளர்கள் உட்பட பலரிடம் இருந்து முறைகேடாக நிதி திரட்டியதாக அதானியின் மீது அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், சென்ற ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, 10 பில்லியன் டாலர் (சுமார் 95,000 கோடி) அமெரிக்காவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதானி அறிவித்தார். தன் மீதான குற்ற வழக்கில் இருந்து தப்பிக்க அதானி எடுக்கும் தந்திர முயற்சியாக இது அப்போதே பார்க்கப்பட்டது. இப்போது அது நடைமுறைக்கு வருகிறது.
கடந்த மே முதல் வாரத்தில் கவுதம் அதானியும் அவரது மருமகன் சாகர் அதானியும் சேர்ந்து 18 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் துறைமுகங்கள், எரிசக்தி, தரவு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமம் அறிவித்தது. முதல் கட்டமாக அதானி நிறுவனம் 275 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீட்டு ஒப்பந்தம் ஒன்றை மே 14 அன்று மேற்கொண்டது.
இத்தகைய முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் வந்தவுடன், அவர் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை கோரிக்கை வைத்தது.
“அதானி மீதான குற்றச்சாட்டில் கூறப்படும் சம்பவங்கள் பெரும்பாலும் இந்தியாவில் நடந்தவை. மேலும் இவ்வழக்கில் அமெரிக்காவுடனான தொடர்பு குறைவாக உள்ளது. வெளிநாட்டில் உள்ள சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் காரணமாக குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிப்பது கடினம். எனவே வழக்கை வெற்றிகரமாக நடத்துவதற்கான வாய்ப்பும் குறைவாக உள்ளது. ஆகவே அமெரிக்காவுக்கு நேரடி பாதிப்பு அதிகம் உள்ள வழக்குகளில் கவனம் செலுத்துவதே பொருத்தமானது” என்று பல்வேறு காரணங்களை அடுக்கியது.
இதன்மூலம் அதானிக்கு எதிராக நியூயார்க்கில் நடைபெற்று வந்த பத்திரங்கள் மற்றும் பணப்பரிமாற்ற மோசடி வழக்கு முடிவுக்கு வரவுள்ளது. ஆனாலும் இந்த வழக்கை திடீரென முடிவுக்கு கொண்டு வர நியூயார்க் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கரோஃபிஸ் மறுப்பு தெரிவித்து, இவ்வழக்கை ஏன் கைவிட வேண்டும் என்பதற்கான விரிவான விளக்கத்தை அமெரிக்க நீதித்துறையிடம் கேட்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இந்தக் குற்றவியல் வழக்கைத் தள்ளுபடி செய்த நடவடிக்கை குறித்து இரண்டு கேள்விகளுக்கு ஜூலை 15 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்குமாறு அதானிக்கும் உத்தரவிட்டுள்ளார். முதல் கேள்வியாக, குற்றப்பத்திரிகை தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக யாரேனும் வாக்குறுதி அளித்த, ஒப்புக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட ஏதேனும் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்றும், இரண்டாவதாக குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்வதற்கு ஈடாக ஏதேனும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்களா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
படிக்க:
♦ அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்கா விதித்த அபராதம்! பம்மிப் பதுங்கும் பாஜக அரசு!!
♦ லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் பெற்ற மோசடி மன்னன் அதானியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!
இந்த வழக்கைப் பொறுத்தவரை இதை தள்ளுபடி செய்வதற்கான நியாயமான காரணங்களை விளக்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் தவறிவிட்டது என்று கூறிய நீதிபதி, இப்போது கூடுதல் விபரங்களை கோரியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் துறையின் உயரதிகாரி ஒருவர் ஜோ பைடனின் அதிபர் பதவிக் காலத்தின் இறுதியில், அதானிக்கு எதிரான பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப் பட்டிருக்கவே கூடாது என்று கூறினார்.
அடுத்து நீதித்துறையின் இணைத்துணை அட்டர்னி ஜெனரலான ஆர். ட்ரன்ட் மெக்காட்டர் ஜூலை 4 அன்று தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த வழக்கு வெளி விவகாரத்துறை சம்பந்தமானது என்றும், இதற்கான ஆதாரங்களை காட்டுவதில் சிக்கல் உள்ளதாகவும், இந்த பத்திர விவகாரங்களில் ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்றும் வாதிட்டார். மேலும் இந்த வழக்கை கைவிடுவதற்கான முடிவு, இவ்விவகாரத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாகவும், அதானி அமெரிக்காவில் முதலீடு செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் சர்வதேச விரிவாக்கத் திட்டங்களை இந்த வழக்கு பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சாதகமாக வழக்கைத் தள்ளுபடி செய்யும் வேலை வேகமாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஹிண்டன்பர்க் மூலமாக, அதானி இந்திய பங்குச்சந்தையில் நடத்திய மோசடி அம்பலமாகி அவரது பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனாலும் அவர் மோடியின் ஆசீர்வாதத்தோடு எந்த தண்டனையும் இன்றி மோசடிப் புகாரில் இருந்து தப்பினார்.
இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பில் அதானி போன்ற கார்ப்பரேட் கிரிமினல்களுக்கு தண்டனை கிடைப்பது குதிரைக் கொம்புதான் என்பதை அமெரிக்காவில் நடக்கும் இந்த வழக்கும் நிரூபிக்கத்தான் போகிறது.
- குரு






