ன்லைன் ரம்மி விளையாட்டு என்ற கொடூரமான போதை கலாச்சாரம், விளையாட்டு என்ற பெயரில் இந்தியா மற்றும் சீனாவில் கொடி கட்டிப் பறக்கிறது.

இந்தியாவில் வேலையில்லாமல் வேலை தேடி அலைகின்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், சீனாவில் ஓய்வுபெற்ற முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் இவர்களை குறிவைத்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஏவப்பட்டுள்ளது.

கொரோனா பரவிய காலத்தில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த இளைஞர்கள் வேறுவழியின்றி மொபைல் பார்ப்பது, ஆன்லைன் மூலம் சினிமா பார்ப்பது முதல் சீட்டு ஆடுவது வரை அனைத்து விதமான பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாக துவங்கினர்.

இன்று கொரானாவின் பாதிப்பு குறைந்திருந்தாலும் அடிமையான பழக்கத்தை விடமுடியாமல் இளம் தளிர்களின் வாழ்க்கை சூனியமாகி வருகிறது.

முதலில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு வெறும் ஐந்து நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய நடப்பில் ஒரு டிரில்லியன் டாலருக்கும் மேல் இந்த சூதாட்டத்தில்  புழங்குவதால் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முளைத்துள்ளது.

சமீபகாலமாக இந்த சூதாட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு என்று புதிய புதிய சலுகைகளை அறிவிக்கின்றன. இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சினிமா நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றவர்களை கொண்டு விளம்பரத்தை செய்கின்றன.

அதுமட்டுமின்றி சமீபத்தில் ஜாயினிங் போனஸ் என்ற பெயரில் 5000 ரூபாயாக இருந்த நுழைவு ஊக்கத்தொகை மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது 20 ஆயிரம் ரூபாயாக மாறியுள்ளது. இதுபோன்ற சினிமா நடிகர்களின் விளம்பரம் மற்றும் ஜாயினிங் போனஸ் மூலம் ஈர்க்கப்படும் இளைஞர்கள் கூட்டம் ரம்மி விளையாட்டில் மும்முரமாகிறது.

துவக்கத்தில் லாபத்தைத் தருவது போல இருந்தாலும் போகப்போக கையிலுள்ள சேமிப்பு, வங்கி சேமிப்பு போன்றவற்றை உருவ துவங்கி வெறித்தனம் அதிகமாகவே விட்டதை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது சொத்துக்களை விற்பது, கடன் வாங்குவது, வேலை செய்யும் இடத்தில் திருடுவது போன்ற புதிய முறைகளில் பணத்தை சேகரிக்க ஆன்லைன் ‘விளையாட்டு வீரர்கள்’ துவங்குகின்றனர்.

Also read சூது கவ்வும் ஆன்லைன் விளையாட்டுகளும்! சூனியக்கார அரசுகளும்!

கடன், திருட்டு, சேமிப்பு அழிவது  போன்றவற்றினால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தமிழகத்தில் மட்டும் 2021 செப்டம்பர் தடைவிதிக்கப்பட்டதிலிருந்து 2022 மே மாதத்திற்குள் 20 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடைசியாக ஆவடி ஆயுதப்படை காவலர் சரவணகுமார் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரிடமும் ஆன்லைன் ரம்மி குறித்த விவாதத்தை தூண்டியது.

ஆவடி ஆயுதப்படை காவலர் சரவணகுமார்

இது துவங்கிய காலத்தில் இந்த விளையாட்டு சூதாட்டத்தில் அடிமையாகி பலரும் மன உளைச்சல் துவங்கி தற்கொலை வரை சென்றதால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் தடைக்கு எதிராக வாதாடி நீதிமன்றத்தில் வெற்றி பெற்றன.

இதனால் மீண்டும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு இளைஞர்களின் வாழ்க்கையில் கும்மியடிக்க துவங்கியுள்ளது.

சமூகமே மெல்லமெல்ல பாசிசமயமாகி வரும் சூழலில் தனிநபர் வெறுப்பு விருப்பங்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளிலிருந்து விலகி தனிமைப்படுத்திக் கொள்ளும் மனோபாவம் அதிகரித்துக் கொண்டே போவதால் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடுக்க முடியாது.

ஒரு சட்டம் போட்டு தடுப்பதன் மூலம் இதுபோன்ற சட்டவிரோத அல்லது சட்ட அனுமதியுடன் நடக்கின்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடுத்துவிட முடியும் என்று நாம் நம்பக்கூடாது.

இது சமூக பொருளாதார சிக்கலின் விளைவாக தோன்றுகின்ற அல்லது தோற்றுவிக்கப்படுகின்ற புதிய வகை கலாச்சாரமாகும்.

அதை எதிர்த்துப் போராடி முறியடிக்காமல் நிரந்தரமாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடுக்க முடியாது என்ற போதிலும், உடனடித் தீர்வாக இது போன்ற விளையாட்டுகளுக்கு நடித்துக் கொடுத்து கோடிக்கணக்கில் சுருட்டும் சினிமா நடிகர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களை தடை செய்து சொத்துக்களை பறிமுதல் செய்வது என்ற திசையில் செல்வதும், மிகப்பெரும் மனித உழைப்பு சக்தியான இளைஞர்களுக்கு ஆரோக்கியமான சிந்தனையுடன் கூடிய சமூக பொறுப்பை உருவாக்குகின்ற புதிய கலாச்சாரத்தை ஊக்கப்படுத்துவதற்காக தயாராவது என்று செயல்பட வேண்டும்.

  • திருச்செங்கோடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here