கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்! மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க (மா-லெ) அறைகூவல்!

2
பத்திரிக்கை செய்தி

கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்!
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க (மா-லெ) அறைகூவல்!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே, புரட்சிகர, ஜனநாயக சக்திகளே!

எமது மாநில அமைப்புக் கமிட்டி, இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா – லெ), தமிழ்நாடு., மார்க்சிய – லெனினிய, மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர கட்சியாகும். தென்னிந்தியாவில் 1974 முதல் நக்சல்பாரி பாரம்பரியத்தைப் பற்றி நின்று இடது, வலது திசை விலகல் இன்றி செயல்பட்டு வரும் மார்க்சிய – லெனினிய கட்சியாகும். நமது நாட்டில் சாதி, மத, இன பேதமற்ற, வர்க்க சுரண்டலற்ற கம்யூனிச சமூகத்தை நிறுவுவதை இறுதி லட்சியமாக கொண்டும், அதனை அடைய சோசலிச சமுதாயம் உருவாக்குவதை நோக்கமாக கொண்டும் செயல்படுகிறோம்.

இந்திய நாட்டின் வளங்களைச் சூறையாடி, உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதில் ஏகாதிபத்திய முதலாளித்துவ, உள்நாட்டு தரகு – அதிகார வர்க்க முதலாளித்துவ, தேசங்கடந்த தரகு – அதிகார வர்க்க முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகள் கூட்டு சேர்ந்து நிற்கின்றன. இந்த அரைக்காலனிய- அரை நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பை மாற்றியமைத்து புதிய ஜனநாயக சமூகத்தை கட்டமைக்க பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் நேச சக்திகளை ஒன்றிணைத்து புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிப்பதை அரசியல் போர் தந்திர இலக்காகக் (Strategy) கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

1970-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 1997-ல் திருத்தப்பட்ட கட்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மிகவும் அவசியமான, பாட்டாளி வர்க்கத்தினுடைய புரட்சிகர போராட்டத்தில் தலைமை தாங்கும் விஞ்ஞானமான போர்த்தந்திரத்தையும், செயல்தந்திரங்களையும் வகுத்து அதன் அடிப்படையில் புரட்சியை முன்னெடுத்து செல்கிறோம். குறிப்பிட்ட தருணத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளையும், வர்க்க அணி சேர்க்கைகளையும், வர்க்கப் போராட்ட நிலைமைகளையும் சரியாக கணித்து அதற்குப் பொருத்தமான, திட்டவகைப்பட்ட அரசியல் செயல்தந்திரத்தினை (Tactics) வகுத்து செயல்படுவதே பாட்டாளி வர்க்க கட்சியின் கடமையாகும்.

இந்த சமூக விஞ்ஞான அறிவியல் பார்வையுடன் இந்திய புரட்சிகர இயக்கங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வந்த SOC, 2015-க்குப் பின் அரசியல் முன்முயற்சியைக் கைவிட்டு பின்தங்கியது. சிந்தாந்த ரீதியாக தலைமை தாங்கும் ஆற்றலை இழந்து, நிகழ்ச்சிப் போக்கு வகைப்பட்ட செயல் தந்திரத்தின் கீழ் கட்சியைக் கொண்டு சென்றது. 2018-லேயே கார்ப்பரேட்-காவி பாசிசம் முன்னிலைக்கு வந்ததை உணர்ந்த போதும், அதற்கெதிரான திட்டவகைப்பட்ட செயல் தந்திரத்தை முந்தைய தலைமை வைக்கத் தவறியது. இந்த அரசியல் தவறுடன் அமைப்பு வகையில் நேர்மையின்றியும் அதிகாரத்துவமாகவும் சீரழிந்து போனது. அரசியல் சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் கட்சியை தலைமை தாங்கி கொண்டு செல்லத் திறனற்ற தலைமையை தூக்கியெறிந்துள்ளோம். புதிய தலைமையின் கீழ் நிலவுகின்ற அரசியல் சூழலை எதிர்கொள்ளும் வகையில், பொருத்தமான புதிய செயல் தந்திரத்தை நிறைவேற்றியுள்ளோம்.

