1.2 இலட்சம் கோடிகள் மதிப்புள்ள 9.4 இலட்சம் ஏக்கர் பரப்புள்ள சுமார் 7,85,934 சொத்துகள் நாட்டிலுள்ள 30 வக்ப்ஃ வாரியங்கள் வசம் உள்ளன. இதனை இந்தியாவில் பாதுகாப்புத் துறை, இரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக அசையா சொத்துக்களை வக்பு வாரியம் என்று பரப்பப்படுகிறது. இந்தியாவில் இந்துமத கோயில்களின் சொத்துக்கள் தனித்தனி கோயில்களின், மடங்களின் சொத்துக்களாக உள்ளன. அதனால் அதன் முழுமையான கணக்கு வெளியே தெரிவதில்லை என்பது தனிக்கதை.
மத ஊர்வலங்களை நடத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரங்களை கட்டவிழ்த்து பின்னர் அவர்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்துக் கட்டிய வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக பாசிச சங்பரிவார் கும்பலுக்கு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துகளை வக்பு வசம் உள்ளது நீண்ட காலமாகவே கண்களை உறுத்திவந்தது. அச்சொத்துக்களை எப்படியாவது முஸ்லிம்களிடமிருந்து பறித்துவிடவேண்டும் என்று திட்டம் தீட்டிய இப்பாசிச கும்பல் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 2024-ல் கொண்டுவந்துள்ளது. இம்மசோதாவை தாக்கல் செய்து பேசிய ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ, “வக்ஃப்சொத்துக்கள் மாஃபியாக்களிடம் சிக்கியுள்ளன என்றும், ஏழை மற்றும் சாமானிய மனிதனுக்கு இச்சொத்துக்களால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை” என்றும் அதனாலேயே இச்சட்டத்திருத்தம் அவசியமானது என்று பேசினார்.
இம்மசோதாவை பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்காததால் 21 உறுப்பினர்களைக்கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்கமிட்டியின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு விவாதிக்கப்பட்டதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எந்த திருத்தங்களும் ஏற்கப்படாமல், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் முன்மொழிந்த திருத்தங்கள் மட்டுமே ஏற்கப்பட்டு இச்சட்டதிருத்த மசோதாவின் மீதான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
ஒருபுறம், வக்ஃப் சட்டத்தைத் திருத்துவது என்பதை நடத்திக்கொண்டே ஒரு பொய்களை கருத்துருவாக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
படிக்க:
🔰 வக்ஃப் சட்டத் திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாசிச பாஜகவின் தாக்குதல்
🔰 வக்ஃப் சட்டத் திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாசிச பாஜகவின் தாக்குதல்! பகுதி 2
பேஸ்புக் சங்கிகள், “பாகிஸ்தானின் பரப்பளவு 8.81 லட்சம் சதுர கிலோமீட்டர். வக்ஃப் வாரியத்தின் பரப்பளவு 9.40 லட்சம் சதுர கிலோமீட்டர். ஒரு பாகிஸ்தான் வெளியே உருவாக்கப்பட்டது, மற்றொன்று உள்ளே உருவாக்கப்பட்டது. தூங்கிக் கொண்டே இருங்கள். இது காங்கிரஸின் அற்புதமான படைப்பு” என்று வதந்தியை பரப்பி வருகின்றனர். இந்தியாவில் வக்ஃப் வாரிய சொத்துக்களின் மொத்த பரப்பளவு 9.40 லட்சம் சதுர கி.மீ அல்ல; மாறாக, இது 9.4 லட்சம் ஏக்கர், இது தோராயமாக 3,804 சதுர கி.மீ., இது பாகிஸ்தானின் மொத்த பரப்பளவை விட சுமார் 231 மடங்கு சிறியது என்று இந்தியா டூடே உண்மை அறியும் குழு அம்பலப்படுத்தியுள்ளது.
வக்ஃப் என்பது தமிழில் அறக்கொடை என்று பொருள் கொள்ளலாம். இஸ்லாமியர்கள் தங்கள் சமுதாய நலனுக்காகவோ, மத காணிக்கையாகவோ, கல்வி வளர்ச்சிக்காகவோ, ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்காகவோ, அல்லது வாரிசுகள் இல்லாத நிலையிலோ தங்கள் வசமுள்ள சொத்துக்களை விருப்பப்பூர்வமாக அந்தந்த ஜமாத்திடம் ஒப்படைப்பதாகும். இவ்வாறு வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிப்பதற்காகவே வக்ஃப் கவுன்சில் என்று ஒன்றிய அளவிலும், வக்ஃப் வாரியங்கள் என்று மாநில அளவிலும் ஏற்படுத்தப்பட்டன. வக்ஃப் சொத்துக்களை முறையாக பதிந்துகொண்டு, அவற்றை பராமரிப்பது, அச்சொத்துக்களின் மூலம் வரும் வருவாய்க்கு முறையான கணக்குகளை பராமரிப்பதே இவ்வாரியங்களின் பணிகளாகும். இவ்வரியங்களில் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டு அரசின் கண்காணிப்பின் கீழ் இயங்கிவருகின்றன. இவ்வாரியங்கள் யாவும் இஸ்லாமியர்களையே உறுப்பினர்களாகக்கொண்டு நிர்வகிக்கப்பட்டு வந்தன.
தற்போது இந்த கட்டமைப்பை சிதைத்து வக்ஃப் சொத்துக்களை ஆட்டையைப் போடுவதற்காகவே மூன்று தொகுதிகளின் கீழ் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக வக்ஃப் வாரிய நிர்வாகக் குழுவில் இரண்டு இஸ்லாமியர் அல்லாதவரைக் கொண்டுவருதல், வக்ஃப் சொத்துக்களை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரின் கைகளில் அளித்தல், வக்ஃப் சொத்துக்களை அளவிடும் பணியை நிலஅளவை கமிஷனரிடமிருந்து ஆட்சியருக்கு மாற்றுதல், வக்ஃப் சொத்துக்களை ஒருவர் 12 வருடங்களுக்குமேல் ஆக்கிரமித்திருந்தால் அச்சொத்து ஆக்கிரமித்தவருக்கே சொந்தம், 5 வருடங்களுக்குமேல் இஸ்லாமியராக இருப்பவரே தனது சொத்துக்களை வக்ஃப் செய்ய முடியும் போன்ற திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
தற்போதைய காலகட்டத்தில் பாபர் மசூதியைப்போல அடாவடியாக இஸ்லாமியரிடமிருந்து நிலங்களை பிடுங்குவதும், புல்டோசர் நடவடிக்கைகள்மூலம் வக்ஃப் அவர்களின் சொத்துகளை அழிப்பதற்கும் சில வேகத்தடைகளை நீதிமன்றங்கள் விதித்திருப்பதால், காவி பாசிஸ்டுகள் வக்ஃப் சட்டம் மூலம் இஸ்லாமியரின் சொத்துகளை திருடப்பார்க்கிறது. காவி பாசிஸ்டுகளின் இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எரியும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இம்மசோதாவை நாடாளுமன்றத்தில் முறியடிக்க வேண்டும். குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு கார்ப்பரேட்-காவி பாசிஸ்டுகளை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
– ஜூலியஸ்