சென்னையில் ஒரு MNC நிறுவனத்தில் வேலை பார்க்கக்கூடிய நன்கு படித்த 26 வயது இளைஞன் மாத சம்பளம் 20,000 வாங்குகிறார். திருமணம் ஆகி இரண்டு வயது குழந்தையும் உள்ளது. குடும்ப நெருக்கடியின் காரணமாக அவருக்கு சொந்தமாக வீடு இல்லை. அதன் காரணமாக சமூகத்தில் மதிப்பில்லை. வேலை பாதுகாப்பும் இல்லை. சம்பளம் உயர்த்தச் சொல்லி கேள்வி எழுப்பினாலே தூக்கி எறியப்படலாம் என்ற நிலைமை. படிப்பிற்காக வாங்கிய கல்விக் கடனும் இன்னும் முடிந்தபாடில்லை. தினமும் LinkedIN-ல் சக்சஸ் ஸ்டோரீஸ் பார்க்கிறார். இன்ஸ்டாகிராமில் மற்றவரின் வாழ்க்கையை பார்க்கிறார். தேர்தலில் ‘மாற்றம்’ வேண்டும் என்று கோபமாக வாக்களிக்கிறார். ஆனால் அவரின் கோபம் யாரை நோக்கி செல்கிறது என்று அவருக்கு தெளிவில்லை. இன்று தமிழக அரசியலின் முக்கியமான மனநிலையை இந்த இளைஞன் தெளிவுபடுத்துகிறார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியும், அதிமுக – பாஜக பாசிச கூட்டணியும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களிலேயே தனது சினிமா பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு பெரிய அளவில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடாவிட்டாலும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார், நடிகர் ஜோசப் விஜய். இது எவ்வாறு நடந்தது?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றிப் பெற்றது எப்படி சாத்தியமானது என பலரும் அவரவர் கோணங்களில் வாதங்களை நடத்தினாலும் பலரின் கருத்தும் இந்த ஒரு விஷயத்தில் ஒத்துப் போகிறது. சமூக வலைதளங்களின் மூலம் குறிப்பாக Instagram Influencerகளை பயன்படுத்தி அவர்களுக்கு கூலிகொடுத்து டிஜிட்டல் பிரச்சாரம் செய்ததன் மூலமே இவ்வெற்றி சாத்தியமானது என கூறுகிறார்கள். இதில் நடிகர் விஜய்க்கு நெருக்கமான இணையக் கூலிப்படையின் (ரூட் மாஃபியா) கைவரிசையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இது ஒன்று மட்டுமே தவெகவின் வெற்றிக்கு காரணம் என கூறுவது முழுமையான காரணமல்ல. மக்களின் மனநிலையை முழுமையாக அறியாமல் மேலேட்டமாக அணுகுவதாகும். எனவே மக்கள் ‘மாற்றம்’ வேண்டியதின் பின்னுள்ள அரசியலையும், அவர்கள் அரசியலற்ற அரசியலுக்குள் நுழைந்துள்ளார்கள் என்ற எதார்த்தத்தையும் நேர்மையாக பரிசீலிப்பதும் அவசியம்.
