இந்து என்ற பார்ப்பன மதத்திற்குள் அடைக்கப்பட்டுள்ள சைவம், வைணவம், காணாபத்யம், சாக்தம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு மதங்களை( ஷண்மதங்கள்) தின்று செரித்து வரும் பார்ப்பனக் கும்பல், நாட்டின் பெரும்பான்மை மக்களின் நிலங்களையும், அவர்களின் உழைப்புகளை வரிகளாக நின்று கொழுத்த மன்னர்கள் சேர்த்து வைத்த திரண்ட சொத்துக்களை கோவில்களின் நிலவறைகளில் பூட்டி வைத்துக் கொண்டது. அவற்றைத் தமது சொந்த சொத்தாக கருதிக் கொண்டு கோவில்களை நிர்வகிக்கின்ற பார்ப்பன பூசாரிகளும், கோவில்களின் நிலங்களை அனுபவித்து வருகின்ற மேல் சாதியினரும் தினவெடுத்து திரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.
மடங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு ஆதீனங்கள் மற்றும் பல்வேறு பெயர்களில் உலவுகின்ற பாபாக்களின் மடங்கள், பார்ப்பன பண்டரங்களின் மடங்கள் ஆகியவற்றின் திரண்ட சொத்துக்களை அனுபவித்து வருகின்றார்கள்.
இவர்கள் கொள்ளையடித்தது போக எஞ்சியுள்ள கோவில்கள், மடங்கள், ஆதீனங்கள் போன்றவை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் கோவில்களின் பார்ப்பன பூசாரிகள், மேல்சாதி ஆதீனங்கள், மடங்களின் பிற நிர்வாகிகள் போன்றவர்கள் மேற்கண்ட கோவில்கள், மடங்கள், ஆதீனங்களுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்களை, அதாவது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு இந்து அறநிலையத்துறை தடையாக உள்ளது என்பதால் இந்துக்களின் கோவில்களில் அரசாங்கத்திற்கு என்ன வேலை?, இந்து கோவில்களை இந்துக்களிடம் ஒப்படை என்று குதித்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் இஸ்லாமியர்களின் வக்ஃப் வாரியம், கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் மற்றும் சர்ச்சுகளுக்கு சொந்தமான இடங்கள் சொத்துகள் ஆகியவற்றை அவர்களே கண்காணித்துக் கொள்கின்ற போது இந்துக்களை மட்டும் ஏன் கட்டுப்படுத்தி வருகிறீர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்கள் மத்தியில் தாங்கள் ஏதோ தண்டிக்கப்படுவதாகவும், தங்களை மட்டும் அரசாங்கம் கட்டுப்படுத்துவதாகவும் கருத்துருவாக்கம் செய்து வருகின்றன ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகள்.
இத்தகைய சூழலில் தான் வக்ஃப் வாரியத்தின் சொத்துக்கள் மீது அரசாங்கம் தலையிடுவதற்கும், அதனை கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கு சட்டத்திருத்தம் ஒன்றை பாசிச பாஜக கொண்டு வந்துள்ளது.
எதிர்க்கட்சிகளான காங்கிரசு, திமுக, திரிணாமூல் காங்கிரசு, சமாஜ்வாதி மற்றும் இடதுசாரிகள் போன்றவை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக நாடாளுமன்ற கூட்டு குழுவின் பரிசீலனைக்கு இந்த சட்ட திருத்தத்தைக் கொண்டு சென்றுள்ளது.
இஸ்லாமியர்களின் சொத்துக்களின் மீது பாசிச பாஜகவிற்கு என்ன திடீர் அக்கறை என்று நாம் புரிந்து கொண்டால் நம்மை விட ஏமாளிகள் யாரும் இருக்க முடியாது.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவே இஸ்லாமியர்களுக்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடுவதற்கும், அதனை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளும், ரியல் எஸ்டேட் முதலாளிகளும் கொள்ளையடிப்பதற்கு தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
காஷ்மீருக்கு தனிச்சட்டம் இருப்பதால் அங்கு சென்று சொத்துக்களை வாங்க முடியாது என்று எகிறி குதித்தது பாஜக. தற்போது ஐந்து ஆண்டுகளாக அங்கு இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்து எந்த ஏழை விவசாயியும், எந்த தொழிலாளியும் சொத்து வாங்குவதற்கு கிளம்பி சென்றுள்ளார் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நாம் கோரி பெற முடியுமா?.
படிக்க:
♦ இஸ்லாமிய வெறுப்பு, தலித் வெறுப்பில் ஊறி திளைக்கும் பி.ஜே.பி. கட்சி எம்.எல்.ஏ !!
♦ பாசிச பாஜக ஆட்சிக்கு விசுவாசமாக குரைக்கும் ’பல்டி மாமா’ நிதிஷ்குமார்!