நமது நாட்டில் கார்ப்பரேட் பாசிசம், பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் இரண்டும் இணைந்த வீரிய-ஒட்டுரக பாசிசமாக, கார்ப்பரேட் – காவி பாசிசமாக உருவெடுத்துள்ளது. கார்ப்பரேட் – காவி பாசிசம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும், எல்லாத் தரப்பு மக்களின் வாழ்விலும், கொடுங்கரங்களை நீட்டி கோரத் தாண்டவம் ஆடுகிறது. அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு ஏறித்தாக்கி வருகிறது. இந்த சூழலில் இதனை எதிர்த்து நின்று வீழ்த்தக்கூடிய அரசியல் ஆயுதமாக, திட்ட வகைப்பட்ட புதிய அரசியல் செயல் தந்திரத்தினை வகுத்து, மாநில அமைப்பு கமிட்டி முன்வைத்தது. அணிகள் மத்தியில் ஜனநாயக பூர்வமாக விவாதம் நடத்தி 2021 அக்டோபர் 02 மற்றும் 03 ஆகிய தேதிகளில் சிறப்புக் கூட்டம் நடத்தி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அதன் சாரம் வருமாறு:

1990-களில் அமெரிக்க-ரசிய பனிப்போர் விலகி, அமெரிக்கா உலக மேலாதிக்கப் போட்டியில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு உலக மேலாதிக்கம் செலுத்தத் துவங்கியது. தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டும் இராணுவத் தலையீடுகள் மூலமும் உலகம் முழுவதுமுள்ள மக்களின் மீது தனது ஒடுக்குமுறையை முன்னிலும் மூர்க்கமாக அமுல்படுத்தி வருகிறது. அமெரிக்க ஒற்றைத் துருவ வல்லரசின் தலைமையில் திரண்ட ஏகாதிபத்தியங்களால் கொண்டு வரப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் (புதிய தாராளவாதக் கொள்கை) இந்தியாவிலும், பிற நாடுகளிலும் புற நிலையில் பல பாரிய சமூக – பொருளாதார – அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

ஏகாதிபத்தியங்களால் முன் வைக்கப்பட்ட உலகமயமாக்கல் என்ற நிகழ்ச்சிப்போக்கு நாடுகளின் எல்லைகளை கேள்விக்குள்ளாக்குகிறது. தேசிய அரசுகளையும், தேசங்களை உள்ளடக்கிய நாட்டு அரசுகளையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, உலக மேலாதிக்கப் போட்டியில் முன்னிலையில் உள்ள அமெரிக்கா மற்றும் தற்காலிகமாக பின்னடந்துள்ள ரஷ்யா,  ஜப்பான் மற்றும் ஒன்றுபட்ட ஐரோப்பா  ஆகிய நாடுகளின் அரசியல் – பொருளாதார – இராணுவ மேலாதிக்கத்தின் கீழும், புதிதாக வளர்ந்து வரும் நவீன ஏகாதிபத்தியமான சீனாவின் அரசியல் – பொருளாதார – இராணுவ மேலாதிக்கத்தின் கீழும் கொண்டு வர முயற்சிக்கின்றன. இதற்கு அவற்றின் அடியாட்படைகளான உலக வங்கி (W B), உலக வர்த்தக நிறுவனம் (W TO), சர்வதேச செலாவணி நிதியம் (IM F) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (U N) ஆகியவற்றின் மூலம் ஒப்பந்தங்கள் போட்டு நிர்ப்பந்திக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள காலனி, அரைக்காலனி, நவீன காலனி மற்றும் மறுகாலனிய நாட்டு அரசுகளையும், மக்களையும் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதே உலகமயமாக்கலின் நோக்கமாகும்.

ஆனால், ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியை தீர்க்கப் போவதாக கொண்டு வரப்பட்ட உலகமயமாக்கல், 2008 ஆம் ஆண்டு மீளமுடியாத – மீண்டு எழவே முடியாத நெருக்கடிக்குள் உலகப்பொருளாதாரத்தைத் தள்ளியது. இந்த நெருக்கடி ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையில் புதிய செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதற்கான உள்முரண்பாடுகளை தீவிரமடையச் செய்துள்ளது; உலகம் முழுவதும் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட குழி தோண்டிப் புதைத்து பாசிசத்தையே தீர்வாக முன் வைக்கிறது. இந்த புதிய உலகமயமாக்க சூழலில் தங்களது கட்டுபாட்டில் உள்ள காலனி, அரைகாலனி, நவீன காலனி மற்றும் மறுகாலனிய நாடுகளில் உள்ள சாதிய, நிறவாத, மதவாத, இனவாத நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டிகளான பிற்போக்கு சக்திகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு அந்த நாடுகளின் உழைக்கும் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதே உலகளாவிய அரசியல் நிகழ்ச்சிபோக்காக உள்ளது.

