அதிகரிக்கும் ஆன்லைன் ரம்மி படுகொலைகளும், அதற்கான காரணிகளும்!

தமிழ்நாட்டில் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தினால் 89 பேர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையானது குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது.

1

அதிகரிக்கும் ஆன்லைன் ரம்மி படுகொலைகளும், அதற்கான காரணிகளும்!

புதுக்கோட்டையைச் சேர்ந்த சரத்குமார் என்பவரின் மனைவி ஸ்ரீகா என்பவர் தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காரணம் என்னவென்று ஆராய்கையில், கணவர் சரத்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி 70 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் பறிகொடுத்ததை போனில் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்தவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்து பண தேவை உள்ளவர்கள் தங்களது சேமிப்பு அல்லது கடன் வாங்கி விளையாடி சூதாட்ட வலை பின்னலில்  சிக்கி பணத்தை இழந்து வருகிறார்கள். கடன் மற்றும் அதன் நாள் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.

சூதாட்டத்தைத் தூண்டும் விளம்பரங்கள்!

ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாரும் பார்க்காத வகையில் மறைந்திருந்து விளையாடிய சூதாட்டங்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைவரின் கைகளில் எளிதாக வந்து சேர்ந்து விட்டது. மாணவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இதில் மூழ்கிப் போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டம் என்றால் ரம்மியுடன் சுருக்கி விட முடியாது. ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் அத்தனை விளையாட்டுகளும் ஆன்லைன் சூதாட்டமே. கிரிக்கெட் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள் (Dream 11), ரம்மி மூலம் நடைபெறும் சூதாட்டம் என கையடக்க கருவியான ஸ்மார்ட்போனில் குவிந்து கிடக்கின்றன. கடந்த 2022 முதல் 2024 வரை சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் கேமிங் வலைதளங்கள் மற்றும் செயலிகள் தொடர்பான 692 தடை உத்தரவுகளை ஐடி அமைச்சகம் பிறப்பித்ததாக மின்னணு மற்றும் ஐடி துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் மக்களவையில் கடந்த டிசம்பரில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

இவையல்லாமல் சட்டபூர்வமான வழியில் ஆன்லைன் சூதாட்டங்கள் இந்தியாவில் உலா வருகின்றன. சமூக வலைதளங்களில் யூடியூப் மற்றும் இணையதளங்களை திறந்தாலே சூதாட்ட விளம்பரங்கள் தானாக Play ஆகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பண தேவை உள்ளவர்களை கவரும் விதமாக விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. லட்சம் கோடிகள் வென்றவர்களாக சிலரின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் விளம்பரங்களால் இளைஞர்கள் சதி வலையில் வீழ்த்தப்படுகிறார்கள்.

இது மாதிரியான விளம்பரங்களை சினிமா பிரபலங்களை வைத்து பிரபலப்படுத்துகிறார்கள். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ராணா உள்ளிட்டவர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் ஆன்லைன் சூதாட்டங்களை விளம்பரப்படுத்தி கோடிகளில் சம்பளம் பெற்றுக் கொண்டு அப்பாவி இளைஞர்களை நடுத்தெருவில் நிறுத்துகிறார்கள். இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் விதிவிலக்காக தான் இது போன்ற விளம்பரங்களில் நடித்தது தவறு என்று உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்!

 ஆன்லைனில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதை விட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இவர்களை படுகொலை செய்துள்ளது என்பதே உண்மை. இந்த சூதாட்டத்திலிருந்து பாதிப்புக்குள்ளானவர்கள் மீளமுடியாத வகையில் அடிமையாக்கப்படுகிறார்கள். எல்லாவற்றையும் இழந்த பிறகே இந்த முடிவுக்கு வருகிறார்கள்.

படிக்க:

🔰 ஆன்லைன் ரம்மி: ஆட்கொல்லி சூதாட்டம்!🔰 கிரிப்டோ கரன்சி தூண்டிலில் சிக்கும் இளம் இந்தியர்கள்!