விஜய் வெற்றி பெற்றாலும் திமுக ஆதரவு கட்சி எம்எல்ஏக்களை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முயற்சித்ததும், பாஜகவின் கவர்னர் அர்லேக்கர் விஜய்யை அலையவிட்டதையும் நாம் செய்தியின் வாயிலாக பார்த்திருப்போம். அன்றைய தேதியில் இளைஞர்களுக்கு அதுமட்டும் தான் செய்தி. வேலைக்குச் செல்லக் கூடிய அல்லது கல்லூரிகளில் பயிலக் கூடிய இளைஞர்கள் அதுவரை அரசியல் பற்றி பேசாதவர்கள், அதில் நாட்டமே இல்லாதவர்கள், செய்தி என்றாலே தெறித்து ஓடுபவர்கள் தான்வாக்களித்து வெற்றிப் பெற்ற விஜய் எப்போது ஆட்சி அமைப்பார் என லைவ் செய்தியை இடைவிடாமல் பார்த்ததும், நானெல்லாம் செய்தியே பார்த்தது கிடையாது என்னையெல்லாம் செய்தி பார்க்க வச்சுட்டாங்க என சொன்னதும் ஒருவகையில் ‘மாற்றம்’ தான் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் வெறுமனே சமூக வலைதளங்களில் தவெக ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகவும் அல்லது ரசிக மனநிலையில் மட்டுமே வாக்களித்து மாற்றத்தை உருவாக்கி விட்டார்கள் என கருதக்கூடாது. சமூக வலைதள அறிமுகம் இல்லாத பெண்கள் கூட வாக்களித்துள்ளார்கள். திமுக, அதிமுக, காங்கிரசு, இடது, வலது, மதிமுக உள்ளிட்டக் கட்சிகளின் குடும்பங்களே விஜய்க்கு வாக்களித்துள்ளனர். இது விஜய் மீதான ஈர்ப்பு என்று மட்டுமே பார்க்க இயலாது. இந்தக் கட்சிகளின் மீதான அவநம்பிக்கை சமூக நெருக்கடிகளை தீர்க்க முடியாத கையாலாகாத்தனம் ஆகியவை குறித்த வெறுப்பையும் காட்டுகிறது.
அழுகி நாறிப்போன சமூக கட்டமைப்பும்,
அதன் மீது வெறுப்பு கொண்ட மக்களும்!
இந்தியாவில் லஞ்சமும் ஊழலும் சமூகமயமாகிவிட்டது என்ற காரணத்திற்காக அதன் மீது மக்களுக்கு இருந்த கோபம் இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தம் இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கின்ற சமூக சீர்கேடுகளுக்கு இவைதான் காரணம் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதிகார வர்க்கத்தில் உள்ள, கீழ்மட்டம் துவங்கி மேலதிகாரிகள் வரை லஞ்சம் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்பதையும் மக்கள் அறிவர். அரசும் அதன் இன்னபிற நிறுவனங்களும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்துக் கொண்டிருப்பதை நடைமுறை அனுபவங்களின் மூலம் மக்கள் உணர்ந்துள்ளார்கள். ஆனால் அதற்கான தீர்வாக, புதிதாக ஒருவரை தேர்ந்தெடுப்பதால் எல்லாம் மாறிவிடும் என அவர்கள் கருதியது தான் அவர்களின் மூடநம்பிக்கை.
படிக்க:
♦ கழுத்தில் கட்டிய கலயம் தற்போது அடையாள அட்டையில் அதிகாரப்பூர்வமாகிறது! பாசிசக் கோமாளி விஜய் ஆட்சியில்
♦ கொல்லூர் ‘ஸ்ரீமூகாம்பிகை’யும் – எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் கும்பல் கூத்துக்களும்!
கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல சில லட்சங்கள் செலவு செய்து படிப்பிற்காக கடன் வாங்கி படித்து எப்படியாவது நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்து, நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய தந்தையையின் சுமையையும், குடும்பத்தின் வறுமையையும் போக்கிவிடலாம் என கனவுகண்ட இளைஞர், மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு 8 மணி நேரம் முதல் நேரம் 10 மணி நேரம் உழைக்க வேண்டும்; தன் குழந்தையே இறந்தாலும் விடுமுறை எடுக்காமல் வேலைக்கு வர வேண்டும்; ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பும் கேட்க கூடாது; சட்டத்தின் படி நடக்க ஆலை நிர்வாகத்தை நிர்பந்திக்கக் கூடாது என பல நிபந்தனைகளை விதிக்கும் முதலாளிக்கு, தான் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசே துணை நிற்கும் பொழுது அந்த இளைஞனின் கோபம் என்ன செய்யும். (இதற்கு சாம்சங் தொழிலாளர்களின் போராட்ட அனுபவம் மிகச் சிறந்த உதாரணம்) தனக்கு இருக்கும் ஒரே அதிகாரம் வாக்களிப்பது தான். அதை பயன்படுத்தி தன்பிரச்சினையை மாற்றிவிடலாம் என அவன் கருதுகிறான். இப்படி ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த கட்டமைப்பால் பாதிக்கப்பட்ட அனுபவம் இருக்கும்.