. இந்த புதிய போக்கானது ஏகாதிபத்திய விரிவாக்கத்தையும், உழைப்பு சுரண்டலையும், அதன் நெருக்கடிகளையும் வழமையான முறைகளின் மூலம் – அதாவது சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் சாதிக்க இயலாத போது அந்தந்த நாட்டின் தன்மைக்கு ஏற்ப பாசிசமாக வடிவெடுத்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது. அந்த அடிப்படையில்தான் இந்தியாவின் ஆக பிற்போக்கு அமைப்பான RSS – BJP யுடன் கைகோர்த்து கார்ப்பரேட் – காவி பாசிசமாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் மறுகாலனியாக்க கொள்கைகள் அமுலாகத் தொடங்கிய பின்னர் கார்ப்பரேட் முதலாளிகளும், தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளும், நிலப்பிரபுத்துவ சக்திகளும் நாட்டு வளங்களைத் தமது தன்மைக்கேற்ப சூறையாடிக் கொழுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, அரபிக்கடலின் கரையில் உள்ள குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிராவைச் சேர்ந்த குஜராத்தி, மார்வாடி, சிந்தி, பார்சி உள்ளிட்ட பார்ப்பன-பனியா கும்பல்தான் இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்த தேசங்கடந்த தரகு – அதிகார வர்க்கத்தின் ஒரு பிரிவினர் மட்டும் – ஒரு சிலர் மட்டும் முற்றாக நாட்டைக் கொள்ளையிடுவதற்கு வழிவகை செய்து கொடுப்பதையே தனது இலட்சியமாக, அரசியல், பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது ஆர்.எஸ்.எஸ் – மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. இதன் விளைவாக இந்தியாவின் ஒரு சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 70 சதவீத மக்களின் (ஏறக்குறைய 95.3 கோடி மக்களின்) சொத்துகளை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

தன்னுடைய கொள்ளை லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வெறியுடன் செயல்படும் கையடக்கமேயுள்ள இந்த பார்ப்பன-பனியாக்களின் கார்ப்பரேட் மூலதனம், இந்திய உழைப்பாளிகளின் உதிரத்தை ஒட்ட உறிஞ்சுகின்ற வகையில் தொடர்ந்து தனது தொழில்களை இடையறாது விரிவடையச் செய்து கொண்டே செல்கிறது. இந்த திட்டத்தில் விவசாயம், சில்லறை வர்த்தகம், ஊடகம், தொலைக்காட்சி, சினிமா, கிரிக்கெட் உள்ளிட்ட துறைகள் அதன் கண்களுக்கு கொழுத்த லாபம் தரும் வேட்டைக்காடாக உள்ளது. அதுமட்டுமின்றி மக்களுக்கு சொந்தமான இயற்கை வளங்களான நீர், நிலம், ஆகாயம், ஆகியவையும், கடல்கள், கடல் மணல் பரப்புகள், பாறைகள், காடுகள், ஆற்று மணல் ஆகியவற்றையும் முழுமையாக சூறையாடுகிறது.

அத்துடன், நாடு முழுவதும் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்கள் அனைத்தையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க தாராள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தின் மூலமும் இலட்சம் கோடிகளில் கிடைக்கும் இலாபமும் கூட இவர்களது ஆக்டோபஸ் கோரப் பசிக்கு போதவில்லை என்று சேவைத் துறைகளான மருத்துவம், கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலைப் போக்குவரத்து, வீடு மற்றும் வீட்டு மனை விற்பனை தொழில்களுடன், நிதி சேவைகளான வங்கி, காப்பீடு ஆகியவற்றைக் கொள்ளையடிக்கவும் தாராள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வறுமையில் உள்ள மக்களிடம் வரியைப் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக கொட்டியளக்கப்படுகிறது. பல தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில் அவற்றின் மொழி, பண்பாடு, பொருளாதாரம் அனைத்தையும் “ஒரே இந்தியா” என்ற முழக்கத்தின் மூலம் ஒழித்துக்கட்டுகிறது. “இந்து – இந்தி – இந்தியா” என்ற கோட்பாட்டின் படி மொழி – இன – மதச்சிறுபான்மையினர், தேசிய இனங்கள் ஆகியவற்றின் உரிமைகள், மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது.

