ற்போது நாடு முழுதும், 9.4 லட்சம் ஏக்கர் பரப்புள்ள நிலங்கள், 8.7 லட்சம் சொத்துக்கள் வக்ஃப் வாரியங்களிடம் உள்ளன. வக்ஃப் சொத்துக்கள் நிர்வாகத்தில் பல முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகளை விசாரிக்க சட்டத் திருத்தம் தேவை என்கிறது பாசிச பாஜக.

”நாட்டில், ரயில்வே மற்றும் ராணுவத்துக்குப் பின், அதிகளவு நிலங்கள், வக்ஃப் வாரியங்களிடம் உள்ளன. ஆனால், இவற்றின் வாயிலாக, ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைப்பதால் தான் வக்ஃப் வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக” இந்திய ஒன்றிய பாஜக அரசு தெரிவிக்கின்றது..

அவ்வாறு பாசிச பாஜக அரசு முன் வைத்துள்ள திருத்தங்கள் கீழ்க் கண்டவாறு முன் வைக்கப்படுகின்றன.

  • பழைய சட்டத்தின்படி, அத்தகைய முடிவுகள் வக்ஃப் தீர்ப்பாயத்தால் எடுக்கப்பட்டன. இந்த அதிகாரத்தை சொத்துக்களை அபகரிப்பதாகவும், தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒரு சொத்து வக்ஃப் வாரிய சொத்தா அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட கலெக்டரே தீர்மானிக்கலாம்.
  • முன்பு, வாரியமே சொத்துக்களை நிர்வகிக்க முடியும். ஆனால் தற்போது, வாரியங்கள் சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படை தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது.
  • வக்ஃப் வாரியத்தின் முடிவுகளை எதிர்த்து கோர்ட்டில் முறையீடு செய்ய முடியாது; வக்ஃப் தீர்ப்பாயத்தில்தான் முறையிட முடியும். இனிமேல், வக்ஃப் வாரியத்தின் உத்தரவுகளை எதிர்த்து கோர்டில் முறையிடலாம்.
  • வாரியத்திற்கே சொத்துக்களுக்கான உரிமை இருந்தது. அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, சொத்துக்களுக்கு வாரியம் உரிமை கோர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பெண்களுக்கு அனுமதியில்லை. புதிய சட்டத்திருத்தின்படி, மத்திய வக்ஃப் கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவர்
  • சொத்துக்களை, வக்ஃப் தீர்ப்பாயமே ஆய்வு செய்யும். ஆனால், இனி சொத்துக்களை சர்வே கமிஷனர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அல்லது கலெக்டரால் நியமிக்கப்படும் துணை கலெக்டர் ஆய்வு செய்வர்.
  • இதுவரை வக்ஃப் வாரிய குழுவில் 3 முஸ்லிம் எம்.பி.,க்கள் இடம்பெற்றிருப்பர். புதிய விதிகளின்படி, 3 எம்.பி.,க்கள் கொண்ட அந்த குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெற்றிருப்பர்.
  • வக்ஃப் சொத்துக்களை விற்க முடியாது என்ற சூழல் இருந்த நிலையில், இனி சொத்துக்கள் அனைத்தும், பொதுவான மத்திய தளத்தின் வாயிலாகவே பதிவு செய்ய வேண்டும்.
  • வக்ஃப் சொத்துக்களை வாரியமே நிர்வகித்து வந்த நிலையில், புது விதிகளின்படி, வக்ஃப் சொத்துக்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும்
  • சொத்துக்களை பதிவு செய்வதில் வருவாய் சட்டங்கள் பொருந்தாது என்ற நிலை இருந்துவந்தது. தற்போது, சொத்து பதிவு செய்யப்படுவதற்கு முன், வருவாய் சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்பு, வக்ஃப் வாரியச் சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருவாய் தொடர்பான தகவல்கள் பதிவிட வேண்டியதில்லை. இனி, வருவாய் தொடர்பான தகவல்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய தளத்தில் பதிவிட வேண்டும்.
  • போராக்கள் மற்றும் அகாகானிகளுக்கென தனி வாரியம் இல்லை. அவற்றில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, புது விதிகளின்படி போராக்கள் மற்றும் அகாகானிகளுக்கென தனி வாரியம் அமைக்கப்படும். வக்ஃப் வாரியங்களில், சன்னி, ஷியா, போரா, அகாகானிஸ் மற்றும் அந்த மதத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் இடம்பெறுவர்.
  • வக்ஃப் வாரிய சொத்துக்கள் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்யும் வகையில் பல பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு இந்த வாரியங்களில் அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், இந்த சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீர்திருத்த நடவடிக்கைக்கு, பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
  • ஒரு சொத்து வக்ஃப்-க்கு கீழே வருமா இல்லையா என்பதை முடிவு செய்யும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டது. புதிய முன்மொழிவின்படி, தற்போதுள்ள மூன்று உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃப் தீர்ப்பாயமும் இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் இறுதியானதாகக் கருதப்படாது, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக 90 நாட்களுக்குள் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
  • வரம்பு சட்டத்தை (Limitation Act) அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கப் புதிய மசோதாவில் விதிமுறை உள்ளது. அதன்படி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், இந்தத் திருத்தத்தின் மூலம் உரிமையாளர்களாக முடியும்.

