திமுகவுடன் நல்லிணக்கத்துடன் செயல்படுவதாக எமது அமைப்புகள் மீது தொடர்ந்து  அவதூறு பரப்பப்படுகிறது. இந்த அவதூறுகள் துவங்கி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. குறிப்பாக 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்ற போது, “ ‘அலைக்கற்றை ஊழல்’ விவகாரத்திலிருந்து ’உத்தமர்’ மன்மோகன்சிங்கும், டாடா, அம்பானி, மித்தல், ரூயா, நீரா ராடியா, சரத்பவார், சிதம்பரம், மாறன், அருண் ஷோரி, பிரமோத் மகாஜன் உள்ளிட்டு இந்த விவகாரத்தில் நேரடி தொடர்புள்ள பலரும் விலக்கப்பட்டு, அலைக்கற்றை ஊழலின் இலக்கு திட்டமிட்டே குறுக்கப்பட்டது. திமுக ஆ.ராசா, கனிமொழி, என்று இலக்கை சுருக்கியதன் மூலம் கார்ப்பரேட் ஊடகங்கள், சுப்பிரமணிய சாமி, சோ, ஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகள் என ஒவ்வொரு பிரிவினரும் ஆதாயம் பெற்றனர்.” (புதிய ஜனநாயகம், ஆகஸ்ட்- 2011) என்று அலைக்கற்றை ஊழலின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய போது, பார்ப்பனக் கொழுப்பு அண்டிய பலரும் கொதித்தனர்.

ஸ்வான் டெலிகாம், லூப் டெலிகாம், ஸ்பைஸ் ஐடியா, டேட்டாகாம்/வீடியோகான், ஷ்யாம் டெலிகாம், டாடா டெலி சர்வீஸ், யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் மட்டும் அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றன. 45 நிமிடத்தில் ஏலம் முடிந்து போனது, கலந்துக் கொண்ட 13 நிறுவனங்களில் மேற்கண்டவை மட்டுமே 2ஜி அலைக் கற்றையை பெற்றனர். காரணம் அப்போது மத்திய அரசாங்கத்தில் தொலை தொடர்பு துறையை கையாண்டு வந்த ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் சிலர் மீது 1,76,000 கோடி ஊழல் செய்து விட்டனர். இதனால் நாட்டுக்கே பெரும் இழப்பு என்று கடும் விமர்சனத்தை முன் வைத்து கூச்சலிட்டனர். சிபிஐ மூலம் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் பார்ப்பனக் கும்பலும், தரகு முதலாளிகளும் சேர்ந்து நடத்திய ஊழல் நாடகத்தை நாங்கள் நம்பவில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கத்தின் கீழ் நடந்த கார்ப்பரேட் பகற்கொள்ளை, இந்த பகற்கொள்ளைகள் சட்டப் பூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் மையமான பிரச்சனை என்ற கண்ணோட்டத்தில் எழுதினோம். இதனால் அப்போதே திமுகவின் விசுவாசிகள் என்று அனல் கக்க துவங்கி விட்டனர்.

அதில் மத்திய அரசை தனது பகற்கொள்ளைக்கு பயன்படுத்தியதன் மூலம் தனது தொலைத்தொடர்பு நிறுவனங்களை வளப்படுத்திக் கொண்ட சஞ்சய் சந்திரா-யுனிடெக் வயர்லெஸ், கெளதம் தோஷி-ரிலையன்ஸ் அனில் அம்பானி குரூப், ஹரி நாயர்-அனில் அம்பானி குரூப், சுரேந்திர பியரா-நிலையன்ஸ் அனில் அம்பானி குரூப், வினோத் கோயாங்கா- டி.பி ரியாலிட்டி & ஸ்வான் டெலிகாம், ஷாகித் உஸ்மான் -பால்வா-டிபி ரியாலிட்டி நிறுவனம் & ஸ்வான் டெலிகாம், ஆசிப் பல்வா, ராஜிவ்.பி.அகர்வால்-குஷோகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை, ரவிராய், விகாஷ் ஷரப்-எஸ்ஸார் குரூப், கெய்தான், கிரண் கெய்தான், -லூப் டெலிகாம் போன்ற அனைத்து நிறுவனங்களும், கோடிக்கணக்கான ரூபாய் லாபத்தை குறிவைத்து செயல்பட்டன. அலைக் கற்றை மூலம் பல லட்சம் கோடிகளை சுருட்டின. ஆனால் சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, துக்ளக் சோ மற்றும் பார்ப்பன ஊடகங்கள் அடங்கிய கூட்டணியினர், திமுக ஆ.ராசா, கனிமொழி மீது திட்டமிட்டு பரப்பிய இமாலய பொய்யை பலரும் நம்பி ஏமாந்தனர்.