கடந்த ஜூன் 4ஆம் தேதி அரக்கோணம் அடுத்த சித்தேரியில் வசிக்கும் தனியார் கல்லூரி பேராசிரியரான தினகரன் (42) ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி 25 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். கடனை அடைக்க வீட்டு அடமான கடன், நகை கடன், தெரிந்தவர்களிடம் கடன், ஆப் மூலம் கடன் பெற்று மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது பணியில் கவனம் செலுத்த முடியாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், சித்தேரி பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியை செய்து வந்த பொன்னேரியை சேர்ந்த முருகன் என்பவர் ஆன்லைன் ரம்மியில் 6 லட்சத்தை இழந்து விரக்தியில் கடந்த மே 10ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 2024 டிசம்பர் 21 அன்று சென்னையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தனது தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாமக்கல் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த உஷா – சண்முகம் அவர்களது மகன் இலட்சக்கணக்கில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக தாய் தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த ஏப்ரலில் சேலத்தைச் சேர்ந்த 29 வயதான அரிகிருஷ்ணன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் இழந்துள்ளார். இதனை ஈடுகட்ட நண்பர்கள், வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளார். மீளாத கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய விரும்பாத ஒன்றிய அரசு!

தமிழ்நாட்டில் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தினால் 89 பேர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையானது குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மசோதாவாக்கி ஆளுநருக்கு அனுப்பி நீண்ட நாட்கள் ஆகியும் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

படிக்க:

🔰 ஆன்லைன் ரம்மி சூதாட்டம்: ஏகாதிபத்தியத்தின் சிலந்தி வலை!🔰 சூது கவ்வும் ஆன்லைன் விளையாட்டுகளும்! சூனியக்கார அரசுகளும்!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட  விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசால் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் எண் இணைப்பதுடன் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை விளையாட விதிக்கப்பட்ட பகுதி நேர தடையை எதிர்த்து சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தினை நாடினர். நீதிமன்றம் தடை சரியே என வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இந்த பகுதி நேர தடையோ ஆதார் இணைப்பபோ ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து இளைஞர்களை வெளியேற்றாது என்பதை உண்மை.

அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வும் நுகர்வு வெறியும்!

இந்தியாவில் ஒருபுறம் சமூக ஏற்றத்தாழ்வானது கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள் தொகையில் சரிபாதி 70 கோடி  மக்களின் சொத்துக்களுக்கு நிகரான சொத்து வெறும் 100 பணக்காரர்களிடம் குவிந்து கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பதற்கு மக்கள் அல்லோலப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தான் அதானி ஒரு நாளில் ஆயிரம் கோடிக்கு மேலாக வருமானம் ஈட்டுகிறார். இதன் விளைவு கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. மறுபுறம் மக்களின் உழைப்பை சுரண்டும் விதமாக குறைந்த வருமானத்தையும் காலி செய்ய நுகர்வு வெறியை அதிகரிக்கின்றன முதலாளித்துவ வணிக நிறுவனங்கள். வித விதமாக செல்போன்கள், ரேஸ் பைக்குகள் என நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து நுகர்வுவெறி ஊட்டப்படுவதால், போதாத வருமானத்தை ஈடு செய்ய குறுக்கு வழிகளில் சூதாட்ட நிறுவனங்களால் இழுக்கப்படுகிறார்கள். இது கடைசியில் கடுமையான கடன் சுமையிலும் ஒரு சிலர் இதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இது அவர்களோடு முடியப்போவதில்லை மொத்த குடும்பத்திற்கும் நெருக்கடி ஏற்படுத்துகிறது.

இதனை நாம் தற்கொலை அல்ல படுகொலை என்பதற்கான காரணங்கள் இதுவே‌. அரசு நினைத்தால் சூதாட்ட நிறுவனங்களை தடை செய்ய முடியும். ஆனால் செய்ய மறுத்து சட்டப்படி அனுமதி அளிக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வை புரிந்து கொண்டு மக்கள் நம் பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதிலேயே அரசு தெளிவாக இருக்கிறது. ஒரு வகையில் சூதாட்ட நிறுவனங்கள் ஆளும் வர்க்கத்தின் மீதான கோபத்தை மட்டுப்படுத்த உதவுவதும் உண்மையே. இந்த உண்மையை இன்று இளைஞர்கள் உணர வேண்டும்.

இளைஞர்கள் ஏன் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்? அற்ப கூலிக்கு முதலாளித்துவத்தால் சுரண்டப்படுகிறார்கள்? மறுபுறம் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வை நோக்கி முன்னேறுவோம். தற்கொலை என்பது தீர்வு அல்ல.

  • நலன்

1 COMMENT

  1. ஆன்லைன் சூதாட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான தொகை கடன் பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பது குறித்த அபாய எச்சரிக்கை மணியாக இந்த கட்டுரை அமையப்பட்டுள்ளது. அனைவரும் படித்து எச்சரிக்கை உணர்வு பெறுவதுடன், பலருக்கும் எச்சரிக்கை ஊட்டும் கடமையையும் நாம் செய்தாக வேண்டும்.
    கட்டுரையாளர் தோழர் நலன் அவர்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here