இவை மட்டுமின்றி இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கும் விவசாய உற்பத்தியில் நிலவுகின்ற அரை நிலப்பிரபுத்துவ உறவுகளை மேலும் கொடூரமானதாக்கியுள்ளது. நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு நிலச்சீர்த்திருத்தம் மூலம் நில விநியோகம் செய்வதை முற்றாக கைவிடுவது; சிறு, குறு விவசாயிகளிடம் உள்ள துண்டு நிலங்களையும் பறித்து வீதிக்குக் கொண்டு வருவது; அவர்களிடமும், நடுத்தர, பணக்கார விவசாயிகளிடமும் இருக்கும் நிலம் அனைத்தையும் கார்ப்பரேட் வேளாண் வர்த்தக கழகங்கள் பறித்துக் கொள்வது போன்ற மேற்கண்ட மாற்றங்கள் இந்திய விவசாயத்தில் மறுகாலனிய பொருளாதாரக் கொள்கையின் நிகழ்ச்சி போக்கை தீவிரப்படுத்துகிறது. மொத்தத்தில் விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டியடித்து கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்கு சாதகமாக, குறைந்த கூலிக்கு தனது உழைப்பு சக்தியை விற்பதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதனை உறுதிப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதே மூன்று வேளாண் சட்ட திருத்தங்களாகும். அதுமட்டுமல்ல பாசிசத்தின் குதிகால் நரம்பாக உள்ள அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் நீடிக்கிறது.

மேற்கண்ட நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மிகுந்த சித்திரவதைக்கும், வேதனைக்கும் ஆளாகியுள்ளனர். தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளை அமுல்படுத்த தொடங்கியதிலிருந்தே வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலைகள், பட்டினிச் சாவுகள், கொடுரமானதாகி விட்டது. தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், சிறுதொழில் முனைவர்கள், சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வுரிமையும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராகப் போராடவும் தடைவிதிக்கின்ற பாசிச மோடி கும்பல், சட்டப்பூர்வமான வழிமுறைகள் மூலமே பாசிசத்திற்கான தாயாரிப்புகளை அரங்கேற்றி வருவதுடன், மக்கள் தனது உரிமைக்காக போராடுவதை முளையிலேயே நசுக்குவதற்கும் கொடூரமான முறையில் அடக்குவதுதான் கார்ப்பரேட் பாசிசம்.

பார்ப்பன மேலாதிக்கத்தை வலியுறுத்துகின்ற ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பார்ப்பன – இந்திய தேசியம் ஏகாதிபத்திய கொள்ளைக்கும், கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கும் பொருத்தமான சூழலை உருவாக்குகிறது. இது, இயல்பிலேயே மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கின்ற காவி பாசிசமாக வெளிப்படுகிறது. இந்துத்துவா என்ற பெயரில் நால்வருண பாகுபாட்டுடன், தனக்கு கீழ் உள்ள அனைத்து சாதியினரையும் இழிவாகக் கருதி ஒடுக்கும் பார்ப்பன மேலாதிக்கமும், சனாதன தர்மமும் இணைந்து அடக்குமுறையை ஏவுவதுதான்  காவி (பார்ப்பன) பாசிசம்.

இந்திய நாட்டை அமெரிக்க வல்லரசின் மறுகாலனியாக்கும் தீவிரத் தன்மையையும், அதனை அப்படியே அமுலாக்கும் அடிமைத்தனத்தையும் கொண்ட சூழலே இன்று நாடு எதிர்கொண்டுள்ள பிரதான நிகழ்ச்சிப்போக்காகும். இந்த அரசியல் – பொருளாதார – பண்பாட்டு நிகழ்ச்சி போக்கே கார்ப்பரேட் – காவி பாசிசம் என சிறப்பு கூட்டம் அறிவிக்கிறது.

நாட்டு மக்களுக்கு எதிரான, மிகப்பெரும் கொடூர சக்தியாக ஏறித் தாக்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த கார்ப்பரேட் – காவி பாசிச எதிர்ப்பு ஜனநாயக முன்னணி கட்டியமைக்கப்பட வேண்டும் என்ற திட்டத்தையும் சிறப்பு கூட்டம் முன்மொழிகிறது. குறிப்பாக, ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவினருடன் இணைந்து மேலிருந்து கட்டப்படும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியும், பாட்டாளி வர்க்கத்தின் இயல்பான நட்பு வர்க்கங்களை இணைத்துக்கொண்டு, பாட்டாளி வர்க்க கட்சி கீழிருந்து கட்டும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியும் கொண்ட திட்டத்தை இச்சிறப்பு கூட்டம் முன்மொழிகிறது.

