“ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டியோ (iPhone Duo), இன்ஸ்டன்ட் டெலிவரி தளமான பிளிங்இட்ல் விற்பனைக்கு வந்த ஐந்தே நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது. இந்தத் தகவலை பிளிங்இட் நிறுவனத்தின் நிறுவனர் அல்பிந்தர் திண்ட்சா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதேநேரம் எத்தனை யூனிட்கள் விற்பனைக்கு வந்தன உள்ளிட்ட தகவல்களை அவர் பகிரவில்லை.

இந்தியாவில் 256GB மாடல் ரூ.2,99,900க்கும், 512GB மாடல் ரூ.3,24,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 1TB மாடலின் விலை ரூ.3,74,900க்கும் விற்கப்படுகிறது. அதேபோல 2TB மாடல் விலை அதிகபட்சமாக ரூ.4,49,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன் பிளிங்இட் தளத்தில் சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக வெளியான தகவல், சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மொத்த யூனிட்களின் எண்ணிக்கை தெரியாததால், அதுவே விவாதமாக மாறியுள்ளது.” என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

அது என்ன விவாத பொருள்? ஆப்பிள் ஐபோன் விலை 10 லட்சம் என்று தீர்மானித்து இருந்தால் கூட இந்தியாவில் அதை விற்பனையாகிவிடும். ஏனென்றால் இந்தியா உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது என்பதுதான் அந்த விவாதத்தின் மையப்பொருள். இது உண்மை இல்லை, எத்தனை போன்கள் விற்பனைக்கு வந்தது என்ற எண்ணிக்கை தெரியாமல் ஐந்து நிமிடத்தில் விற்பனையானது என்பதை ஏற்க முடியாது என்று சிலர் ஈனக்குரலில் முனகி வருகின்றனர்.

அதாவது ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பி தனது சரக்குகளை விற்பனை செய்வதற்கு, அதாவது சந்தைப்படுத்துவதற்கு இது போன்ற விளம்பரங்களை அவிழ்த்து விடுகிறது என்ற கண்ணோட்டத்தில் மேற்கண்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

படிக்க: 5ஜி ஏலம் அம்பானியின் ஜியோ ஏகபோகம்!

பட்டினி குறியீட்டில் வகைப்படுத்தப்பட்ட அல்லது பட்டியலிடப்பட்ட 122 நாடுகளில் 100வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி கொண்டுள்ள அதே தருணத்தில் தான் ஜியோ பிளாட்பார்ம் மூலம் பங்குகளை விற்பனை செய்வதற்கு முயற்சி செய்த அம்பானி குழுமத்தின் பங்குகள் வரலாறு காணாத அளவில் விற்பனை நடந்துள்ளது என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

யார் இந்த ஜியோ பிளாட்பார்ம்?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் முக்கிய துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (Jio Platforms Limited), தொலைத்தொடர்பு, டிஜிட்டல் சேவைகள் மற்றும் 5G தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். இதன் தலைமையகம் மகாராஷ்டிராவின் நவி மும்பையில் அமைந்துள்ளது.

இந்த ஜியோ பிளாட்பார்ம் நிறுவனமானது தனது பங்குகளை அக்டோபர் 21 2026 அன்று சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஐந்து நாட்களாக அனைத்து செய்தி பத்திரிகைகளிலும் முதல் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் இந்த ஜியோ பிளாட்பார்ம் வெளியிட்டுள்ள பங்கு சந்தை பற்றிய விண்ணப்பம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் ₹30,213 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீடு (IPO) விற்பனையை துவங்கி ஒரு பங்கின் விலை வரம்பு ₹1,065 முதல் ₹1,119 வரை நிர்ணயிக்கப்பட்டது. அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட பங்குகள் தான் ஒரு கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் முதல் 100 முதலாளிகள் பட்டியலில் இல்லாத அதானி படிப்படியாக முன்னேறி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் வரிசையில் வந்தது போலவே, இந்த அம்பானி குழுமம் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு துறைகளில் தனது மூலதனத்தை போட்டு, அதாவது மேற்கண்ட வகையில் பங்குகளை திரட்டி முதலீடு செய்து அதன் மூலமாக பல லட்சம் கோடி ரூபாய் அதிபதியாக மாறியுள்ளது.

படிக்க: மோடி,அம்பானியைக் கலாய்த்த எலான் மஸ்க்: தீவிரமாகும் கொள்ளைக்கான போட்டி!

ரிலையன்ஸ் என்றால் நம்பிக்கை என்று பொருள் என்று பெயர் வைத்துக் கொண்டு சினிமா தயாரிப்பு முதல் விமான தயாரிப்பு வரை அனைத்து துறைகளிலும் குதித்துள்ளதால் இவர்கள் வெளியிட்டுள்ள பங்கு இந்தியாவில் உள்ள எலைட் பீப்பிள்ஸ் என்று சொல்லக்கூடிய மேட்டுக்குடி மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை பெற்றுள்ளது என்பதை தான் அதன் விற்பனைகள் காட்டியுள்ளது.

இந்த ஐபிஓ வெளியீடு முதலீட்டாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், 1 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களுடன் புதிய சாதனையைப் படைத்துள்ளது. சினிமா நடிகன் ரஜினி நடித்த ஜெயிலர் 2 படம் வெளியாகி ஒரு வாரத்திற்குள் 500 கோடி லாபம் எட்டியது என்பதைப் போலவே இந்த ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள ஜியோ பிளாட்பார்ம் வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளேயே ஒரு கோடிக்கும் மேலான விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இதை வைத்துக் கொண்டுதான் இந்தியா பணக்கார நாடாகிவிட்டது என்று குதியாட்டம் போடுகின்றனர் ஆர்எஸ்எஸ் பாஜக சங்பரிவார கும்பல்.