கிராமப்புறங்களிலும், நகரத்தின் புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பதற்கு இடத்தை வாங்குவதற்கு வழியில்லாமல் ஆயிரத்தெட்டு கடன்களைப் பெற்று துண்டு துக்காணி இடத்தை சேர்த்து வீட்டை கட்டுவதற்குள் முதுகெலும்பு முறிந்து போகிறது. இந்த லட்சணத்தில் காஷ்மீரில் சென்று சொத்துக்களை வாங்குவதற்கு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான உழைப்பாளிகளுக்கு சாத்தியம் உள்ளதா என்றால் ஒருபோதும் கிடையாது.
ஆனாலும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்குவதற்கு சட்டத்திருத்தம் தேவை என்று குதித்தவர்கள் யார் என்றால் பெரும் ரியல் ஸ்டேட் முதலாளிகளும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுகளை மீறி இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் ஐந்து நட்சத்திர விடுதிகள் கட்டி உல்லாச ஊதாரிகளுக்கு சுற்றிப் பார்ப்பதற்கு ரிசார்ட்களை கட்டுகின்ற பெரும் பெரும் கார்ப்பரேட்டுகளும் தான் இந்த சட்ட திருத்தங்களினால் பயன்படுகிறார்கள். இதனால் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி முதலீடு அந்த மாநிலத்தில் குவிந்துள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தில் இந்திய ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜுஜூ கொண்டு வந்துள்ள சட்ட திருத்தமும் இது போன்றது தான் என்று எடுத்த எடுப்பிலேயே நாம் கூறி விட முடியும் என்றாலும், துணிச்சலுடன் இஸ்லாமியர்களின் சொத்துக்களை சட்டபூர்வமாக கொள்ளையடிப்பதற்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தத்தை பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
பாஜகவின் வழக்கறிஞரான அஷ்வினி உபாத்யாய் இது பற்றி கூறும் கருத்து என்ன?, “அரசாங்கம் கோவில்கள் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை பெறுகிறது. ஆனால் எந்த தர்கா, மசூதியில் இருந்தும் நிதி பெறவில்லை. வக்ஃப் அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கும்போது, அனைத்து மத சொத்துகள் மீதும் சிவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளோம். இது சட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டும், வக்ஃப் தீர்ப்பாயம் மூலம் அல்ல” என்கிறார். இதுதான்பாசிச பாஜகவின் வாதம்.
”இன்னும் தெளிவாக சொல்வதெனில், இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை ஆய்வு செய்ய, கடந்த 2005ம் ஆண்டில், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் ஏழு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைத்திருந்தார். இந்த ‘சச்சார் கமிட்டி’ 2006ல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தற்போது இந்த சட்ட திருத்த மசோதாவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார் இந்திய ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜுஜூ.
’கேட்பதற்கு கேனையர்கள் இருந்தால், எலிகள் ஏவுகணை ஓட்டும்’ எனப் புளுகும் காலம் இது என்பதால் அந்த சட்ட திருத்தம் என்ன? இதனால் யாருக்கு லாபம் என்பதை புரிந்துக் கொள்வோம்.
வக்ஃப்’ என்றால் என்ன?
வக்ஃப்’ என்பது இஸ்லாத்தை நம்பும் எந்தவொரு நபரும் அல்லாவின் பெயரில் அல்லது மத நோக்கங்களுக்காக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடை அளிக்கும் அசையும் அல்லது அசையாச் சொத்து ஆகும்.
கடந்தகாலங்களில் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரில் சொத்துகள் தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவை இறைவனுக்காக அர்ப்பணித்தல் என்ற பொருள்படும்படி `வக்ஃப்’ எனக் கூறப்படும். இந்தச் சொத்துகளை நிர்வகிக்க, 1954-ல் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் 1958-ம் ஆண்டு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரியங்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் பாசிச பாஜகவால் புதிதாக திருத்தம் போடப்பட்டுள்ள இந்த சட்டமானது, பிரிட்டன் காலனியாதிக்கத்தின் போது 1923 கொண்டுவரப்பட்டு 1995, 2014 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டு நடைமுறையில் உள்ள வக்ஃப் சட்டம் போதுமானதாக இல்லை எனவும், வக்ஃப் மூலம் கட்டுப்படுத்தப்படும் சொத்துக்களை பாராமரிப்பதில் ஊழல் நடப்பதாகவும் அதனால் தற்போது அதில் “ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு’’ சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என மறுபெயரிடப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தின் படி வக்ஃப் சொத்துக்கான பதிவு மத்திய போர்டல் மற்றும் தரவுத்தளம் மூலம் செய்யப்பட வேண்டும். இந்த போர்ட்டல் மூலம், முத்தவல்லிகள் (Mutawalli) அதாவது வக்ஃப் சொத்தைக் கவனிப்பவர்கள் சொத்துக் கணக்குகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என்று சட்டப் பூர்வமான வழியிலேயே இஸ்லாமியர்களின் சொத்துக்கள், மத உரிமைகளுக்கு எதிராக தாக்குதலை தொடுத்துள்ளது பாசிச பாஜக.
(தொடரும்…)
- கணேசன்