2 ஜி அலைக் கற்றை ஊழலில் உண்மையாக லாபம் அடைந்த டாடா, பிர்லா, சுனில் மித்தல், வீடியோகான், ஏர்செல், எஸ்ஸார், வோடஃபோன் போன்ற தரகு முதலாளிகளை பற்றி பேசாமல் திமுகவை மட்டும் அம்பலப்படுத்தியதை கண்டித்து புதிய ஜனநாயகம் இதழில் எழுதினோம் உடனே திமுகவிற்கு ஆதரவாகவும் ஊழல் பெருச்சாளிகளை காப்பாற்றுவதற்கும் நாங்கள் முயற்சிக்கிறோம் என்று அவதூறு பரப்பப்பட்டது. ஆனால் அது பவானி சமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது தான் உண்மை.

2015-ஆம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பு துவக்கப்பட்ட உடன் தமிழகத்தின் உழைக்கும் மக்களை பலவகையிலும் இன்னல்களுக்கு உள்ளாகி வந்த, தாய்மார்களின் தாலியறுக்கும், டாஸ்மாக் கொடுமையைக் கண்டித்து ’மூடு டாஸ்மாக்கை’ என்ற இயக்கம் எடுத்தோம். அதுவரை தமிழகத்தில் செயல்படும் தேர்தல் அரசியல் கட்சிகளை ஓட்டுப் பொறுக்கிகள் என்று விமர்சித்து வந்த நாங்கள் ஒரு குறிப்பிட்ட முழக்கத்தை, மூடு டாஸ்மாக்கை என்று முன்வைத்து போராடுகின்ற போது பாஜக-அதிமுக நீங்கலாக அனைத்து கட்சிகளையும் இணைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம்.

இந்த இயக்கத்தின் போது மிடாஸ் பங்குதாரரும், ஊருக்கு ஊர் சாராயக்கடைகளை திறந்து தமிழகத்தை போதைக்கு அடிமையாக்கியவருமான பாசிச ஜெயாவை விமர்சித்து ’ஊருக்கு ஊரு சாராயம், தள்ளாடுது தமிழகம்’ என்ற பாடலை பட்டிதொட்டியெங்கும் பரப்பிய பாடகர் கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போதும் எமது அமைப்பின் மீது கெடுமதியாளர்கள் அவதூறுகளை பரப்பினர். அதுவரை தேர்தல் அரசியல் ஓட்டுக் கட்சிகளை விமர்சித்து வந்த நாங்கள் திமுகவையும் பிற அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசியது பற்றி பலருக்கும் பலவித அய்யங்களை ஏற்படுத்தியது. எமது அணிகளில் சிலரே பதறினர். அதற்கும் எம்மைப் பற்றி அவதூறுகள் கிளப்பிய பலருக்கும் நாங்கள் கீழ்கண்டவாறு பதில் கூறினோம்.

“திமுக தலைவர் கருணாநிதியை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் சந்தித்து தன் மீதான கைது மற்றும் தேச துரோக வழக்கை கண்டித்து குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார். அத்துடன் டாஸ்மாக்கை மூடும் போராட்டத்திற்கு ஒன்றிணைந்து போராட அழைத்தார். அதை வைத்துக் கொண்டு எமது அமைப்பு திமுகவிடம் சரண் அடைந்து விட்டதாகவும் ஆதரவு தேடி அலைவதாகவும் கொள்கையை மாற்றிக் கொண்டு விட்டதாகவும், தேர்தல் அரசியலுக்கு போகப் போவதாகவும் சிலர் அவதூறுகளை எம் மீது அள்ளி வீசி வருகின்றனர்.

சிறையிலிருந்து விடுதலையான பாடகர் கோவன் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்த போது

எமது அமைப்பின் மீது மிகுந்த மதிப்பும் சரியான அமைப்பு என்று நம்பிக்கையும் கொண்டிருக்கும் எமது அமைப்பிற்கு வெளியே உள்ள ஆதரவாளர்கள் சிலர் திகைப்பையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இவைகளின் தாக்கத்தாலும் தன்னளவிலும் எமது அணிகளில் சிலரும் நாம் இதுவரை கட்டி பாதுகாத்து வந்த கட்சியின் ’கற்பை’ பறி கொடுத்து விட்டோமோ என்ற குற்ற உணர்விற்கும், சந்தேகத்திற்கும் ஆளாகி உள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட ’பாவம்’ எதையும் நாம் செய்துவிடவில்லை.

எமது அமைப்பு மீது இப்படி கடும் விமர்சனங்களை வைக்கும் மேற்படியினர் ஒரு உண்மையை காண மறுக்கிறார்கள். தமிழ் சமுதாயத்தை பெருமளவு சீரழித்து வரும் டாஸ்மாக் சாராய எதிர்ப்பு இயக்கத்தை நாங்கள் வெறும் பிரச்சாரச்தோடும், அடையாளப் போராட்டங்களோடும் நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை டாஸ்மாக் சாராய ஒழிப்பை நடைமுறை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம். அதற்கு போதுமான சக்திகளை நாங்கள் இப்போது கொண்டிருக்கவில்லை. நாங்கள் மட்டுமே மக்களை திரட்டி உடனடியாக அதை சாதிக்கவும் முடியாது. டாஸ்மாக் சாராய ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்தவுடன் எமது அமைப்புகளை மட்டும் தனிமைப்படுத்தி தாக்கி அழித்து விடும் முயற்சியில் அரசு ஈடுபட்டதை அனைவரும் அறிவர். அப்போது எமக்கு ஆதரவாக தாமாக முன்வந்த பிற அமைப்புகளையும் இணைத்து கொண்டு செயல்படுவது என்று முடிவு செய்தோம் அந்த அடிப்படையில் 2015 ஆகஸ்ட் 31 அன்று ஆறு பிராந்தியங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம்.

அடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு எமது மக்கள் திரள் அமைப்பின் முக்கிய தோழர்களை கைது செய்து கருப்பு சட்டங்களை ஏவி விடவும், எமது முக்கிய ஊடக அமைப்பை முடக்கிவிடும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டது. அப்போதும் எங்களுக்கு ஆதரவாக தாமாக முன்வந்த அமைப்புகளையும் இணைத்து கொண்டு செயல்படுவது என்று முடிவு செய்தோம். அந்த அடிப்படையில்தான் பிற அமைப்புகளையும் அழைத்து சாத்தியமான இடங்களிலெல்லாம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். இந்த முயற்சிக்கு பிற அமைப்புகளிடமிருந்து பெருமளவு ஆதரவு கிட்டியது. எமது அமைப்பை தனிமைப்படுத்தும் அரசின் முயற்சியும் வெற்றி பெறவில்லை.

டாஸ்மாக் சாராய ஒழிப்பு இயக்கத்தை அதிமுக-பாஜக, ஆதிக்க சாதி மதவெறி சக்திகள், பெயர் பலகை அமைப்புகள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தவிர பிற அமைப்புகளை இணைத்துக்கொண்டு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்ற முயற்சியில் இறங்கினோம். இந்த அடிப்படையில் இந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதி அவர்களை அழைத்தோம் முதலில் மக்கள் நல கூட்டணி தலைவர்களையும், அடுத்த நாள் திமுக மற்றும் பிற கட்சியினரையும் எமது தோழர்கள் சந்தித்தனர். இந்த முயற்சிக்கும் பிற அமைப்புகளிடமிருந்து பெருமளவு ஆதரவு கிட்டியது.

பிற அமைப்பு தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியது மட்டுமின்றி, மக்கள் நல கூட்டணி கட்சிகள் உட்பட பிற அமைப்புகளின் பங்கேற்புடன் தான் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். இதையெல்லாம் அறிந்து ஏற்றுக் கொண்டவர்களில் சிலர் எமது தோழர்கள் திமுக தலைவரை சந்தித்த உடன் எங்கள் மீது விமர்சன கண்டனங்களை வீசுகின்றனர். என்ன காரணம் “ஆடு பகை குட்டியுடன் நட்பு என்பதுதான் இவர்களின் கூட்டணி கொள்கை என்பதாலா? அல்லது ஆளும் கட்சிகள் ஆதரவு பார்ப்பன ஏடுகளின் பிரச்சாரத்திற்கு பலியாகி விட்டார்களா?” எமது அமைப்பை தனிமைப்படுத்தி தாக்கி அழிக்கும் அரசு முயற்சியை வேறு எப்படி முறியடிக்க முடியும்.” என்று விளக்கம் அளித்தோம். ஆனாலும் சிலர் ஏற்கவில்லை.

நாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்ற ஆணவத்தோடு ஒருவர் விடாமல் அனைவரையும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்ற அமைப்பு இப்படி ஒரு தவறு செய்யாதா என்றும், அதைக் கொண்டு எங்கள் அமைப்பை ஒரு பிடி பிடித்து விடலாம் என்றும் சிலர் ஏங்கிக் கொண்டிருந்தனர். அவர்களும் எப்படியாவது ஒரு தவறை கண்டுபிடித்து எமது அமைப்பை அம்பலப்படுத்தி, அதன் அரசியல் கௌரவத்தை களங்கப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் குற்றம் கண்டு பிடிப்பதற்காகவே எமது நிலைப்பாடுகளையும், செயல்பாடுகளையும் கண்கொத்திப் பாம்பு போல கவனித்து வரும் சில கெடுமதியாளர்களும், இன்று தமக்கு இப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு கிடைத்து விட்டதாக கருவி கொண்டு சலசலப்பை உண்டாக்கி வருகிறார்கள். இந்த சலசலப்புக்கள் எல்லாம் சலனப்படாமல் சரியான திசை வழியில் முன்னேறிச் செல்வோம் என்று தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து சென்றோம்.

பா.மதிவதனி.                                                         — தொடரும்.

1 COMMENT

  1. நீங்கள் தான் “வாக்களி வாக்களி “என்று கிளம்பிவிட்டீர்களே! அப்புறம் எதற்கு? புதிய ஜனநாயகம் பற்றி எழுத உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here