இதனால்தான் இந்தியா என்றால் ஒரே நாடு கிடையாது அது இரண்டு இந்தியாவாக உள்ளது என்று முன்வைக்கின்றோம். ஒரு பக்கம் வறுமை, பஞ்சம், பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், தீராத நோய்கள், அடிப்படை வசதி இல்லாத கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுடனும், திடீர் வெள்ளம், பேய் மழை நிலச்சரிவு கடும் குளிர் கடும் வெப்பம் ஆகியவற்றுடனும் போராடிக் கொண்டிருக்கின்ற பெரும்பான்மை மக்களை கொண்ட ஒரு இந்தியா.

மறுபக்கம் நாட்டில் எது நடந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் சந்தையில் புதிது புதிதாக வந்து குவிகின்ற நவீன தொழில்நுட்பம் கொண்ட பொருட்களை உடனடியாக அதாவது புது ரகமான கார்கள் புது ரகமான இரண்டு சக்கர வாகனங்கள் புது ரகமான ஸ்மார்ட் போன்கள் புது ரகமான தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் இதர நுகர்வு பொருட்கள் ஆகியவற்றை வாங்கி குவிக்கின்ற தகுதி படைத்த மேட்டுக்குடி வர்க்கம்.

படிக்க: நாட்டை சூறையாடிவரும் கார்ப்பரேட் பாசிச பயங்கரவாத ஆட்சி

இந்த மேட்டுக்குடிகளில் ஒரு சிறு பிரிவினர் மேற்கண்ட நுகர்வு பொருட்கள் அனைத்தையும் உற்பத்தி செய்து பிறரது தலையில் கட்டுகின்ற வாய்ப்பு வசதி கொண்ட ஒரு சிறிய சதவீதம் மக்களைக் கொண்ட இந்தியா என்று இரண்டு இந்தியாவாக பிரிந்து கிடக்கிறது.

நீங்கள் படிக்கின்ற, பார்க்கின்ற, கேட்கின்ற செய்தித்தாள்கள், செய்தி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், சினிமாக்கள் ஆகியவை அனைத்திலும் மேற்கண்ட சிறிய சதவீத எண்ணிக்கையிலான இந்தியாவில் உள்ளவர்களை பற்றிய செய்திகள் தான் மீண்டும், மீண்டும் பரப்பப்படுகின்றன.

அவர்களின் வாழ்க்கை வசதிகள்; அவர்கள் செய்த சாதனை; அவர்கள் முன்னேறியது பற்றிய சுய முன்னேற்ற கதைகள் ஆகியவை மீண்டும், மீண்டும் பெரும்பான்மை இந்திய மக்களின் மூளைகளில் திணிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு அடித்தளத்தை ஒரு சில தேசங்கடந்த தரகு முதலாளிகள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சூழலில் அதற்கு வெளியில் உழைத்தால் முன்னேறிவிடலாம். நேர்மையாக வாழ்ந்தால் பெரிதாக சாதிக்க முடியாது போன்ற கற்பிதங்களும், பெரும்பான்மை மக்களை சிறிய சதவீதம் உள்ள இந்தியர்களின் வாழ்க்கையை கடைபிடிக்க சொல்லி போதனைகளும் நிகழ்த்தப்படுகிறது.

படிக்க: ஆர்எஸ்எஸ் புரவலர் அனில் அம்பானி வங்கிகளை சூறையாடும் மோசடிப் பேர்வழி!

உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளும், அமெரிக்க மேல்நிலை வல்லரசு, சீன நவீன சமூக ஏகாதிபத்தியம் உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் இந்த சிறிய எண்ணிக்கையிலான ஒரு கோடிக்கு மேலான மக்கள் தொகையை பார்த்து இந்தியாவில் தனது முதலீடுகளை குவிப்பதற்கு துடித்துக் கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையில் உள்ள கூலி ஏழை விவசாயிகள் முதல் மாணவர்கள், இளைஞர்கள், நிரந்தர வேலையற்ற அரை பாட்டாளிகளான கிக் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், சிறிய எண்ணிக்கையில் உள்ள நிரந்தர பணியாளர்கள் ஆகிய அனைவரும் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருளாயாத தேவையான பொருட்களை வாங்கி வாழ்வதற்கு பொருத்தமான வகையில் நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகள் இல்லை.

ஆனால், மிகச் சிரிய எண்ணிக்கையில் உள்ளவர்கள் ஆப்பிள் ஐபோன் வெளிவந்தவுடன் ஐந்து நிமிடத்திற்குள் வாங்கி விடுகிறார்கள் என்ற செய்தியும், ஜியோ பிளாட்பார்மில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் தனது முதலீடுகளை போடுவதற்கு தயாராகி விட்டார்கள் என்ற செய்தியும் மீண்டும் மீண்டும் பிரபலப்படுத்தப்படுவதன் மூலம் இந்தியா பணக்கார நாடாகிவிட்டது என்ற பிரமையை உருவாக்கி மகிழ்ச்சி அடைகிறார்கள் ஆர் எஸ் எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பல்.

ஆனால் இத்தகைய விளம்பர மோசடிகள்; நேர்மையற்ற முறையில் பரப்பப்படுகின்ற செய்திகள்; மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களின் வாழ்க்கை மேம்படுவதை வைத்து மொத்த நாட்டையும் மதிப்பீடு செய்கின்ற அயோக்கியத்தனம் ஆகிய அனைத்தையும் பாட்டாளி வர்க்கத்திடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து அவர்கள் மூளையை கழுவி காய வைக்கும் பிரச்சாரங்களை நாம் முறியடிக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலைமையில் தேவையாக உள்ளது.

◾மருது பாண்டியன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here