மூன்று அடிக்கு மேல் மண் அள்ளக் கூடாது என்பது அரசின் விதி. ஆனால் 30 அடிக்கு மேல் அள்ளுவார்கள்; டாஸ்மாக்கை அதிகாலையிலேயே போலீசின் பாதுகாப்புடன் சட்டவிரோதமாக திறந்து வைத்திருப்பார்கள்; ஆற்றில் கழிவை கலப்பார்கள்; தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை; சட்டம் இருந்தும் சங்கம் வைக்க அனுமதியில்லை; அரசு அலுவலங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது; உரிமைகளை கேட்டுப் போராடினால் காவல்துறையைக் கொண்டு அடக்குமுறை, இப்படி மக்கள் தான் பட்ட பாதிப்பிலிருந்து ஆயிரம் அனுபவங்களை அடுக்குவார்கள். அத்தனையும் ஆண்ட அரசுகளின் சாட்சியமாய் நிற்கும். பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவது தெரிந்தும் அது மக்களிடம் விமர்சனமாக மாறினாலும் கூட, தேர்தல் நேரத்தில் பணத்தை வாரி இறைத்தால் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள் அரசியல்வாதிகள். ஏனென்றால் இத்தனை காலமும் இதைத்தான் செய்துவந்தார்கள்.
அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் என அவர்கள் அடித்துள்ள கொள்ளைகள் மக்களுக்கு தெரியாதா என்ன. அனைத்தும் விலை உயர்ந்த கார்களாகவும், மால்களாகவும், மாட மாளிகைகளாகவும் கண்முன்னே காட்சியளிக்கின்றன. அது மட்டுமில்லாமல் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் அடிக்கும் கூத்து, வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை அடிமைகளை போன்று நடத்துவது இவையெல்லாம் இசசமூகத்தில் கெட்டி தட்டிப் போன விஷயங்கள். இதை தமிழ்நாட்டில் அரங்கேற்றியதில் திமுக – அதிமுக இரண்டு கட்சிக்கும் பெரிய பங்கு உண்டு.
படிக்க:
♦ விஜய் ரசிகர்கள் கூட்டம் படிப்பினை பெற வேண்டும்!
♦ கவர்ச்சி மோக – பொறுக்கி அரசியலும் நடிகர் விஜய் பதவியேற்பும்!
இதை நான் மாற்றுகிறேன்(மாற்ற முடியாது என்பது வேறு விசயம்) என்று புதிதாய் ஒருவர் வருகிறார். ஏற்கனவே மக்கள் மத்தியில் பரீட்சயமான அவரை, மீட்பராக மக்கள் கருதுகிறார்கள். வாக்களித்து அரியணையிலும் அமர வைத்திருக்கிறார்கள். மேற்கண்ட பிரச்சினைகளுக்காக அவர்கள் எடுத்த முடிவை சரி என்று சொல்லிவிடமுடியாது. தமிழக இளைஞர்களிடம் இன்று ஆழமான கோபம் இருக்கிறது ஆனால் அந்த கோபம் ஓட்டாக மாற்றம் தந்திருக்கிறதே ஒழிய இன்னும் வர்க்க உணர்வாக மாறவில்லை. அது சில நேரங்களில் ஊழல் எதிர்ப்பு(Anti corruption) அரசியலாகவும், சில நேரங்களில் ரசிகர் அரசியலாகவும்(தவெக), சில நேரங்களில் டிஜிட்டல் வெறுப்பாகவும் (cockroach Janta party) வெளிப்படுகிறது. இந்த முரண்பாட்டை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தின் மாநில அரசியல் சூழலை புரிந்து கொள்ள முடியாது.