நாட்டின் பெரும்பான்மையாக உள்ள நிலமற்ற கூலி விவசாயிகள், சிறு – குறு விவசாயிகள், குத்தகை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பது நம் உடனடிக்கடமையாகும். இதற்கு முதல் கட்டமாக நிலச்சீர்திருத்தம் செய்வது; அதற்கு நிலப்பிரபுக்கள், ஆதீனங்கள், மடாலயங்கள், வஃக்பு வாரியங்கள், கிறித்தவ தேவாலயங்களின் நிலங்களின் குத்தகையைக் குறைப்பது, கையடக்கமேயுள்ள தேசங்கடந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது, பார்ப்பன பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-சை தடை செய்வது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக செயல்திட்டத்தை முன் வைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாசிச சக்திகளை வீழ்த்தி விட்டு உண்மையான ஜனநாயக கூட்டரசை நிறுவுவதற்கான உடனடித் திட்டத்தினையும் (Specific program) முன்வைத்துள்ளது.

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்தி விட்டு ஜனநாயகக் கூட்டரசை நிறுவ முயலும் போது நாம் கொண்டுவர முனைவது ஏற்கனவே உள்ள போலி ஜனநாயகத்தை அல்ல; அதற்கு மாற்றாக பேச்சுரிமை, எழுத்துரிமை, வாழ்வுரிமை உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுகின்ற உண்மையான ஜனநாயகம் ஆகும். அதுவே பாசிசம் மீண்டும் தலையெடுக்காமல் தடுக்கும் கேடயமாக இருக்கும். இந்த செயல் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி மற்றும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் மூலம் மக்களின் அரசியல் போராட்டங்களைக் கட்டியமைப்போம்.

நிலவுகின்ற பாராளுமன்ற ஜனநாயகத்தின் தேர்தல் அரசியல் மூலமாகவே கார்ப்பரேட்-காவி பாசிச கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துள்ளது. அந்த வழியில் தொடர்ந்து வெற்றி பெறவும் அவர்களை நாம் அனுமதிக்கக் கூடாது. 2024 – ல் நடக்கவிருக்கும் தேர்தலை மட்டுமே பிற அனைவரும் போராட்டக் களமாக கருதுகின்றனர். அந்த வழிமுறையின் மூலம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த இயலாது. எனினும் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற வகையில் முன்வைத்து கட்டியமைக்கப்படும் ஜனநாயக ஐக்கிய முன்னணி பாசிச எதிர்ப்பு களமாக தேர்தலையும் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்தில் இருந்து கார்ப்பரேட்-காவி பாசிச சக்திகளை தூக்கியெறிய போராடும்.

நாட்டையும் மக்களையும் சூறையாடும், கார்ப்பரேட் – காவி பாசிசத்தினை வீழ்த்த புரட்சிகர – ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதுதான் இன்றைய நமது வரலாற்று கடமையாகும் என சிறப்புக் கூட்டம் அறைக்கூவல் விடுக்கிறது. கார்ப்பரேட் – காவி பாசிசத்தினை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசை நிறுவுவதற்கான திட்டத்தையும் இச்சிறப்பு கூட்டம் முன்மொழிந்துள்ளது.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக திட்டத்தை ஏற்க முன் வரும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள், தேர்தல் கட்சிகள், மதச்சிறுபான்மை அமைப்புகள் – கட்சிகள், தேசிய இன விடுதலை இயக்கங்கள் ஆகிய அனைவரையும் ஐக்கிய முன்னணியில் இணைய அழைக்கிறோம். பாசிச எதிர்ப்பு செயல்திட்டத்தை விவாதித்து இறுதி செய்து பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணைவோம். கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த கோடிகால் பூதமாய் திரண்டெழுவோமென அறைகூவி அழைக்கிறோம்.

புரட்சிகர வாழ்த்துகள்!

தோழமையுடன்,

மாநில அமைப்புக் கமிட்டி,
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா – லெ),
தமிழ்நாடு.

PDF வடிவில்:

SOC - Press News

 

2 COMMENTS

  1. அண்ணே, மிக்க நன்றி அண்ணே அப்புறம் தேர்தலில் நிற்பது உறுதிப்படுத்தியுள்ளீர்கள். ராஜீ, கணேசன்,காளியப்பன், கோவன் இன்னும் பிற அல்லகைகளுக்கும் உங்கள் ஒப்பற்ற தலைவர், திமுக சொம்பு மதிப்புக்குறிய கலைப்புவாதி மருதையனுக்கும் 2024-ல் சீட் உறுதி உறுதி உறுதி……

  2. இந்த அறிக்கை வெளியிடுவதற்கு பதில் அண்ணன் ஸ்டாலின் தலைமையில் திமுக வில் இணைந்து அறிக்கை வெளியிட்டுடிருக்களாம் .2024 தேர்தலில் எத்தனை சீட் என்று உறுதியாகி இருக்கும். தப்பு பண்ணிட்டீங்க தலைவரே தப்பு பண்ணிட்டீங்க…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here