”வக்ஃப் சொத்துகளில் முறைகேடு நடந்தால் அதைத் தடுப்பதற்கு வக்ஃப் வாரியமும் வக்ஃப் தீர்ப்பாயமும் உள்ளது. மேல் முறையீடுகளுக்கு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளன. இதில், தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது, அந்தந்த அமைப்புகளின் பொறுப்பு”. என்கிறார் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் அப்துல் ரகுமான். ஆனால் முறைகேடுகள் நடப்பதை கண்காணிக்கவே முடியாத நிலையில் இருப்பதைப் போல சித்தரிக்கிறது பாசிச பாஜக.

பாசிச பாஜகவின் வழக்கறிஞரான அஸ்வினி உபாத்தியாய் கூறியுள்ள முக்கியமான குற்றச்சாட்டு என்ன? இந்து கோவில்களின் மூலம் இந்திய ஒன்றிய அரசிற்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது: ஆனால் இஸ்லாமிய நிறுவனங்களின் மூலம் வருகின்ற தொகை வெறும் 400 கோடி ரூபாய் மட்டும் தான் என்கிறார்.

எனவேதான் வக்ஃப் வாரியத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் முறையாக பதிவு செய்து கொள்வதும், அதனைக் கண்காணிக்கின்ற உரிமையும் அரசு நியமிக்கின்ற இஸ்லாமிய மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் குழுவிற்கு உண்டு என்று திருத்தம் கொண்டு வருவதாக நியாயப்படுத்துகின்றனர். இதன் மூலம் அரசியல் சாசனத்திற்கு எதிராக மத விவகாரங்களில் அரசு தலையிடுகிறது.

நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் வழிபடும் உரிமை அதாவது குறிப்பாக அவரவர்கள் தாய் மொழியில் வழிபடுகின்ற உரிமையை மறுக்கிறது உச்ச நீதிமன்றம் என்ற உச்சிக்குடுமி மன்றம். இதற்கு எதிராக  சொல்லிக் கொள்ளப்படும் பெரும்பான்மை ’இந்துக்களின்’ வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட பாஜக சட்டத் திருத்தம் கொண்டு வருமா?

படிக்க: 

♦ வக்ஃப் சட்டத் திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாசிச பாஜகவின் தாக்குதல்

அதுபோல கோவில்களில் அர்ச்சகராக பூசை செய்யும் வேலையை வாரிசு அடிப்படையில் பார்ப்பனர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று இன்றுவரை விதண்டாவாதம் செய்து வருகின்றனர். அதனை உச்சநீதி மன்றம் அனுமதிக்கிறது. ஆர்எஸ்எஸ்-சும் பார்ப்பனக் கும்பலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு என்ற உரிமை முழக்கத்தை ஒழித்துக் கட்டுவதற்கு பல்வேறு வகையில் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர். இது இந்து ஒற்றுமைக்கு எதிரானது என்பதால் பாசிச பாஜக சட்டத் திருத்தம் கொண்டு வருமா? ஒரு போதும் செய்ய மாட்டார்கள்.

அது மட்டுமல்ல! இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில்கள் இருக்கின்றபோதே இந்த லட்சணத்தில் உள்ளது என்றால் ஆர்எஸ்எஸ் பாஜக முன்வைக்கின்ற படி இந்துக்களிடம் ஒப்படைத்தால் என்ன கதியாகும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

வக்ஃப் சட்டத்தின் கீழ் உள்ள இஸ்லாமியர்களின் சொத்துக்களை கண்காணிப்பது நியாயம் என்று எடுத்துக் கொண்டால் நாடு முழுவதும் திருப்பதி கோவில், பத்மநாபசாமி கோவில், காசி விஸ்வநாதர் ஆலயம், பூரி ஜெகநாதர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நிலவறைகளில் பூட்டி கிடக்கின்ற பொக்கிஷங்களை வெளியில் எடுத்து அதனை இந்திய அரசாங்கத்தின் கருவூலத்தில் சேர்த்து விடலாம் தானே. இத்தகைய கோரிக்கைகளை முன் வைத்தால் அவர்கள் இந்து விரோதி என்று முத்திரைக் குத்துகிறது பாசிச பாஜக. ஆனால் இஸ்லாமியர்களின் சொத்துக்களை அவர்களிடமிருந்து புடுங்குவதற்கு மட்டும் சட்ட திருத்தத்தை வேக வேகமாக கொண்டு வருகிறது.

இந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது இஸ்லாமியர்களின் சொத்துக்களை கணக்கிடுவதற்கோ அல்லது அதனை கண்காணிப்பதற்கோ இந்திய ஒன்றிய அரசுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை உரக்கச் சொல்வோம்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here