ஏன் இந்த கோபம் வர்க்க அரசியலாக மாறவில்லை
அதிகார வர்க்கத்திற்கு எதிராக மக்கள் மனநிலை மாறும் பொழுது, அவர்கள் சரியான திசைவழியில் சென்றுவிடக் கூடாது என்பதில் ஆளும் வர்க்கம் எப்போதுமே கவனமாக செயல்படும். அதன் சமீபத்திய வெளிப்பாடுகள் தான் எவ்வித இலக்கும் இல்லாமல் நடக்கும் ஜென்சி போராட்டங்கள். இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஜென்சி போராட்டங்கள், தங்களுக்கு எதிராய் இருந்த அரசு கட்டமைப்பை மாற்றாமல் அதிகாரத்தை மட்டும் மாற்றும் திசைவழியில் கொண்டு செல்லப்பட்டது. அதாவது இதுவரை தாங்கள் அனுபவித்த இன்னல்களுக்கு காரணமாய் இருந்த அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம் உள்ளிட்ட இன்னபிற நிறுவனங்களை மாற்றாமல் ஆட்சியாளர்களை மட்டுமே மாற்றுவதாய் முடிந்தது. இது பலனை தராது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. உலகை மாற்றும் சிறந்த தத்துவத்தை விட அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்படும் மீட்பர்கள் பக்கம் திசைதிருப்படுகிறார்கள்.
படிக்க:
♦ ஹத்ராஸ் சம்பவத்தை நினைவூட்டும் நடிகர் விஜய்யின் ஆட்சி!
♦ சந்தேகமே இல்லை! விஜய் தற்குறிதான்! தலைக்கனமேறிய அசல் சங்கிதான்!
உலக சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவும் மக்கள் இடர்பாடுகளில் சிக்கும் போதெல்லாம் அவர்களை மீட்க அல்லது காப்பாற்றுவதற்கு மீட்பர்களை விதவிதமாக உருவாக்குகிறார்கள். அதுபோல்தான் தமிழ்நாட்டு மக்களும் தனக்கு இருக்கும் பொருளாதார பிரச்சனைகளையும் ஊழல் லஞ்சங்களை ஒழித்துக்கட்டும் மீட்பரை தேடுகிறார்கள். ஒரு நாள் முதல்வன், ஒருவிரல் புரட்சி என தமிழக இளைஞர்களும் ரசிக போதைகள் சிக்கியிருக்கிறார்கள். திரையில் இருப்பவர்கள் தரைக்கு வரும்பொழுது அவர்களை மீட்பராக கருதுகிறார்கள். அதற்கு ஒத்து ஊதுவுவது போல மீட்பர் பேசும் வசனங்களுக்கு ஏற்ப பேக்ரவுண்ட் மியூசிக் வைத்து மேலும் ஹைப்பு ஏத்தி பரப்புகிறார்கள். உதாரணமாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் பாடல் எவ்வளவு வேகமாய் தமிழகத்தில் மக்களிடையே பரவியது என்பதை நாம் பார்த்திருக்கலாம்.
ஒரு சமூகத்தில் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தவறும் போது அல்லது லஞ்சம் ஊழல் போன்றவற்றால் மக்களின் மன நம்பிக்கையை இழக்கும் பொழுது அதற்கு அதிகார நெருக்கடி ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் மக்கள் தங்களின் பாரம்பரிய கட்சியிலிருந்து விலகி ஒரு அதிசய மனிதர் அல்லது கவர்ச்சிகரமான தலைமை பின்னால் அணி திரளுகிறார்கள்.
அதே நேரம், தன்னுடைய பிரச்சினைக்கான உண்மையான காரணத்தையும், அதற்கான தீர்வையும் இந்தியாவில் உள்ள பல்வேறு மார்க்சிய – லெனினிய அமைப்புகள் முன்வைத்தாலும், பெரும்பாலானவர்கள் அதனை நீண்டகால போராட்டமாக கருதுகிறார்கள். உடனடி தீர்வை நோக்கி முன்தள்ளப்படுகிறார்கள. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பலின் ஆதிக்கமும், முதலாளித்துவ சுரண்டலும் தீவிரமானது. இதன் காரணமாக வேலையின்மையும், பசி, பட்டினியும் அதிகரித்து வந்தது. 2014-ல் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சமூக ஏற்றத்தாழ்வு பன்மடங்கு அதிகரித்து வருவதும் அதற்கு பாசிச மோடி அரசு துணைபுரிவதையும் புள்ளிவிவரங்கள் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இப்படியான சூழ்நிலையில் இதற்கு மாற்றானதொரு பொருளாதார கொள்கையும், திட்டமும் இல்லாமல் ஆட்சியதிகாரத்தை கைமாற்றுவதன் மூலம் மக்கள் தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அதில் உடனடி தீர்வும் சாத்தியமில்லை.
ஜோசப் விஜய் போன்ற கவர்ச்சிகர தலைவர்கள், பாசிசக் கோமாளிகள் மக்களின் தற்காலிகமான உணர்ச்சிகளை அறுவடை செய்கிறார்களே தவிர, நிரந்தரமான மாற்றத்தை உருவாக்குவதில்லை. இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. இன்று தமிழக இளைஞர்களின் கோபம் இன்னும் சந்தைக் கலாச்சாரம் மற்றும் மீட்பர் அரசியலின் மொழியில் பேசுகிறது. ஆனால் அந்தக் கோபத்தின் அடியில் பாதுகாப்பற்ற உழைப்பு, கடன், தனிமை, மற்றும் எதிர்கால அச்சம் இருக்கிறது. இந்த அனுபவங்கள் ஒருநாள் வர்க்க உணர்வாக மாறும் சாத்தியத்தை முழுமையாக மறுக்க முடியாது.
அத்தகைய சாத்தியத்தை மக்களின் சொந்த அனுபத்தின் மூலமாக பெறட்டும் எனக் காத்திருக்க முடியாது. மக்கள் மீது அழுத்தப்படும் அனைத்து சுமைகளையும் தூக்கியெறிய வேண்டும் என்றால் சுமையின் உண்மைத் தனமையை புரிய வைக்கும் சித்தாந்தமும், அதனை அமுல்படுத்தும் மா.லெ இயக்கமும் அந்த சாத்தியப்பாட்டை துரிதப்படுத்த வேண்டும் என்பதே இந்த தருணத்தைக் கடக்கும் வழியாகும்.
- காவிரி வளன்.
புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்
ஜூன் 2026 இதழ்







தமிழக வெற்றிக் கழகத்தின் திடீர் வெற்றிக்கு பின்னால்!
திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிதாக தவெக வந்தால் மாற்றம் கிடைக்கும் என நம்பி திமுக அதிமுக பாமக விசிக இடதுசாரிகள் கட்சிகளை சேர்ந்த குடும்பங்களே தவெக கட்சிக்கு வாக்களித்தது கடந்த காலம் ஆட்சியாளர்களின் மீதான அதிருப்தி வர்க்க கோபம் இல்லாமல் அரசியலற்ற அரசியலுக்குள் தமிழக மக்கள் சென்றுள்ளதை பார்க்க முடிகிறது. அதேபோல் கவர்ச்சி மோகமும் கவர்ச்சி வாத அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரும் என மக்கள் மாற்றத்தை தேடி உள்ளார்கள் இந்த அரசு கட்டமைப்பில் லஞ்சம் ஊழல் முறைகேடுகளை பார்த்து சகித்துப் போன மக்கள் மாற்றத்தை தேடி விஜய்யை ஒரு மீட்பாராக கருதியுள்ளார்கள் சமீப கால ஜென்சி போராட்டங்களும் அரசு கட்டமைப்பை மாற்றாமல் அதிகார அமைப்புகளை மாற்றுவது தீர்வாகாது என ஜென்சிகள் உணரவில்லை மேற்கண்ட ஜென்சி போராட்டங்கள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று கருதிய மக்கள் ஜென்சி மாணவர்கள் இடம் வர்க்க கோபம் வரும் அப்பொழுது இந்த அரசு கட்டமைப்பை தூக்கி எறிவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை மேற்கண்ட பார்வை மார்க்சிய லெனினிய பார்வையில் நாம் பார்க்க வேண்டும் என இந்த கட்டுரை உணர்த்துகிறது.